Friday, October 16, 2026

வாரம் ஒரு சிந்தனை 3 மலடிகளின் பெருக்கம்

 வாரம் ஒரு சிந்தனை 3


மறவன்புலவு க. சச்சிதானந்தன்

மலடிகளின் பெருக்கம்


பெட்டகம் பெடை பெண் பெதும்பை பெந்தை பெய் பெயர் பெயல் பெரிய பெருகு 

பெ... என்ற எழுத்தில் தொடங்கும் தமிழ்ச் சொற்கள்.


அளவைக் கூட்டுதல். எண்ணிக்கையைக் கூட்டுதல். பெ... என்ற எழுத்தில் தொடங்கும் சொற்களின் பொருள்.


பெண் என்றால் பெருக்குபவள். 

இனத்தைப் பெருக்குபவள். 

இயற்கையின் படைப்பு.

பெண்ணின் தலைமைக் கடன் மக்கட் பேறு.


பொன்முடியார் தமிழில் சொல்கிறார். 

2000 ஆண்டுகளுக்கு முன்பு சொல்கிறார். 

புறநானூறு 312ஆவது பாடலில் சொல்கிறார். 

நான் பிறந்ததே இனப்பெருக்கத்துக்காக 

என் தலைமைக் கடன் இனப்பெருக்கம்.

"ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே.."


மக்களைப் பெற்றவளே மகாராணி. 

வள்ளுவர் சொல்கிறார் "..நன்கலம் நன் மக்கட் பேறு";.


மகளிர் பாடசாலைகளில் 

மகளிர் கல்லூரிகளில் 

சொல்லிக் கொடுத்துப் புகட்ட வேண்டிய 

மாணவிகளின் மனத்தில் நிறுத்த வேண்டிய 

முதல் பாடம் 

பெண்ணின் முதற்கடன் மக்கட் பேறு.


இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு மகவு. 

ஒரு பெண்ணின் வாழ்நாளில் ஆகக் குறைந்தது 20 மகப்பேறுகள். 

40 ஆண்டு காலம்.

27 மகப் பேறுகள்.

69 குழந்தைகள்.

பெற்றவர் உருசியப் பெண்.

"ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே..." என 300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து காட்டியவர்.


உலகத் தாய்மார்களுக்கு அவரின் சாதனை சவால். 

ஈழத் தமிழ்ப் பெண்களுக்கும் அவரின் சாதனை சவாலே.


வவுனியா நகரம். பொதுவாழ்வில் புகழ்பெற்ற முகமதியர். '..தமிழ்ப் பெண்கள் நால்வரை மணம் முடித்தேன். 20 குழந்தைகளைப் பெற்றேன்...' பெருமையோடு சொல்கிறார். தமிழரான ஆண்களுக்கு அவருடைய கூற்றே சவால்.


எனினும் 2023இல் உலக மகப்பேற்று அளவு. 

ஒரு பெண் வாழ்நாளில் சராசரி 2.3 குழந்தைகளுக்குத் தாயாகிறாள்.


20 குழந்தைகளுக்கு தாயாகத் கூடியவள்.

2.3 குழந்தைகளையே பெற்றெடுக்கிறாள்.


இலங்கைத் தாய்மார் 

2016இல் தம் வாழ்நாளில் 2.16 மக்களைப் பெற்றெடுத்தனர்.

2025இல் தம் வாழ்நாளில் 1.3 குழந்தைகளையே பெற்றெடுத்தனர்.


மகளிர் பாடசாலைகள் பெண்களை மதிப்பெண் பெருக்கத்துக்கே தயாரிக்கின்றன. 

மக்கட் பேறுப் பெருக்கத்துக்கு தயாராக்குவதில்லை.


இயற்கைக்கு எதிராகப் பெண் கல்வி.

இயற்கைக்கு எதிராகப் பெண்கள் வேலை வாய்ப்பு. 

இயற்கைக்கு எதிராகக் கருத்தடை உத்திகள்.

இயற்கைக்கு எதிராக இலங்கைப் பெண்கள் உருவாகி வருகின்றனர்.


தாயாகும் வேகத்தை வெறுக்கின்றனர். திருமணத்தை வெறுக்கின்றனர் .

ஆண்களை அருவருப்போடு பார்க்கின்றனர்.

ஈழத் தமிழர் இடையே திருமண எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து கொண்டே வருகிறது. 

ஈழத் தமிழரை அழிக்க எதிரிகள் வர வேண்டாம். 

ஈழத் தமிழ்ப் பெண்களே போதும்.


திருமணத்தைக் கையாளும் உத்திகளை மகளிர் பாடசாலைகள் சொல்லிக் கொடுப்பதில்லை. ஆண்களைக் கையாளும் அளவை முறைகளை மகளிர் பாடசாலைகள் சொல்லிக் கொடுப்பதில்லை. தாய்மைப் பேற்றைப் பெருமையாக்க மகளிர் பாடசாலைகள் சொல்லிக் கொடுப்பதில்லை.


பொருளைப் பெருக்கலாம் 

வசதிகளைப் பெருக்கலாம் 

வாழ்வியல் பண்புகளைப் பெருக்கலாம் 

புகழைப் பெருக்கலாம் 

நுகர்ச்சியைப் பெருக்கலாம்


இவை பேறுகள் 

பெறற்கரிய பேறுகள் அல்ல.

மக்கட் பேறே பெறற்கரிய பேறு என்கிறார் திருவள்ளுவர்.


பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த

மக்கட்பே றல்ல பிற. (குறள் 61)

No comments: