Friday, October 16, 2026

வாரம் ஒரு சிந்தனை 17 காதல்

வாரம் ஒரு சிந்தனை 17

மறவன்புலவு க. சச்சிதானந்தன்


காதல் 


களைத்து வருகிறான். குளித்து உடைமாற்றுகிறான். பசியாறுங்கள், அழைக்கிறாள் மனைவி.


வாழையிலை விரித்தாள். அறுசுவை உணவு படைத்தாள். கார மணம் மூக்கில் நுழையத் தும்முகிறான்.


அவன் தும்மிய உடனேயே நூறாண்டு வாழ்க என அவள் வாழ்த்தினாள்.


மூக்கில் சளியோ நோயோ என நினைக்க வேண்டியவள், யாரோ நினைக்கிறார், எனவே தும்புகிறார், என நினைக்கிறாள். 


ஒருவேளை வேறு ஒரு பெண்ணாக இருக்கலாமோ? அந்தப் பெண் இவரை நினைக்க இவர் தும்முகிறாரோ? 


வாழ்த்திய வாய் மூடுமுன்பே அழத் தொடங்குகிறாள். எவள் உம்மை நினைத்தாள்? விம்மிக் கேட்கிறாள் வெதும்பி அழுகிறாள். 


அவன் விக்கித்துப் போனான். என் மனத்தில் உன்னைத் தவிர வேறு யார்? ஏன் இவ்வாறான ஐயம்? என்று கேட்க நினைக்கும் முன்பே உணவின் காரம் மீண்டும் மூக்கில். 


மீண்டும் தும்மல். தும்மல் வர முன்பே அடக்கிக் கொள்கிறான். மீண்டும் தும்மினால் பிணங்குவாளே, மீண்டும் அழுவாளே என்பதால்.


எவளோ நினைக்கிறாள் என்பதை என்னிடம் மறைப்பதற்காகத் தும்மலை அடக்குகிறீரோ என மீண்டும் விம்மினாள், வெதும்பினாள், ஆற்றாது அழுதாள்.


இன்னொரு பெண் மீது காதல் கணவனுக்குள் புதைந்திருக்கும் மறைந்திருக்கும் என்பவளே மனைவி. வள்ளுவர் சொல்கிறார். 


வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்

யாருள்ளித் தும்மினீர் என்று.   (குறள் 1317) 


தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்

எம்மை மறைத்திரோ என்று.   (குறள் 1318) 


கம்பரும் அதையே சொல்கிறார். சீதையை மீட்கவே இராவணனைக் கொல்ல வருகிறான் இராமன். அம்புகளால் எய்து இராவணனைக் கொல்கிறான்.


இராவணன் மனைவி மண்டோதரிக்கு அவ்வாறு தெரியவில்லை. சீதையை மீட்கத் தன் கணவனைக் கொன்றான் என மண்டோதரி சொல்லவில்லை.


இராவணனின் உடலுள் உள்ளத்துள் உயிருள் மற்றொரு பெண்ணுக்கான காதல் மறைந்திருக்கிறது என்றே மண்டோதரி சொல்கிறாள். அந்தக் காதலைத் தேடியே இராமனின் அம்புகள் பாய்ந்தன என்கிறாள் மண்டோதரி.


தேன் நிறைந்த மலர்கள். கூந்தலில் சூடியவள் சீதை. அவளின் நினைவே இராவணனுக்கு. அந்தக் காதல் எங்கிருக்கிறது இராவணன் உடலுள் உள்ளத்துள் உயிருள் எனத் தேடினவாம் இராமன் எய்த அம்புகள். சொல்கிறாள் மண்டோதரி.


வெள்ளெருக்கஞ் சடைமுடியான் 

வெற்பெடுத்த திருமேனி 

மேலும் கீழும்

எள் இருக்கும் இடன் இன்றி 

உயிர் இருக்கும் இடம்நாடி 

இழைத்த வாறோ

கள் இருக்கும் மலர்க்கூந்தல் 

சானகியை மனச்சிறையிற் 

கரந்த காதல்

உள் இருக்கும் எனக் கருதி 

உடல் புகுந்து தடவியதோ 

ஒருவன் வாளி.

(யுத்த காண்டம், இராவணன் வதைப் படலம், 237)

No comments: