Friday, October 16, 2026

வாரம் ஒரு சிந்தனை 5 வினையும் அறமும்

 வாரம் ஒரு சிந்தனை 5


வினையும் அறமும்

மறவன்புலவு க சச்சிதானந்தன்


விக்கல் விகுதி விசை விடியல் விடு விடை விண் விதை விம்மல் வியப்பு வியவு விரிவு விருது விருந்து வினை வில் விலா விலை விழா விழி விளக்கு விளம்பு விளி விளை விரல் விறல் விறகு வினவு வினை இவை யாவும் வி... எனும் எழுத்தை முதலாகக கொண்ட தமிழ்ச் சொற்கள்.


ஒன்றிலிருந்து மற்றதாகி வேறுபடுகின்ற... என்ற பொருளே இச் சொற்கள் அனைத்திலும் தொக்கி நிற்கும், மறைந்திருக்கும்.


மூலம் - அதிலிருந்து சற்றே மாறுபடுதல், தொடர்ந்து மாறுபடுதல் அதனால் வேறுபடுதல் என்பதே வினை.


தொழில் பணி செயல் முயற்சி வஞ்சகம் தந்திரம் கருத்து தொல்லை எனப் பல பொருள்களில் வரும் ஒரே சொல் வினை. 


அசையாமல் இருப்பது மூலம். அசைவது வினை. அசைவு தானாக எனின் உயிர். தானாக அசைவதால் உயிரோடு கூடப் பிறந்ததே வினை. அறிவியல் கருத்து. உயிரியல் கருத்து.


திருக்கயிலாயம் தொடக்கம் கதிர்காமம் வரை நீண்ட, காந்தாரம் முதலாக ஐராவதி ஆறு வரையாகப் பரந்த நிலப்பரப்பில், வினைக் கொள்கையே தத்துவக் கொள்கை. 


தமிழ் தவிர்ந்த ஏனைய மொழிகளில் கர்மா, கர்மம், கருமம். தமிழில் வினை.


உயிரை வினைக்கு தூண்டுவது. உயிரை அசைவிப்பது. உயிராய் நிறவுருவில் மறைந்திருக்கும் மரபணு. அம் மரபணு இன்றி உயிர் இல்லை. 


மரபணு இயக்காமல் வினை இல்லை. வினைக் கொள்கை எனில் மரபணுக் கொள்கை. மரபணுக்களின் தொகுப்பான நிறவுருக் கொள்கை. அதுவே தமிழரின் வினைக் கொள்கை.


வினைகள் = நல்வினைகள் - தீவினைகள். நடுநிலை வினை இல்லை. 


நல்வினைகள் அறம். 


விடாப்பிடியாக ஒரே வினையைத் தொடர்க. மீண்டும் மீண்டும் அதே வினையில் ஈடுபடுக. ஒருவர் தொடர்ந்து செய்கிறரா? மரபணு மீள் செயல்களைக் குறித்துக் கொள்கிறது. இவர் ஒரே செயலில் பழகிக் கொள்கிறார். மரபணுவில் அந்தச் செயலுக்குத் தேவையான ஆணைகள் நிலை பெறுகின்றன.


உடுக்கை இழந்தவன் கை, (குறள்: 788) என்பார் வள்ளுவர். தன்னை அறியாமல் வழுவும் உடை நோக்கிக் கை போகிறதே. அதுவே பழக்கம் வழக்கம். மரபணுவில் இணைந்து கொள்ளும் பயிற்சி. 


ஒருமுறை அந்தப் பயிற்சி பழக்கம் வழக்கம் மரபுனுவில் இணைந்து விட்டால், அதுவும் சிறு வயதில் இணைந்து விட்டால், அடுத்த தலைமுறைக்குப் போகும். எழுகின்ற தலை முறைகளில் எல்லாம் இருக்கும் என்கிறார் வள்ளுவர். 

ஒருமைக்கண் 

தான் கல்வி கல்வி 

ஒருவற்கு எழுமையும் 

ஏமாப் புடைத்து (குறள்: 398).


வினைக்கு மூலமான மரபணுவில் (genome) 1.5% புரத ஒழுங்கு மட்டுமே உடலமைப்புக் கூறுகளின் வேர். எஞ்சிய 98.5 புரதங்களும், பயிற்சி பழக்கம் வழக்கம் இவற்றை ஒரு தலைமுறையில் உள்வாங்கி அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்கின்றன. எழுகின்ற தலைமுறைகளுக்கு அவற்றை அனுப்பி, மனித நாகரீக வளர்ச்சிக்கு உதவுகின்றன.


Only about 1.5% of the DNA consists of protein-coding genes that determine traits such as eye colour, height and hair type. The other 98.5%, once written off as ‘junk DNA’, is now increasingly recognised as an important part of our genome that controls when and where genes are switched on, influencing development, cellular processes and even human evolution. (Why repetitive DNA matters for human brain evolution and disease By Alexis Bento Luis - published - 25 August 2025)


2057 ஆண்டுகளுக்கு முன்பு வள்ளுவர் சொன்னதை அண்மைய அறிவியல் ஆய்வுகள் உறுதி செய்கின்றன.


உயிரால் உள்வாங்கப்படும் வினை, '...நுகர் வினை..' எனக் கூறுவார் 600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உமாபதி சிவாச்சாரியார். திருவருட்பயன், 5-அருளது நிலை, பாடல் 2.


வினைக் கொள்கையை சமயக் கொள்கையாக்கியோர் முனிவர் அறிஞர் புலமையாளர் திறமை மிக்கோர். சமயக் கொள்கைகள் அறிவு குறைந்தோர் வாழ்வியலில் நம்பிக்கைகள் ஆகின்றன. 


பயன் தரும் அறிவியல் கொள்கைகளை அறிவு குறைந்தோர் புரிந்து கொள்வது எளிதல்ல.


அறிவு குறைந்தோரும் கடைப்பிடித்தால் மனித நாகரீகம் மேலும் வளர்ச்சி அடையும் என்பதால் சமயக் கொள்கையாக தத்துவக் கொள்கையாக மாறியதே அறிவியல் - உயிரியல் கொள்கையாகிய வினைக் கொள்கை.


நல்வினைகளைத் தொடர்ந்து பயிற்சி செய். அவற்றை வாழ்வியல் ஆக்கு. செய்யும் காலத்தில் உனக்கு அவை பயன் தரவில்லையே எனக் கருதிக் கைவிடாதே. அன்றறிவாம் என்னாது அறம் செய்க. (குறள்: 36) 


எழுகின்ற தலைமுறைகளை அறம் மேம்படுத்தும். மனித நாகரீகத்தை வளர்க்கும். ஆறாவது அறிவன்றி ஏழாவது அறிவும் மனிதனுக்காகும்.


700 ஆண்டுகளுக்கு முந்தைய மெய்கண்டாரின் சிவஞானபோதம், 12ஆம் சூத்திரம் 7ஆவது வெண்பாப் பாடல்.


வினையால் அசத்து 

விளைதலான் ஞானம்

வினைதீரின் அன்றி 

விளையா - வினைதீர

ஞானத்தை நாடித் 

தொழவே அதுநிகழும்

ஆனத்தால் அன்பிற் றொழு.


12 திருமுறைகள். 

10ஆம் திருமுறை.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு திருமூலர் இயற்றிய

திருமந்திரம் - 9 தந்திரங்கள். 8ஆம் தந்திரம் - 33ஆவது சுத்தா சுத்தம், பாடல் எண் : 11


வினையால் அசத்து 

விளைவ துணரார்

வினைஞானந் தன்னிலே 

விடாதுந் தேரார்

வினைவீட வீடென்னும் 

பேதமும் ஓதார்

வினையாளர் மிக்க 

விளைவறி யாரே .

No comments: