Monday, May 25, 2020

சைவ சமயத்தவரைக் காக்க இலங்கைச் சட்டங்களை எடுத்தாள்வோம்.

1. சைவ சமயத்துக்கு அரசியலமைப்பு வழங்கியுள்ளன என்ன?

சைவ சமயமே இலங்கையின் தொடக்க, தொன்மைச் சமயம். இந்த வரலாற்று நிலையை இலங்கை அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளவில்லை.

புத்த சமயத்துக்கு முதலிடம். எனவே அரசாங்கம் புத்த சாசனத்தைப் பாதுகாத்து வளர்க்க வேண்டும் என்கிறது அரசியலமைப்பின் ஒன்பதாவது வரையறை.

10, 14(1)e வரையறைக்கு அமைய ஏனைய சமயங்களின் உரிமைகளுக்குக் காப்பு என்கிறது ஒன்பதாவது வரையறை.

கட்டற்ற சிந்தனை கட்டற்ற மனச்சான்று கட்டற்ற சமயம் என்பவற்றுடன் தாம் விரும்பும் தேர்ந்தெடுக்கும் சமயத்தை நம்பிக்கையைக் கைக்கொள்ளக் கட்டுகள் இல்லை என்கிறது பத்தாவது வரையறை.

தனி ஒருவராகவோ கூட்டாகவோ பொது இடத்திலோ தனி இடத்திலோ தனது சமயத்தையும் வழிபாட்டு நம்பிக்கையையும் நோன்பு நடைமுறைகளையும் பயிலவும் பயிற்றுவிக்கவும் கட்டுகள் இல்லை என்கிறது14((1)e வரையறை.

தான் கைக்கொள்ளும் சமயத்தின் பொது வழிபாட்டு இடங்களில் வழிபடுவதைத் தடுக்கவோ விதிக்கவோ எவர் ஒருவருக்கும் தடைகள் கட்டுகள் இல்லை என்கிறது 12(3) வரையறை.

இவை தவிர சமய நம்பிக்கை தொடர்பாக அரசியலமைப்பில் வேறு எந்த வரையறையும் இல்லை.

அரசியலமைப்பின் இந்த நான்கு வரையறைகளையும் சுவர்களாக கொண்டு சட்டங்களை அரசு காலத்துக்கு காலம் இயற்றி வருகிறது. சில சட்டங்கள் நாடாளுமன்ற தீர்மானங்கள் ஆகின்றன. சில சட்டங்கள் அமைச்சு மற்றும் ஆட்சி ஆணைகள் ஆகின்றன. சில சட்டங்கள் நீதிமன்ற ஆணைகள் ஆகின்றன.


2. சைவசமயத்துக்கு ICCPR எவ்வாறு உதவுகிறது?

16.12.1996இல் ஐக்கிய நாடுகள் சபையின் பொது அவையில் இலங்கையும் இணைந்து வாக்களித்து நிறைவேற்றிய கூட்டு உடன்படிக்கைத் தீர்மானம்.

குடிமக்களின் உரிமைக்கும் குடிமக்களின் அரசியல் உரிமைக்கும் ஆன அனைத்துலகக் கூட்டு உடன்படிக்கை (குஉஅஉஅஉ) (International Covenant on Civil and Political Rights - ICCPR)

இக்கூட்டு உடன்படிக்கையில் இணைந்து கொள்வதாக 11.03.1980இல் இலங்கை ஒப்பம் இட்டது.

இக்கூட்டு உடன்படிக்கையில் உள்ள வரையறைகளை நாடாளுமன்றத்தில் சட்டமாக்கியது இலங்கை. சட்டமாக்கி ஒப்பம் இட்ட நாள் 16.11.2007. 2007ஆம் ஆண்டின் 56ஆவது சட்டம் என இச்சட்டத்தை அழைப்பர்.

2007.56.3(1) எவரும் போரைப் பரப்பக் கூடாது. பாகுபாட்டையும் எதிர்ப்புணர்வையும் வன்முறையையும் தூண்டக் கூடிய தேசியம் சார்ந்த இனம் சார்ந்த சமயம் சார்ந்த வெறுப்புகளை ஆதரித்து வாதிடக் கூடாது.

2007.56.3(2) முதலாம் துணைப் பிரிவில் கூறிய குற்றங்களை எவர் ஒருவர் செய்ய முயல்கிறாரோ, அக் குற்றங்களுக்கு ஆதரவாக, துணையாக எவர் ஒருவர் ஆணையிடுகிறாரோ, அக் குற்றங்களைப் புரிவதாக எவர் ஒருவர் மிரட்டுகிறாரோ, அத்தகையோர் இந்தச் சட்டத்தின் கீழ்க் குற்றம் செய்தவர் ஆவார்.

2007.56.3(3) முதலாம் இரண்டாம் துணைப் பிரிவுகளுக்கு அமைய எவர் ஒருவர் குற்றம் செய்கிறாரோ அவரைக் குற்றவாளியாகக் கண்டால், உயர்நீதிமன்றம் 10 ஆண்டுகள் வரையான கடூழியச் சிறைத் தண்டனையை விதிக்கலாம்.

2007.56.3(4) இந்தப் பிரிவுக்கமையக் கண்டறிந்து குற்றம்சாற்றிய எவரும் பிணையில் வெளிவர முடியாது. இப்பிரிவில் குற்றம் செய்ததாகச் சந்தேகித்தோர் குற்றம்சாற்றியோர் உச்சநீதிமன்றத்தால் விதிவிலக்கான சூழ்நிலை எனக் கண்டால் அன்றிப் பிணையில் வெளிவர முடியாது.

நீங்கள் சாத்தானை வழிபடுகிறீர்கள்
திருக்கோயில்கள் சாத்தானின் கூடங்கள்
உருவவழிபாடு நாகரீகம் அற்றது
சைவ சமய நோன்புகள் தேவையற்றவை
இவ்வாறெல்லாம் சைவசமயத்தை இழித்தும் பழித்தும் பேசி வெறுப்புகளை வளர்க்கின்ற எவரும் 2007.56 சட்டங்களின் கீழ் 3(1,2,3,4) இப்பிரிவுகளில் குற்றம் செய்தவராகக் கருதவேண்டும்.

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்புப் பிரதேச செயலகப் பிரிவு விசுவமடு தொட்டியடி அரை ஏக்கர் திட்டம் திருமதி செயவாணி இல்லத்துள் புகுந்து சைவக் கடவுளர் படங்களை உடைத்து எரித்துப் புதைத்த சூழ்நிலையில் இலங்கை அரசியலமைப்புச் சைவ சமயத்தவர் ஒருவருக்குத் தருகின்ற சட்டக் காப்பரண்களை விளக்குவது என் கடன்.

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்புப் பிரதேச செயலகப் பிரிவு விசுவமடு தொட்டியடி அரை ஏக்கர் திட்டம் திருமதி செயவாணி இல்லத்துள் புகுந்து சைவக் கடவுளர் படங்களை உடைத்து எரித்துப் புதைத்தவர் 2007.56 சட்டத்தின் கீழ் 3.123,4 பிரிவுகளின் கீழ்க் குற்றம் செய்ததாகக் கருத வேண்டும். பிணையில் வெளிவர முடியாதவாறு சிறையில் இருக்க வேண்டும்.

சட்டங்களைத் தெரிந்து கொள்வோம்
குற்றவாளிகளை அடையாளம் காண்போம்


3. தண்டனைக் கோவை penal code வரையறைகளும் சைவ சமயத்தவரும்.

வடமாகாணத்தில் சட்டங்களைக் காலத்துக்குக் காலம் அரசர்கள் இயற்றினார்கள்.

1619 யாழ்ப்பாண அரசு வீழ்ந்த பின்பும் போர்த்துக்கேயர் காலத்தில் ஒல்லாந்தர் காலத்தில் அச் சட்டங்கள் பெருமளவு நடைமுறையில் இருந்தன.

எழுதி வைக்காத சட்டங்களை எழுதி வைத்தவர் ஒல்லாந்தரே. வட மாகாணத்தின்12 முதலியார்களை அழைத்துச் சட்டங்களைத் தொகுத்தனர். 1707இல் தேசவழமைச் சட்டம் எனப் பெயரிட்டனர்.

ஆங்கிலேயர் காலத்தில் ஒல்லாந்தரின் சட்டக் கோவைகளை ஒதுக்கினர். ஆங்கிலேயச் சட்டக் கோவைகளை வெளியிடத் தொடங்கினர்.

குற்றங்களுக்கான தண்டனை தொடர்பாக ஆங்கிலேயர் 1885 தை முதல் நாள் இலங்கைத் தண்டனைக் கோவை Ceylon Penal Code என்ற சட்டவிதிகளை அறிவித்தனர்.

1993இன் 22ஆவது சட்டமும் 2006இன் 16ஆவது சட்டமும் இத்தண்டனைக் கோவையின் திருத்தங்களாயின.

22 தலைப்புகளில் 490 வரையறைகள் இலங்கைத் தண்டனைக் கோவையில் உள.

8ஆவது தலைப்பில் 138ஆவது வரையறையில் 5ஆவது பந்தியில், சைவ சமயத்தவர்களைக் காக்கக்கூடிய விதிகள் உள்ளன.

ஐந்து பேருக்கு மேல் கூடியிருக்கும் சபை அல்லது அமைப்பு எவர் ஒருவரை அவருடைய நம்பிக்கைக்கு, விருப்பத்திற்கு மாறாக, சட்டத்திற்குப் புறம்பாக நடக்குமாறு வலியுறுத்துமாயின் குற்றவியல் குற்றவாளியாகக் கண்டால் எனன வரையறை 138.5, கூற என் அக்குற்றவாளிக்கு ஆறு மாதம் வரையான சிறையோ குற்றப் பணமோ இரண்டுமோ தண்டனைகள் ஆகும் என்ன வரையறை 140 கூறுகிறது.

14ஆவது தலைப்பில் 287ஆவது வரையறை, எவர் ஒருவராவது மற்றவர்களுடைய செவிக்குத் துன்பம் தருமாறு பொறுக்க முடியாதவாறு செவி கய்க்கும் பாடலையோ சொற்களையோ ஒலித்தார் ஆயின், குற்றவியல் குற்றவாளியாகக் கண்டால் மூன்று மாதம் வரை சிறையோ குற்றப் பணமோ அல்லது இரண்டுமோ தண்டனையாகும் எனும்.

15ஆவது தலைப்பிலுள்ள 6 பிரிவுகள் சைவ சமயத்தவருக்குக் காப்பாக உள.

எந்த ஒரு வழிபாட்டு இடத்தையோ அல்லது எந்த ஒரு சமயத்தவரோ எந்த ஒரு பிரிவினரோ தூய்மையானதாக புனிதமானதாக கருதும் வழிபாடு சார்ந்த ஒரு பொருளையோ அடித்து உடைக்கிறார் அழிக்கிறார் பங்கம் செய்கிறார் எவர் ஒருவர் எனில் அத்தகைய அடித்து உடைப்பை அழிப்பை அல்லது பங்கத்தை அந்தச் சமயத்தவரும் அந்தப் பிரிவு மக்களும் தமக்கு அவமரியாதையாக பழிப்புத் தூற்றாகக் கருதுவார்கள் என்ற உணர்வைத் தெரிந்துகொண்டே எவர் ஒருவர் செய்கிறார் எனில் அவரைக் குற்றவியல் குற்றவாளியாகக் கண்டால் அவருக்கு இரண்டு ஆண்டுகள் வரையான சிறையோ குற்றப் பணமோ அல்லது இரண்டுமோ தண்டனையாகும் என்கிறது 290ஆவது வரையறை.

எந்தவொரு வழிபாட்டிடத்தையோ சுற்றாடலையோ அங்குள்ள புனிதமான தூய்மையான வழிபாட்டிற்குரிய எந்த ஒரு பொருளையோ எந்தவொரு மக்களின் சமய உணர்வைக் காயப்படுத்தும் நோக்குடன் அவ்வாறு செய்தால் அந்த மக்கள் தம் சமயத்திற்கு அவமரியாதை பழிப்பு எனக் கருதுவார்கள் என்ற தெளிவுடன் அறிவுடன் இவர் ஒருவர் எந்த ஒரு செயலைச் செய்தாலும் அவரைக் குற்றவியல் குற்றவாளியாகக் கண்டால் அவருக்கு ஓர் ஆண்டு வரையான சிறையோ குற்றப் பணமோ அல்லது இரண்டுமோ தண்டனையாகும் என்கிறது 290ஏ வரையறை.

சட்டத்துக்கு உட்பட்டுக் கூடிநின்று கூட்டமாகச் சமய வழிபாட்டில் சமயச் சடங்குகளை நிகழ்த்துவதில் ஈடுபட்டிருக்கும் கூட்டத்தாரைத் தன்னார்வத்தினால் எவர் ஒருவர் குழப்புகிறாரோ குறுக்கிடுகிறாரோ அவருக்கு ஓராண்டு வரை சிறையோ குற்றப் பணமோ அல்லது இரண்டுமோ தண்டனையாகும் என்கிறது 291ஆவது வரையறை.

திட்டமிட்டு தீய நோக்குடனும் சமய உணர்வுகளின் வெறுப்பூக்கமான பேச்சாலும் எழுத்தாலும் காட்சியாலும் எந்த ஒரு சமய உணர்வுக்குரிய மக்கள் தொகுப்பையும் பழிக்கவோ தூற்றவோ எவர் ஒருவர் முயல்கிறாரோ, அவரைக் குற்றவியல் குற்றவாளியாக கண்டால் இரண்டு ஆண்டு வரையான சிறையும் குட்டை பணமோ அல்லது இரண்டுமோ தண்டனையாகும் என்கிறது 291பி வரையறை.

எவர் ஒருவருடைய உணர்வைக் காயப்படுத்தவோ எவர் ஒருவருடைய சமயத்தைப் பழிக்கவோ அவ்வாறு செய்தால் அவர் காயப்படுவார் அவருடைய சமயம் பழிப்புக்கு உள்ளாகும் எனத் தெரிந்து கொண்டே ஒருவர் செய்தால்,

அவ்வாறே எந்த ஒரு வழிபாட்டு இடத்திலோ இடு காட்டிலோ சுடுகாட்டிலோ இறந்தோருக்கு நீத்தார்கடன் செய்யும் இடங்களிலோ இறந்த உடலுக்கோ இறப்பு நிகழ்வில் கலந்து கொண்டோருக்கோ பழிப்பு தூற்றல் அவமரியாதை வழி அத்துமீறினால்,

அவரை குற்றவியல் குற்றவாளியாக கண்டால் ஓர் ஆண்டு வரையான சிறையோ குற்றப் பணமோ அல்லது இரண்டுமோ தண்டனையாகும் என்கிறது 292ஆவது வரையறை.

17ஆவது தலைப்பில் 431ஆவது வரையறை தொடக்கம் 440ஆவது வரையறை வரையாக எவர் ஒருவரின் தனி உரிமை சொத்துகளுள் அத்துமீறல்கள் அஅட்டூழியங்களுக்குரிய குற்றங்களையும் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனைகளை விவரிக்கிறது.

மரபு வழியாக வந்திருக்கலாம்
முதுசம் ஆக வந்திருக்கலாம்
சீதனமாக வந்திருக்கலாம்
விலைக்கு வாங்கியிருக்கலாம்
அரசாங்க காணிப் பங்கு உரிமம் பெற்றிருக்கலாம் இவையாவும் தனியுரிமைச் சொத்துகள்.

 சைவத் திருக்கோயில்கள் தனியார் உடையன, அறங்காவலர் குழுவின் உடையன, அரசுடையன என மூன்று வகையின. சட்டத்தின் முன் இவையும் தனியார் சொத்துகளே.

சொத்துகளின் உரிமையாளரின் உரிமம் இன்றி நுழைவு அனுமதி இன்றி முன் ஒப்புதல் இன்றி அச்சொத்துக்குள் எவரும் நுழைய முடியாது என்கின்றன 17ஆவது தலைப்பில் 431ஆவது தொடக்கம் 440ஆவது வரையான வரையறைகள்.

விரிவு அஞ்சித் தமிழாக்கம் செய்ய முயன்றிலேன்.

தண்டனைக் கோவைச் சட்டத்தில் பல வரையறைகள், சைவர்கள் தமது அடையாளங்களைப் பேணவும்
சைவ அடையாளங்களை அழிக்க முயல்வோரிடமிருந்து காக்கவும் உதவுகின்றன.

சட்டங்களை அறிவோம்
சட்டங்களைத் துணையாகக் கொள்வோம்
சட்ட வரம்புகளுள் செயற்படுவோம்

நான்காம் பாகம்

4. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் ஒரு வரையறை சைவர்களின் நலம்பேணக் கூடும்.

1979இன் 48ஆவது சட்டமே பயங்கரவாதத் தடைச் சட்டம்.

2(1)(h) வரையறையில் கூறியவற்றைப் பார்ப்போம்.

பேச்சுக்களாலும் எழுத்துக்களாலும் வரும் சொற்கள் அல்லது அடையாளக் குறிகள் அல்லது காட்சி பொருள்கள் அல்லது வேறு ஏதாவது வழியிலா சமயத்தவரையோ இனத்தவரையோ சமூகத்தவரையோ வன்முறைக்கு ஆளாகத் தூண்டினால் அல்லது முரணைத் தோற்றுவிக்கின் அல்லது உணர்வுசார் நல்லெண்ணத்தைக் குலைப்பின் அல்லது எதிர்வினைகளை உருவாக்கின் அச்செயல்கள் இச்சட்டத்திற்கு அமையக் குற்றமாகக் கருதக் கூடிய செயல்கள் ஆகும்.

5. 2008 அக்டோபர் 16 இல் இலங்கை அரசின் புத்தசாசன அமைச்சு பிரதேச செயலகங்களுக்கு ம் பிரதேச சபைகளுக்கும் மாகாண சபைகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை சைவர்களுக்கும் ஆதரவான நிலையைக் கொண்டுள்ளது.

பழங்கால மரபு அமைந்த சமயங்களைத் தவிர வேறு சமயத்தினர் புதிதாக வழிபாட்டிடம் ஒன்றைக் கட்டுவதற்கு முன்பு புத்த சாசன அமைச்சில் உரிமம் பெற வேண்டும் என சுற்றறிக்கை கூறியது.

சுற்றறிக்கை நாடாளுமன்ற தீர்மானம் அல்ல எனவே சட்டம் ஆகாது என்ன விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் 2016இல் தாக்கல் செய்த வழக்கில் SCFR 92/2016, உச்சநீதிமன்றம் 2017இல் வழங்கிய தீர்ப்பில் 2008இன் புத்த சாசன அமைச்சுச் சுற்றறிக்கை கடைப்பிடிக்க வேண்டியதே சட்ட வரைவுக்குள் வருவதே எனத் தீர்ப்பளித்தது.

இந்தச் சுற்றறிக்கை சட்ட வலு உள்ளதால் மரபுவழிச் சமயங்களான சைவமும் புத்தமும் தவிர்ந்த ஏனைய சமயங்கள் புதிதாக வழிபாட்டிடம் ஒன்றைக் கட்டுவதாயின் உள்ளுராட்சி அமைப்பின் வழியாக மாகாண சபைக்கு விண்ணப்பித்து மாகாண சபை புத்தசாசன அமைப்பில் உரிமம் பெற்ற பின்புதான் அவ்வழிபாட்டு இடத்தைப் புதிதாகக் கட்டலாம்.

6. மதம் மாற்றும் உரிமை தொடர்பான இலங்கையின் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சைவர்களுக்கு ஆதரவானது

மதம் மாற்றும் உரிமையையும் உள்ளடக்கிய விதிகளைக் கொண்ட அறக்கட்டளை நிறுவுவதற்கு நாடாளுமன்றத்தில்தீர்மானம்  நிறைவேற்ற முன்பு அந்த அறக்கட்டளையின் விதிகள் சட்ட வரம்புக்கு உட்பட்டனவா என்பதை இலங்கையின் உச்ச நீதிமன்றம் (2/2001) எடுத்து நோக்கியது.

தீர்ப்பு வழங்குகையில் நீதிமன்றம் இந்தியாவில் உள்ள மதமாற்றத் தடைச் சட்டம் தொடர்பாகப் போதகர் இசுற்றானிலோசர் மத்திய பிரதேச மாநிலத்துக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைச் சுட்டிக்காட்டியது.

ஒருவரை மதம் மாற்றுவது அடிப்படை மனித உரிமை அன்று. திட்டமிட்டு ஒருவரை மதம் மாற்றுவது குடிமக்கள் ஒவ்வொருவரின் மனச்சான்றையும் பாதிக்கும் எனத் தீர்ப்பில் கூறியது.

இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இலங்கைக்கும் பொருந்தும் எனக் கூறியது இலங்கையின் உச்ச நீதிமன்றம். மதப் பிரச்சாரம் செய்வது அரசியலமைப்பில் வழங்கிய அடிப்படை உரிமை அன்று என்றது. கட்டற்ற சிந்தனை கட்டற்ற மனச்சான்று கட்டற்ற சமயநெறிக் கைக் கொள்ளல் இவை அடிப்படை உரிமைகள் என்றது இலங்கையின் உச்ச நீதிமன்றம்.

சட்டங்களைத் தெரிந்து கொள்வோம்
சட்டங்களைக் கொண்டே சைவ சமயத்தவரைக் காப்போம்.

சட்ட வரம்புள் வாழ்வோம்

நாளை நமதே
வெற்றி நமதே

மறவன்புலவு க சச்சிதானந்தன்
சிவ சேனை

No comments: