வாரம் ஒரு சிந்தனை 6
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
பிறவியே எனக்கு வாலிதாம் இன்பமாம்
பிகுவு பிசகு பிஞ்சு பிட்டி பிடரி பிண்ணாக்கு பித்தம் பிரட்டு பிரமை பிரிவு பிரை பிழி பிழை பிள்ளை பிறவி பிறழ் பின்பு பினை இவை பி.... என்ற தமிழ் எழுத்தில் தொடங்கும் சொற்கள்.
ஒன்றிலிருந்து இரண்டாக, பலவாக என்ற பொருளில் வரும் சொற்கள்.
தாயிலிருந்து பிரிந்து பிறக்கும் சேய். எனவே பிறவி.
பிறவி துன்பமானது. பிறவி துயரமானது. பிறவி துக்கமானது.
நோயைத் தருவது பிறவி. முதுமை தருவது பிறவி. இறப்பு எனும் துன்பம் தருவது பிறவி.
பிறந்தவர் பெருகிய துன்பத்தையே அடைவர். பிறந்தவரின் ஆசையே துன்பத்திற்கு காரணம்.
2570 ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கொள்கையை முன்வைத்தவர் புத்தர்.
பிறக்காதவர் பேரின்பம் அடைவர். புத்தர் சொன்னார்.
புத்தரின் துன்பக் கொள்கையை, துயரக் கோட்பாட்டை அழகிய தமிழ் வரிகளில் 1800 ஆண்டுகளுக்கு முன்பு தந்தவர், சாத்தனார் மணிமேகலையில்.
...பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்
பிறவார் உறுவது பெரும் பேரின்பம்
பற்றின் வருவது முன்னது பின்னது
அற்றோர் உறுவது அறிக...
(மணிமேகலை, ஊர் அலர் உரைத்த காதை: 64-67)
ஆசையை விடுவோர், பற்றை நீக்குவோர், துன்பத்தில் இருந்து விடுபடுவர். பிறவிப் பிணியில் இருந்தும் விடுபடுவர்.
எட்டு வழிகள். ஆசையை விடலாம். சொல்கிறது புத்த சமயம்.
நல்நோக்கம் > நல் உறுதி > நல் உரை > நற் செயல் > நல் வாழ்வு > நல் முயற்சி > நல் மனம் > (அவை வழி) நல் ஒடுக்கம்.
எல்லோராலும் கைக்கொள்ளக் கூடியனவா? இந்த எட்டு நல் வழிகள். முடியவே முடியாது. மிகச் சிலராலேயே கைக்கொள்ள, முயல முடியும். முயற்சிக்கலாம். முழுமையாகக் கைக்கொள்வோர் ஒரு சிலரே.
இந்த எட்டு நல்வழிகள். இவற்றைக் கைக்கொள்வதாகச் சொல்வோர் ஏராளமானோர். இவர்கள் புத்தர்கள். புத்த சமயத்தவர்கள். ஆசையை விடாத புத்தர்கள். பற்றை ஒழிக்காத புத்தர்கள். ஆசையை ஒழிக்க முயலாத புத்தர்கள். பற்றைக் கைவிட முயலாத புத்தர்கள்.
பிறவி துன்பமல்ல, பிறவியே இன்பம் என்று இவர்களிடம் சொன்னார்கள். அறிந்தனர், புரிந்தனர், புத்த சமயத்தில் இருந்து வெளிவந்தனர்.
சொன்னவர் ஒருவர் அன்று. இருவர் அல்லர், பலர். தொடக்கி வைத்தவர் காரைக்கால் அம்மையார்.
துன்பம் பெரிய கடல். அதில் அமிழ்துவிடாமல் காக்க ஒருவன் இருக்கிறான். இன்பத்தைத் தருபவன் ஒருவன் இருக்கின்றான். துன்பக் கலப்பில்லாத இன்பத்தை தருபவன் இருக்கின்றான். அவரிடம் செல்லுங்கள் என வழிகாட்டியவர் காரைக்கால் அம்மையார்.
கீழா யினதுன்ப வெள்ளக்
கடல்தள்ளி உள்ளுறப்போய்
வீழா திருந்தின்பம் வேண்டுமென்
பீர்விர வார்புரங்கள்
பாழா யிடக்கண்ட கண்டன்எண்
தோளன்பைம் பொற்கழலே
தாழா திறைஞ்சிப் பணிந்துபன்
னாளுந் தலைநின்மினே.
11ஆம் திருமுறை, 3ஆம் தலைப்பு: இரட்டை மணிமாலை, 9ஆம் பாடல்.
புனை துகிற் போலிப் புத்த சமய வீழ்ச்சியின் தொடக்கம். பத்தி இயக்கத்தின் மீள் எழுச்சி. வித்திட்டவர் 1800 ஆண்டுகளுக்கு முன்பு காரைக்கால் அம்மையார்.
மகிழ்ச்சியானதே பிறப்பு. இன்பத்தை நோக்கியதே பிறப்பு. ..மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே.. என முழங்கித் தொடர்ந்தவர் 1475 ஆண்டுகளுக்கு முன்பு திருநாவுக்கரசர்.
குனித்த புருவமுங்
கொவ்வைச்செவ் வாயிற்
குமிண்சிரிப்பும்
பனித்த சடையும்
பவளம்போன் மேனியிற்
பால்வெண்ணீறும்
இனித்த முடைய
எடுத்தபொற் பாதமுங்
காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும்
வேண்டுவ தேயிந்த
மாநிலத்தே.
4ஆம் திருமுறை, 81ஆம் பதிகம், தில்லை, 4ஆம் பாடல்.
துறவியாக வேண்டுமா? எட்டு நல்வழிகளைக் கைக்கொள்வதே துன்பமா? வேண்டாம். வாருங்கள். திருவாரூரில் சிவபெருமான் இருக்கிறார். அவரை வணங்குங்கள். பக்தியோடு அணுகுங்கள். அவர் உங்களைத் துறவியாக்குவார். நெஞ்சுறுதியோடும் நேர்மைத் திறனோடும் சொல்கிறார் 1380 ஆண்டுகளுக்கு முன்பு திருஞானசம்பந்தர்.
பிறவி யறுப்பீர்காள் அறவ னாரூரை
மறவா தேத்துமின் துறவி யாகுமே.
1ஆம் திருமுறை. 91ஆம் பதிகம்: திருவாரூர், பாடல் 2.
பிறந்தேன். மகிழ்ந்தேன். மட்டிலா இன்பம் கொண்டேன். துன்பம் தெரியாததே பிறவி. மானிடப் பிறவியே மேலான பிறவி. மகிழ்ச்சிக்குரிய பிறவி. அடித்துச் சொல்பவர் 1300 ஆண்டுகளுக்கு முன் சுந்தரர்.
தில்லைக்குச் சுந்தரர் செல்கிறார் அருள்மிகு சிவகாமி உடனுறை நடராசப்பெருமானின் திருநடனக் காட்சி காண்கிறார். கண்ணில் மகிழ்ச்சி அருவியாகச் சொரியப் பாடுகிறார். அந்த நிகழ்வை 850 ஆண்டுகளுக்கு முன் சேக்கிழார் சொல்கிறார்.
தெண்ணிலா மலர்ந்த வேணியாய்
உன்றன் திருநடங் கும்பிடப் பெற்று
மண்ணிலே வந்த பிறவியே
எனக்கு வாலிதாம் இன்பமாம் என்று
கண்ணில் ஆனந்த அருவிநீர்
சொரியக் கைம்மலர் உச்சிமேற் குவித்துப்
பண்ணினால் நீடி அறிவரும்
பதிகம் பாடினார் பரவினார் பணிந்தார்.
12ஆம் திருமுறை, திருமலைச் சருக்கம், 5. தடுத்தாட்கொண்ட புராணம், பாடல் 253.
பாண்டிய வழிவந்த தமிழ் மன்னன். அநுராதபுரத்தில் அவன் ஆட்சி. முதலாம் சேனன். அவனுக்கு மகள். வாய் பேச முடியதவள்.
ஆற்றல் உள்ளவர். திறமை மிக்கவர். ஞானியர். அவளைப் பேச வைப்பர் எனப் புத்தத் துறவிகளை அணுகுகிறான் முதலாம் சேனன். அவர்களால் முடியவில்லை.
தில்லைக்குச் சேனன் செல்கிறான். அங்கே மாணிக்கவாசகரிடம் அருள் கேட்கிறான். அன்று ஊமைப் பெண்ணல்லோ. இன்று பேசும் பெண்ணல்லோ. ...பேசுவதும் திருவாயால்... (திருமுறை 08012001) என்கிறார் மாணிக்கவாசகர். அவள் தமிழைப் பேசத் தொடங்குகிறாள். புத்தனாகச் சென்றவன். சைவத் தமிழனாக அநுராதபுரம் திரும்புகிறான் முதலாம் சேனன்.
1200 ஆண்டுகளுக்கு முன்பு மாணிக்கவாசகர் சொல்கிறார், மனிதனாகப் பூமியில் பிறப்பதே பேறு. தேவர்கள் சொல்வதாகச் சொல்கிறார். மனிதப் பிறவி எடுத்துச் சிவபெருமானை வழிபடாமல் நாங்கள் காலத்தைக் கடத்துகிறோமே, வீணாக்குகிறோமே என்கின்றனராம் தேவர்கள்.
புவனியிற் போய்ப்பிற
வாமையில் நாள்நாம்
போக்குகின் றோம்அவ
மேஇந்தப் பூமி
சிவனுய்யக் கொள்கின்ற
வாறென்று நோக்கித்
திருப்பெருந் துறையுறை
வாய்திரு மாலாம்
அவன்விருப் பெய்தவும்
மலரவன் ஆசைப்
படவும்நின் அலர்ந்தமெய்க்
கருணையும் நீயும்
அவனியிற் புகுந்தெமை
ஆட்கொள்ள வல்லாய்
ஆரமு தேபள்ளி
எழுந்தரு ளாயே.
8ஆம் திருமுறை, 20ஆம் பதிகம், திருப்பள்ளியெழுச்சி, பாடல் 10.ன
No comments:
Post a Comment