Friday, October 16, 2026

வாரம் ஒரு சிந்தனை 2 கூடா ஒழுக்கம்

 வாரம் ஒரு சிந்தனை 2

கூடா ஒழுக்கம்

மறவன்புலவு க. சச்சிதானந்தன்


வேகம் வேட்கை வேட்டி வேட்டு வேடம் வேதம் வேது வேர் வேலன் வேலி வேலை இவை வே..யில் தொடங்கும் தமிழ்ச் சொற்கள். 


வே என்றால் மறை. வே..யில் தொடங்கும் சொற்கள் மறைப்பதைக் குறிப்பன.


வேடம், தவ வேடம், துறவு வேடம், அருள் வேடம் என உயிர் மேம்பாடு சார்ந்தோரின் போர்வை, மறைப்பு, உடை.


கயிலையில் இருக்கிறேன் வருக. சிவன் உடை புனைந்தவர் அழைக்கிறார். நீங்காத மகிழ்ச்சி பெறுக. நித்தியானந்தம் பெறுக. அவரோடு இருப்பவை பூக்கள். தெய்வப் பூக்கள். இரஞ்சித மலர்கள். 


வழக்குகள் சோதனைகள் குற்றச்சாட்டுகள் குறிவைப்புகள் யாவிலிருந்தும் விடுபடக் கயிலையில் இருக்கிறாராம். மலர்களோடு இருக்கிறாராம். 


அருள்நங்கை யேசுமே கேரளத்தவர். 'அருள் நங்கையின் தன் வரலாறு' என்ற 180 பக்க நூலை எழுதினார். 2012இல் பென்குயின் பதிப்பகம் வழி வெளியிட்டார். தவ வேடங்கள் தீய வேடங்களான கதை சொல்கிறார்.


உலூசி களப்புரா கேரளத்து அருள் நங்கை. 'ஆண்டவனின் பெயரில்' அவர் எழுதிய 208 பக்க நூலை 2019இல் வெளியிட்டார். புறத்தே அருள் போர்வை. அகத்தே இருள் நோக்கம். அருள் நங்கை எழுதுகிறார். 


வன்னி மல்லாவி. தென்னிந்தியத் திருச்சபைப் போதகர். திருமணமானவர். மகளின் வயதுள்ள பெண்ணைக் கெடுக்கிறார். காவலர் தலையிட்டு நீதிமன்றத்தின் முன் நிறுத்துகின்றனர். அருள் வேடம் பகலில். கண்ணில்லாக் காம இருள் கூட இரவில்.


யாழ்ப்பாணத்தில் தூய சம்பத்தரிசியார் கல்லூரிக் கிணற்றில் மறைந்த மாணவன். ஊர்காவற்துறைக் கன்னியர் மடக் கிணற்றுள் மறைந்த மாணவி. கொலைக் குற்றங்களிலிருந்து புறனுடையரைக் காத்தோர். இவர்கள் யாவரும் அருள் போர்வைக்குள் மறைந்திருக்கும் வேடதாரிகள். 


புனைவு எனில் கற்பனை வேடம். உண்மை அற்றது புனைவு. புனை துகில் என்கிறார் திருஞானசம்பந்தர். துறவு என்ற பொய் வேடம். புத்த மதத்தவரைச் சாடுகிறார் திருஞானசம்பந்தர். 


எட்டு மடங்களுக்குத் தலைவராகலாம். கெட்ட மனத்தைப் புத்தத் துறவு எனலாமா? புனை வேடதாரி அல்லவா? 2026இல் கேட்கின்றனர் திசைராணி குணசேகரா, சஜீவனி அபயக்கோன்.


பற்று அற்றோம் என்று கூறுவரான படிற்று ஒழுக்கத்தார். நீ ஏன் பிறந்தாய்? நீ ஏன் பிறந்தாய்? என மனச்சாட்சி துன்புறுத்த வாழ்பவர். 


பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று

ஏதம் பலவுந் தரும். 

(திருக்குறள், கூடா ஒழுக்கம் 5ஆவது குறள்)


உயிர் மேம்பாடு ஆன்ம ஈடேற்றம் போர்வைகளாகப் பிறர் பாராட்டுப் பெறப் பத்தி வேடம் பூண்பவர். தமக்குள் பத்திச் சிந்தனை சிறிதும் இல்லாதவர்.


அருட்போர்வை அணிந்து பத்தியை விற்பவர். அதற்காகவே பகலைக் கழிப்பவர். அருட்போர்வையை நீக்கி இரவில் தம் ஆசைகளுக்கு இடம் கொடுப்பவர். மன நோயாளிகள். பித்தர்.


12 திருமுறைகள். 10ஆம் திருமுறை திருமந்திரம். திருமூலர் அருளிய திருமந்திரம். ஒன்பது தந்திரங்களில் 7ஆம் தந்திரம் 36ஆவது தலைப்பு கூடா ஒழுக்கம் 3ஆவது பாடல்.


பத்திவிற் றுண்டு பகலைக் கழிவிடும்

மத்தகர்க் கன்றோ மறுபிறப் புள்ளது

வித்துக்குற் றுண்டு விளைபுலம் பாழ்செய்யும்

பித்தர்கட் கென்றும் பிறப்பில்லை தானே.

No comments: