Monday, May 25, 2020

திருக்கேதாரம்

ஆதாரம் நீயே! அருள்மலை நீயே
தீதான வெல்லாந் தொலைப்பவன் நீயே
நீதானே அப்பன் நீதானே அம்மை
நாதா! கேதாரா! நமபினேன் உனையே! 1

நெறிநின்ற வாழ்வு நிறைகின்ற போது
அறிகின்ற நாதர் அழைக்கின்ற நேரம்
வருகின்றேன்! வந்தேன்! வீடுபே றெனக்குந்
தருகின்ற தாள்கள் தலைமிசை வைத்தேனே! 2

அற்புதம் கண்டேன்! ஆனந்தங் கொண்டேன்
வெற்புதன் உச்சியில் விந்தைகள் கண்டேன்
பொற்பதம் காட்டும் புண்ணிய கேதா
நற்பதம் நாடினேன்! நயந்துபே றளியே. 3

மழைபொழியச் செய்தீர் மண்சரியச் செய்தீர்
தளைமுறியச் செய்தீர் தடைவழியில் செய்தீர்
பிழைநிறையச் செய்தேன் பெரும்பழிகள் கொண்டேன்
புழைதவத்தைச் செய்தேன் கேதாரம் வந்தேனே! 4

சொரிகின்ற மழையில் சோர்வின்றி ஏறித்
தெரிகின்ற அருவியின் தெள்ளேணங் கேட்டுப்
புரிகின்ற மொழிகளுள் பொதுமொழி கண்டு
வருபவர்க் கருளினை வழங்கு கேதாரரே! 5

காவெல்லாம் பச்சை கனியெல்லாம் நீலம்
பூவெல்லாம் மஞ்சள் புகாரெல்லாம் வெள்ளை
தீயெல்லாஞ் சிவப்பு திகட்டுதே வியப்பு
நீயன்றோ எங்கும் நிறைந்துள்ளாய் இறையே! 6

வங்கக் கடலோரஞ் சங்கத் தமிழ்கேட்க
எங்கள் இமயத்தில் ஏங்கும் பனிப்படலம்
அங்கங் குழைந்துருகி ஆறாய்ப் பெருக்கெடுக்கக்
கங்கையாய் அனுப்புகிறீர் கருணைமிகு கேதரரே! 7

சேற்றுக் கலக்கல் செவ்விளமைக் குலுக்கல் 
ஊற்றுச் சுனைகள் உமிழ்நீர்த் திவலைக்
காற்றின் ஈரலிப்பே காலைக்கார்க் குடையான
ஆற்றின் பெருக்காய் அருளுவீர் கேதரரே! 8

போர்ப்புரவி யென்னப் பாய்ந்துவரும் பேரழகும்
ஆர்ப்பரித்தே வீசும் அலையின் இசையொலியும்
சார்மந்தா கினியோடு சீரழகு நந்தாவுடன்
சேர் பகீ ரதியாவும் சங்கமித்துக் கங்கைசெய்தீர்! 9

வெளுத்த பனிப்பாறை வெயிலில் உருகுதல்போல்
உளுத்த கவலைநோய் உறுபாவம் தனைப்போக்கிக்
கொளுத்தி நமைத்தீய்க்குங் கொடுமை வினைநீக்கிக்
களிப்பில் எமைஆழ்த்திக் கனிவிப்பீர் கேதரரே! 10

No comments: