Sunday, July 09, 2006

கைதடியின் நன்மகள்

மறவன்புலவு க. சச்சிதானந்தன்
அப்பொழுது எனக்கு 15 வயது. ஒரு நாள் மாலை நேரம் 5 மணி இருக்கும். வகுப்புகள் முடிந்ததும் என் தந்தையாரின், காங்கேயன்துறை வீதியிலுள்ள அச்சகத்துக்கு வந்திருந்தேன். வாயிலில் தந்தையாரும் தவத்திரு யோக சுவாமிகளும் நின்று உரையாடிக் கொண்டிருந்தனர். என் கல்வியைப் பற்றித் தவத்திரு யோக சுவாமிகள் விசாரித்தார். எந்தப் பாடத்தில் பயிற்சி குறைவு எனக் கேட்டார். பௌதிகத்தில் போதிய விளக்கம் இல்லை என்றேன்.
வைத்தீசுவர வித்தியாலயத்தில் மேல்வகுப்பில் பயிலும் மூத்த மாணவரான திரு. பரஹம்சதாசனிடம் பாடம் கேட்குமாறும், நாள்தொறும் மாலை 5 மணிக்கு கதிரேசன் கோயிலுக்குப் பக்கலில் உள்ள கடை ஒன்றில் வகுப்புக்கு வருமாறும் தவத்திரு யோக சுவாமிகள் கூறினார்.
உரிய நேரத்துக்குச் செல்வேன். திரு. பரஹம்சதாசன் வந்து பாடம் நடத்துவார். அங்கிருந்த சாய்மனைக் கதிரையில் தவத்திரு யோக சுவாமிகள் சாய்ந்திருப்பார். ஒரு மணி நேர வகுப்பு முடிந்ததும் போய்விடுவேன்.
அந்தக் கடைக்குத் தவத்திரு யோக சுவாமிகளைப் பார்க்க, வைத்தீசுவர வித்தியாலய ஆசிரியரான திரு. விசுவலிங்கம் வருவார். என்னிடமும் நலம் விசாரிப்பார். திரு. விசுவலிங்கம் அவர்களுடன் அறிமுகம் அவ்வாறுதான் நிகழ்ந்தது.
பாடம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில், தவத்திரு யோக சுவாமிகள் சொன்னதைக் கேட்டு, நாள் தொறும் மாலை வேளைகளில் சிவதொண்டன் நிலையமும் போவேன். கூட்டுறவுப் பரிசோதகராக இருந்த திரு. நல்லையா அவர்களிடம் கந்தபுராணப் படனப் பயிற்சி பெறுவேன். அங்கும் அடிக்கடி திரு. விசுவலிங்கம் அவர்களைக் காண்பேன்.
அந்த நாள்களில், மாலை வேளைகளில் ஒரு ஒஸ்ரின் கார் வரும். சிவதொண்டன் நிலைய வாசலில் காத்திருக்கும். சிறிது நேரத்தின் பின் திரு. விசுவலிங்கம் அவர்கள் அந்தக் காரில் ஏறிக் கொள்வார்கள். கார் போய்விடும். யாழ்ப்பணம் இந்துக் கல்லூரியில் ஆசிரியராக இருந்த திரு. முத்துக்குமாரசாமி, யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் ஆசிரியராக இருந்த திருமதி முத்துக்குமாரசாமி இருவருமே அந்த ஒஸ்ரின் காரில் சிவதெண்டன் நிலையம் வந்து திரு. விசுவலிங்கம் அவர்களை அழைத்துச் செல்பவர்கள்.
நாவற்குழியைச் சேர்ந்த திரு. செல்லத்துரை அவர்களும் கைதடியைச் சேர்ந்த திரு. விசுவலிங்கம் அவர்களும் சிவதொண்டன் நிலையத்தின் பொறுப்புகளை அக்காலப் பகுதியில் கவனித்து வந்தததைக் கண்டேன்.
கைதடியில் மணியகாரர் இல்லத்தைச் சேர்ந்தவர்கள்; தவத்திரு யோக சுவாமிகளின் அதீத அடியவர்கள்; மென்மையான இதயமும் மேலான பண்புகளும் கொண்டவர்கள். யாவற்றுக்கும் மேலாக என் தந்தையாரின் பெரு மதிப்புக்கு உரியவர்கள். எனவே என் மதிப்பிலும் அவர்கள் உயர்ந்து நின்றனர்.
காலவோட்டத்தில் சென்னைக்குப் படிக்க வந்தவன், முடிந்தபின் கொழும்பில் பணிக்குப் போனேன்.
திரு. முத்துக்குமாரசாமி அவர்கள் என்னை மறக்கவில்லை. ஒருநாள் அவரிடம் இருந்து கடிதம் வந்தது. கைதடியில் சைவ சமய விழா; விழாவுக்கு ஒரு மலர்; அந்த மலருக்கு என்னிடமிருந்து ஒரு கட்டுரை கேட்டிருந்தார். எழுதி அனுப்பினேன்; வெளியிட்டிருந்தார். மலரின் படியையும் அனுப்பி இருந்தார்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபராக இருந்த திரு. மு. கார்த்திகேயன் அவர்கள் காலமானதும் அவருக்கு இந்துக் கல்லூரியில் நினைவு அஞ்சலிக் கூட்டம். நான் அந்தக் கூட்டத்தில் பேச வேண்டும் எனத் திரு. முத்துக்குமாரசாமி என்னைக் கேட்டார். திரு. மு. கார்த்திகேயன் இந்துக் கல்லூரியில் எனக்கு ஆங்கில ஆசிரியர். என்னை நண்பனாகவே கருதுவார். அய்யனார் கோயிலடியில் நான் வசித்த வீடு, யாழ்ப்பாணம் மாநகர சபையின் பத்தாம் வட்டாரத்தின் பகுதி. எம் உறவினர் திரு. துரைராஜா அவ்வட்டாரத் தேர்தலில் வேட்பாளர். திரு. மு. கார்த்திகேயனும் வேட்பாளர். திரு. கார்த்திகேயனின் வெற்றிக்காக உழைத்த மாணவர் குழாமில் நானும் ஒருவன். அத்தகைய அன்பும் மதிப்பும் உறவும் திரு. கார்த்திகேயனுடன் வைத்திருந்தேன். இதைத் தெரிந்து கொண்ட திரு. முத்துக்குமாரசாமி அவர்கள் என்னையும் நினைவஞ்சலி உரை நிகழ்த்த அழைத்தார்.
1979 வைகாசியில் ஒரு நாள். மறவன்புலவில் வீட்டில் இருந்தேன். கார் ஒன்று வந்து நின்றது. கைதடியிலிருந்து ஆசிரியர் திரு. கந்தையா அவர்களும் நண்பரும் வந்திருந்தனர். கைதடிப் பிள்ளையார் கோயிலில் தேர் திருவிழா நடைபெறுவதாகவும் தேர் வடம் பிடிக்க அனைத்துச் சமூகத்தினருக்கும் அநுமதி இல்லை என்றும் கூறினர். நானும் என் பெண் மக்கள் இருவரும் நீராடி, தோய்த்துலர்ந்த உடை அணிந்து, திரு. கந்தையா அவர்களின் காரில் கைதடிக்குப் போனோம்.
கோயிலில் பெரிய கூட்டம். தேரில் எழுந்தருளிப் பிள்ளையார் அலங்கரித்து வீற்றிருந்தார். நானும் பிள்ளைகளும் வீழ்ந்து வணங்கினோம்.
சாவகச்சேரிக் காவல் நிலையத்திலிருந்து காவலர் படை வந்திருந்தது. படைத் தலைவரை அழைத்தேன். உங்களுக்கு இங்கே என்ன பணி? இது. கோயில். எவரும் மோதாமல் பார்த்துக் கொள்வது எங்கள் கடமை. நீங்கன் இங்கு இருந்தால் சிக்கல் மேலும் அதிகமாகும் எனக் கூறினேன். காவல் படையினர் ஒதுங்கினர். வெளிப்புறத்திற்குப் போயினர்.
இரண்டு கைகளிலும் 8, 9 வயதுச் சிறுமிகளான என் பெண் மக்கள். இருவருடனும் தேரடிக்குப் போனேன். திரு. விசுவலிங்கம் அவர்கள் நின்றார்கள். திரு. முத்துக்குமாரசாமி அவர்கள் நின்றார்கள். அவர்களே கோவில் அறங்காவலர்கள் எனத் தெரிந்து கொண்டேன். சிக்கலின் இழைகளை விரித்துக் கூறினர். எவரும் தேர் வடம் பிடிப்பதில் தமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்றனர். ஆனாலும் வேறு ஒரு பிரிவினர் இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவிப்பதுடன் வன்முறைக்கும் தயாராக உள்ளதைக் கூறினர்.
அப்பிரிவினரிடையே செல்வாக்குப் பெற்றவரான திரு. கே. சி. நித்தியானந்தா அவர்கள் சுண்ணாகத்தில் இருந்தார். கார் ஒன்றை அனுப்பி அவரை அழைத்து வரக் கூறினேன். அவரும் ஓடோடி வந்தார். அவருக்கு விவரங்களைக் கூறினேன். அவரது சொல்லுக்கும் அப்பிரிவினர் மதிப்புக் கொடுக்கவில்லை.
அனைத்துச் சமூகத்தினரும் வடம் பிடித்தால் தேர் ஓடும். அல்லாவிடில் தேர் ஓடாது என்ற கருத்தில் நான் பிடிவாதமாக இருந்தேன். திரு. விசுவலிங்கம் அவர்களுக்கு இக்கருத்தில் உடன்பாடில்லை. அறங்காவலர் அல்லவா. எப்படியாவது தேர் ஓடவேண்டும் என்றார். எனது நிலையை நான் தளர்த்தவில்லை. தேர் ஓடுவதில்லை எனத் தீர்மானித்தனர். எழுந்தருளிப் பிள்ளையாரைத் தேரில் இருந்து இறக்கிக் கோயிலுக்குள் எடுத்துச் சென்றனர்.
திரு. முத்துக்குமாரசாமி தம்பதிகள், மற்றும் சார்ந்தவர்கள் யாவருக்கும் என் தலையீட்டில் உடன்பாடில்லை. இவ்வளவு காலமும் இந்தக் கோயிலுக்கு வராத நீர், இன்றைக்கு மட்டும் வந்தீரே? எனத் திரு. விசுவலிங்கம் அவர்களின் மென்மையான வினா, சார்ந்தவர்களின் உள்ளக் கிடக்கையின் வெளிப்பாடு.
அனைவரும் அமைதியாக வீடு திரும்பும் வரை நானும் என் பெண் மக்களும் திரு. கே. சி. நித்தியானந்தா அவர்களும் கோயிலடியில் வெயிலில் காத்திருந்தோம்.
பின்னர் திரு. கே. சி. நித்தியானந்தா அவர்களைக் காரில் சுண்ணாகத்துக்கு அனுப்பிவைத்தேன். நேராகத் திரு. முத்துக்குமாரசாமி அவர்களின் இல்லத்துக்குப் பெண் மக்களுடன் சென்றேன். அன்பாகப் பேசினேன். உபசரித்தனர், விருந்தோம்பினர், விடைபெற்றேன்.
பின்னர் கைதடியில் அறப்போர், செய்தி இதழ்களில் பிரசாரம், யாழ்ப்பாணம் முற்ற வெளியில் பொதுக்கூட்டம், பேச்சுவார்த்தை எனத் தொடர்ந்து, திரு. கதிரவேற்பிள்ளை, திரு. கே. சி. நித்தியானந்தா, திரு. கு. நேசையா திரு. வி. எஸ் துரைராஜா, திரு. க. ஜீவகதாஸ் ஆகியோர் இணைந்து பேசி, அனைத்துச் சமூகத்தவருக்கும் கோயிலை திறந்துவிடும் நிலையும் அனைத்து வழிபாடுகளிலும் அனைத்துச் சமூகத்தவரும் கலந்து கொள்ளும் நிலையும் சில மாதங்களுக்குள்ளேயே ஏற்பட்டன.
முரண்பாடுகள் நிறைந்த இக் காலப் பகுதி முழுவதும் எனக்கும் திரு. விசுவலிங்கம் அவர்களுக்கும், திரு. முத்துக்குமாரசாமி தம்பதிகளுக்கும் இடையே அன்பு குறையவில்லை. வழமையான இயல்பான தொடர்புகள் குன்றவில்லை.
நான் வெளிநாடுகளில் பணி புரிந்த காலங்களில் இரமணன் - கௌரி திருமணச் செய்தி பெற்றதும் அளவிலா மகிழ்ச்சி அடைந்தேன்.
திரு. முத்துக்குமாரசாமி தம்பதிகளைத் தெரிந்த அளவு, அவர்களின் மக்கள் எனக்கு அறிமுகமானவரல்ல. எனினும் அவர்கள் அறிவறிந்த மக்கள் என்பதையும் மரபறிந்த மக்கள் என்பதையும் பெற்றோரையும் பெயரரையும் கொண்டே மதிப்பிட்டேன். தாம் தேர்ந்த துறைதொறும் துறைதொறும் வல்லுநராய் விளங்கும் மக்களாக அவர்கள் உளர். சைவத்திலும் தமிழிலும் தோய்ந்த மக்களாய் அவர்கள் உளர்.
இரமணனின் காரியம் யாவிலும் கைகொடுக்கும் துணைவியாராய், நன்மக்களை ஈன்றெடுத்த நற்றாயாய்க் கௌரியை அறிவேன்.
திருமதி. முத்துக்குமாரசாமி அவர்கள் மறைந்தார்கள் என்ற செய்தியைப் படித்ததும் இந்த நினைவலைகள் என் நெஞ்சில் மோதின, ஆழிப் பேரலையாய் மோதியதால் துக்கம் நெஞ்சை நிறைத்தது. கண்கள் பனித்தன.
மனித வரலாற்றின் பண்பாட்டு வளர்ச்சியில் செதுக்கிச் செதுக்கிக் கூர்மையாக்கிய நல்லியல்புகளின் உறைவிடமான திருமதி முத்துக்குமாரசாமியின் பூதவுடல் மறைந்தாலும், அவர் காத்த நல்லியல்புகள் மறையாது பேண அவரின் வழிவந்தோர் பலர் உளர்.