வாரம் ஒரு சிந்தனை 15
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
ஒன்றிலிருந்து பலவாகி
Condoleezza Rice யார் என்று தெரியுமா?
பள்ளி மாணவர் சிலரிடம் கேட்டேன்.
ஓ... தெரியுமே 20 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர்.
அவர் பெயரில் தமிழ் இருக்கிறது தெரியுமா?
அதே பள்ளி மாணவரிடம் கேட்டேன்.
அமெரிக்கக் கறுப்பினத்தவர். தமிழ் எவ்வாறு? என்றனர் என்னிடம்.
Rice என்று சொல்லின் உன் ஏ சேர்த்தால் Arice வருவது தமிழ்ச்சொல் அரிசி என்றேன். சங்க இலக்கியங்களில் நிறைந்த சொல் அரிசி.
தமிழ்நாட்டின் அரிசி, அரபு மொழியில் அகரம் நீங்கி ரூஸ் ஆகியது. அரபுக்கள் மேற்கே அரிசியைக் கொண்டு சென்றனர். இலத்தீன் கிரேக்கத்தில் அதே வடிவம். ஐரோப்பாவைக் கடந்து இங்கிலாந்தில் Rice ஆகியது என்றேன்.
கட்டுமரம் ஆங்கிலத்தில் Catamaran. தமிழிலிருந்து மருவி ஆங்கிலம் ஆயின பல சொற்கள். ஆங்கிலேயப் படையெடுப்பின் பின்னர்.
கம்போடிய நாட்டின் இன்றைய அரசரின் பெயர் சிகாமணி. 2300 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்ப் பரிபாடல் சிகை (7-70, 9-64) எனும், மணி (1-9, 3-3, 19-28) எனும். பரிபாடல் காலத்தில் எகிப்திய பிரமிடுகளைப் பார்க்கிறார் தமிழர். அங்கே தமிழி எழுத்தில் சிகைக் கொற்றன் எனத் தன் பெயரைப் பதிவிடுகிறார். இன்றும் காணலாம்.
நகர வட்டம், தமிழ்ச் சொல். உலகின் மிகப்பெரிய இந்துக் கோயில் எனப் போற்றும் அங்கோவாட்டின் கம்போடிய மொழிப் பெயர் நகர வட்டம்.
நகர வட்டம் என்ற பெயரில் கம்போடியாவில் நாளிதழ் (https://www.britannica.com/topic/Nagara-Vatta). தாய்லாந்து கம்போடியா இலாவோஸ் வியத்நாம் ஆகிய நாடுகளில் வட்டம் என்றால் அந்தந்த நாட்டு மொழிகளில் திருக்கோயில்.
மண் சார்ந்த பெரு நிலப்பரப்பை மண்டிலம் என்பர் நல்லெழுநியார் பரிபாடலில் (13-8). அமைச்சர் மண்டலம், புலவோர் மண்டலம் எனவும் வரும். வட இந்திய இராஜஸ்தான் மாநிலத்தில் மண்டல் என்ற நகரம். மண்டல் எனப் பெயருடன் புகழ் பெற்ற அறிஞர் பலர் வட இந்தியாவில்.
மியன்மார் நாட்டின் தலைநகரம் மண்டலம் > மண்டலே. சீனாவின் அமைச்சர் குழாம் மண்டலம். அரசவை மொழி மண்டல மொழி > மண்டலின் Mandarin. அதுவே இக்காலத்தில் வட்டார மொழிகளுக்கு அப்பால் சீனாவின் ஆட்சி மொழி.
நய, நயக்கும், நயத்தக்க, நயத்தக, நயந்த, நயப்பு, நயவர் யாவும் பரிபாடல் முதலாகப் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை எனச் சங்க இலக்கியச் சொல்லாட்சி.
நயத்தக்க நாகரிகர் (குறள் 580) என்பார் வள்ளுவர். நயம் இன்று வரை வழங்கும் சொல்லாட்சி. நயினார் ஆண்பால். நயிந்தை பெண்பால்.
சைவ சமயத்தில் நாயனார். நயத் தக்கவரான தலைவன் நாயகன். தெலுங்கில் கன்னடத்தில் சிங்களத்தில் நாயக்கர். கலிங்கத்தில் பட்டத்து நாயகனே பட்நாயக். வங்கத்தில் இந்தியில் பெயருக்கும் இந்தியப் படைத் தகுதிக்கும் நாயக். மலையாளத்தில் நாயர்.
நக்கர், நக்கல், நகு, நகுனர், நகை யாவும் பண்டைய சங்க இலக்கியத் தமிழ் வழக்கு. ....நக்க சாரணர் நாகர் வாழ்மலை.. (மணிமேகலை 16-5). நகுதற் குரியவர் ஆடையின்றி வாழ்வதால் நகைப்புக்குரியவர் வாழ்கின்ற நாகர் மலை. சாதுவன் வணிகத்துக்காகக் கடாரம் நோக்கிய கப்பல் வழியில் அத்தீவு. அதனால் அந்த நாட்டின் பெயர் நக்காவரம் (Nicobar). அத்தீவுக் கூட்டத்தின் தெற்கெல்லைத் தீவு இன்றும் கச்ச தீவு.
தக்க, தக்கார், தகவு, தகுதி, தகை, தகைமை, தகையோர் யாவும் எட்டுத்தொகையிலும் பத்துப்பாட்டிலும் வரும் சங்க இலக்கிய சொற்கள்.
தக்கார் தகவிலர் (குறள்114) என்பார் வள்ளுவர்.
சிங்களத்தில் தகார் ඩකාර්. கலிங்கத்தில் ଡାକାର தாக்கூர். வங்காளத்தில் தக்கார் ডাকার > தாகூர். மராத்தியில் डकार தாக்கரே.
....கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் உன்னுதரத்தே உதித்து எழுந்து ஒன்று பல ஆயிடினும்..... என்றவர் 150 ஆண்டுகளுக்கு முன் மனோன்மணியம் சுந்தரனார். திருவனந்தபுரத்தில் மனோன்மணியம் சுந்தரனாரின் நண்பர்கள் யாழ்ப்பாணத்து வண்ணார்பண்ணை பி ஏ தம்பி ஒழுங்கை செல்லப்பா பிள்ள அவர் தம்பி பொன்னம்பல பிள்ளை இருவரும்.
கிழக்கே சீனம் யப்பான் வரையும் மேற்கே இலத்தீன் கிரேக்கம் ஆங்கிலம் வரையும் தமிழ்ச் சொற்கள் பரவலாய் உள்ளன. ஆர்வமுள்ளோர் தேடுக.
No comments:
Post a Comment