சித்திரை 29 2051 செவ்வாய் (12.05.2017)
ஊடகத்தாருக்கு அறிக்கை
ஊடகத்தாருக்கு அறிக்கை
சுமந்திரனைக் கட்சியில் இருந்து தூக்கி எறியுங்கள்
1961 அறப்போர் காலத்திலிருந்து இன்றுவரை தமிழ்த் தேசியம் ஈழத்தமிழர் நலம் எனத் தமிழரசுக் கட்சி சார்ந்து பணிபுரிந்து கொண்டிருக்கிற மறவன்புலவு க. சச்சிதானந்தன் கோருகிறேன்
சுமந்திரனைத் தமிழரசுக் கட்சியை விட்டுத் தூக்கி எறியுங்கள் என 2018 நவம்பர் 6இல் நான் திரு மாவை சேனாதிராஜா அவர்களுக்கு எழுதினேன்.
சுமந்திரனின் நாக்கு , கரி நாக்கு. தமிழை தமிழரை தமிழ் தேசியத்தை உணராத அறியாத புரியாத தெரியாத விரும்பாத ஒருவரின் நாக்கே சுமந்திரனின் நாக்கு என நான் அன்று கூறினேன்.
எனவே தமிழரசுக் கட்சியில் இருந்து நீக்குங்கள் எனத் தலைவருக்குக் கடிதம் எழுதினேன்.
அதற்கு முன்பு 30.12.2015இல் வட மாகாணசபையை முடக்குவதற்கு அக்காலப் பிரதமர் இரணில் விக்கிரமசிங்கர் எடுத்த முயற்சிக்கு சுமந்திரன் கைகொடுத்தார் எனக் குற்றம்சாட்டி எழுதினேன்.
சென்னையில் 100 அடி சாலையில் அமர்ந்திருந்த உயர்தர விடுதியொன்றில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டுக் கிளையினர் 2015இல் நடத்திய கருத்தரங்கில் முதல் முதலாகச் திரு சுமந்திரனைச் சந்தித்தேன். ஈழத்தமிழரின் சார்பில் அவர் அங்கு பேசினார்.
அங்கே அவரின் பேச்சைக் கேட்டேன். இவருக்கும் தமிழுக்கும் தமிழருக்கும் தமிழ்த் தேசியத்திற்கும் என்ன தொடர்பு? இத்தகைய கரிநாக்கராக இருக்கிறாரே என மனத்துள் சினந்தேன்.
1961 முதலாக தமிழ் தமிழர் தமிழ் தேசியம் ஈழத்தமிழரின் நன்மை என்பவற்றுக்காக தமிழகத்தில் நானும் இணைந்து சிறிது சிறிதாகக் கட்டியெழுப்பிய ஈழத்தமிழர் ஆதரவுக் கொள்கையைப் போட்டு உடைத்தார் 2015இல் சென்னையில் சுமந்திரன்.
சிங்களத் தொலைக்காட்சி பேட்டியில் சுமந்திரன் கொடுத்த விடைகள் கரிநாக்கராக அவரை உறுதி செய்துள்ளன.
தமிழர் இயல்பிலேயே அறநெறியாளர். ஆயுதங்களை 400 ஆண்டுகளாக அறியாதவர். அவர்களை ஆயுதம் தூக்குமாறு தூண்டியோர் 1948இல் விடுதலைக்குப் பின் வந்த சிங்கள அரசுகள். சிங்கள அரசுகளும் சிங்களக் குண்டர்களும் தொடர்ச்சியாக 1952இல் 56இல் 58இல் 61இல் 72இல் 74இல் 77இல் 82இல் 83 நடத்திய தமிழர் மீதான கொடும் பயங்கரவாதத்தை அரச பயங்கரவாதத்தை நினைவுகூரச் சுமந்திரன் தவறிவிட்டார்.
அப்பாவிகளாக இருந்த தமிழ் இளைஞர்களை ஆயுத தாரிகள் ஆக்கிய அரச பயங்கரவாதத்தை, சிங்களத் தலைவர்கள் பலரையும் ஒப்புக்கொண்ட எதார்த்த நிலையை சுமந்திரன் அடிக்கோடிட்டுக் கூறாமல் விட்டார்.
ஏனெனில் அவர் தமிழ் தமிழர் தமிழ்த்தேசியம் என்பவற்றைக் கிஞ்சித்தும் அறியாதவர் கொஞ்சமும் உணராதவர்.
இப்பொழுதும் காலம் கடந்து விடவில்லை.
தமிழரசுக் கட்சியின் தலைவர் திரு மாவை சேனாதிராஜா அவர்களே முதற்கட்டமாக அவரைக் கட்சியிலிருந்து இடை நிறுத்துங்கள். விசாரணையைத் தொடங்குங்கள். அவர் வேட்பாளர் இல்லை என்பதை மக்களுக்குத் தெரிவியுங்கள்.
அவருக்கு வாக்களிக்க வேண்டாம் எனத் தமிழ் மக்களிடம் கூறுங்கள்.
வரலாற்றை அறியாத தமிழ் தேசியத்தில் ஊறாத தமிழ்த் தேசியத்தில் ஈடுபாடற்ற ஒருவரை,
அகத்தே முரட்டுக் குணத்துடன் கொடிய நோக்கத்துடன் ஓநாயாகிப் புறத்தே ஆட்டுத்தோல் போர்த்திய பொய்யர்களான போலிகளை அடையாளம் கண்டு ஒதுக்குங்கள் என இயேசுபிரான் கூறியதாக மத்தேயு 7:15இல் கூறியதை இங்கு நினைவு கூர்வது பொருத்தம்
No comments:
Post a Comment