Friday, October 16, 2026

வாரம் ஒரு சிந்தனை 10 மரங்களை வெட்டலாமா?

 வாரம் ஒரு சிந்தனை 


மரங்களை வெட்டலாமா?

அரச மரம் சாட்சி. திருமண உறவுக்கு சாட்சி. அரசமரம் இல்லாத் திருமணங்கள் தமிழர் வாழ்வில் இல்லை.


அரச மரமோ, ஞானம் பெற நிழல் மரம். கௌதமர் புத்தரான நிழல் மரம். அரசு மரம் அன்று, புத்தரின் சின்னம். புனிதம். 


பின் வளவு. வேப்ப மரம். நிழலில் இருப்பர். மாடுகள் கட்டுவர். கிளைகளை வெட்டார். அயலில் உள்ள பெண்கள் அனைவரும் ஆண்டுக்கு ஒரு முறை கூடுவர். மரத்தைக் கழுவி, நீறு சார்த்தி, சந்தனம் குங்குமம் இடுவர். பொங்கல் படைப்பர். வேப்ப மரத்தில் இறைவன்.


"....நீ ஒத்துக் கொள்ளாதே. இங்கு வேண்டாம். அங்குச் செல். மகிழ மரத்தடிக்கு வரச்சொல். மகிழ மரத்தைச் சாட்சியாக்கி அவரைக் கைப்பிடி..." சிவபெருமான் சொல்கிறார் சங்கிலியாரிடம் சொல்கிறார்.


"...அதற்குநீ யிசையாதே

கொங்கலர்பூ மகிழின்கீழ்க்

கொள்கவென..." பெரியபுராணம், 29 - 251


திருவொற்றியூரில் சங்கிலியார் சுந்தரரைக் கைப்பிடிக்கச் சாட்சியாக மகிழ மரம். சிவபெருமானே குறித்த மரம்.


கடற்கரை ஓரம் அவளின் ஊர். எந்நேரமும் அலையின் சத்தம். தலை வருடும் கடல் காற்று. வயதில் வரும் காதல் அவளுக்கும் வந்தது. காதலனோடு ஓடி ஆடி மகிழ்கிறாள். 


ஓடி வந்த களைப்புத் தீர ஒரு புன்னை மரத்தின் அடியில் இருவரும். இருவர் முகத்திலும் கரை புரண்டு ஓடும் மகிழ்ச்சி.


மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கும் அவன், அவனுக்கு அவளை முத்தமிட... அவளுக்கு அவனை அணைத்திட.....  நாணம் தடுக்கிறது.


என் தங்கை. நான் பார்த்து வளர்ந்தவள். அவளுக்கு அருகே நானும் நீயுமா? முடியவே முடியாது. வேறு மரம் பார்ப்போம் வேறு நிழல் பார்ப்போம்.


புன்னைக் கொட்டைகளை வைத்து கடற்கரை மணற் பரப்பில் தோழிகளுடன் பல்லாங்குழி ஆடினேன். ஒரு கொட்டை மணலுள் புதைந்தது. மழை பெய்ய,  ஆடியோர் கலைந்தோம். புன்னைக் கொட்டை விதையாகி முளைத்தது. அப்பொழுது எனக்கு வயது நான்கு.


புன்னைச் செடிக்கு பால் ஊற்றினேன், நெய் ஊற்றினேன், நீரூற்றினேன், இனிது வளர்த்தேன். அவள் உனக்குத் தங்கை என என் தாய் என்னிடம் சொன்னாள். தங்கையாகவே வளர்த்தேன். 


தங்கைக்கு முன்பு நீயும் நானுமா? தலைவனிடம் கேட்கிறாள் நாணும் தலைவி. 


மரம் உறவுக்குச் சாட்சி. மரம் ஞானிக்கு நிழல். மரம் பொங்கிப் படைக்கும் இறைவன். சுந்தரரின் சூள் உரைத்தலுக்கு இறைவன் தேர்ந்தெடுத்த சாட்சி. காதலிக்க நாணும் காதலிக்குத் தங்கை. 


அரசு, வேம்பு, மகிழம், புன்னை, இவை மட்டுமல்ல அனைத்து மரங்களுமே ஒவ்வொரு மனிதருக்கும் உயிர் சார் உறவு. உணர்வு சார் உறவு. உடலுடன் பினைந்த உறவு.


விளையாடு ஆயமொடு 

வெண் மணல் அழுத்தி,

மறந்தனம் துறந்த 

காழ் முளை அகைய,

'நெய் பெய் தீம் பால் 

பெய்து இனிது வளர்ப்ப;

நும்மினும் சிறந்தது; 

நுவ்வை ஆகும்' என்று,

அன்னை கூறினள், 

புன்னையது நலனே


அம்ம! நாணுதும், 

நும்மொடு நகையே;

விருந்தின் பாணர் 

விளர் இசை கடுப்ப,

வலம்புரி வான் கோடு 

நரலும் இலங்கு நீர்த்

துறை கெழு கொண்க!- 

நீ நல்கின்,

இறைபடு நீழல் 

பிறவுமார் உளவே.

2200 ஆண்டுகளுக்கு முன், நற்றிணை 172ஆம் பாடலாகப் (பெயர் தெரியாத தமிழர் இயற்றிய) பத்து வரிகள்.

No comments: