வாரம் ஒரு சிந்தனை 14
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
தமிழின் ழகரச் சிறப்பு
I love you யப்பானிய மொழியில் I rove you. ஏனெனில் லகரம் யப்பானிய மொழியில் இல்லை.
கொரிய மொழியிலும் லகரம் வரி வடிவம் இல்லை. எனினும் சொல்லுக்கு இடையிலும் ஈற்றிலும் லகரம் உச்சரிப்பாக வரும். காட்டு Seoul.
வட அமெரிக்கப் பழங்குடியினரின் மொழி செரோக்கி (Cherokee)யில் 'ல'கரம் இல்லை.
தென் அமெரிக்கா காடுகளின் பழங்குடி மக்களின் பிதாகா (Pirahã) மொழியில் லகரம் இல்லை.
ஆத்திரேலியா முதற் குடி மக்களின் மொழியில் லகரம், ளகரம், ழகரம் உள. பார்க்க Jonathan Harrington (2014), Sachithananthan K. (2019). தமிழ்நாட்டில் இருந்து புலம் பெயர்ந்தவர்கள் (Spencer Wells).
ஆங்கிலத்தில் லகரம் L, l ஒரே ஒரு வரி வடிவம்.
சிங்களத்தில் பல்லோடு நாக்கு ල லகரம். நடு அண்ணத்தோடு நாக்கு ළ ளகரம். சிங்களத்தில் ழகரம் இல்லை.
மலையாளத்தில் மூன்றும் ல > ല, ள > ള, ழ > ഴ,
உள.
தெலுங்கிலும் கன்னடத்திலும் ல > ల, ள > ళ,
லகரம், ளகரம் உள. ழகரம் இப்பொழுது இல்லை. பத்தாம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் தெலுங்கில் ழகரம் இருந்தது. கவிராஜ மார்க்கம் கன்னடத்தில் பழைய நூல். அதில் ழகரம் பயன்படுத்தினர். இப்பொழுது இரண்டு மொழிகளிலும் ழகரம் இல்லை.
வடமொழியில் (தேவநாகரி) ல > ल. இருக்குவேத உச்சரிப்புகளில் மட்டும் ள > ळ ஒலி. தமிழின் சிறப்பு ஒலி ழகரம் வடமொழியில் முற்றிலும் இல்லை. எனவே இந்தி மொழியிலும் ளகரம் இல்லை, ழகரம் இல்லை.
மேல்வாய்ப் பல். அருகே அண்ணம். நாக்கைப் பல்லோடு அண்ணத்தில் அழுத்துக. லகரம் பிறக்கும். 2800 ஆண்டுகளுக்கு முன் சொன்னவர் தொல்காப்பியர்.
"அண்பல் முதலடியைத் நாவினோரம்
ஒற்றிப் பரிய லகாரம் பிறக்கும்" (தொல். எழுத்து. பிறப்பியல்: 21)
நாக்கு நுனியால் நடு அண்ணத்தைத் தடவுக. 'ளகரம்' பிறக்கும். நாக்கை உள்ளே வளைக்க. அண்ணத்தை வருடுக. 'ழகரம்' பிறக்கும். 2800 ஆண்டுகளுக்கு முன் சொன்னவர் தொல்காப்பியர்.
"அண்பல் முதலும் அண்ணமும் நண்ணி
நாவிளிம்பு வீங்கித் தடவக் காறும்
ளகார ழகாரமாயிரண்டும் பிறக்கும்" (தொல். எழுத்து. பிறப்பியல்: 20).
ழகரத் தமிழ் மீது காதல். அடங்காத காதல். எனவே நான் தமிழ் விரகன். 22 இடங்களில் ழகரத்தைச் சொற்களாக்கி எழுதிய தமிழ் விரகன். 1615 ஆண்டுகளுக்கு முன் எழுதிய பாடல். திருஞானசம்பந்தர் எழுதிய பாடல்.
இச்சைகளுக்கு ஆளாகாதே. அறத்தொடு வாழ். சிவன் எழுதும் ழகரத் தமிழ். 22 ழகரம் வரச் சொல்கிறேன். சிவனே உன்னைக் காக்கும் தலைவன்.
பந்துவராளி இராகம். சாதாரிப் பண்.
ஒழுகலரி தழிகலியி லுழியுலகு
பழிபெருகு வழியை நினையா
முழுதுடலி லெழுமயிர்க டழுவுமுனி
குழுவினொடு கெழுவு சிவனைத்
தொழுதுலகி லிழுகுமல மழியும்
வகை கழுவுமுரை கழுமலநகர்ப்
பழுதிலிறை யெழுதுமொழி தமிழ்விரகன் வழிமொழி கண்மொழி தகையவே.
(திருமுறை 03067012)
No comments:
Post a Comment