ஊடகத்தாருக்கு அறிக்கை 27.04.2020
காலனித்துவத்தை நோக்கிய கோரிக்கை
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
சிவ சேனை
சட்டம் ஓர் இருட்டறை
சட்டங்கள் மனிதருக்கானவை.
சட்டங்களுக்காக மனிதர் அல்லர்.
மனித உயிர்களைக் காத்தால் மனிதம் வாழும் சட்டத்தை மட்டுமே காத்தால் மனிதம் வீழும்.
சட்டங்கள் தோற்கலாம்
மனிதம் தோற்கக் கூடாது.
காற்றால் பரவும்
மூச்சால் பரவும்
தொட்டால் பரவும்
சளி பிடிக்கும்
தொண்டை கரகரக்கும்
இருமலுடன் மூச்சு இழுக்கும்
நுரையீரலின் சந்து பொந்துகளைச் சளி அடைக்கும்
சாவு வந்து தழுவும்.
முள்முடித் தீநுண்மி கோவிக்கும்19.
தட்டம்மை சின்னம்மை பெரியம்மை என்பன மாரி நோய்கள். தீநுண்மிகள் தரும் நோய்கள்.
மனிதரைத் தாக்கா வண்ணம் தடுப்பு மருந்துகள் கண்டறிந்து நெடுங்காலமாயது.
முள்முடித் தீநுண்மி கோவிக்கும்19க்கும் விரைவில் தடுப்பு மருந்து வரும். அத்தகைய தடுப்பு மருந்தைக் கண்டறியும் ஆற்றல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவப் பேராசிரியப் பெருமக்களுக்கு உண்டு.
போதுமான நிதி ஆதாரங்களை வழங்கினால் முழுநேரமாக அவர்கள் ஆராய்ந்து வழி காண்பார்கள். உலகுக்குத் தடுப்பு மருந்தை விளங்கும் பெரும் பேற்றை அடைவார்கள்.
சாதிக்க முடியாதது எதுவும் இல்லை. அவர்களை ஆய்வுப் பணியில் ஈடுபடுத்த நாம் அனைவரும் முயற்சிக்க வேண்டும்.
அவர்கள் திறமைசாலிகள் ஆற்றல் வாய்ந்தவர்கள் மதிநுட்பம் உடையவர்கள் தொழில்நுட்பத்தில் ஈடுபாடு உள்ளவர்கள். நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல் (குறள்: 948) மரபில் ஊறியோர்.
தீநுண்மி மீது சட்டங்கள் செல்லாது. தீநுண்மிக்குச் சட்டங்கள் தெரியாது.
கலைந்து போன நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டிச் சட்டங்களை இயற்றி தீநுண்மி நோய்ப் பரவலைத் தடுக்கும் வழிகளைக் காணலாம் எனத் தமிழர் சார்பில், முகமதியர் சார்பில் திரு மனோ கணேசன், திரு சுமந்திரன் திரு அக்கீம், திரு இரிசாத்தர் கோரியுள்ள செய்திகளைப் படித்ததும் வியப்புற்றேன்.
நாடாளுமன்றங்களைக் கூட்டாமலே உலகெங்கும் உள்ள குடியாட்சி அரசுகள் முள்முடித் தீநுண்மி கோவிக்கும்19 தாக்குதலைச் சமாளிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.
சட்டங்கள் இருந்தென்ன வசதிகள் இருந்தென்ன? மக்கள் பல்லாயிரக்கணக்கில் தீநுண்மி தாக்கி இறக்கிறார்களே? என இத்தாலியப் பிரதமர் கண்ணீர் விட்டு அழுதார்.
நாடாளுமன்றத் தாயகமான பிரித்தானியாவில் 20 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிரதமருக்கும் அமைச்சர்களுக்கும் தீநுண்மி தொற்றியதாம்!
நாடாளுமன்றத்தைக் கூட்டாமலே நாட்டை ஆளும் வழிகளை அவர்கள் எடுத்து நோக்கி வருகிறார்கள்.
பிரித்தானிய நல்வாழ்வு அமைச்சரின் ஆர்வம் தீநுண்மிக்குத் தடுப்பு மருந்தைக் காண்பதே. நாடாளுமன்ற ஒப்புதல் உண்டோ இல்லையோ பிரித்தானியாவின் இரு பல்கலைக்கழகங்களுக்கு எல்லையற்ற நிதி வசதியை அள்ளிக் கொடுத்துள்ளார் நல்வாழ்வு அமைச்சர்.
நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் ஒரு குழுவை அமைத்து ஆட்சிக்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். நாடாளுமன்றத்தை கூட்டுவது இல்லை.
அரசியலமைப்பும் சட்டங்களும் சூழ்நிலைக்கேற்பவே செயல்படுகின்றன. சட்டங்களுக்கு ஏற்பச் சூழ்நிலைகள் செயற்படுவதில்லை.
சட்டங்களை முழுமையாக எழுத்துக்கு எழுத்து சொல்லுக்குச் சொல் வரிக்குவரி நடைமுறைக்கு கொண்டு வந்தால் எதேச்சாதிகாரமும் சர்வாதிகாரமும் அடிமைத்தனமும் இலங்கையைச் சூழும்.
எந்தச் சட்டத்தை எந்த நேரத்தில் எவ்வாறு வளைத்துச் சூழ்நிலைக்கேற்றவாறு நடைமுறைக்கு கொண்டுவருபவரே சிறந்த ஆட்சியாளர்.
உலகில் அனைத்து ஆட்சியாளர்களும் இக்காலத்தில் அவ்வாறு ஆட்சி நடத்துகிறார்கள்.
சட்டங்கள் இல்லாமலே மக்களிடம் தன்னார்வமாக ஊரடங்கையும் வீடடங்கையும் நடைமுறைக்குக் கொண்டு வாருங்கள் எனக் கேட்டவர் பிரதமர் மோடி. 130 கோடி மக்களும் ஒத்துழைத்துத் தன்னார்வமாக ஒருநாள் தாமே வாடினார்கள்.
ஊரடங்குச் சட்டம் நடைமுறை தொடர்பாக நடுவன் அரசுக்கு உள்ள அதிகாரங்கள் எவை மாநில அரசுக்கு உள்ள அதிகாரங்கள் எவை என்பதையெல்லாம் எடுத்து நோக்காமல் பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று மாநிலங்கள் ஊரடங்கை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்குக் காரணம் மக்களே.
நல்வாழ்வுத் துறையில் மேம்பட்ட நாடுகள் பல தடுப்பணைகள் கட்ட முடியவில்லை. அங்கு பல்லாயிரக்கணக்கில் மக்கள் மடிந்தார்கள்.
130 கோடி மக்கள் வாழ்கின்ற இந்தியாவில் தடுப்பணைகள் வெற்றிகரமாக இயங்குகின்றன. கட்டுப்பாட்டுக்குள் நோய் வந்துள்ளது. மிகக் குறைந்த அளவினரே இறந்துள்ளார்கள். மிகக் குறைந்த எண்ணிக்கையினருக்கே நோய் தொற்றி உள்ளது.
தொடர்புகள் குறைந்த சிற்றூரில் நான் இருக்கிறேன். எனினும் குடியரசுத் தலைவர் கோதபய ஆட்சித் திறனால் இலங்கை முழுவதும் தீநுண்மித் தொற்று நோய் கட்டுக்குள் இருக்கிறதைக் காண்கிறேன். உலகின் பல நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் பாதிப்பு மிக மிகக் குறைவு.
மருத்துவ ஆலோசனைளுக்கு முன்னுரிமை கொடுக்கும் ஆட்சி, நோயைக் கட்டுப்படுத்துவதில் வெற்றி பெற்றுள்ளது என்றே கூறுவேன்.
பசிநோக்கார் கண்துஞ்சார் கருமமே கண்ணாயினார் என்றவாறு மருத்துவர் தாதியர் ஆய்வுகூட உதவியாளர் வண்டி ஓட்டுநர் சிற்றூழியர் என மருத்துவம் சார்ந்த பல்நிலை ஊழியர்கள் தமக்கும் நோய் வரலாம் என்ற அச்சமின்றிக் கடுமையாக உழைக்கிறார்கள்.
விளக்கம் குறைந்த குடிமக்கள் சிலர் கட்டுகளை மீறும் வேளையில் காவல்துறையும் படைத்துறையும் இணைந்து குடி மக்களுக்கு உதவித் தனிமையும் சமூக இடைவெளியும் பேண, தம் நலன்களைப் பாராது உழைக்கிறார்கள்.
தீநுண்மியால் இறந்தோர் உடலைப் எரிப்பதா புதைப்பதா என்பதில் அரசு மருத்துவரின் ஆலோசனை மட்டுமே பெற்று செயலாற்றுகிறது.
உலகநாடுகள் நல்வாழ்வு நிறுவனம், அனைத்துலக மன்னிப்புச்சபை மனித உரிமைக் கண்காணிப்பாளர் எனப் பல தரப்பினர் அரசின் இந்த நடவடிக்கையை ஏற்கவில்லை.
ஆட்சித் திறனே நோக்கமாகக் கொண்ட அரசு மருத்துவர்களின் ஆலோசனையை மட்டுமே கேட்கின்றமை பாராட்டுதற்குரியது.
தனிமை நிலையங்களில் 14 நாள்களோ கூடுதலாகவோ தனித்திருந்து வெளியேறிய பலர் அந்த நிலையங்களில் படையினர் வழங்கிய வசதிகளை வியந்து பாராட்டுகின்றனர்.
நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் தொடர்பான சட்டங்கள் சட்டம் உள்ளனவா இல்லையா என்ன எடுத்து நோக்குவோர் நாட்டுப்பற்றாளரா?
பல்லாயிரம் ஆண்டுகளாகச் செதுக்கி செதுக்கிப் புதுப்பித்துத் தீயன கலைத்து நல்லன புனைந்து மெருகேற்றிய பண்பாட்டு வளங்களின் தளத்தில் செயற்படும் அரசத் தலைவர்களை,
இந்த மண்ணில் விதையாக முளையாக செடியாக மரமாக வளர்ந்து நிழல் தரும் மரபுகளையும் வழமைகளையும் ஏற்றுக்கொண்ட அரசுத் தலைவர்களை
இந்த மண்ணில் ஒட்ட முடியாத மரபுகளையும் வழமைகளையும் திணிக்கவும் ஆக்கிரமிக்கவும் முன்னெடுக்கவும் முயல்கின்ற வகையறாக்கள்
சாடுவதும் திட்டுவதும் குறை சொல்வதும் உலக அமைப்புகள் மூலம் கண்டிப்பதும்
அரசியலமைப்புக்கு முரணாக நாடாளுமன்றத்தை கூட்டக் கோருவதும்
சட்டங்களின் நடைமுறையை வலுவற்றதாக்கலாம் என நீதிமன்றங்களை நாடுவதும்
மீண்டும் காலனித்துவ ஆட்சியைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை அன்றி வேறல்ல.
No comments:
Post a Comment