தண் சொல் பரவுவார் உளர்.
வெஞ்சொல் வீசுவார் உளர்.
பொதுவெளிக்கு வந்தாலே இது விதி.
கடந்த சில நாள்களாக என் பெயரைச் சுட்டி வரும் உரையாடல்களைப் படிப்பதுண்டு.
ஆட்டத்தைப் பார்க்காமல் ஆளைப் பார்க்கிறவர்களைப் பொருட்படுத்தேன்.
கிறித்தவத்துக்கும் கிறித்தவர்களுக்கும் எதிரானவன் முரணானவன் என்ற கண்ணோட்டத்தில் என் பணிகளைப் பார்க்கின்ற அன்பர்களை என் சொல்வேன்?
மனித சமூக ஒழுக்க வரலாற்றை நன்னெறிகளுள் திசை திருப்ப முயன்றவர்கள் எண்ணிலடங்கார்.
வரலாற்றுப் பதிவு பெற்றவர்களுள் கன்பூசியஸ் மகாவீரர் புத்தர் திருவள்ளுவர் இயேசுபிரான் நபிகள் நாயகம் நான் அறிந்த ஒரு சிலர்.
இவர்கள் எல்லோரும் என் மதிப்புக்கு உரியவர்கள். இவர்களின் கருத்துரைகள் என் வாழ்வில் துணையாக இருந்திருக்கின்றன.
தமிழுக்கும் தமிழல்லாதவற்றுக்கும் உள்ள வேறுபாட்டை எனக்கு எடுத்து கூறிப் பழக்கியவர் என் தாயார்.
மாதப் பிறப்பு என்று என்று சொல்லும்பொழுது அவருக்கு தமிழ் நாட்காட்டி தான் வழிகாட்டி. மருந்துகளை அவர் தமிழ் மருந்து என்று அழைப்பார். இவ்வாறு சிறுவனாக இருந்து எனக்குத் தமிழை மொழியாக மட்டுமன்றி சமூக வழமைகளின் களஞ்சியமாகப் பழக்கினார் என் தாயார்.
சைவரே தமிழர். வேதக்காரர் சோனகர் தமிழரல்லர். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் நான் வாழ்ந்த சமூகத்தின் பல்வேறு மட்டங்களிலும் இதையே எனக்கு மீட்டும் மீட்டும் கூறினர்.
பள்ளியில் கல்லூரியில் பல்கலைக்கழகத்தில் படித்து முடிந்த காலங்களில் என் கருத்தில் மாற்றம் வந்தது. பெங்களூரிலிருந்து அஞ்சல் மூலம் கற்பிக்கின்ற விவிலிய வகுப்புகளில் சேர்ந்தேன். யோவானின் சுவிசேஷம் மத்தேயு சுவிசேஷம் என்ன மூன்று நான்கு சுவிசேஷங்களை முழுமையாகப் படிக்க அதன் அடிப்படையில் தேர்வு எழுத எனக்கு வாய்ப்புக் கிட்டியது. என் நூல் அடுக்கில் இன்றும் அவர்கள் அனுப்பிய விவிலியப் படிகள் உள்ளன ஒன்றல்ல இரண்டல்ல நான்கு வெவ்வேறு பதிப்புப் படிகள் உள்ளன
என் பெற்றோர் தடுமாறினர். சொல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் சஞ்சலம் உற்றனர்.
விவிலியக் கல்வி சைவத்தின் மீதான ஆழமான ஈடுபாட்டையே எனக்குத் தந்தது.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் ஆசிரியராக எனக்கு ஆங்கிலம் கற்பித்த திரு மு கார்த்திகேயன் அவர்களுடைய பொதுவுடமைக் கருத்துகள் என்னை ஈர்த்தன. அவரோடு மூன்று நான்கு ஆண்டுகள் பொதுவுடமைக் கருத்துக்களைக் கற்றேன். பொதுவுடமை இதழ்களை விற்றேன். சீன இதழ்களைப் படித்தேன். என் அறிவை விரிவாக்கினேன்.
சென்னையில் பச்சையப்பன் கல்லூரியில் திராவிடக் கருத்தியல் சூழலில் வளர்ந்தேன். திரு வைகோ திரு துரைமுருகன் திரு தமிழ்குடிமகன் போன்ற பிற்காலத் திராவிட இயக்கத் தலைவர்கள் பலர் அக்காலத்தில் என் சமகால மாணவர்கள் என் அன்பர்கள் நண்பர்கள்.
திராவிடக் கருத்தியலை உள்வாங்கும் தளமாக ஆறு ஆண்டுகள் பச்சையப்பன் கல்லூரி விடுதியில் தங்கியிருந்த காலங்கள் எனக்கு அமைந்தன. பெரியார் தொடக்கம் அனைத்துத் திராவிடத் தலைவர்களின் உரைகளையும் செவிகளுக்குத் தேனாக்கி இருக்கிறேன். கலைஞர் ஆசைத்தம்பி நெடுஞ்செழியன் போன்ற பலரின் இதழ்கள் நூலகத்தில் என் கருத்தியலுக்கு வலுவூட்டின.
விவிலியமும் பொதுவுடமையும் திராவிடமும் என் சைவத் தமிழ் ஈடுபாட்டைச் சிறிதும் குறைக்கவில்லை.
கொழும்பில் எழுத்தராக பல்கலைக்கழக ஆய்வியல் மாணவனாக மாண்புமிகு அமைச்சர் திருச்செல்வத்தின் தனி உதவியாளனாக ஆய்வாளராகப் பணிகளில் இருந்த காலத்தில், தந்தை செல்வா அவர்களிடம் சென்று வரத் தொடங்கினேன்.
அவர் மீதுள்ள மதிப்பு அவர் கிறித்தவர் என்பதற்காக அன்று. மு கார்த்திகேயன் மீதுள்ள மதிப்பு பொதுவுடமைவாதி என்பதற்காக அன்று. என் வாழ்நாள் முழுவதும் நீடித்து வரும் வைகோ துரைமுருகன் தமிழ்குடிமகன் கலைஞர் போன்ற பலரின் இனிய நட்பு திராவிடத்திற்காக அன்று.
தந்தை செல்வாவின் மீது கொண்ட அதீத மதிப்பின் காரணமாக அவர் இறந்ததும் அவருக்கு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் எனத் திரு அமிர்தலிங்கம் அவர்களிடம் கூறி, பேராசிரியர் கு நேசையா தலைமையில் குழுவை அமைத்து நானே செயலாளர் ஆகி யாழ்ப்பாணம் முற்றவெளியில் 100 அடி உயரமான நினைவுச் சின்னத்தைக் கட்டியெழுப்புவதில் கணிசமான பங்காற்றினேன்.
தந்தை செல்வா வழி மற்றொரு கிறித்தவர் திரு டேவிட் அவர்களுடைய தொடர்பு. ஒவ்வொரு வாரமும் காலை உணவுக்காக ஒருநாள் என் வீட்டுக்குக் கொழும்பிலும் சென்னையிலும் வருவார். மனம் விட்டுப் பேசக் கூடியவர்களுள் ஒருவர் என என்னைக் கருதி வருவார். அவருடைய நூல்களை நான் வெளியிட்டேன். இறக்கும் வரை அவருக்குத் துணையாக இருந்தேன்.
அவருடைய உறவினர் அருள் நங்கை மாங்குளத்தில் இருக்கிறார். திரு டேவிட் நினைவு நாளுக்கு யாரை அழைக்கிறாரோ இல்லையோ என்னைக் கட்டாயம் அழைப்பார் உரையாற்றப் பணிப்பார். தேவாலய நினைவு வழிபாட்டிற்கு அவரோடு நான் செல்வேன்.
1968 தொடக்கம் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் இலங்கை கிளையில் உறுப்பினராக இருந்து வருகிறேன். அருட்தந்தை தனிநாயகம் அடிகளாரோடு அன்போடும் பணிவோடும் மதிப்போடும் பழகுகின்ற வாய்ப்பைப் பெற்றேன்.
1974 இல் தனிநாயக அடிகளார் யாழ்ப்பாணத்தில் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை நடத்த வேண்டும் என்ற நிலையைக் கொண்ட பொழுது அவருடைய துணைக் கரங்களுள் வலுவான கரமாக நான் அவரோடு இணைந்து பணியாற்றினேன். தன் நெஞ்சை உருக்கிய பாடல் மாசில் வீணையும் எனத் தொடங்கும் அப்பரின் தேவாரம் என அடிக்கடி கூட்டங்களிலும் கூறுவார் என்னிடமும் கூறுவார்.
யாழ்ப்பாணத்தில் அடிகளாருக்குச் சிலை அமைக்க வேண்டும் என அமைந்த குழுவினருக்கு நான் வழங்கிய அடிகளாரின் தெளிவான படமே சிலை அமைக்க உதவியது.
கிறித்துவர்களுக்கு நான் எதிரானவன் என்ற கண்ணோட்டம் உடையோருக்காக இச்செய்திகளைச் சொன்னேன்.
தந்தை செல்வா திரு மாட்டின் செல்லத்தம்பு திரு டேவிட் அருட்தந்தை தனிநாயகம் அடிகளார் பேராசிரியர் நேசையா அவரது அருமை மகன் தேவநேசன் என்ன நூற்றுக்கணக்கான கிருத்தவ நண்பர்களோடு நான் வேறப் பழகியிருக்கிறேன். அன்பைப் பரிமாறி இருக்கிறேன்.
ஆறு ஆண்டுகள் ஐநா ஆலோசகராகப் பணியாற்றிய காலங்களில் ஆண்டு இறுதியில் உரோமாபுரிக்குச் சென்று உணவு வேளாண் நிறுவனத் தலைமையகத்தில் ஆண்டு இறுதி அறிக்கை கொடுப்பேன். கிறித்துமசும் புத்தாண்டும் அமைகின்ற காலங்கள். இரு நிகழ்ச்சிகளுக்கும் நள்ளிரவுப் பூசைக்காகத் தூய பீட்டர்சுத் தேவாலயத்தின் உள்ளே நுழைந்து போப்பாண்டவர் நடத்தும் வழிபாடுகளில் கலந்து கொள்வேன். இசைக்கருவிகள் முழங்க அருட்தந்தை ஒழுங்கமைவு நடக்க போப்பாண்டவர் தேவாலயத்ததள் நுழைகின்ற ஊர்வலம் என் பத்திப் பெருக்குக் கொண்ட நெஞ்சத்தை உருக்கும்.
வழிபாட்டைத் தொடர்ந்து சில மொழிகளில் உரை நிகழும். தமிழிலும் ஒருவர் உரை நிகழ்த்துவார். நிகழ்ச்சியின் முடிவில் எல்லாருக்கும் அப்பம் கொடுப்பார்கள். அவை மெல்லிய வட்ட வடிவமான அப்பங்கள்.
அவற்றில் பத்து அல்லது பதினைந்து துண்டுகளைகேட்டுப் பெறுவேன். யாழ்ப்பாணத்தில் திரு கதிரவேற்பிள்ளை அவர்களிடம் இளையராக இருந்த திரு சேவியர் அவர்கள் மற்றுமொரு வழக்குரைஞர் அவரும் திரு சேவியர் இருவருக்கும் கொடுக்குமாறு என் தந்தையாருக்கு அஞ்சலில் அந்த அப்பங்களை அனுப்புவேன். தந்தையாரும் தவறாது கொண்டு சென்று கொடுத்து விடுவார். 6 ஆண்டுகளும் இவ்வாறு அனுப்பி வந்தேன்.
சென்னை மேயராக இருந்த திரு சுப்பிரமணியம் மேயராவது பதவி அல்ல பொறுப்பு என்ற தலைப்பில் நூல் ஒன்றை எழுதியிருந்தார். 400 பக்க நூலை நான் சென்னையில் வாங்கினேன். யாழ்ப்பாணத்துக்குக் கொண்டு வந்தேன். நேரே மேயர் ஆர்ணல்டு அவர்களிடம் சென்றேன். அந்த நூலை அவருக்குக் கொடுத்தேன்.
அடுத்துச் சங்கிலியன் 400ஆவது ஆண்டு நினைவு நாளுக்கு வந்திருந்த மேயர் ஆர்ணல்டு என்னிடம் கொஞ்ச நேரம் பேசினார். எனக்கும் அவரது நெருங்கிய உறவினர் திரு பிலிப் அவர்களுக்கும் உள்ள நீண்டகால உறவு; ஒருவர் பாசையூரர் பிலிப்பர் மற்றவர் நெடுந்தீவு பிலிப்பர் இவர்களோடு நான் கொண்டிருந்த இனிய நெடிய உறவு பாசையூரில் நான் செய்த பணிகள் இவற்றையெல்லாம் திரு ஆனர்லடு என்னிடம் கூறி, தனக்கும் எனக்கும் பரம்பரைத் தொடர்பு என்றார்.
சுவிசுப் போதகர் யாழ்ப்பாணம் வந்து தீநுண்மி நோய் பரவியது. இன்றுவரை அந்த நிகழ்ச்சி தொடர்பாக நான் எதுவும் எழுதவும் இல்லை பேசவும் இல்லை. ஏனென்றால் அந்த நிகழ்ச்சி திட்டமிட்ட நிகழ்ச்சி அல்ல தற்செயல் நிகழ்ச்சி அதை ஊதிப் பெரிது படுத்தி கிறித்தவர்களுக்கு எதிராகத் திருப்பும் கொடுமையை நான் செய்ய விரும்பவில்லை.
இலங்கையில் 2016 தொடக்கம் சிவசேனை அமைப்பை இயக்க முயல்கிறேன்.
மூன்று மூன்று நோக்கங்கள்
1 சைவர்கள் மதம் மாறுவதைத் தடுப்பது.
2 சைவக் கோயில்களில் வழிபாட்டு இடங்களில் புத்த கிறித்தவ முகமதிய ஊடுருவல் வரின் தடுப்பது.
3 சைவ வாக்குகளால் தேர்வான நாடாளுமன்ற மாகாண சபை பிரதேச சபை கூட்டமைப்பு கமக்காரர் அமைப்பு போன்றவற்றின் உறுப்பினர் சைவ மக்களின் நன்மைகளைப் பேணாது சைவத்துக்கு எதிரான நிலைகளை எடுக்கின்றனர் எனில் அவர்களின் இடங்களுக்குச் சைவர் நன்மை பேணுபவர்களே உறுப்பினராக வேண்டும் என்ற நிலை.
இந்த மூன்று நிலைப்பாடுகளையும் முன்னெடுக்கிறேன்.
கிறித்தவத்துக்கு எதிராக நிலைப்பாடு எங்கே வந்தது?
ஆளைப் பார்க்காமல் ஆட்டத்தைப் பார்க்குமாறு கேட்கிறேன்.
மறவன்புலவு க சச்சிதானந்தன்
சிவ சேனை
No comments:
Post a Comment