வாரம் ஒரு சிந்தனை 22
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
இலங்கையில் தமிழரே முதலில் புத்தராயினர்
தமிழ்நாட்டுக்கு தென் கிழக்கு நாடு. தமிழ்நாட்டுக்கு மிக அருகில் உள்ள நாடு, நாகநாடு. அங்கே மன்னர்கள் இருவர். உறவுக்காரர்,
இரத்தின மணிகளால் ஆன அரசிருக்கை. இருவரும் உரிமை கோரினர். எதிர் எதிர் நிலையில். கடுஞ் சினம் கொண்டனர். கண்கள் சிவந்தனர். மூச்சு எறிந்தனர். சேனையைத் திரட்டிப் போர் தொடங்குகின்ற நாள்.
செவியுற்ற புத்தர் நாக நாடு வந்தார். போரை நிறுத்தினார். இரத்தினமணி அரியணை தன்னது என்றார். அதில் அமர்ந்தார். போர் நின்றது. நாகநாட்டினர் மன்னரும் மக்களும் புத்த நெறியையைப் பின்பற்றத் தொடங்கினர்.
....கீழ் நில மருங்கின் நாக நாடு ஆளும்
இருவர் மன்னவர் ஒரு வழித் தோன்றி
எமது ஈது என்றே எடுக்கல் ஆற்றார்
தம் பெரும் பற்று நீங்கலும் நீங்கார்
செங் கண் சிவந்து நெஞ்சு புகையுயிர்த்துத்
தம் பெருஞ் சேனையொடு வெஞ் சமம் புரி நாள்
இருஞ் செரு ஒழிமின் எமது ஈது என்றே
பெருந் தவ முனிவன் இருந்து அறம் உரைக்கும்
பொரு அறு சிறப்பின் புரையோர் ஏத்தும்
தரும பீடிகை தோன்றியது ஆங்கு என் (மணிமேகலை 8: 54-63)
இலங்கைக்குப் புத்தர் வந்தமையைக் கூறுகின்ற முதலாவது நூல் மணிமேகலை. தமிழ்க் காப்பியம் மணிமேகலை. எட்டாவது காதையிலும் ஒன்பதாவது காதையிலும் அச் செய்திகள் உள்ளன.
வேக வெந் திறல் நாக நாட்டு அரசர்
சின மாசு ஒழித்து மன மாசு தீர்த்து ஆங்கு
அறச் செவி திறந்து மறச் செவி அடைத்து
பிறவிப் பிணி மருத்துவன் இருந்து அறம் உரைக்கும்
திருந்து ஒளி ஆசனம் சென்று கைதொழுதி (மணிமேகலை 9: 58-62)
1800 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நூல் மணிமேகலை.
1700 ஆண்டுகளுக்கு முன் பாளியில் அமைந்ந வாய்மொழி இலக்கியம் அட்டகதை. இந்த வாய்மொழிச் செய்திகளைப் பின்பற்றி மகாசேன மன்னன் (கிபி 334-362) காலத்தில் எழுந்த பாளி நூல் தீபவமிசம்.
புத்தரின் இலங்கை வருகைச் செய்தி தீபவமிசம் நூலில் உண்டு.
தீபவம்சத்தை ஒட்டி எழுந்த தாதுசேனன் (கிபி 459-477) காலத்துப் பாளி நூல் மகாவமிசம். 1600 ஆண்டுகளுக்கு முன் மகாநாம தேரர் இயற்றியது.
மாணிக்கக் கங்கைக் கரையில் இலங்கை வாழ் இயக்கர் அனைவரும் கூடித் தைப்பூச விழாவை முருகனுக்கு எடுத்த நாளில் புத்தர் முதல் முதலாக இலங்கைக்கு வந்தார் என மகாவமிசம் (1: 19-30) கூறும்.
நாக நாட்டு மன்னர்கள் மகோதரன் குலோதரன். முன்னவர் மாமன், பின்னவர் மருகன். இரத்தின மணி அரியணைக்காக இருவரும் மோதினர். புத்தர் இலங்கைக்கு வந்தார். சித்திரை முழு நிலா நாளில் போரை நிறுத்தினார். மணிமேகலை கூறியதை மகாவம்சம் (1:57-70) கூறும்.
மணிஇயக்கன் களனி அரசு மன்னன் அழைத்துப் புத்தர் மூன்றாவது முறையாக இலங்கை வந்தார். மகாவமிசம் (1:73-83) கூறும்.
புத்தர் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் வந்தார். புத்தரும் சமணரும் வாதிட்டனர். புத்தர் வென்றார். அந்த இடத்தில் அசோகன் நினைவுத்தூண் அமைத்தான். நான் அதைக் கண்டேன்.
புத்தர் சென்று போதித்த தொண்டை நாட்டிலும் பாண்டிய நாட்டிலும் சோழ நாட்டிலும் 100க்கும் கூடுதலான நினைவுத் தூண்களை அசோகன் அமைத்தான். அவற்றை நான் கண்டேன்.
1400 ஆண்டுகளுக்கு முன் சொன்னவர் சீனப் பயணி யுவான்சுவாங். (See pages 101, 102, 103, Foreign Notices of South India by K A Nilakanta Sastri)
புத்தர் ஆந்திராவின் கிருஷ்ணா நதிக்கரையில் அமராவதிக்கு வந்தார். திபெத்திய நூலான காலச்சக்கரம் 1000 ஆண்டுகளுக்கு முன் கூறும்.
புத்தர் தெற்கே வந்ததை வட இந்திய நூல்களோ குறிப்புகளோ, கல்வெட்டுகளோ எதுவும் கூறவில்லை. புத்தர் வாழ்க்கையின் 20 ஆண்டுக் காலத்தில் நடந்தவற்றை வடக்கே எழுந்த புத்தர் வரலாற்று நூல்கள் எதையும் எழுதவில்லை எனப் புத்தரின் அடிச்சுவட்டில் என்ற நூலில் ( வானதி பதிப்பகம்) இலங்கை வானொலி சோ. சிவபாசுந்தரனார் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment