Friday, October 16, 2026

வாரம் ஒரு சிந்தனை 23 நாகர் சோழர் சேரர்

 வாரம் ஒரு சிந்தனை 23

மறவன்புலவு க சச்சிதானந்தன் 


நாகர் சோழர் சேரர் 


நாக நாட்டுக்குப் புத்தர் வருகை. மாமனுக்கும் மருகனுக்கும் இடையே போர் நிறுத்தம். நாகர்கள் பலர் புத்தராயினர். 


நாக நாட்டவன் தமிழனான வயம்பன் (மகாவம்சம் 35:59). வயம்பு மருத்துவ மூலிகை Acorus calamus வணிகத்தில் கொடி கட்டிப் பறந்தவன். பெரும் செல்வன் ஆனவன். தனக்கெனப் படை வைத்திருந்தவன். அநுராதபுர அரசன் சுப்பராயனைத் தோற்கடிக்கிறான். அரசனாக வயம்பன் (கிபி 124-168) முடி சூடுகிறான். சுப்பராயனின் மகளுடன் திருமணம். இருவருக்கும் மகன் வங்கநாகன்.


மாந்தைத் துறைமுகத்தில் வயம்பனின் கடற் படைத் தலைவன் இளவரசன் வங்கநாகன். மாந்தைக்கு வருகின்றன அனைத்து நாட்டு வணிகக் கப்பல்கள். 


பூம்புகார் வணிகத் துறைமுகம். அனைத்து நாட்டு வணிகரும் அங்கே குவிந்த காலங்கள் கரிகாற் பெருவளத்தான் ஆட்சி.


மாந்தைக்கும் பூம்புகாருக்கும் இடையே வணிகத்தில் போட்டியும் சலசலப்பும் சர்ச்சையும். வங்கநாகனின் கடற்படை வலிமை கரிகாலனுக்குச் சவால்.


வயம்பன் இறந்ததும் வங்கநாகன் அரசனாகிறான். சோழரோடு பகை முற்றுகிறது. கரிகாலன் படையுடன் வருகிறான். வங்கநாகனைப் போரில் தோற்கடிக்கிறான். பன்னிரண்டாயிரம் நாக வீரர்களைச் சிறைபிடித்துச் சோழ நாட்டுக்கு அழைத்துச் செல்கிறான். 


மகாவமிசம் இச் செய்தியைச் சொல்லவில்லை. 1100 ஆண்டுகளுக்குப் பின் தம்பதெனி இரண்டாம் பராக்கிரமபாகுக் காலச் (கிபி 1266-1275) சிங்கள நூல் பூஜாவழி இச் செய்தி சொல்கிறது.  1400 ஆண்டுகளுக்குப் பின் கண்டி அரசன் இரண்டாம் விமலதருமசூரியன் காலத்து இராஜாவழி நூலும் இச்செய்தி சொல்கிறது.


சிறை சென்ற நாக வீரர்கள் காவிரிக்குக் குறுக்கே கல்லணையைக் கட்டினார்கள் என்ற செய்திகளுக்குக் காப்பிய இலக்கிய கல்வெட்டு செப்பேடுச் சான்றுகள் இல்லை.


நாகர் வழி வந்த தமிழன் வங்கநாகன். மூன்றாண்டு கால ஆட்சி. வங்கநாகன் இறந்ததும் அவன் மகன் நாகர் வழித் தமிழன் கயவாகன் முடி சூடுகிறான். சோழ நாட்டுக்குப் படையெடுக்கிறான் நாக வீரர்களைச் சிறை மீட்டு வருகிறான். இச்செய்தியும் பூஜாவழி இராஜாவழி வந்ததே.


நாக நாட்டுத் தமிழன் அநுராதபுர அரசன் கயவாகுவின் மனைவி வடக்கே நாக நாட்டு அரசன்  மகாநாகனின் மகள் (மகாவமிசம் 35: 123)


கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தன் (கிபி  171-193) சிலப்பதிகாரத்தின் உரைபெறு கட்டுரையில் வருகின்ற வரி. சிலப்பதிகாரத்தின் வஞ்சிக் காண்டம், வரந்தரு காதையிலும் வருகின்ற வரி.


கடல் சூழ்ந்த இலங்கை நாட்டின் கயவாகு சேர நாடு வந்தான். செங்குட்டுவன் அழைத்து வந்தான்.  "செங்குட்டுவனுக்கு அருளினேன். உங்கள் நாடுகளிலும் நான் எழுந்தருளி வரம் தருவேன்" எனக் கண்ணகியின் வான் கூற்றைக் கேட்டான். 


இலங்கை திரும்பினான். கண்ணகிக்குக் கோயில் நிறுவினான். ஒவ்வோர் ஆண்டும் ஆடித் திங்களில்  பத்தினிப் பெரு விழா (பின்னர் பெரகெரா) எடுத்தான். இலங்கையில் பஞ்சம் நீங்கியது. பருவம் தவறாமல் மழை பெய்தது. நாடு வளம் பெற்றது என்கிறது உரைபெறு கட்டுரையில் சிலப்பதிகாரம்.


அதே செய்தியை பூஜாவழியும் இராஜவழியும் விளக்கமாகச் சொல்கின்றன.


...

கடல்சூழ் இலங்கைக் 

கயவாகு என்பான்

நங்கைக்கு நாள்பலி 

பீடிகைக் கோட்டம் 

முந்துறுத்து ஆங்கு

அரந்தை கெடுத்து

வரம் தரும் இவள் என

ஆடித் திங்கள் அகவையின், 

ஆங்கு ஓர்பாடி விழாக்கோள் 

பன்முறை எடுப்ப

மழை வீற்றிருந்து

வளம்பல பெருகிப்

பிழையா விளையுள் 

நாடு ஆயிற்று....

வாரம் ஒரு சிந்தனை 22 இலங்கையில் தமிழரே முதலில் புத்தராயினர்

 வாரம் ஒரு சிந்தனை 22

மறவன்புலவு க. சச்சிதானந்தன் 


இலங்கையில் தமிழரே முதலில் புத்தராயினர்


தமிழ்நாட்டுக்கு தென் கிழக்கு நாடு. தமிழ்நாட்டுக்கு மிக அருகில் உள்ள நாடு, நாகநாடு. அங்கே மன்னர்கள் இருவர். உறவுக்காரர், 


இரத்தின மணிகளால் ஆன அரசிருக்கை. இருவரும் உரிமை கோரினர். எதிர் எதிர் நிலையில். கடுஞ் சினம் கொண்டனர். கண்கள் சிவந்தனர். மூச்சு எறிந்தனர். சேனையைத் திரட்டிப் போர் தொடங்குகின்ற நாள். 


செவியுற்ற புத்தர் நாக நாடு வந்தார். போரை நிறுத்தினார். இரத்தினமணி அரியணை தன்னது என்றார். அதில் அமர்ந்தார். போர் நின்றது. நாகநாட்டினர் மன்னரும் மக்களும் புத்த நெறியையைப் பின்பற்றத் தொடங்கினர்.


....கீழ் நில மருங்கின் நாக நாடு ஆளும்

இருவர் மன்னவர் ஒரு வழித் தோன்றி

எமது ஈது என்றே எடுக்கல் ஆற்றார்

தம் பெரும் பற்று நீங்கலும் நீங்கார்

செங் கண் சிவந்து நெஞ்சு புகையுயிர்த்துத்

தம் பெருஞ் சேனையொடு வெஞ் சமம் புரி நாள்

இருஞ் செரு ஒழிமின் எமது ஈது என்றே

பெருந் தவ முனிவன் இருந்து அறம் உரைக்கும்

பொரு அறு சிறப்பின் புரையோர் ஏத்தும்

தரும பீடிகை தோன்றியது ஆங்கு என் (மணிமேகலை 8: 54-63)


இலங்கைக்குப் புத்தர் வந்தமையைக் கூறுகின்ற முதலாவது நூல் மணிமேகலை. தமிழ்க் காப்பியம் மணிமேகலை. எட்டாவது காதையிலும் ஒன்பதாவது காதையிலும் அச் செய்திகள் உள்ளன.


வேக வெந் திறல் நாக நாட்டு அரசர்

சின மாசு ஒழித்து மன மாசு தீர்த்து ஆங்கு

அறச் செவி திறந்து மறச் செவி அடைத்து

பிறவிப் பிணி மருத்துவன் இருந்து அறம் உரைக்கும்

திருந்து ஒளி ஆசனம் சென்று கைதொழுதி (மணிமேகலை 9: 58-62)


1800 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நூல் மணிமேகலை. 


1700 ஆண்டுகளுக்கு முன் பாளியில் அமைந்ந வாய்மொழி இலக்கியம் அட்டகதை. இந்த வாய்மொழிச் செய்திகளைப் பின்பற்றி மகாசேன மன்னன் (கிபி 334-362) காலத்தில் எழுந்த பாளி நூல் தீபவமிசம். 


புத்தரின் இலங்கை வருகைச் செய்தி தீபவமிசம் நூலில் உண்டு.


தீபவம்சத்தை ஒட்டி எழுந்த தாதுசேனன் (கிபி 459-477) காலத்துப் பாளி நூல் மகாவமிசம். 1600 ஆண்டுகளுக்கு முன் மகாநாம தேரர் இயற்றியது.


மாணிக்கக் கங்கைக் கரையில் இலங்கை வாழ் இயக்கர் அனைவரும் கூடித் தைப்பூச விழாவை முருகனுக்கு எடுத்த நாளில் புத்தர் முதல் முதலாக இலங்கைக்கு வந்தார் என மகாவமிசம் (1: 19-30) கூறும். 


நாக நாட்டு மன்னர்கள் மகோதரன் குலோதரன். முன்னவர் மாமன், பின்னவர் மருகன். இரத்தின மணி அரியணைக்காக இருவரும் மோதினர். புத்தர் இலங்கைக்கு வந்தார். சித்திரை முழு நிலா நாளில் போரை நிறுத்தினார். மணிமேகலை கூறியதை மகாவம்சம் (1:57-70) கூறும்.


மணிஇயக்கன் களனி அரசு மன்னன் அழைத்துப் புத்தர் மூன்றாவது முறையாக இலங்கை வந்தார். மகாவமிசம் (1:73-83) கூறும்.


புத்தர்  தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் வந்தார். புத்தரும் சமணரும் வாதிட்டனர். புத்தர் வென்றார். அந்த இடத்தில் அசோகன் நினைவுத்தூண் அமைத்தான். நான் அதைக் கண்டேன்.


புத்தர் சென்று போதித்த தொண்டை நாட்டிலும் பாண்டிய நாட்டிலும் சோழ நாட்டிலும் 100க்கும் கூடுதலான நினைவுத் தூண்களை அசோகன் அமைத்தான். அவற்றை நான் கண்டேன். 


1400 ஆண்டுகளுக்கு முன் சொன்னவர் சீனப் பயணி யுவான்சுவாங். (See pages 101, 102, 103, Foreign Notices of South India by K A Nilakanta Sastri)


புத்தர் ஆந்திராவின் கிருஷ்ணா நதிக்கரையில் அமராவதிக்கு வந்தார். திபெத்திய நூலான காலச்சக்கரம் 1000 ஆண்டுகளுக்கு முன் கூறும்.


புத்தர் தெற்கே வந்ததை வட இந்திய நூல்களோ குறிப்புகளோ, கல்வெட்டுகளோ எதுவும் கூறவில்லை. புத்தர் வாழ்க்கையின் 20 ஆண்டுக் காலத்தில் நடந்தவற்றை வடக்கே எழுந்த புத்தர் வரலாற்று நூல்கள் எதையும் எழுதவில்லை எனப் புத்தரின் அடிச்சுவட்டில் என்ற நூலில் ( வானதி பதிப்பகம்) இலங்கை வானொலி சோ. சிவபாசுந்தரனார் கூறியுள்ளார்.

வாரம் ஒரு சிந்தனை 21 நன்றி இல்லா அயலவர்

வாரம் ஒரு சிந்தனை 21

மறவன்புலவு க சச்சிதானந்தன் 


நன்றி இல்லா அயலவர் 


அநுராதபுரம் பழமையான நகரமா? நிலத்துக்குக் கீழே படை படையாகப் பழமைக்குச் சான்றுகள் உளவா? தேடியவர் சிரான் தெரணியகல. தொல்லியல் திணைக்கண ஆய்வாளர்.


தேடாமல் அங்கே அவருக்குக் கிடைத்தன ஆறு அல்லது ஏழு பானை ஓடுகள். அவற்றில் தமிழி எழுத்துகள். புத்தருக்கு முந்தைய காலத் தமிழி எழுத்துகள். 2650 ஆண்டுகளுக்கு முந்தையன அவை. 


சிரான் சிங்களவர். தொல்லியலாளர். நேர்மையானவர். அவை தமிழி எழுத்துகள் என 1980இல் அறிவித்தார். இலங்கை முழுவதும் தமிழி எழுத்துகளில் பானையோடுகள் கல்வெட்டுகள் உள்ளன. காலத்தால் முந்தியன சிரான் கண்டுபிடித்த அநுராதபுரப் பானை ஓடு எழுத்துகள்.


1900 ஆண்டுகளுக்கு முன்பு, தெற்கு ஆசியாவில் 18 வரிவடிவங்கள். பல்லாயிரம் வட்டார வழக்கு மொழிகள். 18 வரி வடிவங்களில் ஒன்று தமிழி. கூறுவது 1900 ஆண்டுகளுக்கு முந்தைய சமண நூலான சமயவங்க சூத்திரம்.


ழ, ள, ற, ன ஆகிய தமிழ் வரிவடிவங்கள் தமிழியில் உள. தமிழியில் இருந்து உருவான அசோகர் பிராமியில் அவை இல்லை. சிரான் கண்டெடுத்த பானை ஓடுகளில் தமிழ் வரி வடிவங்கள் இருந்ததால் அவற்றைத் தமிழி என்றார் சிரான்.


800 ஆண்டுகளுக்கு முன்பு வரை இலங்கை முழுவதும் எல்லோரும் எழுதிய வரி வடிவம் தமிழி. 2600 - 800 = 1800 ஆண்டுகளுக்குத் தொடர்ச்சியாக இலங்கை முழுவதும் தமிழி வரி வடிவம். பிராகிருதத்தையும் தமிழியில் எழுதினர். வடமொழியையும் தமிழியில் எழுதினர். பாளியை  பாளி வரி வடிவத்தில் எழுதினர்.


800 ஆண்டுகளுக்கு முன்பு சிங்கள வரி வடிவம் எழுந்தது. 1600 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் உருவான கிரந்த வரி வடிவமும் தமிழி வரி வடிவமும் இணைந்தே சிங்கள வரி வடிவம் உருவானதாகச் சொல்வர்.


மூன்றாம் விஜயபாகு, இரண்டாம் பராக்கிரமபாகு, நான்காம் விஜயபாகு இவர்கள் காலத்தில் சிங்கள வரிவடிவங்கள் சிங்கள இலக்கியங்கள் சிங்கள இலக்கண நூல்கள் என்பன பரந்து எழுந்ததாகச் சொல்வர்.


இன்று கிடைக்கும் மிகப் பழமையான சிங்கள இலக்கண நூல் சிதத் சங்கராவ. பதிராச பிரிவேனாத் துறவி இயற்றிய நூல். 700 ஆண்டுகளுக்கு முந்தைய தம்பதெனிய அரசர் ஆட்சிக் கால நூல்.


1200 ஆண்டுகளுக்கு முன்பு கங்கைகொண்ட சோழபுரத்தில் வீரராஜேந்திர சோழன் காலத்தில் புத்தமித்திரர் இயற்றிய தமிழ் இலக்கண நூல் வீரசோழியம்.


வீரசோழியத்தை அடியொற்றியே சதத் சிங்கராவவை இயற்றினேன். அங்கேயும் 12 இயல்கள். இங்கேயும் 12 இயல்கள். சதத் சங்கராவ வாசகர்களே, இந்த நூலில் உங்களுக்கு ஐயங்கள் இருந்தால் வீரசோழியத்தைப் படித்து ஐயங்களைத் தீர்க்க என்கிறார் நூலாசிரியர் பதிராச பிரிவேனத் துறவி.


சிங்களத்துக்கு வரி வடிவங்களைக் கொடுத்தோர் தமிழர். சிங்களத்துக்கு இலக்கண நூலைக் கொடுத்தோர் தமிழர். சிங்கள மொழிகள் 70% சொற்கள் தமிழ் மொழி வேர்ச் சொற்கள். சொற்களைக் கொடுத்தோரும் தமிழர். 


இந்தக் கொடைகளுக்கு நன்றியோடு நடக்க வேண்டிய அயலவரே இன்றைய சிங்களவர். நன்றியோடு தமிழரை நினைக்கிறார்களா? தமிழருக்கு நன்றியாக நடக்கிறார்களா? காலம் பதில் சொல்லும்.

வாரம் ஒரு சிந்தனை 20 யாழ்ப்பாணத்தின் அறிவுக் குவை

 வாரம் ஒரு சிந்தனை 20

மறவன்புலவு க. சச்சிதானந்தன்


யாழ்ப்பாணத்தின் அறிவுக் குவை


யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்தவர் பேராசிரியர் முனைவர் பொ. பாலசுந்தரம்பிள்ளை. அக்காலத்தில் நான் சென்னை வாசி. 


பொ. பாலசுந்தரம்பிள்ளை சென்னைக்கு வந்திருந்தார். அவருக்குச் சென்னை வாழ் அறிஞர் குழாமின் வரவேற்பை அமைத்தேன்.


மேனாள் அமைச்சர், மேனாள் ஆளுநர், எனக்கு நன்கு பழக்கமானவர், இந்தியப் பசுமைப் புரட்சியின் தந்தை எனப் போற்றும் பாரத இரத்தினர் சி. சுப்பிரமணியம் அவர்களைத் தலைமை தாங்க அழைத்தேன். தாம் போற்றும் தலைவர்களுள் சி. சுப்பிரமணியம் முதன்மையானவர் எனப் பாலசுந்தரம்பிள்ளை என்னிடம் கூறியிருந்ததால்.


பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் ஐவர், மேனாள் துணைவேந்தர்கள் தமிழக முதன்மை நாளிதழ்களின் ஆசிரியர்கள், மூத்த வழக்குரைஞர்கள், கல்வியாளர்கள் என 40 பேர் வரை வந்திருந்தனர். உயர்தர உணவு விடுதியில் விருந்தோம்பினேன்.


பாராட்டு நிகழ்வில் தினமலர் நாளிதழ் முதன்மை ஆசிரியர் இரா கிருஷ்ணமூர்த்தி பேசினார். துணைவேந்தர் வா. செ. குழந்தைசாமியும் பேசினார். இருவரும் ஒரே கருத்தை எடுத்துக் கூறினர். 


யாழ்ப்பாணம் அறிஞர்களின் வாழ்வு இடம். மக்கள் தொகை விகிதாசாரத்துக்கு மிஞ்சிய அளவில் யாழ்ப்பாணத்தில் அறிஞர்கள் உளர்.  கலைஞர், மருத்துவர், வழக்குரைஞர், தத்துவத்தார், ஞானிகள் என வல்லுநர்களின் வாழ்வு இடம் யாழ்ப்பாணம் என்றனர் இருவரும். ஏன் இந்த நிலை என்று வினாவையும் எழுப்பி இருந்தனர்.


நிகழ்ச்சியின் இறுதியில் நான் அனைவருக்கும் நன்றி கூறினேன். என் அருமை நண்பர்கள் கிருஷ்ணமூர்த்தியாருக்கும் குழந்தைசாமியாருக்கும் அவர்கள் வினாவுக்குச் சிறுகுறிப்பைப் பதிலுரையாக்கினேன். 


தமிழ் மொழி மருத்துவம் கலைகள் ஆருடம் தத்துவம் பொறியியல் எனப் பல்துறை அறிஞர்கள் எந்த சமூகத்திலும் ஒரு பகுதியினரே. அரசர்கள் ஆட்சிக் காலங்களில் மானியங்கள் நிவந்தங்கள் நன்கொடைகள் அறிஞர்களுக்குப் பொருளாதாரம்.


கிபி 1305 தொடக்கம் தமிழகத்தில் முகமதியப் படையெடுப்பு. தில்லி அலாவுதீன் கில்ஜியின் நம்பிக்கைக்குரிய மாலிக் கபூர் தலைமையில் முகமதியர் தமிழகத்தைக் கைப்பற்றினர்.


தமிழ்ச் சைவ அரசர், சிற்றரசர், நிலக்கிழார், என எவரும் வாழ முடியாமல் கொலையாகினர், தப்பி ஓடினர் ஓளிந்தனர். 60 ஆண்டுகள் தொடர்ந்து முகமதிய கொள்ளை கொலை கொடுமை நிறைந்த ஆட்சி. வீழ்ந்தன சைவத் தமிழ் ஆட்சிகள். 


புலவர்கள் ஞானிகள் தத்துவார்த்திகள் கலைஞர்கள் மருத்துவர்கள் ஆருடர்கள் யாவரும் மானியங்கள் இன்றி வாழ முடியவில்லை. ஏடுகளையும் கருவிகளையும் மருந்துகளையும் முகமதியர் அழிக்க முயன்றனர். முகமதியக் கொடுமையில் இருந்து தப்பிக்க வழி?


யாழ்ப்பாணத்தில் குலசேகரச் சிங்கை ஆரியச் சக்கரவர்த்தியின் ஆட்சி. அக்காலத்தில் ஒரே ஒரு சைவத் தமிழ் அரசு.


தேனை நோக்கிய வண்டுகள் ஆயினர். ஏடுகள் யாழ்ப்பாணம் வந்தன. இசைக் கருவிகள் யாழ்ப்பாணம் வந்தன. மருந்து வகைகள் யாழ்ப்பாணம் வந்தன. அவற்றோடு அறிஞர் புலவர் ஞானிகள் மருத்துவர் ஆருடர் இசைஞர் நடனர் கூத்தர் யாவரும் படகுகளில் தோணிகளில் வள்ளங்களில் ஏதிலிகளாகக் கடல் கடந்து யாழ்ப்பாணம் வந்தனர். குலசேகரச் சிங்கை ஆரியன் வரவேற்றான், குடியேற்றினான். மானியம் கொடுத்தான். சைவத் தமிழ்ப் புலமையை, கலைகளை, மருத்துவத்தை, ஆருடத்தைக் காப்பாற்றினான். 


கன்னடத்துக் குமார் கம்பணன் முகமதியரைத் தமிழகத்திலிருந்து விரட்டினான். தமிழகத்தில் சைவத் தமிழ் ஆட்சி மீண்டது. யாழ்ப்பாணம் வந்த புலமைக் குவையின் பலர் தமிழகம் திரும்பினர். சிலர் இங்கேயே தங்கினார். வந்தோரும் தங்கினோரும் விட்டுச் சென்ற மரபணுக்களே இன்றைய யாழ்ப்பாணப் புலமைக் குவைப் பெருக்கத் தளங்கள் என்றேன். 


துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் பொ. பாலசுந்தரம்பிள்ளை அத்தகைய எச்சங்களுள் ஒருவர் என்றேன்.

வாரம் ஒரு சிந்தனை 19 சடையப்ப வள்ளல் (கிபி 1117)

 வாரம் ஒரு சிந்தனை 19

மறவன்புலவு க. சச்சிதானந்தன்


சடையப்ப வள்ளல் (கிபி 1117)


ஓராயிரம் தோணிகள். ஒவ்வொன்றிலும் நெல் மூடைகள். ஆயிரம் ஆயிரம் நெல் மூடைகள் மொத்தமாக.


பஞ்சம் போக்க வந்தன. யாழ்ப்பாணம் வந்தன. காங்கேயன்துறையில் இறங்கின. யாழ்ப்பாணம் மன்னர் பரராசசேகரன் ஆரியச் சக்கரவர்த்தியின் காலத்தில் வந்தன.


அனுப்பியவர் வள்ளல். சோழ நாட்டின் கொடை வள்ளல். புலவரான அறிஞரான கம்பரை ஆதரித்த சடையப்ப வள்ளல்.


அதற்கு முன்பு சோழ நாட்டு கரையிலிருந்து யாழ்ப்பாணம் வந்தவர் புகழேந்திப் புலவர். சோழநாடு மீண்டதும் யாழ்ப்பாணத்தின் பஞ்சத்தை சடையப்ப வள்ளலுக்கு எடுத்துக் கூறுகிறார். 


கேட்டவுடனே சங்கரன் மகனான சடையப்பர் நெஞ்சம் பதறியது. தன்னிடமிருந்த பல்லாயிரம் நெல் மூடைகளை ஓராயிரம் தோணிகளில் காங்கேயன்துறைக்கு அனுப்புகிறார் சடையப்ப வள்ளல்.


துன்பத்தைப் போக்க, துயரத்தை நீக்க, பசியை முறியடிக்க தன்னிடமிருந்த மிகையான மேல் அதிக உணவை அனுப்பியவர் வள்ளல். 


தேனார் தொடையார் பரராச

சிங்கப் பெருமான் செந்தமிழ்க்குக்

கானார் நெல்லின் மலை கோடி

கண்டி நாடு கரை சேரக்

கூனார் கப்பல் ஆயிரத்தில்

கொடுபோய் அளித்த கொடைத் தடக்கை

மானாகரன் சங்கரன் உடையான்

வளம் சேர் சோழ மண்டலமே.


என்றது சோழ மண்டல சதகப் பாடல்


நெற்குவை கிடைத்ததும் மன்னன் பரராசசேகரன் நன்றி கூறிச் சடையப்ப வள்ளலைப் பாராட்டிக் கவிதை அனுப்பினான்.


இரவு நண்பகல் ஆகில் என் பகல் 

இருள் அறா இரவு ஆகில் என்

இரவி எண் திசை மாறில் என் கடல்

ஏழும் ஏறில்ஸஎன் வற்றில் என்

மரபு தங்கிய முறைமை பேணிய

மன்னர் போகில் என் ஆகில் என்

வளமை இன்புறு சோழ மண்டல

வாழ்க்கை காரணம் ஆகவே

கருது செம்பொனின் அம்பலத்திலோர் 

கடவுள் நின்று நடிக்குமே

காவிரித் திரு நதியிலே ஒரு 

கருணை மாமுகில் துயிலுமே

தருஉயர்ந்திடு புதுவையம்பதி 

தங்கு மானிய சேகரன்

சங்கரன் தரு சடையன் என்றொரு 

தரும தேவதை வாழ்வதே.

 வாரம் ஒரு சிந்தனை 18 சாதல்


மண்டை ஓட்டுக்குள் புழுக்கள். சொல்கிறார் மாணிக்கவாசகர். .....பொய்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையன்....


புழுக்களை அழகாக அடுக்கியது போன்ற புற வடிவமே மூளை. எனவே மாணிக்கவாசகரின் புழுத்தலை. அந்த மூளையின் நடுவில் பூத்தளம் (hypo-thalamus). 


மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகள் வழி புலனாகும் செய்திகளை உள்வாங்குவது. உணர்ச்சியைத் தூண்டுவது. உணர்ச்சியை வெளிப்பாடாவதே பூத்தளம்.


பூத்தளம் தூண்டக் கண்ணிமையில் மேல் இமையுள் சுரப்பி (lacrimal gland) நீரைப் பெருக்கும். அழுகை அஃதே.


சாதல் துன்பம். சாதல் துயரம். சாதல் சோகம். சாதல் அழுகைக்குக் காரணம். சோகம் தாங்காததாலே அழுகை.


நன்றாக உடல் நலத்தோடு இருந்தார். சமையல் பொருள்களை மளிகைக் கடையில் வாங்கி வந்தார். அறுசுவை உண்டியை மனைவி சமைத்துக் கொடுக்க உண்டார். மனைவியோடு மகிழ்ந்து பேசினார். மந்தனம் கொண்டார். 


சற்று நேரத்தில், வலிக்கிறதே என்றார். எங்கே என்றார் மனைவி. நெஞ்சறையின் இடப் பக்கத்திலே வலி என்றார். 


கைத் தாங்கலாக மனைவி அழைத்துச் சென்றார். படுக்கையிலே கிடத்தினார். படுத்தவர் உறங்கியது போல் கண் மூடினார். மூடிய கண்ணைத் திறக்கவே இல்லை. செத்துப் போனார்.


திருமூலர் சொல்லும் அழகான பாடல். திருமந்திரம் (10105006).


அடப்பண்ணி வைத்தார் 

அடிசிலை உண்டார்

மடக்கொடி யாரொடு 

மந்தணங் கொண்டார்

இடப்பக்க மேஇறை 

நொந்ததிங் கென்றார்

கிடக்கப் படுத்தார் 

கிடந்தொழிந் தாரே.


சாதலால் துன்புறாதே, அழாதே. அழுது புரண்டாலும் மாண்ட உயிர் மீளாது. நீயும் ஒரு நாள் சாகப் போகிறாய். ஏன் அழுகிறாய்?


கேட்பவர் ஔவையார். பாடல் - நல்வழி 10.


ஆண்டாண்டு தோறும் 

அழுது புரண்டாலும்

மாண்டார் வருவாரோ 

மாநிலத்தீர் – வேண்டா

நமக்கும் அதுவழியே 

நாம்போம் அளவும்

எமக்கென் றிட்டுண்டு, 

இரும்.


புழுத்தலை மூளையின் பூத்தளத்தை உந்துக. சுரப்பியை இயக்குக. அழுகையாய்ப் பொழிக. மன உளைச்சல் போகும். படிப்படியாக மனம் ஆறுதல் அடையும். ஒலிக்க அழுக. ஒப்பாரி வைக்க. உடலுக்கும் நல்லது. உள்ளத்துக்கும் நல்லது.


அழும் பொழுது செத்தவர், உற்றவர் அல்லர், சுற்றவர் அல்லர். உறவினர் அல்லர். அவர் பிணம். சூரைக் காட்டில் சுட்டெரிக்க வேண்டிய பிணம். ஆற்றிலோ குளத்திலோ கடலிலோ அன்றிக் குழாய் நீரிலோ நன்றாகத் தோய்ந்து குளித்து இறந்தவரின் நினைப்பை மறக்க வேண்டிய நிலை. 


புழுத்தலை மூளைக்குள் பூத்தள உந்துதலால் நீரைச் சுரக்கும் கண்கள் வற்றும். நினைவும் வற்றும். திருமூலர் சொல்கிறார். திருமந்திரம் 10105003


ஊரெலாங் கூடி 

ஒலிக்க அழுதிட்டுப்

பேரினை நீக்கிப் 

பிணமென்று பேரிட்டுச்

சூரையங் காட்டிடைக் 

கொண்டுபோய்ச் சுட்டிட்டு

நீரினில் மூழ்கி 

நினைப்பொழிந் தார்களே  .

வாரம் ஒரு சிந்தனை 17 காதல்

வாரம் ஒரு சிந்தனை 17

மறவன்புலவு க. சச்சிதானந்தன்


காதல் 


களைத்து வருகிறான். குளித்து உடைமாற்றுகிறான். பசியாறுங்கள், அழைக்கிறாள் மனைவி.


வாழையிலை விரித்தாள். அறுசுவை உணவு படைத்தாள். கார மணம் மூக்கில் நுழையத் தும்முகிறான்.


அவன் தும்மிய உடனேயே நூறாண்டு வாழ்க என அவள் வாழ்த்தினாள்.


மூக்கில் சளியோ நோயோ என நினைக்க வேண்டியவள், யாரோ நினைக்கிறார், எனவே தும்புகிறார், என நினைக்கிறாள். 


ஒருவேளை வேறு ஒரு பெண்ணாக இருக்கலாமோ? அந்தப் பெண் இவரை நினைக்க இவர் தும்முகிறாரோ? 


வாழ்த்திய வாய் மூடுமுன்பே அழத் தொடங்குகிறாள். எவள் உம்மை நினைத்தாள்? விம்மிக் கேட்கிறாள் வெதும்பி அழுகிறாள். 


அவன் விக்கித்துப் போனான். என் மனத்தில் உன்னைத் தவிர வேறு யார்? ஏன் இவ்வாறான ஐயம்? என்று கேட்க நினைக்கும் முன்பே உணவின் காரம் மீண்டும் மூக்கில். 


மீண்டும் தும்மல். தும்மல் வர முன்பே அடக்கிக் கொள்கிறான். மீண்டும் தும்மினால் பிணங்குவாளே, மீண்டும் அழுவாளே என்பதால்.


எவளோ நினைக்கிறாள் என்பதை என்னிடம் மறைப்பதற்காகத் தும்மலை அடக்குகிறீரோ என மீண்டும் விம்மினாள், வெதும்பினாள், ஆற்றாது அழுதாள்.


இன்னொரு பெண் மீது காதல் கணவனுக்குள் புதைந்திருக்கும் மறைந்திருக்கும் என்பவளே மனைவி. வள்ளுவர் சொல்கிறார். 


வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்

யாருள்ளித் தும்மினீர் என்று.   (குறள் 1317) 


தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்

எம்மை மறைத்திரோ என்று.   (குறள் 1318) 


கம்பரும் அதையே சொல்கிறார். சீதையை மீட்கவே இராவணனைக் கொல்ல வருகிறான் இராமன். அம்புகளால் எய்து இராவணனைக் கொல்கிறான்.


இராவணன் மனைவி மண்டோதரிக்கு அவ்வாறு தெரியவில்லை. சீதையை மீட்கத் தன் கணவனைக் கொன்றான் என மண்டோதரி சொல்லவில்லை.


இராவணனின் உடலுள் உள்ளத்துள் உயிருள் மற்றொரு பெண்ணுக்கான காதல் மறைந்திருக்கிறது என்றே மண்டோதரி சொல்கிறாள். அந்தக் காதலைத் தேடியே இராமனின் அம்புகள் பாய்ந்தன என்கிறாள் மண்டோதரி.


தேன் நிறைந்த மலர்கள். கூந்தலில் சூடியவள் சீதை. அவளின் நினைவே இராவணனுக்கு. அந்தக் காதல் எங்கிருக்கிறது இராவணன் உடலுள் உள்ளத்துள் உயிருள் எனத் தேடினவாம் இராமன் எய்த அம்புகள். சொல்கிறாள் மண்டோதரி.


வெள்ளெருக்கஞ் சடைமுடியான் 

வெற்பெடுத்த திருமேனி 

மேலும் கீழும்

எள் இருக்கும் இடன் இன்றி 

உயிர் இருக்கும் இடம்நாடி 

இழைத்த வாறோ

கள் இருக்கும் மலர்க்கூந்தல் 

சானகியை மனச்சிறையிற் 

கரந்த காதல்

உள் இருக்கும் எனக் கருதி 

உடல் புகுந்து தடவியதோ 

ஒருவன் வாளி.

(யுத்த காண்டம், இராவணன் வதைப் படலம், 237)

வாரம் ஒரு சிந்தனை 16 தனித்தமிழ் இயக்கம்

 வாரம் ஒரு சிந்தனை 16

மறவன்புலவு க. சச்சிதானந்தன் 


தனித்தமிழ் இயக்கம்


தர்மம் என எழுதாதீர். தருமம் என்பதே பொருத்தம். இலக்ஷ்மி அன்று இலக்குமி. ஏனைய மொழிச் சொற்களை தமிழுக்குக் கொணர்கையில் தமிழின் ஒலி அமைப்புக்குள், 247 வரிவடிவங்களுக்குள் அடக்கி எழுதுங்கள்.


வெள்ளம் வராமல் வாய்க்கால் அமைத்து வரம்புக்குள் நீரை விட்டு வளம் பெருக்குவர் வேளாளர்.


பிறமொழிச் சொற்கள் வெள்ளமானால் தமிழ் தமிழாக நிலைக்காது. வாய்க்கால் அமைக்க. வரம்பு கட்டுக. 2800 ஆண்டுகளுக்கு முன் தொல்காப்பியர் சொன்னார்.


எழுத்ததிகாரம் 102ஆவது நூற்பா. 


...வடவெழுத்து இயலான் வரும் எழுத்துக்கடனே...


தமிழ் ஒலியாக்குக. தமிழ் வரி வடிவமாக்குக. எந்த மொழிச் சொல்லாயினும் தமிழாக்குக என்கிறார் தொல்காப்பியர்.


திரி சொல் என்கிறார். திசைச் சொல் என்கிறார். வடசொல் என்கிறார். இம்மூன்றுள் வடசொல்லைத் தமிழாக்கச் சொல்லதிகாரத்தில் இரண்டு நூற்பாக்கள் 401, 402 தருகிறார்.


​....வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே....

​....சிதைந்தன வரினும் இயைந்தன வரையார்... 


இவ் வரம்புகள் தமிழைத் தமிழாக வைத்திருந்தன. சங்க காலம், சங்கம் மருவிய காலம் வரை இறுக்கமான வரம்புகள். பல்லவர் காலத்தில் இந்த வரம்புகளை உடைக்க முயன்றனர். பிற ஒலிகளுக்கான பிராகிருத, பாலி, வடமொழி வரி வடிவங்களைத் தமிழில் புகுத்த முயன்றனர். 


தமிழைக் காக்க மீண்டும் அணை கட்டியவன் காஞ்சிபுரத்தில் 1650 ஆண்டுகளுக்கு முன் மகேந்திர பல்லவன். திருநாவுக்கரசனின் அருள் வழிகாட்டலை ஏற்றுச் சைவ சமயத்துக்கு மீண்டவன். 


காஞ்சிபுரத்தில் சைவ புத்த சமண ஆசீவக அறிஞர்கள் கூடி 49 எழுத்துக்களைக் கொண்ட (பேச்சு மொழியாக அன்று) வரிவடிவ மொழியாகக் கிறுக்குதல் எனக் கிரந்தத்தை உருவாக்கினார்.


16 உயிர்கள் 33 மெய்கள் ஆக 49 வரி வடிவங்கள் கொண்ட கிரந்தத்தில் தமிழ் வரிவடிவங்களே பல. தேவநாகரிக்கு பதிலாகப் பாலி பிராகிருதம் வடமொழி ஆகியவற்றை தமிழில் எழுத இவை.


எனினும் பல்லவ, சோழர் காலங்களில் பிற மொழிகளின் கடுமையான உள்ளீடுகள் தொடர்ந்தன. இலக்கியங்களை வடிகட்டத் தமிழ் மட்டுமாயின மிதந்தன. கல்வெட்டுகளோ செப்பேடுகளோ கலப்பிலும் கலப்பாயின.


நாகப்பட்டினத்தின் புத்த சமய அறிஞர் மீண்டும் தமிழைக் காக்க அணை கட்டினார். 950 ஆண்டுகளுக்கு முன்பு, இராஜராஜ சோழனின் பெயரன் வீரராஜேந்திரன்சோழன் காலத்தில் புத்த மித்திரனார் அரசவைப் புலவர். 


வீர சோழியம் இலக்கண நூலைப் புத்த மித்திரனார் படைத்தார். அயல் மொழிச் சொற்களைத் தமிழுக்குள் கொண்டுவர தற்சமம் தற்பவம் என இரு வழிகளை எழுதி வைத்தார். 


....வடமொழி யுள்ளுள வச்சொலு மம்மொழி விகாரமுமாய்க் கடவ தற்சமமுந் தற்பவமு மெனக் கற்றவரே...


....வருக்க முதலெழுத் தைந்தா மினத்தோடு வந்தவற்றுள்

இருக்கின நாலெழுத் துக்கொரு காதி யியற்றுவரால்.....


(வீரசோழியம், சந்திப்படலம், காரிகை நூற்பா 35 36).


எனினும் கொடுமை தொடர்ந்தது. பல்லவ நாடு தொண்டை மண்டலமாகியது. 820 ஆண்டுகளுக்கு முன் தொண்டை மண்டலத்தின் வடக்கெல்லைக் குறுநில மன்னன் சீயகங்கன். 


சமணரான தன் அரசவைப் புலவர் பவணந்தியாரைக் கேட்கிறான். தமிழைக் காக்க வேண்டும், விதிகள் எழுதித்தாருங்கள், என. பவணந்தியார் எழுதிய இலக்கண நூலே நன்னூல். 


...பொதுவெழுத் தானுஞ் சிறப்பெழுத் தானுமீர்

இயல்பின வடசொல் ரங்கடப் பவ்வே....


.....இடையினான்கு மீற்றிலிரண்டு மல்லா

அச்சை வருக்க முதலீ றியவ்வாதி

நான்மை ளவ்வாகு மையிம்பொது வெழுத்தொழிந்த

நாலேழுந் திரியும்....

(நன்னூல் - பதவியல்: 146, 147)


வடமொழி ஒலிகளைத் தமிழில் எழுதும்போது, அவை எவ்வாறு மாறும் எனப் பவணந்தியாரின் நீண்ட பட்டியலே இவ்விரு நூற்பாக்களும். 


600 ஆண்டுகளுக்கு முன்பு வரை எழுந்த தமிழ்ப் படைப்பு இலக்கியத்தில் 247 எழுத்துக்களுக்கு வெளியே அமைந்த இலக்கியங்கள் இன்று கிடைப்பதில்லை. அக்காலத்தில் பிரபு தேவராயன் என்ற நாயக்க மன்னன் ஆட்சி. 


முருகப்பெருமான் மீது அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் சார்ந்த பாடல்கள் 247 தமிழ் வரிவடிவங்களையும் கிரந்த வரி வடிவங்களான ஷ ஸ ஜ ஹ நான்கையும் அதன் கூட்டு எழுத்துக்களையும் கொண்டதாக எழுந்தன.


தொல்காப்பியர் புத்த மித்ரனார் பவணந்தியார் எனத் தொடர்ச்சியாக வாய்க்கால்கள் வரம்புகள் கட்டிய இலக்கண விதிகளை மீறிய தெலுங்கு நாயக்கர் காலம். பின்வந்த தென்மாக்கர் ஒல்லாந்தர் போர்த்துக்கேயர் பிரெஞ்சுக்காரர் ஆங்கிலேயர் என மேலை நாட்டார் கிறித்தவப் பரப்புரைக் காலம்.


150 ஆண்டுகளுக்கு முன்பு நாகப்பட்டினத்தில் பிறந்த சுவாமி வேதாசலம் தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கினார். மறைமலை அடிகள் ஆனார். சூரிய நாராயண சாஸ்திரிகள் பரிதிமாற் கலைஞர் ஆனார். கிளிநொச்சியில் 50 ஆண்டுகளுக்கு முன் தனித்தமிழ் இயக்கத்தை முன்னின்று நடத்தியவர் எழுதுமட்டுவாழ் தமிழேந்தி. பல்லாயிரம் தனித் தமிழ்ப் பெயர்களை தொகுத்து நூலாக்கியவர். அவர் வழிவந்தவரே இன்று அங்கு வாழும் இறை பிள்ளை.


பிற மொழி ஒலியன்களையும் தமிழ் ஒலியன்களையும் ஒப்பு நோக்கியோர் இக்காலப் பல்கலைக்கழக மொழியியல் பேராசிரியர்கள்.


அவர்களுள் பன்னிரு திருமுறை ஒலிபெயர்ப்பு என்ற நூலில், 100 தமிழ் ஒலியன்களை அடையாளம் கண்டவர், திருவையாறு பிறந்த அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் பேராசிரியர் முனைவர் புனல் க. முருகையன். 


உலகின் அனைத்து மொழிகளின் ஒவ்வொரு ஒலியையும் அடையாளம் கண்டு அதற்கான வரி வடிவத்தையும் ஒலி வடிவத்தையும் அச்சில் தந்தோர், இணையத்தில் தந்தோர், International Phonetic Alphabet ஞால நெடுங்கணக்கு அமைப்பினர். 


தாம் கண்ட 100 தமிழ் ஒலியன்களுக்கும் சமமான, ஐபிஏ தந்த உலக மொழி ஒலியன்களைக் கண்டறிந்தார். தமிழ் வரி வடிவங்களுக்கு சமமான சார்ந்த உலக மொழி வரி வடிவங்களைத் தேர்ந்தவர் பேராசிரியர் முனைவர் புனல் க முருகையன்.


உலகெங்கும் பல இலட்சம் எண்ணிக்கையில் தனித்தமிழ் ஆர்வலர்கள். இவர்களை ஒருங்கிணைக்க வழிநடத்த மறைமலை அடிகள் இல்லை. 


எனினும் தமிழகத்தில், செல்வந்தர், வேலூர் பல்கலைக்கழக வேந்தர் கோ. விசுவநாதன், புதுச்சேரியில் தமிழமல்லன், கோயம்புத்தூரில் தமிழப்பன் எனப் பலர் தனித்தமிழ்ப் பரப்புரையில் உளர்.

வாரம் ஒரு சிந்தனை 15 ஒன்றிலிருந்து பலவாகி

வாரம் ஒரு சிந்தனை 15

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

ஒன்றிலிருந்து பலவாகி 


Condoleezza Rice யார் என்று தெரியுமா? 

பள்ளி மாணவர் சிலரிடம் கேட்டேன். 

ஓ... தெரியுமே 20 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர்.


அவர் பெயரில் தமிழ் இருக்கிறது தெரியுமா? 

அதே பள்ளி மாணவரிடம் கேட்டேன். 

அமெரிக்கக் கறுப்பினத்தவர். தமிழ் எவ்வாறு? என்றனர் என்னிடம்.


Rice என்று சொல்லின் உன் ஏ சேர்த்தால் Arice வருவது தமிழ்ச்சொல் அரிசி என்றேன். சங்க இலக்கியங்களில் நிறைந்த சொல் அரிசி.


தமிழ்நாட்டின் அரிசி, அரபு மொழியில் அகரம் நீங்கி ரூஸ் ஆகியது. அரபுக்கள் மேற்கே அரிசியைக் கொண்டு சென்றனர். இலத்தீன் கிரேக்கத்தில் அதே வடிவம். ஐரோப்பாவைக் கடந்து இங்கிலாந்தில் Rice ஆகியது என்றேன்.


கட்டுமரம் ஆங்கிலத்தில் Catamaran. தமிழிலிருந்து மருவி ஆங்கிலம் ஆயின பல சொற்கள். ஆங்கிலேயப் படையெடுப்பின் பின்னர்.


கம்போடிய நாட்டின் இன்றைய அரசரின் பெயர் சிகாமணி. 2300 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்ப் பரிபாடல் சிகை (7-70, 9-64) எனும், மணி (1-9, 3-3, 19-28) எனும். பரிபாடல் காலத்தில் எகிப்திய பிரமிடுகளைப் பார்க்கிறார் தமிழர். அங்கே தமிழி எழுத்தில் சிகைக் கொற்றன் எனத் தன் பெயரைப் பதிவிடுகிறார். இன்றும் காணலாம்.


நகர வட்டம், தமிழ்ச் சொல். உலகின் மிகப்பெரிய இந்துக் கோயில் எனப் போற்றும் அங்கோவாட்டின் கம்போடிய மொழிப் பெயர் நகர வட்டம். 


நகர வட்டம் என்ற பெயரில் கம்போடியாவில் நாளிதழ் (https://www.britannica.com/topic/Nagara-Vatta). தாய்லாந்து கம்போடியா இலாவோஸ் வியத்நாம் ஆகிய நாடுகளில் வட்டம் என்றால் அந்தந்த நாட்டு மொழிகளில் திருக்கோயில்.


மண் சார்ந்த பெரு நிலப்பரப்பை மண்டிலம் என்பர் நல்லெழுநியார் பரிபாடலில் (13-8). அமைச்சர் மண்டலம், புலவோர் மண்டலம் எனவும் வரும். வட இந்திய இராஜஸ்தான் மாநிலத்தில் மண்டல் என்ற நகரம். மண்டல் எனப் பெயருடன் புகழ் பெற்ற அறிஞர் பலர் வட இந்தியாவில். 


மியன்மார் நாட்டின் தலைநகரம் மண்டலம் > மண்டலே. சீனாவின் அமைச்சர் குழாம் மண்டலம். அரசவை மொழி மண்டல மொழி > மண்டலின் Mandarin. அதுவே இக்காலத்தில் வட்டார மொழிகளுக்கு அப்பால் சீனாவின் ஆட்சி மொழி.


நய, நயக்கும், நயத்தக்க, நயத்தக, நயந்த, நயப்பு, நயவர் யாவும் பரிபாடல் முதலாகப் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை எனச் சங்க இலக்கியச் சொல்லாட்சி. 


நயத்தக்க நாகரிகர் (குறள் 580) என்பார் வள்ளுவர். நயம் இன்று வரை வழங்கும் சொல்லாட்சி. நயினார் ஆண்பால். நயிந்தை பெண்பால். 


சைவ சமயத்தில் நாயனார். நயத் தக்கவரான தலைவன் நாயகன். தெலுங்கில் கன்னடத்தில் சிங்களத்தில் நாயக்கர். கலிங்கத்தில் பட்டத்து நாயகனே பட்நாயக். வங்கத்தில் இந்தியில் பெயருக்கும் இந்தியப் படைத் தகுதிக்கும் நாயக். மலையாளத்தில் நாயர்.


நக்கர், நக்கல், நகு, நகுனர், நகை யாவும் பண்டைய சங்க இலக்கியத் தமிழ் வழக்கு. ....நக்க சாரணர் நாகர் வாழ்மலை.. (மணிமேகலை 16-5). நகுதற் குரியவர் ஆடையின்றி வாழ்வதால் நகைப்புக்குரியவர் வாழ்கின்ற நாகர் மலை. சாதுவன் வணிகத்துக்காகக் கடாரம் நோக்கிய கப்பல் வழியில் அத்தீவு. அதனால் அந்த நாட்டின் பெயர் நக்காவரம் (Nicobar). அத்தீவுக் கூட்டத்தின் தெற்கெல்லைத் தீவு இன்றும் கச்ச தீவு.


தக்க, தக்கார், தகவு, தகுதி, தகை, தகைமை, தகையோர் யாவும் எட்டுத்தொகையிலும் பத்துப்பாட்டிலும் வரும் சங்க இலக்கிய சொற்கள். 


தக்கார் தகவிலர் (குறள்114) என்பார் வள்ளுவர்.


சிங்களத்தில் தகார் ඩකාර්. கலிங்கத்தில் ଡାକାର தாக்கூர். வங்காளத்தில் தக்கார் ডাকার > தாகூர். மராத்தியில் डकार தாக்கரே.


....கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் உன்னுதரத்தே உதித்து எழுந்து ஒன்று பல ஆயிடினும்..... என்றவர் 150 ஆண்டுகளுக்கு முன் மனோன்மணியம் சுந்தரனார். திருவனந்தபுரத்தில் மனோன்மணியம் சுந்தரனாரின் நண்பர்கள் யாழ்ப்பாணத்து வண்ணார்பண்ணை பி ஏ தம்பி ஒழுங்கை செல்லப்பா பிள்ள அவர் தம்பி பொன்னம்பல பிள்ளை இருவரும்.


கிழக்கே சீனம் யப்பான் வரையும் மேற்கே இலத்தீன் கிரேக்கம் ஆங்கிலம் வரையும் தமிழ்ச் சொற்கள் பரவலாய் உள்ளன. ஆர்வமுள்ளோர் தேடுக.

வாரம் ஒரு சிந்தனை 14 தமிழின் ழகரச் சிறப்பு

வாரம் ஒரு சிந்தனை 14

மறவன்புலவு க. சச்சிதானந்தன் 


தமிழின் ழகரச் சிறப்பு


I love you யப்பானிய மொழியில் I rove you. ஏனெனில் லகரம் யப்பானிய மொழியில் இல்லை. 


கொரிய மொழியிலும் லகரம் வரி வடிவம் இல்லை. எனினும் சொல்லுக்கு இடையிலும் ஈற்றிலும் லகரம் உச்சரிப்பாக வரும். காட்டு Seoul.


வட அமெரிக்கப் பழங்குடியினரின் மொழி செரோக்கி (Cherokee)யில் 'ல'கரம் இல்லை. 


தென் அமெரிக்கா காடுகளின் பழங்குடி மக்களின் பிதாகா (Pirahã) மொழியில் லகரம் இல்லை.


ஆத்திரேலியா முதற் குடி மக்களின் மொழியில் லகரம், ளகரம், ழகரம் உள. பார்க்க Jonathan Harrington (2014), Sachithananthan K. (2019). தமிழ்நாட்டில் இருந்து புலம் பெயர்ந்தவர்கள் (Spencer Wells).


ஆங்கிலத்தில் லகரம் L, l ஒரே ஒரு வரி வடிவம்.


சிங்களத்தில் பல்லோடு நாக்கு ල லகரம். நடு அண்ணத்தோடு நாக்கு ළ ளகரம். சிங்களத்தில் ழகரம் இல்லை.


மலையாளத்தில் மூன்றும் ல > ല, ள > ള, ழ > ഴ,

 உள.


தெலுங்கிலும் கன்னடத்திலும் ல > ల, ள > ళ, 

லகரம், ளகரம் உள. ழகரம் இப்பொழுது இல்லை. பத்தாம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் தெலுங்கில் ழகரம் இருந்தது. கவிராஜ மார்க்கம் கன்னடத்தில் பழைய நூல். அதில் ழகரம் பயன்படுத்தினர். இப்பொழுது இரண்டு மொழிகளிலும் ழகரம் இல்லை.


வடமொழியில் (தேவநாகரி) ல > ल. இருக்குவேத உச்சரிப்புகளில் மட்டும் ள > ळ ஒலி. தமிழின் சிறப்பு ஒலி ழகரம் வடமொழியில் முற்றிலும் இல்லை. எனவே இந்தி மொழியிலும் ளகரம் இல்லை, ழகரம் இல்லை.


மேல்வாய்ப் பல். அருகே அண்ணம். நாக்கைப் பல்லோடு அண்ணத்தில் அழுத்துக. லகரம் பிறக்கும். 2800 ஆண்டுகளுக்கு முன் சொன்னவர் தொல்காப்பியர்.


"அண்பல் முதலடியைத் நாவினோரம்

ஒற்றிப் பரிய லகாரம் பிறக்கும்" (தொல். எழுத்து. பிறப்பியல்: 21)


நாக்கு நுனியால்  நடு அண்ணத்தைத் தடவுக. 'ளகரம்' பிறக்கும். நாக்கை உள்ளே வளைக்க. அண்ணத்தை வருடுக. 'ழகரம்' பிறக்கும். 2800 ஆண்டுகளுக்கு முன் சொன்னவர் தொல்காப்பியர்.


"அண்பல் முதலும் அண்ணமும் நண்ணி

நாவிளிம்பு வீங்கித் தடவக் காறும்

ளகார ழகாரமாயிரண்டும் பிறக்கும்" (தொல். எழுத்து. பிறப்பியல்: 20).


ழகரத் தமிழ் மீது காதல். அடங்காத காதல். எனவே நான் தமிழ் விரகன். 22 இடங்களில் ழகரத்தைச் சொற்களாக்கி எழுதிய தமிழ் விரகன். 1615 ஆண்டுகளுக்கு முன் எழுதிய பாடல். திருஞானசம்பந்தர் எழுதிய பாடல்.


இச்சைகளுக்கு ஆளாகாதே. அறத்தொடு வாழ். சிவன் எழுதும் ழகரத் தமிழ். 22 ழகரம் வரச் சொல்கிறேன். சிவனே உன்னைக் காக்கும் தலைவன்.


பந்துவராளி இராகம். சாதாரிப் பண். 


ஒழுகலரி தழிகலியி லுழியுலகு 

பழிபெருகு வழியை நினையா

முழுதுடலி லெழுமயிர்க டழுவுமுனி 

குழுவினொடு கெழுவு சிவனைத்

தொழுதுலகி லிழுகுமல மழியும் 

வகை கழுவுமுரை கழுமலநகர்ப்

பழுதிலிறை யெழுதுமொழி தமிழ்விரகன் வழிமொழி கண்மொழி தகையவே.

(திருமுறை 03067012)

வாரம் ஒரு சிந்தனை 13 சுட்ட பானையும் சுடாத பானையும்

 வாரம் ஒரு சிந்தனை 13

மறவன்புலவு க சச்சிதானந்தன் 


சுட்ட பானையும் சுடாத பானையும்


மண், மணல், குறுமணல், பெருமணல், களிமண், பாசி மண், களப்பு மண், புற்று மண், உவர் மண் என்ன மண்ணின் வகைகள் பல. 


வனைதலுக்கு ஏற்ற மண் ஒருவகைக் களிமண். அந்த மண்ணைத் தேடுதல் கொட்டகைக்குள் குவித்தல். 


மண்ணை உரிய அளவு நீரோடு கலக்கிறார். பிசைகிறார். பதமான களியாக்குகிறார். தண்டும் தட்டும் கயிறும் கொண்ட வனையம் மீது பிசைந்த களி. 


மாறி மாறிக் கயிறை இழுக்க வனையம் சுழல்கிறது. கைவிரல்கள் களிமண்ணைப் பிடித்து விட வனைந்தது பானை.


அலாக்காக எடுத்து ஒரு புறம் வைக்கிறார். வனைவைத் தொடர்கிறார். பானைகள் பல வனைந்த வடிவின.


நல்ல வெயில். காய்ந்து இறுகுகின்றன, வனைந்த பானைகள். 


விறகை நிரப்புவார். தீப் பிழம்பின் தீச்சுவாலைகளில் அனலில் வெதுப்பகம் வெம்மையின் உச்சத்தில்.


காய்ந்து இறுகிய வனைப் பானைகளைத் தட்டில் அடுக்குகிறார். வெதுப்பகத்துள் தள்ளுகிறார். கதவை மூடுகிறார் வெம்மையின் உச்சத்தில் இறுகிய பானைகள் சுடுகின்றன. மண்ணிறப் பானைகள் செந்நிறமாயின.


வெதுப்பகத்துள் வனைந்த பானைகளை ஏற்றுகையில் ஒரு பானை வெளியே. உள்ளிட்ட அனைத்தும் சுட்ட பானைகள். மறுநாள் அவற்றை வெளியே எடுக்கிறார்.


சுட்ட பானைகள் பல. வனைந்தும் சுடாத பானை ஒன்று வெளியே. பானைகளோடு பானையாக.


அன்று இரவு திடீர் மழை. சுட்ட பானைகள் அனைத்தும் பானைகளாக நிமிர்கின்றன சுடாத வனைந்த பானையோ மழையில் கரைந்து மண்ணோடு மண்ணாகிறது.


உயிரின் கூர்மைப் பயணம். ஏழாவது அறிவை நோக்கிய பயணம். ஞானத்தை நோக்கிய பயணம்.


பக்குவம் அடைந்த உயிரே ஞானத்தை நோக்கி விரைந்து பயணிக்கிறது. பக்குவம் அடையாத உயிரோ தொடங்கிய இடத்துக்கே மீளும்.


'...நல்ல குருநாதன் நம்மை வருத்துவது கொல்ல வல்ல பொல்லா வினைகள் அறுப்பதற்கே...' என்றார் யாழ்ப்பாணத்துச் சித்தர் தவத்திரு யோக சுவாமிகள்.


திருமூலர் அதையே 

1000 ஆண்டுகளுக்கு முன்பு சொன்னார். தீயினால் சுட்ட பானை மழையில் கரையாது. சுடுவதற்கு முந்தைய வனைந்த பானை மழையில் கரைந்து மண்ணாகி விடும் என்கிறார் திருமூலர்.


10ஆம் திருமுறை திருமூலர் திருமந்திரம் 

முதலாம் தந்திரம் ஐந்தாவது - யாக்கை நிலையாமை - 1ஆவது பாடல்.


மண்ணொன்று கண்டீர் 

இருவகைப் பாத்திரம்

திண்ணென் றிருந்தது 

தீவினை சேர்ந்தது

விண்ணின்று நீர்விழின் 

மீண்டுமண் ணானாற்போல்

எண்ணின்றி மாந்தர் 

இறக்கின்ற வாறே.

வாரம் ஒரு சிந்தனை 12 மனநிறைவு தரும் முகாமை

 வாரம் ஒரு சிந்தனை 

மறவன்புலவு க. சச்சிதானந்தன்


மனநிறைவு தரும் முகாமை 


அகத்தின் அழகு முகத்தில் தெரியும். கண் பார்க்கும். மனம் எடை போடும். நெஞ்சம் தீர்மானிக்கும். 


இந்தப் பணிக்கு இவர் தகுதியானவர் இவர் தகுதியற்றவர். இவர் ஓரளவு தகுதியானவர். 


விண்ணப்பங்கள் பல நூறு. நேர்முகத் தேர்வுக்கான சல்லடையில் சில நூறு. பணிக்கு தகுந்தவர் எவர் எவர்? தேர்ந்தெடுக்கக் குழு. அவர்கள் தொடுக்கும் வினாக்கள். அதன் தளத்தில்  தேர்வு.


இந்த நடைமுறைகள் இல்லாமல் பார்த்த உடனேயே பணிக்கு உரியோரை அளவிடும் திறமையும் ஆற்றலும் ஒருவருக்கே உண்டு. பணியை செய்யக்கூடிய வரை நாடுகின்ற இயல்பு ஒருவருக்கே உண்டு. அவரே முகாமையாளர்.


பணியில் சேர்ந்தார். பணிப் பட்டியலைக் கொடுத்தோம். ஈடுபாட்டுடன் பணிபுரிகிறாரா? ஆர்வத்துடன் பணி செய்கிறாரா? கொடுத்த பணியைப் புரிந்து செய்கிறாரா? 


அவரின் பணியால் இலக்கு நோக்கி வணிகம் / திட்டம் நகர்கிறதா? நுகர்வோர் பயனடைகிறாரா? வழங்குநருக்கு உரிய தொகை அனுப்பியதா? கணக்குகள் செம்மையாக அமைந்தனவா? தேற்றம் ஈட்டினோமா? 


ஒவ்வொரு பணியாளரையும் அளவிடும் திறமையும் ஆற்றலும் முகாமையாளருக்கு வேண்டும். அவரே வணிகத்தைச் சிறப்பாக முன்னெடுத்துச் செல்பவர். 


பணி செய்வோரைத் தேர்ந்தமை மட்டுமன்றி, தேர்ந்தெடுத்த பணியாளர் யாவரும் உரிய முறையில் பணி செய்கின்றளரா? என்கின்ற மேற்பார்வை ஆற்றல் திறமை யாவும் உரிய ஒருவரே முகாமையாளர்


ஒரே அளவான பணி. ஒரே நாளில் முடிக்கக் கூடிய பணி. ஆனாலும் அந்தப் பணியை இரண்டு நாள்களுக்கு நீடிக்கலாம். ஒரு வாரத்துக்கு நீடிக்கலாம். ஒரு மாதம் முழுவதும் நீடிக்கலாம். 


பணி செய்வதாக நடித்துக் காலத்தைக் கடத்தலாம். திறமையும் ஆற்றலும் இருந்தாலும் உரிய நேரத்தில் உரிய பணிகளைச் செய்யக்கூடிய பணியாளர்களையே முகாமையாளர் விரும்புவர். உரிய பணிகள் உரிய கால இடைவெளியில் உரியவாறு செய்விக்கும் ஆற்றலும் திறமையும் கொண்டவர் முகாமையாளர்.


தேர்ந்த சிறந்த பணியாளர். ஆர்வமும் ஈடுபாடும் கொண்ட பணியாளர். பணியில் ஈடுபாடு. பணி செய்வதில் மன நிறைவு. முகாமையாளருக்கும் வேண்டும். பணியாளருக்கும் வேண்டும். இந்த மனநிறைவு வளர்ச்சிக்கும் உயர்ச்சிக்கும் பெருக்கத்துக்கும் விதை. 


பணியில் மன நிறைவு கொள்கின்ற பணியாளரும் முகாமையாளரும் நிறுவனத்துக்குச் சொத்து.


1 பணியைச் செய்யக்கூடிய வரை நாடுக.

2 அவருடைய பணிகள் உரியவாறு நடக்கின்றனவா எனவும் நாடுக.

3 உரிய காலத்தில் உரிய பணிகள் நடைபெறுகின்றனவா? பார்க்க 

4 அந்தப் பணியில் உங்களுக்கு ஈடுபாடு. 

பணி செய்பவருக்கு ஈடுபாடு.

உணர்ந்து ஈடுபாட்டுடன் பணியாளருக்கு மனநிறைவு. 

இவை வரும் நிலை நாடுக.


நான் சொல்லவில்லை 

இந்த வரிகளைச் சொன்னவர் திருவள்ளுவர்.


செய்வானை நாடிவினை நாடிக் காலத்தோடு 

எய்த உணர்ந்து செயல்.


516ஆவது திருக்குறளில் திருவள்ளுவர் 

கூறுகிறார். 


2000 ஆண்டுகளுக்கு முன்பு தெரிந்து வினையாடல் என்ற தலைப்பில் பத்துத் திருக்குறள்களே திருவள்ளுவரின் முகாமையாளர் வழிகாட்டி.

வாரம் ஒரு சிந்தனை 11 விருந்தும் பகிர்ந்தலும்

 வாரம் ஒரு சிந்தனை 11


விருந்தும் பகிர்ந்தலும் 


கொடை ஆணோடு பிறந்த இயல்பு. 

தடை பெண்ணோடு பிறந்த இயல்பு.


விருந்தைப் பகிர விழைபவன் ஆண்.

விந்தைப் பகிர விளைபவன் ஆண். 

விருந்தினர் வருகையைத தடுப்பவள் பெண்.

விந்தைப் பகிர்வதைத் தடுப்பவள் பெண். 


மனித நாகரீக வரலாறு. பண்பாட்டை செதுக்கிக் கூர்மையாக்கிய வரலாறு. இந்த வரலாற்றுக் காலமே, 2500 ஆண்டுகள் முந்தைய தொடக்கம் 2000 ஆண்டுகள் முந்தைய காலம் வரை ஏறுத்தாழ 500 ஆண்டுகள் நீதி இலக்கியக் காலம்.


மனிதனைப் பண்படுத்தி, சமூகமாக, குமுகாயமாக வாழ்வதற்குரிய நீதிகளை, அறங்களை எடுத்தோதோம்பிய காலம்.


புத்தர், மகாவீரர், கன்பூசியசு, திருவள்ளுவர், அரிஸ்டோட்டில், பிளாட்டோ, சோக்கரட்டிசர், மோசசர், இயேசு பிரான் எனப் பெயர்களைக் கூறினாலும் அவர்களை ஒத்த, பெயர் தெரியாத, ஆயிரக்கணக்கானோர் வாழ்ந்த கால இடைவெளி. மனிதனைப் பண்படுத்த முயன்ற கால இடைவெளி.


ஆண்களுக்குச் சொன்னார்கள் உலகத்தாருக்கு விருந்தோம்பு, பசியைப்போக்கு. ஒருவன் ஒருத்தியாக அன்றில் பறவைகள் போல் விந்தைப் பகிர். நீதி இலக்கியம்.


ஆணுக்கு நல்வினை விருந்தோம்பல். எனவே இல்வாழ்வானுக்கே விருந்தோம்பும் அறம். பார்த்திருப்பான் என்கிறார் வள்ளுவர். 


செல்விருந்து ஓம்பி 

வருவிருந்து பார்த்திருப்பான் 

நல்விருந்து வானத் தவர்க்கு. (குறள் 86)


விருந்து ஓம்பாத மடமை பெண்களிடம் உண்டு.  வள்ளுவர் சொல்கிறார்.


உடைமையுள் இன்மை விருந்தோம்பல் 

ஓம்பா மடமை மடவார்கண் உண்டு. (குறள் 89)


பெண்களுக்கு அறம் சொன்னார்கள். விருந்தோம்பலில் ஆண்களுக்குத் துணையாகுங்கள். விந்தை ஆண்கள் பகிர்வதற்கு ஒப்பாதீர்கள். நீதி இலக்கியம்.


நீதி இலக்கியங்கள் பெருகினாலும் மனிதன் மாறவில்லை. அந்த நாள் முதல் இந்த நாள் வரை மனிதன் மாறவில்லை.


அவன் செல்வந்தன். வீடு திரும்புகிறான். வழியில் ஒரு கிழவி. கையது கொண்டு மெய்யது தழீஇ... தடுக்கில் படுத்திருக்கிறாள். பசி மயக்கம். கண்களோ உறக்கம். 


செல்வந்தனுக்குப் பொறுக்கவில்லை பசிப்பிணி தீர்க்கும் அறம் அவனுக்கு இளமையிலே ஊட்டம். கைத் தாங்கலாக மூதாட்டியை அழைத்துக் கொண்டு தன் வீட்டுக்கு வருகிறான். திண்ணையிலே மூதாட்டி.


மாளிகை வீடு. மாடங்கள் கடக்கிறான். மனைவியைக் காண்கிறான். களைப்போடு வந்தவன் என்றாலும் அவளிடம் அன்போடு செல்கிறான். 


அவள் முகத்திலே தூசு. தலை முடியிலே ஈர்கள், பேன்கள். மூதாட்டியின் பசியைப் போக்க மனைவியின் துணையை நாடுகிறான், நீதி இலக்கிய அறம் படித்து, ஒருவனுக்கு ஒருத்தியாக வாழ்கின்ற செல்வந்தன்.


அவளின் முகத்தை வருடுகிறான். தூசிகளைத் தட்டுறான். தாடையிலே சொட்டுகிறான். தன்னோடு அணைக்கிறான். அவள் தலையைச் சொறிகிறாள். இவனோ மயிர் மயிராக வகிடுகிறான். ஈர்களை வாருகிறான். பேன்களைச் சொடுக்குகிறான்.


களைத்து வந்தவன். அணைத்து மகிழ்கிறான். மனைவிக்கு மகிழ்ச்சி. அவளும் அணைக்கிறாள். முத்தம் கொடுக்கிறாள்.


சாப்பிட அழைக்கிறாள் மனைவி. மூதாட்டி பசியோடு திண்ணையிலே என்கிறான் கணவன். 


விருந்து என்ற சொல் அவன் வாயில் வர முன்பே, கண்ணிமைக்கும் நேரத்தில் மனைவி மனம் மாறுகிறாள். 


அன்புப் பாடல் பாடியவள், ஒப்பாரிப் பாடல் பாடுகிறாள். அழகு நடனம் ஆடியவள், ஆர்ப்பாட்ட நடனம் ஆடுகிறாள். பெண்களின் கைகளில் கிடைப்பன, சப்பாத்தி உருட்டுக் கட்டை, அகப்பைத் தடி, சுளகு, விளக்குமாறு.


பந்தியில் இருந்த செல்வந்தன் பதறி எழுகிறான். பழைய சுளகின் விளிம்பு அவனைப் பதம் பார்த்தது. மாடங்களைக் கடந்து ஓடினான். புறத திண்ணைக்கு ஓடினான். மூதாட்டியைக் காணவில்லை மனைவியின் வெறுப்புத் தணியும் வரை, ஓடினான், ஓடினான், வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினான்.


நினைத்தபோது வருவதன்று கவிதை. 

நெஞ்சம் கனத்த போது வருவதே கவிதை. 

சொன்னவர் இக்காலத்து வலம்புரி ஜான். 


அரற்றிப் பாடியவளைக் கேட்டாள். நஞ்செறிந்து நடனம் ஆடியவளை எட்டிப் பார்த்தாள். முறம் எடுத்து ஓங்கியதைக் கண் எரியக் கண்டாள் செல்வந்தன் பந்தியை விட்டுப் பதறி எழுவதற்கு முன்பே மூதாட்டி கிளம்பினாள். பாம்பின் கால் பாம்பறியும். பெண்ணின் நெஞ்சம் பெண்ணுக்குத் தெரியும்.


மூதாட்டி ஔவையார். கவிஞரான நெஞ்சம் கனத்தது. வெண்பா பாடினார். தனிப்பாடல் திரட்டில் இந்த வெண்பா.


இருந்து... முகம்திருத்தி

ஈரோடு... பேன்வாங்கி 

விருந்து வந்ததென 

விளம்ப -- ஆடினாள் 

பாடினாள் ஆடிப் 

பழ முறத்தால்

சாடினாள்  ஓடோடத் தான்.

வாரம் ஒரு சிந்தனை 10 மரங்களை வெட்டலாமா?

 வாரம் ஒரு சிந்தனை 


மரங்களை வெட்டலாமா?

அரச மரம் சாட்சி. திருமண உறவுக்கு சாட்சி. அரசமரம் இல்லாத் திருமணங்கள் தமிழர் வாழ்வில் இல்லை.


அரச மரமோ, ஞானம் பெற நிழல் மரம். கௌதமர் புத்தரான நிழல் மரம். அரசு மரம் அன்று, புத்தரின் சின்னம். புனிதம். 


பின் வளவு. வேப்ப மரம். நிழலில் இருப்பர். மாடுகள் கட்டுவர். கிளைகளை வெட்டார். அயலில் உள்ள பெண்கள் அனைவரும் ஆண்டுக்கு ஒரு முறை கூடுவர். மரத்தைக் கழுவி, நீறு சார்த்தி, சந்தனம் குங்குமம் இடுவர். பொங்கல் படைப்பர். வேப்ப மரத்தில் இறைவன்.


"....நீ ஒத்துக் கொள்ளாதே. இங்கு வேண்டாம். அங்குச் செல். மகிழ மரத்தடிக்கு வரச்சொல். மகிழ மரத்தைச் சாட்சியாக்கி அவரைக் கைப்பிடி..." சிவபெருமான் சொல்கிறார் சங்கிலியாரிடம் சொல்கிறார்.


"...அதற்குநீ யிசையாதே

கொங்கலர்பூ மகிழின்கீழ்க்

கொள்கவென..." பெரியபுராணம், 29 - 251


திருவொற்றியூரில் சங்கிலியார் சுந்தரரைக் கைப்பிடிக்கச் சாட்சியாக மகிழ மரம். சிவபெருமானே குறித்த மரம்.


கடற்கரை ஓரம் அவளின் ஊர். எந்நேரமும் அலையின் சத்தம். தலை வருடும் கடல் காற்று. வயதில் வரும் காதல் அவளுக்கும் வந்தது. காதலனோடு ஓடி ஆடி மகிழ்கிறாள். 


ஓடி வந்த களைப்புத் தீர ஒரு புன்னை மரத்தின் அடியில் இருவரும். இருவர் முகத்திலும் கரை புரண்டு ஓடும் மகிழ்ச்சி.


மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கும் அவன், அவனுக்கு அவளை முத்தமிட... அவளுக்கு அவனை அணைத்திட.....  நாணம் தடுக்கிறது.


என் தங்கை. நான் பார்த்து வளர்ந்தவள். அவளுக்கு அருகே நானும் நீயுமா? முடியவே முடியாது. வேறு மரம் பார்ப்போம் வேறு நிழல் பார்ப்போம்.


புன்னைக் கொட்டைகளை வைத்து கடற்கரை மணற் பரப்பில் தோழிகளுடன் பல்லாங்குழி ஆடினேன். ஒரு கொட்டை மணலுள் புதைந்தது. மழை பெய்ய,  ஆடியோர் கலைந்தோம். புன்னைக் கொட்டை விதையாகி முளைத்தது. அப்பொழுது எனக்கு வயது நான்கு.


புன்னைச் செடிக்கு பால் ஊற்றினேன், நெய் ஊற்றினேன், நீரூற்றினேன், இனிது வளர்த்தேன். அவள் உனக்குத் தங்கை என என் தாய் என்னிடம் சொன்னாள். தங்கையாகவே வளர்த்தேன். 


தங்கைக்கு முன்பு நீயும் நானுமா? தலைவனிடம் கேட்கிறாள் நாணும் தலைவி. 


மரம் உறவுக்குச் சாட்சி. மரம் ஞானிக்கு நிழல். மரம் பொங்கிப் படைக்கும் இறைவன். சுந்தரரின் சூள் உரைத்தலுக்கு இறைவன் தேர்ந்தெடுத்த சாட்சி. காதலிக்க நாணும் காதலிக்குத் தங்கை. 


அரசு, வேம்பு, மகிழம், புன்னை, இவை மட்டுமல்ல அனைத்து மரங்களுமே ஒவ்வொரு மனிதருக்கும் உயிர் சார் உறவு. உணர்வு சார் உறவு. உடலுடன் பினைந்த உறவு.


விளையாடு ஆயமொடு 

வெண் மணல் அழுத்தி,

மறந்தனம் துறந்த 

காழ் முளை அகைய,

'நெய் பெய் தீம் பால் 

பெய்து இனிது வளர்ப்ப;

நும்மினும் சிறந்தது; 

நுவ்வை ஆகும்' என்று,

அன்னை கூறினள், 

புன்னையது நலனே


அம்ம! நாணுதும், 

நும்மொடு நகையே;

விருந்தின் பாணர் 

விளர் இசை கடுப்ப,

வலம்புரி வான் கோடு 

நரலும் இலங்கு நீர்த்

துறை கெழு கொண்க!- 

நீ நல்கின்,

இறைபடு நீழல் 

பிறவுமார் உளவே.

2200 ஆண்டுகளுக்கு முன், நற்றிணை 172ஆம் பாடலாகப் (பெயர் தெரியாத தமிழர் இயற்றிய) பத்து வரிகள்.

வாரம் ஒரு சிந்தனை 9 ஆருடம் சோதிடம் கணியன்

 வாரம் ஒரு சிந்தனை 9


ஆருடம் சோதிடம் கணியன் 


வானத்தில் நிலவு. 27.4 நாள்கள், பூமியைச் சுற்ற. நிலவு துணைக் கோள்.


நிலவுக்கு அப்பால் சிமிட்டாமல் நாம் காண ஒளிரும் கோள்கள் ஏழு. புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, நெப்டியூன், யுரேனஸ். துணைக்கோள் நிலவு, விண்மீன் ஞாயிறு சேர்த்தால் ஒன்பது. பூமியுடன் 10. இதுவே சூரியக் கூட்டம்.


சூரியக் கூட்டத்துக்கு அப்பால் விண்மீன்கள். சந்திரனின் 27 நாள்களுக்கும் 27 விண்மீன் கூட்டங்கள். அச்சுவினி தொடக்கம் இரேவதி வரை 27.


எந்த நாளில் எந்தக் கோள்? அதற்கு நேரே எந்த விண்மீன் கூட்டம்? இரவும் பகலுமாக. கணிப்பவர் கணியன். எந்தக் கோள் எந்த விண்மீன் கூட்டத்தில் இருந்தால் எந்த மனிதனுக்கு என்ன ஆகும்? கணிப்பவர் ஆருடர், சோதிடர்.


சனி - கோள், மகம் - விண்மீன் கூட்டத்துக்குள் நேரே நின்றால் கொடுமை, தீங்கு, கூடாது. சொல்பவர் சுந்தரமூர்த்தி நாயனார். 1300 ஆண்டுகளுக்கு முன்பு சொன்னார், "மகத்திற் புக்கதோர் சனி எனக்கு ஆனாய்..." 07ஆம் திருமுறை 54ஆம் பதிகம் 9ஆவது பாடல்.


1400 ஆண்டுகளுக்கு முன்பு. மங்கையர்க்கரசியார் அழைக்கிறார். திருமறைக் காட்டில் இருந்து திருஞானசம்பந்தர் மதுரைக்குப் புறப்படுகிறார். திருநாவுக்கரசர் தடுக்கிறார். "....உறு கோள் தானும் தீய.." என்கிறார். 


சிவபெருமான் என் உள்ளத்துள் எழுந்தருளி இருக்கிறார். எனவே "...ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பு இரண்டும் உடனே ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல..." என்கிறார் திருஞானசம்பந்தர். மதுரைக்குச் செல்கிறார். 


2200 ஆண்டுகளுக்கு முன்பு. பங்குனி மாதத்தின் முதல் பாதியில் ஒரு நாள் இரவு. விண்மீன் கேட்டை கிழக்கு வானில். புனர்பூசம் மேற்கு வானில். உத்தரம் உச்சி நடு வானில்.


புனர்பூசத்துக்கு முந்தைய திருவாதிரை. அதற்கு முந்தைய மிருகசீரிடம் மேற்கில் மறைந்து கொண்டிருக்கிறது. கிழக்கில் கேட்டைக்கு அடுத்த மூலம் எழுந்து கொண்டிருக்கிறது.


அந்த நேரத்தில் வானத்தில் நீண்ட எரிகோள் - வால் நட்சத்திரம். பூமியை நோக்கி வருகிறது. 


இந்த இடத்தில் இந்த விண்மீன். இந்தக் கோள். இந்த நிலவு. இந்தப் பூமி. அந்த நேரத்தில் எரிகோள்.


வானியல் கணியன், ஆருடக் கணியன் ஆகிறார். கொடுமை, தீமை, கூடாதது நடக்கும் என்கிறார். 2200 ஆண்டுகளுடன் முன் நிகழ்ந்தது. கணித்தவர் கூடலூர் கிழார். 


அடுத்த ஏழாம் நாள் அரசன் இறப்பான் என்கிறார் கூடலூர் கிழார். அவர் சொன்னவாறே நோயுற்றிருந்த சேர நாட்டு அரசன் சேரமான் யானைகட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை, எரிகோள் இறங்கிய ஏழாம் நாள் இறந்தான்.


புறநானூறு, 229ஆம் பாடல்: 27 வரிகளில் யாத்தவர், கூடலூர் கிழார்.


ஆடுஇயல் அழல்குட்டத்து

ஆர்இருள் அரைஇரவில்

முடப்பனையத்து வேர்முதலாக்

கடைக்குளத்துக் கயம்காயப்,

பங்குனிஉயர் அழுவத்துத்

தலைநாள்மீன் நிலைதிரிய,

நிலைநாள்மீன் அதன்எதிர் ஏர்தரத்,

தொல்நாள்மீன் துறைபடியப்,

பாசிச் செல்லாது ஊசி முன்னாது

அளக்கர்த்திணை விளக்காகக்

கனைஎரி பரப்பக் கால்எதிர்பு பொங்கி

ஒருமீன் விழுந்தன்றால் விசும்பினானே

அதுகண்டு, யாமும், பிறரும் பல்வேறு இரவலர்

பறைஇசை அருவி நன்னாட்டுப் பொருநன்

நோயிலன் ஆயின் நன்று மற்று இல்லென

அழிந்த நெஞ்சம் மடியுளம் பரப்ப

அஞ்சினம் எழுநாள் வந்தன்று இன்றே;

மைந்துடை யானை கைவைத் துஉறங்கவும்

திண்பிணி முரசும் கண்கிழிந்து உருளவும்

காவல் வெண்குடை கால்பரிந்து உலறவும்

கால்இயல் கலிமாக் கதிஇன்றி வைகவும்,

மேலோர் உலகம் எய்தினன் ஆகலின்

ஒண்தொடி மகளிர்க்கு உறுதுணை ஆகித்

தன்துணை ஆயம் மறந்தனன் கொல்லோ

பகைவர்ப் பிணிக்கும் ஆற்றல் நசைவர்க்கு

அளந்துகொடை அறியா ஈகை

மணிவரை அன்ன மாஅ யோனே?

வாரம் ஒரு சிந்தனை 8 இயற்கையே இறைவன்

 இந்த வாரம் ஈழநாடு 


வாரம் ஒரு சிந்தனை 8

மறவன்புலவு க. சச்சிதானந்தன்


இயற்கையே இறைவன் 


வயலின் வரப்பு. வைகாசி வெய்யில். காய்ந்த மணல் துகள். இடையே எரிந்த புல் நுனி.


அந்த வரப்பைச் சுற்றிப் பதின்மர். புதுப் பானை, மெழுகிய அடுப்பு, அரிசி, சர்க்கரை, பால், பழம், இளநீர், வெற்றிலை, பாக்கு, கற்பூரம், ஊதுவத்தி, தீப்பெட்டி. 


கட்டடமில்லை. திருவுருவம் இல்லை. அந்தப் பரந்த வெளியில் வரம்பில் பொங்கல், படையல். யாருக்கு? ஆண்டுதோறும் அதே வரப்பில் அதே இடத்தில் இறைவனுக்கு. 


ஆண்டுதோறும் ஒரே ஒரு நாளில் பொங்கல். மற்றைய 364 நாள்களில் அங்கு வேறு எந்த நிகழ்ச்சியும் இல்லை. 5000 ஆண்டு காலத் தமிழர் மரபு இன்றும் தொடர்கிறது.


இயற்கையாக உள்ளான். இறைவன் உள்ளான். வழிபடுவதற்கு உள்ளான். என்ற நீண்ட நெடிய தமிழர் மரபின் காட்டு. 


பாடல் என்றால் இசை. பண் குறித்த பாடல். 70 பாடல்கள். அவற்றுள் 24 கிடைக்கின்றன. இயற்கையே கடவுள் எனக் கூறும் வரிகள் பரிபாடலில் உள்ளன. வயல் வரப்பில் கடவுள் உள்ளான். வேம்பில் உள்ளான். பாம்பில் உள்ளான். இயற்கையே இறைவனாக உள்ளான் எனக் கூறும் வரிகள். பரிபாடல் வரிகள். 


2500 ஆண்டுகளாகத் தொடரும் பாடல் வரிகள். கடுவன் இள வெயினனார் பாடல் வரிகள். பெட்ட நாகனார் இசை அமைத்த பாலை யாழ் பண் வரிகள். இயற்கையே இறைவன் எனக் கூறும் வரிகள். வயல் வரப்பிலும் இறைவனைக் காட்டிய வரிகள்.


நின் வெம்மையும் விளக்கமும் ஞாயிற்று உள;

நின் தண்மையும் சாயலும் திங்கள் உள;

நின் சுரத்தலும் வண்மையும் மாரி உள;

நின் புரத்தலும் நோன்மையும் ஞாலத்து உள;

நின் நாற்றமும் ஒண்மையும் பூவை உள;

நின் தோற்றமும் அகலமும் நீரின் உள;

நின் உருவமும் ஒலியும் ஆகாயத்து உள;

நின் வருதலும் ஒடுக்கமும் மருத்தின் உள;

(பரிபாடல் 4 - 25 - 36)

வாரம் ஒரு சிந்தனை 7 தீட்டு, தீண்டு, தொடக்கு, துடக்கு.

 வைகாசி 3 புதன் (17 06 2026)


வாரம் ஒரு சிந்தனை 7


தீட்டு, தீண்டு, தொடக்கு, துடக்கு.


தீ தீட்டு தீண்டு தீது தீமை தீர்ப்பு தீரன் தீவு தீனி யாவும் தீ... எனும் தமிழ் எழுத்தில் தொடங்கும் சொற்கள். 


கேடு தருவன, அழிவு தருவன, ஒழிந்து போவன, என பொருள் தொக்கி மறைந்து வருகின்றன.


பாம்பு தீண்டி இறந்தான். தீமை தருவதால் தீண்டல்.


அரபுப் பாலைவனத்தில் ஏமன் நாடு. மனிதக் கழிவுகள் அகற்றுவோர் சமூகம். அல் அத்தம் என்ற அரபுச் சமூகம். முகமதிய சமூகம்.


அவர்கள் தீண்டாதவர். பாம்பையும் அல் அத்தத்தையும் கண்டால், அல் அத்தத்தை கொல் என்ற வழமையும் ஏமனில் முன்பு.


உன் தோல் நிறம் கறுப்பா? என்னை நெருங்காதே என் வீட்டுக்குள் வராதே. நான் போகும் தெருவில் போகாதே, நான் வாழும் ஊர்களுக்குள் நுழையாதே. வட அமெரிக்காவில் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு. தென்னாபிரிக்காவில் அரை நூற்றாண்டுக்கு முன்பு.


கண்டால் தீட்டு. தொட்டால் தீட்டு. 


அரபு நாட்டிலும் தென்னாபிரிக்காவிலும் அமெரிக்காவிலும் கைக் கொண்ட தீண்டாமை, தீட்டு உடல் நலம் சார்ந்ததாகவே தொடங்கியது. 


கழிவு என்றால் 1) நுண்மிப் virus பெருக்கம், 2) நுண்ணுயிரிப் bacteria பெருக்கம். கண்ணுக்குத் தெரியாதன நுண்மிகள், நுண்ணுயிர்கள். அவற்றுள் சிலவால் மனிதருக்கு நன்மை, சிலவால் மனிதருக்குத் தீமை.


தீமை தரும் நுண்மிகளே நுண்ணுயிர்களே, தொற்றிக் கொள்ளும் நுண்மிகளே நுண்ணுயிர்களே, தீண்டாமையின் வேர்; தீட்டின் தொடக்கம். 


காற்றோடு வந்து தொற்றுவன சில நுண்மிகள் நுண்ணுயிர்கள். தொட்டால் தொற்றுவன சில நுண்மிகள் நுண்ணுயிர்கள்.


தொற்றில் இருந்து தடுக்கவே தீண்டாமை, தீட்டு. நல்ல வழமை முதலில் நம்பிக்கையானது. பின்னர் மூட நம்பிக்கையானது. அடுத்தே சமூக வேறுபாடு. 


ஏமனில் அல் அத்தர் சமூகமே தீண்டத் தகாதவர். தென்னாபிரிக்காவில் கறுப்பு நிறத்தவரே தீண்டத்தகாதவர். வட அமெரிக்காவில் அடிமைக் கறுப்பரே தீண்டத்தகாதவர். தென்னாப்பிரிக்காவிலும் வட அமெரிக்காவிலும் அரசுச் சட்டங்களாயின தீட்டு, தீண்டாமை.


தெற்காசியாவில் சாதிக் கோட்பாட்டின் தொடக்கம் தீமை பயக்கும் தொற்று நுண்மிகளும் நுண்ணுயிர்களும். நம்பிக்கைகளாகி மூடநம்பிக்கைகளாகி வண்ண பேதங்களாகி மனு நீதியும் ஆயின.


575 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரத்துக்கு மேற்கே களந்தையில் பிறந்தவர். வடக்கே திருப்பதிக்குக் கிழக்கே கண்ணப்பர் வாழ்ந்த திருக்காளத்தியில் சிலகாலம் வாழ்ந்தவர். பின்னர் தில்லையை வாழ்விடமாகக் கொண்டார். பெயர் மறைஞானசம்பந்தர்.


1) பதி பசு பாசப் பனுவல், 2) சிவதருமோத்தரம், 3) அருணகிரி புராணம், 4) கமலாலய மான்மியம், 5) முத்தி நிலை 6) அட்டாங்க யோகம் என்பன இவர் இயற்றிய நூல்களுள் சில.


தீட்டுக் கொள்கை தொடர்பாக மறைஞானசம்பந்தர் எழுதியுள்ளார். சிவதருமோத்தரம் நூலின் 11ஆவது தலைப்பு, பரிகார இயல். 


முதல் முப்பது பாடல்களும் தூய்மையற்ற வாழ்வியலைக் கூறுவன. தீட்டுச் சார்ந்த நிலையைக் கூறுவன. தூய்மையற்ற நிலையிலிருந்து தூய்மை பெறுவது. தீட்டில் இருந்து விடுபடுவது பரிகாரம்.


தீநுண்மிகள் தீநுண்ணுயிர்கள் காற்று வழியும் தொடுதல் வழியும் தொற்றாமல் இருக்க வழிகளைச் சொல்கின்றன. அவை தொற்றினால் நீக்கும் வழிகளையும் சொல்கின்றன.


மருத்துவமனையில் அறுவைக்கூடம், தீவிர நலம்பேண் பிரிவு, தொற்றுக் காப்பு பிரிவு ஆகிய இடங்களுக்குரிய வழிகாட்டல்கள். உள்ளே யார் போகலாம்? யார் போகக் கூடாது யார் போனால் தீட்டு. விவரக் கோவை இருக்கும் அல்லவா? அவற்றை 575 ஆண்டுகளுக்கு முன்பு சொன்னவரே மறைஞானசம்பந்தர்


சிவதருமோத்தரம் 11 பரிகார இயலில், 30 பாடல்கள். அறிவியல் சார்ந்த பாடல்கள். அறிவுடையோருக்கு நம்பிக்கையாகப் பாடல்கள். அறிவிலிகளுக்கும் மூடர்களுக்கும் மூர்க்கர்களுக்கும் புரியும் மூடநம்பிக்கையாக அக்காலத்தில் தொகுத்துக் கொடுத்தவர் மறைஞானசம்பந்தர். 


883ஆம் பாடல்:


பிறப்பு இறப்பு இரண்டிலும் 

பூசகருக்கு 10 நாள் தீட்டு. 

அரசருக்கு 12 நாள் தீட்டு. 

வணிகருக்கு 15 நாள் தீட்டு. 

தீக்கை பெற்றோருக்கு 15 நாள் தீட்டு. 

ஏனையோருக்கு 30 நாள் தீட்டு. 

மறைஞானசம்பந்தர் சொல்கிறார். 


எட்டும் இரண்டும் 

பிறந்தநாள் இறந்தநாளும் 

இழுக்கு உண்டு 

மறையோருக்கு 

அரையருக்கு ஈராறு உண்டு 


எட்டுடன் ஏழ் ஏனையருக்கு 

ஈர்எட்டு ஒன்றும் ஊனம் 

இயல் வழியில் இயங்கிடும் 

சூத்திரனுக்கு இரட்டி 


விட்டவருக்கு விதி புதல்வி 

தன்னுடனே பிறந்தநாள் 

வேறு அல்லா நன்மாமன் 

எழுவாயா வியூகித்து 


ஒட்டும் ஒரு மூன்று நாள் 

ஒழிந்தார்க்கு மூழ்க ஒழியும் ஒரு 

ஒரு பதினைந்துள் 

சிவகணிகையோர்க்கு.


சிவதருமோத்தரம் நூலில் மொத்தம் 1208 பாடல்கள். சைவத்திருமடங்களில் தம்பிரான் அடிகளாராக இருப்பவர் இவற்றை மனப்பாடம் செய்ய வேண்டும் என்பது விதி.

வாரம் ஒரு சிந்தனை 6 பிறவியே எனக்கு வாலிதாம் இன்பமாம்

 வாரம் ஒரு சிந்தனை 6

மறவன்புலவு க. சச்சிதானந்தன்


பிறவியே எனக்கு வாலிதாம் இன்பமாம் 


பிகுவு பிசகு பிஞ்சு பிட்டி பிடரி பிண்ணாக்கு பித்தம் பிரட்டு பிரமை பிரிவு பிரை பிழி பிழை பிள்ளை பிறவி பிறழ் பின்பு பினை இவை பி.... என்ற தமிழ் எழுத்தில் தொடங்கும் சொற்கள். 


ஒன்றிலிருந்து இரண்டாக, பலவாக என்ற பொருளில் வரும் சொற்கள்.


தாயிலிருந்து பிரிந்து பிறக்கும் சேய். எனவே பிறவி.


பிறவி துன்பமானது. பிறவி துயரமானது. பிறவி துக்கமானது. 


நோயைத் தருவது பிறவி. முதுமை தருவது பிறவி. இறப்பு எனும் துன்பம் தருவது பிறவி. 


பிறந்தவர் பெருகிய துன்பத்தையே அடைவர். பிறந்தவரின் ஆசையே துன்பத்திற்கு காரணம்.


2570 ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கொள்கையை முன்வைத்தவர் புத்தர்.


பிறக்காதவர் பேரின்பம் அடைவர். புத்தர் சொன்னார். 


புத்தரின் துன்பக் கொள்கையை, துயரக் கோட்பாட்டை அழகிய தமிழ் வரிகளில் 1800 ஆண்டுகளுக்கு முன்பு தந்தவர், சாத்தனார் மணிமேகலையில்.


...பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்

பிறவார் உறுவது பெரும் பேரின்பம் 

பற்றின் வருவது முன்னது பின்னது

அற்றோர் உறுவது அறிக...


(மணிமேகலை, ஊர் அலர் உரைத்த காதை: 64-67)


ஆசையை விடுவோர், பற்றை நீக்குவோர், துன்பத்தில் இருந்து விடுபடுவர். பிறவிப் பிணியில் இருந்தும் விடுபடுவர். 


எட்டு வழிகள். ஆசையை விடலாம். சொல்கிறது புத்த சமயம். 


நல்நோக்கம் > நல் உறுதி > நல் உரை > நற் செயல் > நல் வாழ்வு > நல் முயற்சி > நல் மனம் > (அவை வழி) நல் ஒடுக்கம்.


எல்லோராலும் கைக்கொள்ளக் கூடியனவா? இந்த எட்டு நல் வழிகள். முடியவே முடியாது. மிகச் சிலராலேயே கைக்கொள்ள, முயல முடியும். முயற்சிக்கலாம். முழுமையாகக் கைக்கொள்வோர் ஒரு சிலரே.


இந்த எட்டு நல்வழிகள். இவற்றைக் கைக்கொள்வதாகச் சொல்வோர் ஏராளமானோர். இவர்கள் புத்தர்கள். புத்த சமயத்தவர்கள். ஆசையை விடாத புத்தர்கள். பற்றை ஒழிக்காத புத்தர்கள். ஆசையை ஒழிக்க முயலாத புத்தர்கள். பற்றைக் கைவிட முயலாத புத்தர்கள். 


பிறவி துன்பமல்ல, பிறவியே இன்பம் என்று இவர்களிடம் சொன்னார்கள். அறிந்தனர், புரிந்தனர், புத்த சமயத்தில் இருந்து வெளிவந்தனர்.


சொன்னவர் ஒருவர் அன்று. இருவர் அல்லர், பலர். தொடக்கி வைத்தவர் காரைக்கால் அம்மையார். 


துன்பம் பெரிய கடல். அதில் அமிழ்துவிடாமல் காக்க ஒருவன் இருக்கிறான். இன்பத்தைத் தருபவன் ஒருவன் இருக்கின்றான். துன்பக் கலப்பில்லாத இன்பத்தை தருபவன் இருக்கின்றான்.  அவரிடம் செல்லுங்கள் என வழிகாட்டியவர் காரைக்கால் அம்மையார்.


கீழா யினதுன்ப வெள்ளக்

கடல்தள்ளி உள்ளுறப்போய்

வீழா திருந்தின்பம் வேண்டுமென் 

பீர்விர வார்புரங்கள்

பாழா யிடக்கண்ட கண்டன்எண்

தோளன்பைம் பொற்கழலே

தாழா திறைஞ்சிப் பணிந்துபன்

னாளுந் தலைநின்மினே.


11ஆம் திருமுறை, 3ஆம் தலைப்பு: இரட்டை மணிமாலை, 9ஆம் பாடல்.


புனை துகிற் போலிப் புத்த சமய வீழ்ச்சியின் தொடக்கம். பத்தி இயக்கத்தின் மீள் எழுச்சி. வித்திட்டவர் 1800 ஆண்டுகளுக்கு முன்பு காரைக்கால் அம்மையார்.


மகிழ்ச்சியானதே பிறப்பு. இன்பத்தை நோக்கியதே பிறப்பு. ..மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே.. என முழங்கித் தொடர்ந்தவர் 1475 ஆண்டுகளுக்கு முன்பு திருநாவுக்கரசர்.


குனித்த புருவமுங் 

கொவ்வைச்செவ் வாயிற் 

குமிண்சிரிப்பும்

பனித்த சடையும் 

பவளம்போன் மேனியிற் 

பால்வெண்ணீறும்

இனித்த முடைய 

எடுத்தபொற் பாதமுங் 

காணப்பெற்றால்

மனித்தப் பிறவியும் 

வேண்டுவ தேயிந்த 

மாநிலத்தே.


4ஆம் திருமுறை, 81ஆம் பதிகம், தில்லை, 4ஆம் பாடல்.


துறவியாக வேண்டுமா? எட்டு நல்வழிகளைக் கைக்கொள்வதே துன்பமா? வேண்டாம். வாருங்கள். திருவாரூரில் சிவபெருமான் இருக்கிறார். அவரை வணங்குங்கள். பக்தியோடு அணுகுங்கள். அவர் உங்களைத் துறவியாக்குவார். நெஞ்சுறுதியோடும் நேர்மைத் திறனோடும் சொல்கிறார் 1380 ஆண்டுகளுக்கு முன்பு திருஞானசம்பந்தர்.


பிறவி யறுப்பீர்காள் அறவ னாரூரை

மறவா தேத்துமின் துறவி யாகுமே.


1ஆம் திருமுறை. 91ஆம் பதிகம்: திருவாரூர், பாடல் 2.


பிறந்தேன். மகிழ்ந்தேன். மட்டிலா இன்பம் கொண்டேன். துன்பம் தெரியாததே பிறவி. மானிடப் பிறவியே மேலான பிறவி. மகிழ்ச்சிக்குரிய பிறவி. அடித்துச் சொல்பவர் 1300 ஆண்டுகளுக்கு முன் சுந்தரர். 


தில்லைக்குச் சுந்தரர் செல்கிறார் அருள்மிகு சிவகாமி உடனுறை நடராசப்பெருமானின் திருநடனக் காட்சி காண்கிறார். கண்ணில் மகிழ்ச்சி அருவியாகச் சொரியப் பாடுகிறார். அந்த நிகழ்வை 850 ஆண்டுகளுக்கு முன் சேக்கிழார் சொல்கிறார்.


தெண்ணிலா மலர்ந்த வேணியாய் 

உன்றன் திருநடங் கும்பிடப் பெற்று

மண்ணிலே வந்த பிறவியே 

எனக்கு வாலிதாம் இன்பமாம் என்று 

கண்ணில் ஆனந்த அருவிநீர் 

சொரியக் கைம்மலர் உச்சிமேற் குவித்துப்

பண்ணினால் நீடி அறிவரும் 

பதிகம் பாடினார் பரவினார் பணிந்தார்.


12ஆம் திருமுறை, திருமலைச் சருக்கம், 5. தடுத்தாட்கொண்ட புராணம், பாடல் 253.


பாண்டிய வழிவந்த தமிழ் மன்னன். அநுராதபுரத்தில் அவன் ஆட்சி. முதலாம் சேனன். அவனுக்கு மகள். வாய் பேச முடியதவள். 


ஆற்றல் உள்ளவர். திறமை மிக்கவர். ஞானியர். அவளைப் பேச வைப்பர் எனப் புத்தத் துறவிகளை அணுகுகிறான் முதலாம் சேனன். அவர்களால் முடியவில்லை. 


தில்லைக்குச் சேனன் செல்கிறான். அங்கே மாணிக்கவாசகரிடம் அருள் கேட்கிறான். அன்று ஊமைப் பெண்ணல்லோ. இன்று பேசும் பெண்ணல்லோ. ...பேசுவதும் திருவாயால்... (திருமுறை 08012001) என்கிறார் மாணிக்கவாசகர். அவள் தமிழைப் பேசத் தொடங்குகிறாள். புத்தனாகச் சென்றவன். சைவத் தமிழனாக அநுராதபுரம் திரும்புகிறான் முதலாம் சேனன்.


1200 ஆண்டுகளுக்கு முன்பு மாணிக்கவாசகர் சொல்கிறார், மனிதனாகப் பூமியில் பிறப்பதே பேறு. தேவர்கள் சொல்வதாகச் சொல்கிறார். மனிதப் பிறவி எடுத்துச் சிவபெருமானை வழிபடாமல் நாங்கள் காலத்தைக் கடத்துகிறோமே, வீணாக்குகிறோமே என்கின்றனராம் தேவர்கள்.


புவனியிற் போய்ப்பிற 

வாமையில் நாள்நாம்

போக்குகின் றோம்அவ 

மேஇந்தப் பூமி

சிவனுய்யக் கொள்கின்ற 

வாறென்று நோக்கித்

திருப்பெருந் துறையுறை 

வாய்திரு மாலாம்

அவன்விருப் பெய்தவும் 

மலரவன் ஆசைப்

படவும்நின் அலர்ந்தமெய்க் 

கருணையும் நீயும்

அவனியிற் புகுந்தெமை 

ஆட்கொள்ள வல்லாய்

 ஆரமு தேபள்ளி 

எழுந்தரு ளாயே.


8ஆம் திருமுறை, 20ஆம் பதிகம், திருப்பள்ளியெழுச்சி, பாடல் 10.ன

வாரம் ஒரு சிந்தனை 5 வினையும் அறமும்

 வாரம் ஒரு சிந்தனை 5


வினையும் அறமும்

மறவன்புலவு க சச்சிதானந்தன்


விக்கல் விகுதி விசை விடியல் விடு விடை விண் விதை விம்மல் வியப்பு வியவு விரிவு விருது விருந்து வினை வில் விலா விலை விழா விழி விளக்கு விளம்பு விளி விளை விரல் விறல் விறகு வினவு வினை இவை யாவும் வி... எனும் எழுத்தை முதலாகக கொண்ட தமிழ்ச் சொற்கள்.


ஒன்றிலிருந்து மற்றதாகி வேறுபடுகின்ற... என்ற பொருளே இச் சொற்கள் அனைத்திலும் தொக்கி நிற்கும், மறைந்திருக்கும்.


மூலம் - அதிலிருந்து சற்றே மாறுபடுதல், தொடர்ந்து மாறுபடுதல் அதனால் வேறுபடுதல் என்பதே வினை.


தொழில் பணி செயல் முயற்சி வஞ்சகம் தந்திரம் கருத்து தொல்லை எனப் பல பொருள்களில் வரும் ஒரே சொல் வினை. 


அசையாமல் இருப்பது மூலம். அசைவது வினை. அசைவு தானாக எனின் உயிர். தானாக அசைவதால் உயிரோடு கூடப் பிறந்ததே வினை. அறிவியல் கருத்து. உயிரியல் கருத்து.


திருக்கயிலாயம் தொடக்கம் கதிர்காமம் வரை நீண்ட, காந்தாரம் முதலாக ஐராவதி ஆறு வரையாகப் பரந்த நிலப்பரப்பில், வினைக் கொள்கையே தத்துவக் கொள்கை. 


தமிழ் தவிர்ந்த ஏனைய மொழிகளில் கர்மா, கர்மம், கருமம். தமிழில் வினை.


உயிரை வினைக்கு தூண்டுவது. உயிரை அசைவிப்பது. உயிராய் நிறவுருவில் மறைந்திருக்கும் மரபணு. அம் மரபணு இன்றி உயிர் இல்லை. 


மரபணு இயக்காமல் வினை இல்லை. வினைக் கொள்கை எனில் மரபணுக் கொள்கை. மரபணுக்களின் தொகுப்பான நிறவுருக் கொள்கை. அதுவே தமிழரின் வினைக் கொள்கை.


வினைகள் = நல்வினைகள் - தீவினைகள். நடுநிலை வினை இல்லை. 


நல்வினைகள் அறம். 


விடாப்பிடியாக ஒரே வினையைத் தொடர்க. மீண்டும் மீண்டும் அதே வினையில் ஈடுபடுக. ஒருவர் தொடர்ந்து செய்கிறரா? மரபணு மீள் செயல்களைக் குறித்துக் கொள்கிறது. இவர் ஒரே செயலில் பழகிக் கொள்கிறார். மரபணுவில் அந்தச் செயலுக்குத் தேவையான ஆணைகள் நிலை பெறுகின்றன.


உடுக்கை இழந்தவன் கை, (குறள்: 788) என்பார் வள்ளுவர். தன்னை அறியாமல் வழுவும் உடை நோக்கிக் கை போகிறதே. அதுவே பழக்கம் வழக்கம். மரபணுவில் இணைந்து கொள்ளும் பயிற்சி. 


ஒருமுறை அந்தப் பயிற்சி பழக்கம் வழக்கம் மரபுனுவில் இணைந்து விட்டால், அதுவும் சிறு வயதில் இணைந்து விட்டால், அடுத்த தலைமுறைக்குப் போகும். எழுகின்ற தலை முறைகளில் எல்லாம் இருக்கும் என்கிறார் வள்ளுவர். 

ஒருமைக்கண் 

தான் கல்வி கல்வி 

ஒருவற்கு எழுமையும் 

ஏமாப் புடைத்து (குறள்: 398).


வினைக்கு மூலமான மரபணுவில் (genome) 1.5% புரத ஒழுங்கு மட்டுமே உடலமைப்புக் கூறுகளின் வேர். எஞ்சிய 98.5 புரதங்களும், பயிற்சி பழக்கம் வழக்கம் இவற்றை ஒரு தலைமுறையில் உள்வாங்கி அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்கின்றன. எழுகின்ற தலைமுறைகளுக்கு அவற்றை அனுப்பி, மனித நாகரீக வளர்ச்சிக்கு உதவுகின்றன.


Only about 1.5% of the DNA consists of protein-coding genes that determine traits such as eye colour, height and hair type. The other 98.5%, once written off as ‘junk DNA’, is now increasingly recognised as an important part of our genome that controls when and where genes are switched on, influencing development, cellular processes and even human evolution. (Why repetitive DNA matters for human brain evolution and disease By Alexis Bento Luis - published - 25 August 2025)


2057 ஆண்டுகளுக்கு முன்பு வள்ளுவர் சொன்னதை அண்மைய அறிவியல் ஆய்வுகள் உறுதி செய்கின்றன.


உயிரால் உள்வாங்கப்படும் வினை, '...நுகர் வினை..' எனக் கூறுவார் 600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உமாபதி சிவாச்சாரியார். திருவருட்பயன், 5-அருளது நிலை, பாடல் 2.


வினைக் கொள்கையை சமயக் கொள்கையாக்கியோர் முனிவர் அறிஞர் புலமையாளர் திறமை மிக்கோர். சமயக் கொள்கைகள் அறிவு குறைந்தோர் வாழ்வியலில் நம்பிக்கைகள் ஆகின்றன. 


பயன் தரும் அறிவியல் கொள்கைகளை அறிவு குறைந்தோர் புரிந்து கொள்வது எளிதல்ல.


அறிவு குறைந்தோரும் கடைப்பிடித்தால் மனித நாகரீகம் மேலும் வளர்ச்சி அடையும் என்பதால் சமயக் கொள்கையாக தத்துவக் கொள்கையாக மாறியதே அறிவியல் - உயிரியல் கொள்கையாகிய வினைக் கொள்கை.


நல்வினைகளைத் தொடர்ந்து பயிற்சி செய். அவற்றை வாழ்வியல் ஆக்கு. செய்யும் காலத்தில் உனக்கு அவை பயன் தரவில்லையே எனக் கருதிக் கைவிடாதே. அன்றறிவாம் என்னாது அறம் செய்க. (குறள்: 36) 


எழுகின்ற தலைமுறைகளை அறம் மேம்படுத்தும். மனித நாகரீகத்தை வளர்க்கும். ஆறாவது அறிவன்றி ஏழாவது அறிவும் மனிதனுக்காகும்.


700 ஆண்டுகளுக்கு முந்தைய மெய்கண்டாரின் சிவஞானபோதம், 12ஆம் சூத்திரம் 7ஆவது வெண்பாப் பாடல்.


வினையால் அசத்து 

விளைதலான் ஞானம்

வினைதீரின் அன்றி 

விளையா - வினைதீர

ஞானத்தை நாடித் 

தொழவே அதுநிகழும்

ஆனத்தால் அன்பிற் றொழு.


12 திருமுறைகள். 

10ஆம் திருமுறை.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு திருமூலர் இயற்றிய

திருமந்திரம் - 9 தந்திரங்கள். 8ஆம் தந்திரம் - 33ஆவது சுத்தா சுத்தம், பாடல் எண் : 11


வினையால் அசத்து 

விளைவ துணரார்

வினைஞானந் தன்னிலே 

விடாதுந் தேரார்

வினைவீட வீடென்னும் 

பேதமும் ஓதார்

வினையாளர் மிக்க 

விளைவறி யாரே .

வாரம் ஒரு சிந்தனை 4 மூக்கு வழி மூச்சு உயிர்

 வாரம் ஒரு சிந்தனை 4

மூக்கு வழி மூச்சு உயிர்.

மறவன்புலவு சச்சிதானந்தன் 


மூக்கு மூங்கில் மூச்சு மூட்டை மூடி மூப்பு மூழ்கு மூளி மூன்று என்ன மூ... என்ற எழுத்தில் தொடங்கும் தமிழ்ச் சொற்கள். 


துளை அல்லது ஓட்டை எனும் சொற்கள்.


1 கோடி

100 கோடி 

நூறாயிரம் கோடி 

30 நூறாயிரம் கோடி. 


தலையைச் சுற்றும் எண்ணிக்கை. 

இந்த எண்ணிக்கையே உங்கள் உடல். 

ஒவ்வொருவரும் உடலில் உள்ள,

மனித உடலில் உள்ள,

உயிர்க் கலங்களின் எண்ணிக்கை.


இந்த உயிர்க் கலங்கள் கூட்டமே குவியலே  மனித உடல்.

உயிர்க் கலங்கள் உயிரோடு இருக்க 

உயிர்ப்பி தேவை 

உணவு தேவை 

கழிவகற்றும் வகை தேவை.


உணவில் கலந்து இருக்கும் ஆற்றலை உடைத்து எடுக்கும் உயிர்ப்பி (Oxygen). உயிர்வாயு பிராணவாயு ஆக்ஸிஜன் ஒட்சிசன் எனப் பல பெயர்கள்.


உணவு.

அதனுடன் உயிர்ப்பி கலக்கும். 

ஆற்றல் வெளிவரும். 

நீர் கழிவாகும். 

கரியமில வாயு கழிவாகும்.


C6H12O6 + 6O2 >> ஆற்றல் + 6CO2 + 6H2O


30 நூறாயிரம் மனித உயிர்க் கலங்களிலும் தொடர்ச்சியாக நடைபெறும் ஆற்றல் எழுப்பும் நிகழ்ச்சி. 


உணவு C6H12O6 தேவை 

உயிர்ப்பி O2 தேவை 

கழிவு CO2, H2O அகற்றும் தேவை.


30 நூறாயிரம் உயிர்க்கலங்களுக்கும் செல்கின்ற குருதி ஓட்டம், இரத்த ஓட்டம். 


உணவு கொண்டு செல்லும் இரத்த ஓட்டம் 

உயிர்ப்பி கொண்டு செல்லும் இரத்த ஓட்டம் 

கழிவு அகற்றும் இரத்த ஓட்டம்.


வயிறும் குடலுமான உணவுக் குழாய்கள் இரத்த ஓட்டத்தில் உணவைக் கலக்கின்றன.


நுரையீரல் இரத்த ஓட்டத்தில் உயிர்ப்பியைக் கலக்கின்றது. 

30 நூறாயிரம் உயிர்க் கலங்களுக்கும் உயிர்ப்பியை (O2) இரத்த ஓட்டம் எடுத்துச் செல்கிறது. 

ஒவ்வொரு கலத்துக்கும் தனித்தனியாகக் கொடுக்கிறது. தாய், குழந்தைக்குப் பால் ஊட்டுவது போல.


மாசு அற்ற காற்றில் 20% உயிர்ப்பி (O2)

காற்றில் உள்ள உயிர்ப்பியைப் பிரித்தெடுத்துத் தனதாக்கி இரத்த ஓட்டத்தில் கலக்கும் சீரிய பணி நுரையீரலுக்கு.


மனித நெஞ்சறையில் இரு நுரையீரல்கள்.

மூக்கு வழி காற்று நுரையீரலுக்குள் செல்வதும் வெளியேறுவதும். உள்ளே போவதும் மூச்சு வெளியே வருவதும் மூச்சு. 


மூச்சை மறந்தார் இறந்தார்.


காற்றுடன் 20% உயிர்ப்பி மூக்கு வழி உள்ளே போகும். 

மூச்சை உள்ளிழுக்க நுரையீரல் நிரம்பும்.

உயிர்ப்பி இரத்த ஓட்டத்தில் கலக்கும். 

30 நூறாயிரம் உயிர்க் கலங்களுக்கு உயிர்ப்பி செல்லும். அங்கே உணவை உடைக்கும் ஆற்றலைப் பெருக்கும் உயிர் வாழும் வளரும்.


மூக்கு வழி மூச்சு உயிர்.


காற்றை நன்றாக உள்ளே வலிந்து இழுக்க.

இரத்த ஓட்டத்தில் உயிர்ப்பி கரையும் வரை காற்றை வைத்திருக்க. 

இரத்த ஓட்டம் கொண்டு வந்த கழிவுக் கரியமில வாயு நுரையீரலுள் காற்றுடன் கரையும். 


கழிவுக் காற்றை வெளியேற்றுக. 


உடல் நலத்துடன் உயிர் வாழ 

மூச்சுக் காற்றை மூக்கு வழி உள்ளிழுக்க 

மூச்சை நுரையீரலுள் வைத்திருக்க 

பின் மூச்சுக் காற்றை வெளியேற்றுக.


16 கைநொடிக் கால நீட்டத்துக்குக் காற்றை மூக்கு வழி உள்ளிழுக்க.

64 கைநொடிக் காலத்துக்கு நுரையீரலுள் வைத்திருக்க.

32 கைநொடிக் காலத்துக்கு மூச்சை மூக்கு வழி வெளியேற்றுக.


1:4:2 விகிதம்.

மூச்சுப் பயிற்சி விகிதம். 

30 நூறாயிரம் உயிர்க் கலங்களை வாழ்விக்கும் விகிதம்.


திருமுறைகள் 12.

10ஆம் திருமுறை திருமந்திரம்.

திருமூலர் நூலாசிரியர்.

திருமந்திரத்தில் 9 தந்திரங்கள் 

3ஆவது தந்திரம் 5ஆவது தலைப்பு 

மூச்சுப் பயிற்சி. 5 ஆம் பாடல்.


உயிர் வாழும் மூச்சுப் பயிற்சி. 

1:4:2 அறிவியல் விகிதத்தைத் திருமூலர் சொல்கிறார்.


மூச்சுப் பயிற்சிக்கான 1:4:2 விகிதத்தை மாற்றினால் உன்னை நீ ஏமாற்றுகிறாய். 

30 நூறாயிரம் உயிர்க் கலங்களுக்கு, உயிருக்கு, வஞ்சகம் செய்கிறாய் என்கிறார் திருமூலர்.


ஏறுதல் பூரகம் 

ஈரெட்டு வாமத்தால்

ஆறுதல் கும்பகம் 

அறுபத்து நால்அதில்

ஊறுதல் முப்பத் 

திரண்ட திரேசகம்

மாறுதல் ஒன்றின்கண் 

வஞ்சக மாமே .

வாரம் ஒரு சிந்தனை 3 மலடிகளின் பெருக்கம்

 வாரம் ஒரு சிந்தனை 3


மறவன்புலவு க. சச்சிதானந்தன்

மலடிகளின் பெருக்கம்


பெட்டகம் பெடை பெண் பெதும்பை பெந்தை பெய் பெயர் பெயல் பெரிய பெருகு 

பெ... என்ற எழுத்தில் தொடங்கும் தமிழ்ச் சொற்கள்.


அளவைக் கூட்டுதல். எண்ணிக்கையைக் கூட்டுதல். பெ... என்ற எழுத்தில் தொடங்கும் சொற்களின் பொருள்.


பெண் என்றால் பெருக்குபவள். 

இனத்தைப் பெருக்குபவள். 

இயற்கையின் படைப்பு.

பெண்ணின் தலைமைக் கடன் மக்கட் பேறு.


பொன்முடியார் தமிழில் சொல்கிறார். 

2000 ஆண்டுகளுக்கு முன்பு சொல்கிறார். 

புறநானூறு 312ஆவது பாடலில் சொல்கிறார். 

நான் பிறந்ததே இனப்பெருக்கத்துக்காக 

என் தலைமைக் கடன் இனப்பெருக்கம்.

"ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே.."


மக்களைப் பெற்றவளே மகாராணி. 

வள்ளுவர் சொல்கிறார் "..நன்கலம் நன் மக்கட் பேறு";.


மகளிர் பாடசாலைகளில் 

மகளிர் கல்லூரிகளில் 

சொல்லிக் கொடுத்துப் புகட்ட வேண்டிய 

மாணவிகளின் மனத்தில் நிறுத்த வேண்டிய 

முதல் பாடம் 

பெண்ணின் முதற்கடன் மக்கட் பேறு.


இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு மகவு. 

ஒரு பெண்ணின் வாழ்நாளில் ஆகக் குறைந்தது 20 மகப்பேறுகள். 

40 ஆண்டு காலம்.

27 மகப் பேறுகள்.

69 குழந்தைகள்.

பெற்றவர் உருசியப் பெண்.

"ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே..." என 300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து காட்டியவர்.


உலகத் தாய்மார்களுக்கு அவரின் சாதனை சவால். 

ஈழத் தமிழ்ப் பெண்களுக்கும் அவரின் சாதனை சவாலே.


வவுனியா நகரம். பொதுவாழ்வில் புகழ்பெற்ற முகமதியர். '..தமிழ்ப் பெண்கள் நால்வரை மணம் முடித்தேன். 20 குழந்தைகளைப் பெற்றேன்...' பெருமையோடு சொல்கிறார். தமிழரான ஆண்களுக்கு அவருடைய கூற்றே சவால்.


எனினும் 2023இல் உலக மகப்பேற்று அளவு. 

ஒரு பெண் வாழ்நாளில் சராசரி 2.3 குழந்தைகளுக்குத் தாயாகிறாள்.


20 குழந்தைகளுக்கு தாயாகத் கூடியவள்.

2.3 குழந்தைகளையே பெற்றெடுக்கிறாள்.


இலங்கைத் தாய்மார் 

2016இல் தம் வாழ்நாளில் 2.16 மக்களைப் பெற்றெடுத்தனர்.

2025இல் தம் வாழ்நாளில் 1.3 குழந்தைகளையே பெற்றெடுத்தனர்.


மகளிர் பாடசாலைகள் பெண்களை மதிப்பெண் பெருக்கத்துக்கே தயாரிக்கின்றன. 

மக்கட் பேறுப் பெருக்கத்துக்கு தயாராக்குவதில்லை.


இயற்கைக்கு எதிராகப் பெண் கல்வி.

இயற்கைக்கு எதிராகப் பெண்கள் வேலை வாய்ப்பு. 

இயற்கைக்கு எதிராகக் கருத்தடை உத்திகள்.

இயற்கைக்கு எதிராக இலங்கைப் பெண்கள் உருவாகி வருகின்றனர்.


தாயாகும் வேகத்தை வெறுக்கின்றனர். திருமணத்தை வெறுக்கின்றனர் .

ஆண்களை அருவருப்போடு பார்க்கின்றனர்.

ஈழத் தமிழர் இடையே திருமண எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து கொண்டே வருகிறது. 

ஈழத் தமிழரை அழிக்க எதிரிகள் வர வேண்டாம். 

ஈழத் தமிழ்ப் பெண்களே போதும்.


திருமணத்தைக் கையாளும் உத்திகளை மகளிர் பாடசாலைகள் சொல்லிக் கொடுப்பதில்லை. ஆண்களைக் கையாளும் அளவை முறைகளை மகளிர் பாடசாலைகள் சொல்லிக் கொடுப்பதில்லை. தாய்மைப் பேற்றைப் பெருமையாக்க மகளிர் பாடசாலைகள் சொல்லிக் கொடுப்பதில்லை.


பொருளைப் பெருக்கலாம் 

வசதிகளைப் பெருக்கலாம் 

வாழ்வியல் பண்புகளைப் பெருக்கலாம் 

புகழைப் பெருக்கலாம் 

நுகர்ச்சியைப் பெருக்கலாம்


இவை பேறுகள் 

பெறற்கரிய பேறுகள் அல்ல.

மக்கட் பேறே பெறற்கரிய பேறு என்கிறார் திருவள்ளுவர்.


பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த

மக்கட்பே றல்ல பிற. (குறள் 61)

வாரம் ஒரு சிந்தனை 2 கூடா ஒழுக்கம்

 வாரம் ஒரு சிந்தனை 2

கூடா ஒழுக்கம்

மறவன்புலவு க. சச்சிதானந்தன்


வேகம் வேட்கை வேட்டி வேட்டு வேடம் வேதம் வேது வேர் வேலன் வேலி வேலை இவை வே..யில் தொடங்கும் தமிழ்ச் சொற்கள். 


வே என்றால் மறை. வே..யில் தொடங்கும் சொற்கள் மறைப்பதைக் குறிப்பன.


வேடம், தவ வேடம், துறவு வேடம், அருள் வேடம் என உயிர் மேம்பாடு சார்ந்தோரின் போர்வை, மறைப்பு, உடை.


கயிலையில் இருக்கிறேன் வருக. சிவன் உடை புனைந்தவர் அழைக்கிறார். நீங்காத மகிழ்ச்சி பெறுக. நித்தியானந்தம் பெறுக. அவரோடு இருப்பவை பூக்கள். தெய்வப் பூக்கள். இரஞ்சித மலர்கள். 


வழக்குகள் சோதனைகள் குற்றச்சாட்டுகள் குறிவைப்புகள் யாவிலிருந்தும் விடுபடக் கயிலையில் இருக்கிறாராம். மலர்களோடு இருக்கிறாராம். 


அருள்நங்கை யேசுமே கேரளத்தவர். 'அருள் நங்கையின் தன் வரலாறு' என்ற 180 பக்க நூலை எழுதினார். 2012இல் பென்குயின் பதிப்பகம் வழி வெளியிட்டார். தவ வேடங்கள் தீய வேடங்களான கதை சொல்கிறார்.


உலூசி களப்புரா கேரளத்து அருள் நங்கை. 'ஆண்டவனின் பெயரில்' அவர் எழுதிய 208 பக்க நூலை 2019இல் வெளியிட்டார். புறத்தே அருள் போர்வை. அகத்தே இருள் நோக்கம். அருள் நங்கை எழுதுகிறார். 


வன்னி மல்லாவி. தென்னிந்தியத் திருச்சபைப் போதகர். திருமணமானவர். மகளின் வயதுள்ள பெண்ணைக் கெடுக்கிறார். காவலர் தலையிட்டு நீதிமன்றத்தின் முன் நிறுத்துகின்றனர். அருள் வேடம் பகலில். கண்ணில்லாக் காம இருள் கூட இரவில்.


யாழ்ப்பாணத்தில் தூய சம்பத்தரிசியார் கல்லூரிக் கிணற்றில் மறைந்த மாணவன். ஊர்காவற்துறைக் கன்னியர் மடக் கிணற்றுள் மறைந்த மாணவி. கொலைக் குற்றங்களிலிருந்து புறனுடையரைக் காத்தோர். இவர்கள் யாவரும் அருள் போர்வைக்குள் மறைந்திருக்கும் வேடதாரிகள். 


புனைவு எனில் கற்பனை வேடம். உண்மை அற்றது புனைவு. புனை துகில் என்கிறார் திருஞானசம்பந்தர். துறவு என்ற பொய் வேடம். புத்த மதத்தவரைச் சாடுகிறார் திருஞானசம்பந்தர். 


எட்டு மடங்களுக்குத் தலைவராகலாம். கெட்ட மனத்தைப் புத்தத் துறவு எனலாமா? புனை வேடதாரி அல்லவா? 2026இல் கேட்கின்றனர் திசைராணி குணசேகரா, சஜீவனி அபயக்கோன்.


பற்று அற்றோம் என்று கூறுவரான படிற்று ஒழுக்கத்தார். நீ ஏன் பிறந்தாய்? நீ ஏன் பிறந்தாய்? என மனச்சாட்சி துன்புறுத்த வாழ்பவர். 


பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று

ஏதம் பலவுந் தரும். 

(திருக்குறள், கூடா ஒழுக்கம் 5ஆவது குறள்)


உயிர் மேம்பாடு ஆன்ம ஈடேற்றம் போர்வைகளாகப் பிறர் பாராட்டுப் பெறப் பத்தி வேடம் பூண்பவர். தமக்குள் பத்திச் சிந்தனை சிறிதும் இல்லாதவர்.


அருட்போர்வை அணிந்து பத்தியை விற்பவர். அதற்காகவே பகலைக் கழிப்பவர். அருட்போர்வையை நீக்கி இரவில் தம் ஆசைகளுக்கு இடம் கொடுப்பவர். மன நோயாளிகள். பித்தர்.


12 திருமுறைகள். 10ஆம் திருமுறை திருமந்திரம். திருமூலர் அருளிய திருமந்திரம். ஒன்பது தந்திரங்களில் 7ஆம் தந்திரம் 36ஆவது தலைப்பு கூடா ஒழுக்கம் 3ஆவது பாடல்.


பத்திவிற் றுண்டு பகலைக் கழிவிடும்

மத்தகர்க் கன்றோ மறுபிறப் புள்ளது

வித்துக்குற் றுண்டு விளைபுலம் பாழ்செய்யும்

பித்தர்கட் கென்றும் பிறப்பில்லை தானே.

வாரம் ஒரு சிந்தனை: 1 கங்காணி

 வாரம் ஒரு சிந்தனை:


கங்காணி

கங்காணி = கண்காணி 

(இக்காலத்தில் இறைவனின் சில கருவிகள் கண்காணித்துப் பதிகின்றன)


அறிவில்லாதவர் `முட்டாள்கள் மூர்க்கர்கள் கருதுகிறார்கள். 

தம்மைக் காவல் காக்க யாரும் இல்லை எனக் கருதுகிறார்கள். 


பொய் சொல்லலாம் 

களவாடலாம் 

ஏமாற்றலாம் 

எதையும் எவரும் தெரிந்து கொள்ளார்.

முட்டாள்களும் மூர்க்கர்களும் அறிவில்லாதவர்களும் கருதுகிறார்கள்.


யாவரையும் காவல் காக்கின்ற ஒருவன் எங்கும் இருக்கின்றான். 

அவன் இல்லாத இடம் இல்லை. 


எவ்விடத்திலும் நிறைந்து காவல் புரிகின்றவன் இறைவன்.

காவல் புரிபவனாக இறைவனை அறிந்தோர் 

பொய் பேசார் 

களவாடார் 

ஏமாற்றார்.


பல நூற்றாண்டுகளுக்கு முன்பு 

இந்தச் செய்தியை எழுதியவர் திருமூலர்.


12 திருமுறைகள். 

அதில் 10ஆம் திருமுறை திருமந்திரம். 

திருமூலர் இயற்றியது.


திருமந்திரம் நூலில் 9 தந்திரங்கள்

7ஆம் தந்திரம் 

36 ஆவது தலைப்பு 

கூடா ஒழுக்கம் 

முதலாம் பாடல் 

திருமூலர் கூறுகிறார்.


கண்காணி இல்லென்று கள்ளம் பல செய்வார்

கண்காணி இல்லா இடம்இல்லை காணுங்கால்

கண்காணி யாகக் கலந்தெங்கும் நின்றானைக்

கண்காணி கண்டார் களவொழிந் தாரே .

- மறவன்புலவு க. சச்சிதானந்தன்