Friday, October 16, 2026

வாரம் ஒரு சிந்தனை 4 மூக்கு வழி மூச்சு உயிர்

 வாரம் ஒரு சிந்தனை 4

மூக்கு வழி மூச்சு உயிர்.

மறவன்புலவு சச்சிதானந்தன் 


மூக்கு மூங்கில் மூச்சு மூட்டை மூடி மூப்பு மூழ்கு மூளி மூன்று என்ன மூ... என்ற எழுத்தில் தொடங்கும் தமிழ்ச் சொற்கள். 


துளை அல்லது ஓட்டை எனும் சொற்கள்.


1 கோடி

100 கோடி 

நூறாயிரம் கோடி 

30 நூறாயிரம் கோடி. 


தலையைச் சுற்றும் எண்ணிக்கை. 

இந்த எண்ணிக்கையே உங்கள் உடல். 

ஒவ்வொருவரும் உடலில் உள்ள,

மனித உடலில் உள்ள,

உயிர்க் கலங்களின் எண்ணிக்கை.


இந்த உயிர்க் கலங்கள் கூட்டமே குவியலே  மனித உடல்.

உயிர்க் கலங்கள் உயிரோடு இருக்க 

உயிர்ப்பி தேவை 

உணவு தேவை 

கழிவகற்றும் வகை தேவை.


உணவில் கலந்து இருக்கும் ஆற்றலை உடைத்து எடுக்கும் உயிர்ப்பி (Oxygen). உயிர்வாயு பிராணவாயு ஆக்ஸிஜன் ஒட்சிசன் எனப் பல பெயர்கள்.


உணவு.

அதனுடன் உயிர்ப்பி கலக்கும். 

ஆற்றல் வெளிவரும். 

நீர் கழிவாகும். 

கரியமில வாயு கழிவாகும்.


C6H12O6 + 6O2 >> ஆற்றல் + 6CO2 + 6H2O


30 நூறாயிரம் மனித உயிர்க் கலங்களிலும் தொடர்ச்சியாக நடைபெறும் ஆற்றல் எழுப்பும் நிகழ்ச்சி. 


உணவு C6H12O6 தேவை 

உயிர்ப்பி O2 தேவை 

கழிவு CO2, H2O அகற்றும் தேவை.


30 நூறாயிரம் உயிர்க்கலங்களுக்கும் செல்கின்ற குருதி ஓட்டம், இரத்த ஓட்டம். 


உணவு கொண்டு செல்லும் இரத்த ஓட்டம் 

உயிர்ப்பி கொண்டு செல்லும் இரத்த ஓட்டம் 

கழிவு அகற்றும் இரத்த ஓட்டம்.


வயிறும் குடலுமான உணவுக் குழாய்கள் இரத்த ஓட்டத்தில் உணவைக் கலக்கின்றன.


நுரையீரல் இரத்த ஓட்டத்தில் உயிர்ப்பியைக் கலக்கின்றது. 

30 நூறாயிரம் உயிர்க் கலங்களுக்கும் உயிர்ப்பியை (O2) இரத்த ஓட்டம் எடுத்துச் செல்கிறது. 

ஒவ்வொரு கலத்துக்கும் தனித்தனியாகக் கொடுக்கிறது. தாய், குழந்தைக்குப் பால் ஊட்டுவது போல.


மாசு அற்ற காற்றில் 20% உயிர்ப்பி (O2)

காற்றில் உள்ள உயிர்ப்பியைப் பிரித்தெடுத்துத் தனதாக்கி இரத்த ஓட்டத்தில் கலக்கும் சீரிய பணி நுரையீரலுக்கு.


மனித நெஞ்சறையில் இரு நுரையீரல்கள்.

மூக்கு வழி காற்று நுரையீரலுக்குள் செல்வதும் வெளியேறுவதும். உள்ளே போவதும் மூச்சு வெளியே வருவதும் மூச்சு. 


மூச்சை மறந்தார் இறந்தார்.


காற்றுடன் 20% உயிர்ப்பி மூக்கு வழி உள்ளே போகும். 

மூச்சை உள்ளிழுக்க நுரையீரல் நிரம்பும்.

உயிர்ப்பி இரத்த ஓட்டத்தில் கலக்கும். 

30 நூறாயிரம் உயிர்க் கலங்களுக்கு உயிர்ப்பி செல்லும். அங்கே உணவை உடைக்கும் ஆற்றலைப் பெருக்கும் உயிர் வாழும் வளரும்.


மூக்கு வழி மூச்சு உயிர்.


காற்றை நன்றாக உள்ளே வலிந்து இழுக்க.

இரத்த ஓட்டத்தில் உயிர்ப்பி கரையும் வரை காற்றை வைத்திருக்க. 

இரத்த ஓட்டம் கொண்டு வந்த கழிவுக் கரியமில வாயு நுரையீரலுள் காற்றுடன் கரையும். 


கழிவுக் காற்றை வெளியேற்றுக. 


உடல் நலத்துடன் உயிர் வாழ 

மூச்சுக் காற்றை மூக்கு வழி உள்ளிழுக்க 

மூச்சை நுரையீரலுள் வைத்திருக்க 

பின் மூச்சுக் காற்றை வெளியேற்றுக.


16 கைநொடிக் கால நீட்டத்துக்குக் காற்றை மூக்கு வழி உள்ளிழுக்க.

64 கைநொடிக் காலத்துக்கு நுரையீரலுள் வைத்திருக்க.

32 கைநொடிக் காலத்துக்கு மூச்சை மூக்கு வழி வெளியேற்றுக.


1:4:2 விகிதம்.

மூச்சுப் பயிற்சி விகிதம். 

30 நூறாயிரம் உயிர்க் கலங்களை வாழ்விக்கும் விகிதம்.


திருமுறைகள் 12.

10ஆம் திருமுறை திருமந்திரம்.

திருமூலர் நூலாசிரியர்.

திருமந்திரத்தில் 9 தந்திரங்கள் 

3ஆவது தந்திரம் 5ஆவது தலைப்பு 

மூச்சுப் பயிற்சி. 5 ஆம் பாடல்.


உயிர் வாழும் மூச்சுப் பயிற்சி. 

1:4:2 அறிவியல் விகிதத்தைத் திருமூலர் சொல்கிறார்.


மூச்சுப் பயிற்சிக்கான 1:4:2 விகிதத்தை மாற்றினால் உன்னை நீ ஏமாற்றுகிறாய். 

30 நூறாயிரம் உயிர்க் கலங்களுக்கு, உயிருக்கு, வஞ்சகம் செய்கிறாய் என்கிறார் திருமூலர்.


ஏறுதல் பூரகம் 

ஈரெட்டு வாமத்தால்

ஆறுதல் கும்பகம் 

அறுபத்து நால்அதில்

ஊறுதல் முப்பத் 

திரண்ட திரேசகம்

மாறுதல் ஒன்றின்கண் 

வஞ்சக மாமே .

No comments: