Friday, October 16, 2026

வாரம் ஒரு சிந்தனை 16 தனித்தமிழ் இயக்கம்

 வாரம் ஒரு சிந்தனை 16

மறவன்புலவு க. சச்சிதானந்தன் 


தனித்தமிழ் இயக்கம்


தர்மம் என எழுதாதீர். தருமம் என்பதே பொருத்தம். இலக்ஷ்மி அன்று இலக்குமி. ஏனைய மொழிச் சொற்களை தமிழுக்குக் கொணர்கையில் தமிழின் ஒலி அமைப்புக்குள், 247 வரிவடிவங்களுக்குள் அடக்கி எழுதுங்கள்.


வெள்ளம் வராமல் வாய்க்கால் அமைத்து வரம்புக்குள் நீரை விட்டு வளம் பெருக்குவர் வேளாளர்.


பிறமொழிச் சொற்கள் வெள்ளமானால் தமிழ் தமிழாக நிலைக்காது. வாய்க்கால் அமைக்க. வரம்பு கட்டுக. 2800 ஆண்டுகளுக்கு முன் தொல்காப்பியர் சொன்னார்.


எழுத்ததிகாரம் 102ஆவது நூற்பா. 


...வடவெழுத்து இயலான் வரும் எழுத்துக்கடனே...


தமிழ் ஒலியாக்குக. தமிழ் வரி வடிவமாக்குக. எந்த மொழிச் சொல்லாயினும் தமிழாக்குக என்கிறார் தொல்காப்பியர்.


திரி சொல் என்கிறார். திசைச் சொல் என்கிறார். வடசொல் என்கிறார். இம்மூன்றுள் வடசொல்லைத் தமிழாக்கச் சொல்லதிகாரத்தில் இரண்டு நூற்பாக்கள் 401, 402 தருகிறார்.


​....வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே....

​....சிதைந்தன வரினும் இயைந்தன வரையார்... 


இவ் வரம்புகள் தமிழைத் தமிழாக வைத்திருந்தன. சங்க காலம், சங்கம் மருவிய காலம் வரை இறுக்கமான வரம்புகள். பல்லவர் காலத்தில் இந்த வரம்புகளை உடைக்க முயன்றனர். பிற ஒலிகளுக்கான பிராகிருத, பாலி, வடமொழி வரி வடிவங்களைத் தமிழில் புகுத்த முயன்றனர். 


தமிழைக் காக்க மீண்டும் அணை கட்டியவன் காஞ்சிபுரத்தில் 1650 ஆண்டுகளுக்கு முன் மகேந்திர பல்லவன். திருநாவுக்கரசனின் அருள் வழிகாட்டலை ஏற்றுச் சைவ சமயத்துக்கு மீண்டவன். 


காஞ்சிபுரத்தில் சைவ புத்த சமண ஆசீவக அறிஞர்கள் கூடி 49 எழுத்துக்களைக் கொண்ட (பேச்சு மொழியாக அன்று) வரிவடிவ மொழியாகக் கிறுக்குதல் எனக் கிரந்தத்தை உருவாக்கினார்.


16 உயிர்கள் 33 மெய்கள் ஆக 49 வரி வடிவங்கள் கொண்ட கிரந்தத்தில் தமிழ் வரிவடிவங்களே பல. தேவநாகரிக்கு பதிலாகப் பாலி பிராகிருதம் வடமொழி ஆகியவற்றை தமிழில் எழுத இவை.


எனினும் பல்லவ, சோழர் காலங்களில் பிற மொழிகளின் கடுமையான உள்ளீடுகள் தொடர்ந்தன. இலக்கியங்களை வடிகட்டத் தமிழ் மட்டுமாயின மிதந்தன. கல்வெட்டுகளோ செப்பேடுகளோ கலப்பிலும் கலப்பாயின.


நாகப்பட்டினத்தின் புத்த சமய அறிஞர் மீண்டும் தமிழைக் காக்க அணை கட்டினார். 950 ஆண்டுகளுக்கு முன்பு, இராஜராஜ சோழனின் பெயரன் வீரராஜேந்திரன்சோழன் காலத்தில் புத்த மித்திரனார் அரசவைப் புலவர். 


வீர சோழியம் இலக்கண நூலைப் புத்த மித்திரனார் படைத்தார். அயல் மொழிச் சொற்களைத் தமிழுக்குள் கொண்டுவர தற்சமம் தற்பவம் என இரு வழிகளை எழுதி வைத்தார். 


....வடமொழி யுள்ளுள வச்சொலு மம்மொழி விகாரமுமாய்க் கடவ தற்சமமுந் தற்பவமு மெனக் கற்றவரே...


....வருக்க முதலெழுத் தைந்தா மினத்தோடு வந்தவற்றுள்

இருக்கின நாலெழுத் துக்கொரு காதி யியற்றுவரால்.....


(வீரசோழியம், சந்திப்படலம், காரிகை நூற்பா 35 36).


எனினும் கொடுமை தொடர்ந்தது. பல்லவ நாடு தொண்டை மண்டலமாகியது. 820 ஆண்டுகளுக்கு முன் தொண்டை மண்டலத்தின் வடக்கெல்லைக் குறுநில மன்னன் சீயகங்கன். 


சமணரான தன் அரசவைப் புலவர் பவணந்தியாரைக் கேட்கிறான். தமிழைக் காக்க வேண்டும், விதிகள் எழுதித்தாருங்கள், என. பவணந்தியார் எழுதிய இலக்கண நூலே நன்னூல். 


...பொதுவெழுத் தானுஞ் சிறப்பெழுத் தானுமீர்

இயல்பின வடசொல் ரங்கடப் பவ்வே....


.....இடையினான்கு மீற்றிலிரண்டு மல்லா

அச்சை வருக்க முதலீ றியவ்வாதி

நான்மை ளவ்வாகு மையிம்பொது வெழுத்தொழிந்த

நாலேழுந் திரியும்....

(நன்னூல் - பதவியல்: 146, 147)


வடமொழி ஒலிகளைத் தமிழில் எழுதும்போது, அவை எவ்வாறு மாறும் எனப் பவணந்தியாரின் நீண்ட பட்டியலே இவ்விரு நூற்பாக்களும். 


600 ஆண்டுகளுக்கு முன்பு வரை எழுந்த தமிழ்ப் படைப்பு இலக்கியத்தில் 247 எழுத்துக்களுக்கு வெளியே அமைந்த இலக்கியங்கள் இன்று கிடைப்பதில்லை. அக்காலத்தில் பிரபு தேவராயன் என்ற நாயக்க மன்னன் ஆட்சி. 


முருகப்பெருமான் மீது அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் சார்ந்த பாடல்கள் 247 தமிழ் வரிவடிவங்களையும் கிரந்த வரி வடிவங்களான ஷ ஸ ஜ ஹ நான்கையும் அதன் கூட்டு எழுத்துக்களையும் கொண்டதாக எழுந்தன.


தொல்காப்பியர் புத்த மித்ரனார் பவணந்தியார் எனத் தொடர்ச்சியாக வாய்க்கால்கள் வரம்புகள் கட்டிய இலக்கண விதிகளை மீறிய தெலுங்கு நாயக்கர் காலம். பின்வந்த தென்மாக்கர் ஒல்லாந்தர் போர்த்துக்கேயர் பிரெஞ்சுக்காரர் ஆங்கிலேயர் என மேலை நாட்டார் கிறித்தவப் பரப்புரைக் காலம்.


150 ஆண்டுகளுக்கு முன்பு நாகப்பட்டினத்தில் பிறந்த சுவாமி வேதாசலம் தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கினார். மறைமலை அடிகள் ஆனார். சூரிய நாராயண சாஸ்திரிகள் பரிதிமாற் கலைஞர் ஆனார். கிளிநொச்சியில் 50 ஆண்டுகளுக்கு முன் தனித்தமிழ் இயக்கத்தை முன்னின்று நடத்தியவர் எழுதுமட்டுவாழ் தமிழேந்தி. பல்லாயிரம் தனித் தமிழ்ப் பெயர்களை தொகுத்து நூலாக்கியவர். அவர் வழிவந்தவரே இன்று அங்கு வாழும் இறை பிள்ளை.


பிற மொழி ஒலியன்களையும் தமிழ் ஒலியன்களையும் ஒப்பு நோக்கியோர் இக்காலப் பல்கலைக்கழக மொழியியல் பேராசிரியர்கள்.


அவர்களுள் பன்னிரு திருமுறை ஒலிபெயர்ப்பு என்ற நூலில், 100 தமிழ் ஒலியன்களை அடையாளம் கண்டவர், திருவையாறு பிறந்த அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் பேராசிரியர் முனைவர் புனல் க. முருகையன். 


உலகின் அனைத்து மொழிகளின் ஒவ்வொரு ஒலியையும் அடையாளம் கண்டு அதற்கான வரி வடிவத்தையும் ஒலி வடிவத்தையும் அச்சில் தந்தோர், இணையத்தில் தந்தோர், International Phonetic Alphabet ஞால நெடுங்கணக்கு அமைப்பினர். 


தாம் கண்ட 100 தமிழ் ஒலியன்களுக்கும் சமமான, ஐபிஏ தந்த உலக மொழி ஒலியன்களைக் கண்டறிந்தார். தமிழ் வரி வடிவங்களுக்கு சமமான சார்ந்த உலக மொழி வரி வடிவங்களைத் தேர்ந்தவர் பேராசிரியர் முனைவர் புனல் க முருகையன்.


உலகெங்கும் பல இலட்சம் எண்ணிக்கையில் தனித்தமிழ் ஆர்வலர்கள். இவர்களை ஒருங்கிணைக்க வழிநடத்த மறைமலை அடிகள் இல்லை. 


எனினும் தமிழகத்தில், செல்வந்தர், வேலூர் பல்கலைக்கழக வேந்தர் கோ. விசுவநாதன், புதுச்சேரியில் தமிழமல்லன், கோயம்புத்தூரில் தமிழப்பன் எனப் பலர் தனித்தமிழ்ப் பரப்புரையில் உளர்.

No comments: