வாரம் ஒரு சிந்தனை 19
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
சடையப்ப வள்ளல் (கிபி 1117)
ஓராயிரம் தோணிகள். ஒவ்வொன்றிலும் நெல் மூடைகள். ஆயிரம் ஆயிரம் நெல் மூடைகள் மொத்தமாக.
பஞ்சம் போக்க வந்தன. யாழ்ப்பாணம் வந்தன. காங்கேயன்துறையில் இறங்கின. யாழ்ப்பாணம் மன்னர் பரராசசேகரன் ஆரியச் சக்கரவர்த்தியின் காலத்தில் வந்தன.
அனுப்பியவர் வள்ளல். சோழ நாட்டின் கொடை வள்ளல். புலவரான அறிஞரான கம்பரை ஆதரித்த சடையப்ப வள்ளல்.
அதற்கு முன்பு சோழ நாட்டு கரையிலிருந்து யாழ்ப்பாணம் வந்தவர் புகழேந்திப் புலவர். சோழநாடு மீண்டதும் யாழ்ப்பாணத்தின் பஞ்சத்தை சடையப்ப வள்ளலுக்கு எடுத்துக் கூறுகிறார்.
கேட்டவுடனே சங்கரன் மகனான சடையப்பர் நெஞ்சம் பதறியது. தன்னிடமிருந்த பல்லாயிரம் நெல் மூடைகளை ஓராயிரம் தோணிகளில் காங்கேயன்துறைக்கு அனுப்புகிறார் சடையப்ப வள்ளல்.
துன்பத்தைப் போக்க, துயரத்தை நீக்க, பசியை முறியடிக்க தன்னிடமிருந்த மிகையான மேல் அதிக உணவை அனுப்பியவர் வள்ளல்.
தேனார் தொடையார் பரராச
சிங்கப் பெருமான் செந்தமிழ்க்குக்
கானார் நெல்லின் மலை கோடி
கண்டி நாடு கரை சேரக்
கூனார் கப்பல் ஆயிரத்தில்
கொடுபோய் அளித்த கொடைத் தடக்கை
மானாகரன் சங்கரன் உடையான்
வளம் சேர் சோழ மண்டலமே.
என்றது சோழ மண்டல சதகப் பாடல்
நெற்குவை கிடைத்ததும் மன்னன் பரராசசேகரன் நன்றி கூறிச் சடையப்ப வள்ளலைப் பாராட்டிக் கவிதை அனுப்பினான்.
இரவு நண்பகல் ஆகில் என் பகல்
இருள் அறா இரவு ஆகில் என்
இரவி எண் திசை மாறில் என் கடல்
ஏழும் ஏறில்ஸஎன் வற்றில் என்
மரபு தங்கிய முறைமை பேணிய
மன்னர் போகில் என் ஆகில் என்
வளமை இன்புறு சோழ மண்டல
வாழ்க்கை காரணம் ஆகவே
கருது செம்பொனின் அம்பலத்திலோர்
கடவுள் நின்று நடிக்குமே
காவிரித் திரு நதியிலே ஒரு
கருணை மாமுகில் துயிலுமே
தருஉயர்ந்திடு புதுவையம்பதி
தங்கு மானிய சேகரன்
சங்கரன் தரு சடையன் என்றொரு
தரும தேவதை வாழ்வதே.
No comments:
Post a Comment