Friday, October 16, 2026

வாரம் ஒரு சிந்தனை 11 விருந்தும் பகிர்ந்தலும்

 வாரம் ஒரு சிந்தனை 11


விருந்தும் பகிர்ந்தலும் 


கொடை ஆணோடு பிறந்த இயல்பு. 

தடை பெண்ணோடு பிறந்த இயல்பு.


விருந்தைப் பகிர விழைபவன் ஆண்.

விந்தைப் பகிர விளைபவன் ஆண். 

விருந்தினர் வருகையைத தடுப்பவள் பெண்.

விந்தைப் பகிர்வதைத் தடுப்பவள் பெண். 


மனித நாகரீக வரலாறு. பண்பாட்டை செதுக்கிக் கூர்மையாக்கிய வரலாறு. இந்த வரலாற்றுக் காலமே, 2500 ஆண்டுகள் முந்தைய தொடக்கம் 2000 ஆண்டுகள் முந்தைய காலம் வரை ஏறுத்தாழ 500 ஆண்டுகள் நீதி இலக்கியக் காலம்.


மனிதனைப் பண்படுத்தி, சமூகமாக, குமுகாயமாக வாழ்வதற்குரிய நீதிகளை, அறங்களை எடுத்தோதோம்பிய காலம்.


புத்தர், மகாவீரர், கன்பூசியசு, திருவள்ளுவர், அரிஸ்டோட்டில், பிளாட்டோ, சோக்கரட்டிசர், மோசசர், இயேசு பிரான் எனப் பெயர்களைக் கூறினாலும் அவர்களை ஒத்த, பெயர் தெரியாத, ஆயிரக்கணக்கானோர் வாழ்ந்த கால இடைவெளி. மனிதனைப் பண்படுத்த முயன்ற கால இடைவெளி.


ஆண்களுக்குச் சொன்னார்கள் உலகத்தாருக்கு விருந்தோம்பு, பசியைப்போக்கு. ஒருவன் ஒருத்தியாக அன்றில் பறவைகள் போல் விந்தைப் பகிர். நீதி இலக்கியம்.


ஆணுக்கு நல்வினை விருந்தோம்பல். எனவே இல்வாழ்வானுக்கே விருந்தோம்பும் அறம். பார்த்திருப்பான் என்கிறார் வள்ளுவர். 


செல்விருந்து ஓம்பி 

வருவிருந்து பார்த்திருப்பான் 

நல்விருந்து வானத் தவர்க்கு. (குறள் 86)


விருந்து ஓம்பாத மடமை பெண்களிடம் உண்டு.  வள்ளுவர் சொல்கிறார்.


உடைமையுள் இன்மை விருந்தோம்பல் 

ஓம்பா மடமை மடவார்கண் உண்டு. (குறள் 89)


பெண்களுக்கு அறம் சொன்னார்கள். விருந்தோம்பலில் ஆண்களுக்குத் துணையாகுங்கள். விந்தை ஆண்கள் பகிர்வதற்கு ஒப்பாதீர்கள். நீதி இலக்கியம்.


நீதி இலக்கியங்கள் பெருகினாலும் மனிதன் மாறவில்லை. அந்த நாள் முதல் இந்த நாள் வரை மனிதன் மாறவில்லை.


அவன் செல்வந்தன். வீடு திரும்புகிறான். வழியில் ஒரு கிழவி. கையது கொண்டு மெய்யது தழீஇ... தடுக்கில் படுத்திருக்கிறாள். பசி மயக்கம். கண்களோ உறக்கம். 


செல்வந்தனுக்குப் பொறுக்கவில்லை பசிப்பிணி தீர்க்கும் அறம் அவனுக்கு இளமையிலே ஊட்டம். கைத் தாங்கலாக மூதாட்டியை அழைத்துக் கொண்டு தன் வீட்டுக்கு வருகிறான். திண்ணையிலே மூதாட்டி.


மாளிகை வீடு. மாடங்கள் கடக்கிறான். மனைவியைக் காண்கிறான். களைப்போடு வந்தவன் என்றாலும் அவளிடம் அன்போடு செல்கிறான். 


அவள் முகத்திலே தூசு. தலை முடியிலே ஈர்கள், பேன்கள். மூதாட்டியின் பசியைப் போக்க மனைவியின் துணையை நாடுகிறான், நீதி இலக்கிய அறம் படித்து, ஒருவனுக்கு ஒருத்தியாக வாழ்கின்ற செல்வந்தன்.


அவளின் முகத்தை வருடுகிறான். தூசிகளைத் தட்டுறான். தாடையிலே சொட்டுகிறான். தன்னோடு அணைக்கிறான். அவள் தலையைச் சொறிகிறாள். இவனோ மயிர் மயிராக வகிடுகிறான். ஈர்களை வாருகிறான். பேன்களைச் சொடுக்குகிறான்.


களைத்து வந்தவன். அணைத்து மகிழ்கிறான். மனைவிக்கு மகிழ்ச்சி. அவளும் அணைக்கிறாள். முத்தம் கொடுக்கிறாள்.


சாப்பிட அழைக்கிறாள் மனைவி. மூதாட்டி பசியோடு திண்ணையிலே என்கிறான் கணவன். 


விருந்து என்ற சொல் அவன் வாயில் வர முன்பே, கண்ணிமைக்கும் நேரத்தில் மனைவி மனம் மாறுகிறாள். 


அன்புப் பாடல் பாடியவள், ஒப்பாரிப் பாடல் பாடுகிறாள். அழகு நடனம் ஆடியவள், ஆர்ப்பாட்ட நடனம் ஆடுகிறாள். பெண்களின் கைகளில் கிடைப்பன, சப்பாத்தி உருட்டுக் கட்டை, அகப்பைத் தடி, சுளகு, விளக்குமாறு.


பந்தியில் இருந்த செல்வந்தன் பதறி எழுகிறான். பழைய சுளகின் விளிம்பு அவனைப் பதம் பார்த்தது. மாடங்களைக் கடந்து ஓடினான். புறத திண்ணைக்கு ஓடினான். மூதாட்டியைக் காணவில்லை மனைவியின் வெறுப்புத் தணியும் வரை, ஓடினான், ஓடினான், வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினான்.


நினைத்தபோது வருவதன்று கவிதை. 

நெஞ்சம் கனத்த போது வருவதே கவிதை. 

சொன்னவர் இக்காலத்து வலம்புரி ஜான். 


அரற்றிப் பாடியவளைக் கேட்டாள். நஞ்செறிந்து நடனம் ஆடியவளை எட்டிப் பார்த்தாள். முறம் எடுத்து ஓங்கியதைக் கண் எரியக் கண்டாள் செல்வந்தன் பந்தியை விட்டுப் பதறி எழுவதற்கு முன்பே மூதாட்டி கிளம்பினாள். பாம்பின் கால் பாம்பறியும். பெண்ணின் நெஞ்சம் பெண்ணுக்குத் தெரியும்.


மூதாட்டி ஔவையார். கவிஞரான நெஞ்சம் கனத்தது. வெண்பா பாடினார். தனிப்பாடல் திரட்டில் இந்த வெண்பா.


இருந்து... முகம்திருத்தி

ஈரோடு... பேன்வாங்கி 

விருந்து வந்ததென 

விளம்ப -- ஆடினாள் 

பாடினாள் ஆடிப் 

பழ முறத்தால்

சாடினாள்  ஓடோடத் தான்.

No comments: