Friday, October 16, 2026

வாரம் ஒரு சிந்தனை 23 நாகர் சோழர் சேரர்

 வாரம் ஒரு சிந்தனை 23

மறவன்புலவு க சச்சிதானந்தன் 


நாகர் சோழர் சேரர் 


நாக நாட்டுக்குப் புத்தர் வருகை. மாமனுக்கும் மருகனுக்கும் இடையே போர் நிறுத்தம். நாகர்கள் பலர் புத்தராயினர். 


நாக நாட்டவன் தமிழனான வயம்பன் (மகாவம்சம் 35:59). வயம்பு மருத்துவ மூலிகை Acorus calamus வணிகத்தில் கொடி கட்டிப் பறந்தவன். பெரும் செல்வன் ஆனவன். தனக்கெனப் படை வைத்திருந்தவன். அநுராதபுர அரசன் சுப்பராயனைத் தோற்கடிக்கிறான். அரசனாக வயம்பன் (கிபி 124-168) முடி சூடுகிறான். சுப்பராயனின் மகளுடன் திருமணம். இருவருக்கும் மகன் வங்கநாகன்.


மாந்தைத் துறைமுகத்தில் வயம்பனின் கடற் படைத் தலைவன் இளவரசன் வங்கநாகன். மாந்தைக்கு வருகின்றன அனைத்து நாட்டு வணிகக் கப்பல்கள். 


பூம்புகார் வணிகத் துறைமுகம். அனைத்து நாட்டு வணிகரும் அங்கே குவிந்த காலங்கள் கரிகாற் பெருவளத்தான் ஆட்சி.


மாந்தைக்கும் பூம்புகாருக்கும் இடையே வணிகத்தில் போட்டியும் சலசலப்பும் சர்ச்சையும். வங்கநாகனின் கடற்படை வலிமை கரிகாலனுக்குச் சவால்.


வயம்பன் இறந்ததும் வங்கநாகன் அரசனாகிறான். சோழரோடு பகை முற்றுகிறது. கரிகாலன் படையுடன் வருகிறான். வங்கநாகனைப் போரில் தோற்கடிக்கிறான். பன்னிரண்டாயிரம் நாக வீரர்களைச் சிறைபிடித்துச் சோழ நாட்டுக்கு அழைத்துச் செல்கிறான். 


மகாவமிசம் இச் செய்தியைச் சொல்லவில்லை. 1100 ஆண்டுகளுக்குப் பின் தம்பதெனி இரண்டாம் பராக்கிரமபாகுக் காலச் (கிபி 1266-1275) சிங்கள நூல் பூஜாவழி இச் செய்தி சொல்கிறது.  1400 ஆண்டுகளுக்குப் பின் கண்டி அரசன் இரண்டாம் விமலதருமசூரியன் காலத்து இராஜாவழி நூலும் இச்செய்தி சொல்கிறது.


சிறை சென்ற நாக வீரர்கள் காவிரிக்குக் குறுக்கே கல்லணையைக் கட்டினார்கள் என்ற செய்திகளுக்குக் காப்பிய இலக்கிய கல்வெட்டு செப்பேடுச் சான்றுகள் இல்லை.


நாகர் வழி வந்த தமிழன் வங்கநாகன். மூன்றாண்டு கால ஆட்சி. வங்கநாகன் இறந்ததும் அவன் மகன் நாகர் வழித் தமிழன் கயவாகன் முடி சூடுகிறான். சோழ நாட்டுக்குப் படையெடுக்கிறான் நாக வீரர்களைச் சிறை மீட்டு வருகிறான். இச்செய்தியும் பூஜாவழி இராஜாவழி வந்ததே.


நாக நாட்டுத் தமிழன் அநுராதபுர அரசன் கயவாகுவின் மனைவி வடக்கே நாக நாட்டு அரசன்  மகாநாகனின் மகள் (மகாவமிசம் 35: 123)


கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தன் (கிபி  171-193) சிலப்பதிகாரத்தின் உரைபெறு கட்டுரையில் வருகின்ற வரி. சிலப்பதிகாரத்தின் வஞ்சிக் காண்டம், வரந்தரு காதையிலும் வருகின்ற வரி.


கடல் சூழ்ந்த இலங்கை நாட்டின் கயவாகு சேர நாடு வந்தான். செங்குட்டுவன் அழைத்து வந்தான்.  "செங்குட்டுவனுக்கு அருளினேன். உங்கள் நாடுகளிலும் நான் எழுந்தருளி வரம் தருவேன்" எனக் கண்ணகியின் வான் கூற்றைக் கேட்டான். 


இலங்கை திரும்பினான். கண்ணகிக்குக் கோயில் நிறுவினான். ஒவ்வோர் ஆண்டும் ஆடித் திங்களில்  பத்தினிப் பெரு விழா (பின்னர் பெரகெரா) எடுத்தான். இலங்கையில் பஞ்சம் நீங்கியது. பருவம் தவறாமல் மழை பெய்தது. நாடு வளம் பெற்றது என்கிறது உரைபெறு கட்டுரையில் சிலப்பதிகாரம்.


அதே செய்தியை பூஜாவழியும் இராஜவழியும் விளக்கமாகச் சொல்கின்றன.


...

கடல்சூழ் இலங்கைக் 

கயவாகு என்பான்

நங்கைக்கு நாள்பலி 

பீடிகைக் கோட்டம் 

முந்துறுத்து ஆங்கு

அரந்தை கெடுத்து

வரம் தரும் இவள் என

ஆடித் திங்கள் அகவையின், 

ஆங்கு ஓர்பாடி விழாக்கோள் 

பன்முறை எடுப்ப

மழை வீற்றிருந்து

வளம்பல பெருகிப்

பிழையா விளையுள் 

நாடு ஆயிற்று....

No comments: