வாரம் ஒரு சிந்தனை 20
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
யாழ்ப்பாணத்தின் அறிவுக் குவை
யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்தவர் பேராசிரியர் முனைவர் பொ. பாலசுந்தரம்பிள்ளை. அக்காலத்தில் நான் சென்னை வாசி.
பொ. பாலசுந்தரம்பிள்ளை சென்னைக்கு வந்திருந்தார். அவருக்குச் சென்னை வாழ் அறிஞர் குழாமின் வரவேற்பை அமைத்தேன்.
மேனாள் அமைச்சர், மேனாள் ஆளுநர், எனக்கு நன்கு பழக்கமானவர், இந்தியப் பசுமைப் புரட்சியின் தந்தை எனப் போற்றும் பாரத இரத்தினர் சி. சுப்பிரமணியம் அவர்களைத் தலைமை தாங்க அழைத்தேன். தாம் போற்றும் தலைவர்களுள் சி. சுப்பிரமணியம் முதன்மையானவர் எனப் பாலசுந்தரம்பிள்ளை என்னிடம் கூறியிருந்ததால்.
பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் ஐவர், மேனாள் துணைவேந்தர்கள் தமிழக முதன்மை நாளிதழ்களின் ஆசிரியர்கள், மூத்த வழக்குரைஞர்கள், கல்வியாளர்கள் என 40 பேர் வரை வந்திருந்தனர். உயர்தர உணவு விடுதியில் விருந்தோம்பினேன்.
பாராட்டு நிகழ்வில் தினமலர் நாளிதழ் முதன்மை ஆசிரியர் இரா கிருஷ்ணமூர்த்தி பேசினார். துணைவேந்தர் வா. செ. குழந்தைசாமியும் பேசினார். இருவரும் ஒரே கருத்தை எடுத்துக் கூறினர்.
யாழ்ப்பாணம் அறிஞர்களின் வாழ்வு இடம். மக்கள் தொகை விகிதாசாரத்துக்கு மிஞ்சிய அளவில் யாழ்ப்பாணத்தில் அறிஞர்கள் உளர். கலைஞர், மருத்துவர், வழக்குரைஞர், தத்துவத்தார், ஞானிகள் என வல்லுநர்களின் வாழ்வு இடம் யாழ்ப்பாணம் என்றனர் இருவரும். ஏன் இந்த நிலை என்று வினாவையும் எழுப்பி இருந்தனர்.
நிகழ்ச்சியின் இறுதியில் நான் அனைவருக்கும் நன்றி கூறினேன். என் அருமை நண்பர்கள் கிருஷ்ணமூர்த்தியாருக்கும் குழந்தைசாமியாருக்கும் அவர்கள் வினாவுக்குச் சிறுகுறிப்பைப் பதிலுரையாக்கினேன்.
தமிழ் மொழி மருத்துவம் கலைகள் ஆருடம் தத்துவம் பொறியியல் எனப் பல்துறை அறிஞர்கள் எந்த சமூகத்திலும் ஒரு பகுதியினரே. அரசர்கள் ஆட்சிக் காலங்களில் மானியங்கள் நிவந்தங்கள் நன்கொடைகள் அறிஞர்களுக்குப் பொருளாதாரம்.
கிபி 1305 தொடக்கம் தமிழகத்தில் முகமதியப் படையெடுப்பு. தில்லி அலாவுதீன் கில்ஜியின் நம்பிக்கைக்குரிய மாலிக் கபூர் தலைமையில் முகமதியர் தமிழகத்தைக் கைப்பற்றினர்.
தமிழ்ச் சைவ அரசர், சிற்றரசர், நிலக்கிழார், என எவரும் வாழ முடியாமல் கொலையாகினர், தப்பி ஓடினர் ஓளிந்தனர். 60 ஆண்டுகள் தொடர்ந்து முகமதிய கொள்ளை கொலை கொடுமை நிறைந்த ஆட்சி. வீழ்ந்தன சைவத் தமிழ் ஆட்சிகள்.
புலவர்கள் ஞானிகள் தத்துவார்த்திகள் கலைஞர்கள் மருத்துவர்கள் ஆருடர்கள் யாவரும் மானியங்கள் இன்றி வாழ முடியவில்லை. ஏடுகளையும் கருவிகளையும் மருந்துகளையும் முகமதியர் அழிக்க முயன்றனர். முகமதியக் கொடுமையில் இருந்து தப்பிக்க வழி?
யாழ்ப்பாணத்தில் குலசேகரச் சிங்கை ஆரியச் சக்கரவர்த்தியின் ஆட்சி. அக்காலத்தில் ஒரே ஒரு சைவத் தமிழ் அரசு.
தேனை நோக்கிய வண்டுகள் ஆயினர். ஏடுகள் யாழ்ப்பாணம் வந்தன. இசைக் கருவிகள் யாழ்ப்பாணம் வந்தன. மருந்து வகைகள் யாழ்ப்பாணம் வந்தன. அவற்றோடு அறிஞர் புலவர் ஞானிகள் மருத்துவர் ஆருடர் இசைஞர் நடனர் கூத்தர் யாவரும் படகுகளில் தோணிகளில் வள்ளங்களில் ஏதிலிகளாகக் கடல் கடந்து யாழ்ப்பாணம் வந்தனர். குலசேகரச் சிங்கை ஆரியன் வரவேற்றான், குடியேற்றினான். மானியம் கொடுத்தான். சைவத் தமிழ்ப் புலமையை, கலைகளை, மருத்துவத்தை, ஆருடத்தைக் காப்பாற்றினான்.
கன்னடத்துக் குமார் கம்பணன் முகமதியரைத் தமிழகத்திலிருந்து விரட்டினான். தமிழகத்தில் சைவத் தமிழ் ஆட்சி மீண்டது. யாழ்ப்பாணம் வந்த புலமைக் குவையின் பலர் தமிழகம் திரும்பினர். சிலர் இங்கேயே தங்கினார். வந்தோரும் தங்கினோரும் விட்டுச் சென்ற மரபணுக்களே இன்றைய யாழ்ப்பாணப் புலமைக் குவைப் பெருக்கத் தளங்கள் என்றேன்.
துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் பொ. பாலசுந்தரம்பிள்ளை அத்தகைய எச்சங்களுள் ஒருவர் என்றேன்.
No comments:
Post a Comment