உள்ளம் பெருங் கோயில்.
எத்தகைய உள்ளம்?
ஈகையில் முழுமையாக ஈடுகொண்ட உள்ளம்.
1972 மே 19.
யாழ்ப்பாணம் முதன்மைச் சாலையில் கன்னியர் திருக்குடும்ப மடப் பாடசாலைக்கு முன்.
1972இன் அரசியமைப்புத் தமிழருக்கு ஏற்றதல்ல என்ற துண்டறிக்கை.
மக்களுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தவர் கி. பி. அரவிந்தன் (கிறித்தோபர் பிரான்சிசு).
காவலர் கைது செயகின்றனர்.
தமிழ் இளைஞரைக் கைதுசெய்யத் தொடங்கிய நாள் 19.05 1972.
முள்ளிவாய்க்கால் நாள் 19.05.2009.
தம்மை மக்களுக்காக ஈந்து 19.05.1972 அன்று கைதான இளைஞர் மூவர் 1. பிரான்சிசு, 2. முத்துக்குமாரசாமி, 3. மனோகரன்.
1974 தை 2 முதலாக 10 வரை இரண்டாவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு. அமைப்பளர்களுள் நானும் ஒருவன். யாழ்ப்பாணத்தில் நடத்தக் கூடாதென அரசின் ஆணையை மீறி யாழ்ப்பாணத்தில் நடத்துவோம் என்ற உறுதியுடன் யாழ்ப்பாணத்தில் நிற்கிறேன்.
விளம்பரம் செய்து தொண்டரணி திரட்டுகிறேன். 200 தொண்டர்கள் சேர்ந்தனர். அவர்களுள் ஒருவர் பிரான்சிசு. யாழ்ப்பாணம் இறிம்மர் மண்டபத்தில் மாநாட்டு ஒழுங்குகளுக்கு அவரைப் பொறுப்பாளராக்குகிறேன். வீரசிங்கம் மண்டபப் பொறுப்பாளர் சிவகுமாரன்.
1974 சூன் 5இல் சிவகுமாரன் நஞ்சருந்துகிறார். அந்த நேரத்தில் தப்பியவர் பிரான்சிசு. உரும்பிராயில் சிவகுமாரனின் சாவீட்டிற்கு மனைவியுடன் சென்று நெஞ்சார அஞ்சலி செலுத்தினேன்.
1975, 1976 தை 10. இரு ஆண்டுகளிலும் மாநாட்டில் இறந்த 11 பேருக்கு நினைவகம் எழுப்பும் முயற்சியில் எனக்கு உற்ற துணையாக இருந்தவர்களுள் பிரான்சிசும் ஒருவர்.
பின்னர் கைதான பிரான்சிசு, 1976 மார்கழியில் விடுதலையாகிறார். 1977 தையில் கொழும்பில் என் அலுவலகம் வருகிறார். அவர் கடவுச் சீட்டுப் பெறுவதற்குப் பிணை நிற்கிறேன். இலங்கையை விட்டு வெளியேறுகிறார்.
1980 ஆவணியில் எழும்பூர் தொடர்வண்டி நிலையத்தின் முன் ஒரு நாள் திடீரென அவரைக் கண்டேன். அவர் நின்ற கோலம் கண்ட என் கண்களில் நீர் முட்டியது.
1986 தொடக்கம் சென்னையில் சந்திப்புகள்.
1990இல் அவரது திருமண வரவேற்பு, சென்னையில். மகிழ்வுடன் கலந்துகொள்கிறேன். மகாகவியின் மருமகள் சுமதி அவர் மனைவி.
பின்னர் பிரான்சுக்குச் செல்கிறார். என்னுடன் தொடர்பாக இருக்கிறார். மகன், மகள் என இரு மக்கள்.
புதினப் பலகை அவரது மின்னிதழ். http://www.puthinappalakai.com/
Montigny - Beauchamp, Paris சென்றேன், ஒரு பகல் பொழுது முழுவதும் பிரான்சிசின் உள்ளமாம் பெருங் கோயில் முன் அடியவனாக நான். ஈகையில் முழுமையாக ஈடுகொண்ட உள்ளம். 40 ஆண்டுகளுக்கு மேலாக பிரான்சிசின் அந்த ஈகை உணர்வைக் காண்பவன். உள்ளத்தனையது உயர்வு.
அந்தக் கோயிலின் கருவறையாம் சுமதியை மீண்டும் கண்டேன், மகள் மானினி கண்டேன். நண்பர் முகுந்தனைக் கண்டேன். அவர் துணைவியார் அருந்தா கண்டேன்.
படங்கள் பார்க்க.
No comments:
Post a Comment