வாரம் ஒரு சிந்தனை 9
ஆருடம் சோதிடம் கணியன்
வானத்தில் நிலவு. 27.4 நாள்கள், பூமியைச் சுற்ற. நிலவு துணைக் கோள்.
நிலவுக்கு அப்பால் சிமிட்டாமல் நாம் காண ஒளிரும் கோள்கள் ஏழு. புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, நெப்டியூன், யுரேனஸ். துணைக்கோள் நிலவு, விண்மீன் ஞாயிறு சேர்த்தால் ஒன்பது. பூமியுடன் 10. இதுவே சூரியக் கூட்டம்.
சூரியக் கூட்டத்துக்கு அப்பால் விண்மீன்கள். சந்திரனின் 27 நாள்களுக்கும் 27 விண்மீன் கூட்டங்கள். அச்சுவினி தொடக்கம் இரேவதி வரை 27.
எந்த நாளில் எந்தக் கோள்? அதற்கு நேரே எந்த விண்மீன் கூட்டம்? இரவும் பகலுமாக. கணிப்பவர் கணியன். எந்தக் கோள் எந்த விண்மீன் கூட்டத்தில் இருந்தால் எந்த மனிதனுக்கு என்ன ஆகும்? கணிப்பவர் ஆருடர், சோதிடர்.
சனி - கோள், மகம் - விண்மீன் கூட்டத்துக்குள் நேரே நின்றால் கொடுமை, தீங்கு, கூடாது. சொல்பவர் சுந்தரமூர்த்தி நாயனார். 1300 ஆண்டுகளுக்கு முன்பு சொன்னார், "மகத்திற் புக்கதோர் சனி எனக்கு ஆனாய்..." 07ஆம் திருமுறை 54ஆம் பதிகம் 9ஆவது பாடல்.
1400 ஆண்டுகளுக்கு முன்பு. மங்கையர்க்கரசியார் அழைக்கிறார். திருமறைக் காட்டில் இருந்து திருஞானசம்பந்தர் மதுரைக்குப் புறப்படுகிறார். திருநாவுக்கரசர் தடுக்கிறார். "....உறு கோள் தானும் தீய.." என்கிறார்.
சிவபெருமான் என் உள்ளத்துள் எழுந்தருளி இருக்கிறார். எனவே "...ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பு இரண்டும் உடனே ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல..." என்கிறார் திருஞானசம்பந்தர். மதுரைக்குச் செல்கிறார்.
2200 ஆண்டுகளுக்கு முன்பு. பங்குனி மாதத்தின் முதல் பாதியில் ஒரு நாள் இரவு. விண்மீன் கேட்டை கிழக்கு வானில். புனர்பூசம் மேற்கு வானில். உத்தரம் உச்சி நடு வானில்.
புனர்பூசத்துக்கு முந்தைய திருவாதிரை. அதற்கு முந்தைய மிருகசீரிடம் மேற்கில் மறைந்து கொண்டிருக்கிறது. கிழக்கில் கேட்டைக்கு அடுத்த மூலம் எழுந்து கொண்டிருக்கிறது.
அந்த நேரத்தில் வானத்தில் நீண்ட எரிகோள் - வால் நட்சத்திரம். பூமியை நோக்கி வருகிறது.
இந்த இடத்தில் இந்த விண்மீன். இந்தக் கோள். இந்த நிலவு. இந்தப் பூமி. அந்த நேரத்தில் எரிகோள்.
வானியல் கணியன், ஆருடக் கணியன் ஆகிறார். கொடுமை, தீமை, கூடாதது நடக்கும் என்கிறார். 2200 ஆண்டுகளுடன் முன் நிகழ்ந்தது. கணித்தவர் கூடலூர் கிழார்.
அடுத்த ஏழாம் நாள் அரசன் இறப்பான் என்கிறார் கூடலூர் கிழார். அவர் சொன்னவாறே நோயுற்றிருந்த சேர நாட்டு அரசன் சேரமான் யானைகட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை, எரிகோள் இறங்கிய ஏழாம் நாள் இறந்தான்.
புறநானூறு, 229ஆம் பாடல்: 27 வரிகளில் யாத்தவர், கூடலூர் கிழார்.
ஆடுஇயல் அழல்குட்டத்து
ஆர்இருள் அரைஇரவில்
முடப்பனையத்து வேர்முதலாக்
கடைக்குளத்துக் கயம்காயப்,
பங்குனிஉயர் அழுவத்துத்
தலைநாள்மீன் நிலைதிரிய,
நிலைநாள்மீன் அதன்எதிர் ஏர்தரத்,
தொல்நாள்மீன் துறைபடியப்,
பாசிச் செல்லாது ஊசி முன்னாது
அளக்கர்த்திணை விளக்காகக்
கனைஎரி பரப்பக் கால்எதிர்பு பொங்கி
ஒருமீன் விழுந்தன்றால் விசும்பினானே
அதுகண்டு, யாமும், பிறரும் பல்வேறு இரவலர்
பறைஇசை அருவி நன்னாட்டுப் பொருநன்
நோயிலன் ஆயின் நன்று மற்று இல்லென
அழிந்த நெஞ்சம் மடியுளம் பரப்ப
அஞ்சினம் எழுநாள் வந்தன்று இன்றே;
மைந்துடை யானை கைவைத் துஉறங்கவும்
திண்பிணி முரசும் கண்கிழிந்து உருளவும்
காவல் வெண்குடை கால்பரிந்து உலறவும்
கால்இயல் கலிமாக் கதிஇன்றி வைகவும்,
மேலோர் உலகம் எய்தினன் ஆகலின்
ஒண்தொடி மகளிர்க்கு உறுதுணை ஆகித்
தன்துணை ஆயம் மறந்தனன் கொல்லோ
பகைவர்ப் பிணிக்கும் ஆற்றல் நசைவர்க்கு
அளந்துகொடை அறியா ஈகை
மணிவரை அன்ன மாஅ யோனே?
No comments:
Post a Comment