வாரம் ஒரு சிந்தனை 18 சாதல்
மண்டை ஓட்டுக்குள் புழுக்கள். சொல்கிறார் மாணிக்கவாசகர். .....பொய்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையன்....
புழுக்களை அழகாக அடுக்கியது போன்ற புற வடிவமே மூளை. எனவே மாணிக்கவாசகரின் புழுத்தலை. அந்த மூளையின் நடுவில் பூத்தளம் (hypo-thalamus).
மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகள் வழி புலனாகும் செய்திகளை உள்வாங்குவது. உணர்ச்சியைத் தூண்டுவது. உணர்ச்சியை வெளிப்பாடாவதே பூத்தளம்.
பூத்தளம் தூண்டக் கண்ணிமையில் மேல் இமையுள் சுரப்பி (lacrimal gland) நீரைப் பெருக்கும். அழுகை அஃதே.
சாதல் துன்பம். சாதல் துயரம். சாதல் சோகம். சாதல் அழுகைக்குக் காரணம். சோகம் தாங்காததாலே அழுகை.
நன்றாக உடல் நலத்தோடு இருந்தார். சமையல் பொருள்களை மளிகைக் கடையில் வாங்கி வந்தார். அறுசுவை உண்டியை மனைவி சமைத்துக் கொடுக்க உண்டார். மனைவியோடு மகிழ்ந்து பேசினார். மந்தனம் கொண்டார்.
சற்று நேரத்தில், வலிக்கிறதே என்றார். எங்கே என்றார் மனைவி. நெஞ்சறையின் இடப் பக்கத்திலே வலி என்றார்.
கைத் தாங்கலாக மனைவி அழைத்துச் சென்றார். படுக்கையிலே கிடத்தினார். படுத்தவர் உறங்கியது போல் கண் மூடினார். மூடிய கண்ணைத் திறக்கவே இல்லை. செத்துப் போனார்.
திருமூலர் சொல்லும் அழகான பாடல். திருமந்திரம் (10105006).
அடப்பண்ணி வைத்தார்
அடிசிலை உண்டார்
மடக்கொடி யாரொடு
மந்தணங் கொண்டார்
இடப்பக்க மேஇறை
நொந்ததிங் கென்றார்
கிடக்கப் படுத்தார்
கிடந்தொழிந் தாரே.
சாதலால் துன்புறாதே, அழாதே. அழுது புரண்டாலும் மாண்ட உயிர் மீளாது. நீயும் ஒரு நாள் சாகப் போகிறாய். ஏன் அழுகிறாய்?
கேட்பவர் ஔவையார். பாடல் - நல்வழி 10.
ஆண்டாண்டு தோறும்
அழுது புரண்டாலும்
மாண்டார் வருவாரோ
மாநிலத்தீர் – வேண்டா
நமக்கும் அதுவழியே
நாம்போம் அளவும்
எமக்கென் றிட்டுண்டு,
இரும்.
புழுத்தலை மூளையின் பூத்தளத்தை உந்துக. சுரப்பியை இயக்குக. அழுகையாய்ப் பொழிக. மன உளைச்சல் போகும். படிப்படியாக மனம் ஆறுதல் அடையும். ஒலிக்க அழுக. ஒப்பாரி வைக்க. உடலுக்கும் நல்லது. உள்ளத்துக்கும் நல்லது.
அழும் பொழுது செத்தவர், உற்றவர் அல்லர், சுற்றவர் அல்லர். உறவினர் அல்லர். அவர் பிணம். சூரைக் காட்டில் சுட்டெரிக்க வேண்டிய பிணம். ஆற்றிலோ குளத்திலோ கடலிலோ அன்றிக் குழாய் நீரிலோ நன்றாகத் தோய்ந்து குளித்து இறந்தவரின் நினைப்பை மறக்க வேண்டிய நிலை.
புழுத்தலை மூளைக்குள் பூத்தள உந்துதலால் நீரைச் சுரக்கும் கண்கள் வற்றும். நினைவும் வற்றும். திருமூலர் சொல்கிறார். திருமந்திரம் 10105003
ஊரெலாங் கூடி
ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப்
பிணமென்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக்
கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி
நினைப்பொழிந் தார்களே .
No comments:
Post a Comment