Friday, October 16, 2026

வாரம் ஒரு சிந்தனை 12 மனநிறைவு தரும் முகாமை

 வாரம் ஒரு சிந்தனை 

மறவன்புலவு க. சச்சிதானந்தன்


மனநிறைவு தரும் முகாமை 


அகத்தின் அழகு முகத்தில் தெரியும். கண் பார்க்கும். மனம் எடை போடும். நெஞ்சம் தீர்மானிக்கும். 


இந்தப் பணிக்கு இவர் தகுதியானவர் இவர் தகுதியற்றவர். இவர் ஓரளவு தகுதியானவர். 


விண்ணப்பங்கள் பல நூறு. நேர்முகத் தேர்வுக்கான சல்லடையில் சில நூறு. பணிக்கு தகுந்தவர் எவர் எவர்? தேர்ந்தெடுக்கக் குழு. அவர்கள் தொடுக்கும் வினாக்கள். அதன் தளத்தில்  தேர்வு.


இந்த நடைமுறைகள் இல்லாமல் பார்த்த உடனேயே பணிக்கு உரியோரை அளவிடும் திறமையும் ஆற்றலும் ஒருவருக்கே உண்டு. பணியை செய்யக்கூடிய வரை நாடுகின்ற இயல்பு ஒருவருக்கே உண்டு. அவரே முகாமையாளர்.


பணியில் சேர்ந்தார். பணிப் பட்டியலைக் கொடுத்தோம். ஈடுபாட்டுடன் பணிபுரிகிறாரா? ஆர்வத்துடன் பணி செய்கிறாரா? கொடுத்த பணியைப் புரிந்து செய்கிறாரா? 


அவரின் பணியால் இலக்கு நோக்கி வணிகம் / திட்டம் நகர்கிறதா? நுகர்வோர் பயனடைகிறாரா? வழங்குநருக்கு உரிய தொகை அனுப்பியதா? கணக்குகள் செம்மையாக அமைந்தனவா? தேற்றம் ஈட்டினோமா? 


ஒவ்வொரு பணியாளரையும் அளவிடும் திறமையும் ஆற்றலும் முகாமையாளருக்கு வேண்டும். அவரே வணிகத்தைச் சிறப்பாக முன்னெடுத்துச் செல்பவர். 


பணி செய்வோரைத் தேர்ந்தமை மட்டுமன்றி, தேர்ந்தெடுத்த பணியாளர் யாவரும் உரிய முறையில் பணி செய்கின்றளரா? என்கின்ற மேற்பார்வை ஆற்றல் திறமை யாவும் உரிய ஒருவரே முகாமையாளர்


ஒரே அளவான பணி. ஒரே நாளில் முடிக்கக் கூடிய பணி. ஆனாலும் அந்தப் பணியை இரண்டு நாள்களுக்கு நீடிக்கலாம். ஒரு வாரத்துக்கு நீடிக்கலாம். ஒரு மாதம் முழுவதும் நீடிக்கலாம். 


பணி செய்வதாக நடித்துக் காலத்தைக் கடத்தலாம். திறமையும் ஆற்றலும் இருந்தாலும் உரிய நேரத்தில் உரிய பணிகளைச் செய்யக்கூடிய பணியாளர்களையே முகாமையாளர் விரும்புவர். உரிய பணிகள் உரிய கால இடைவெளியில் உரியவாறு செய்விக்கும் ஆற்றலும் திறமையும் கொண்டவர் முகாமையாளர்.


தேர்ந்த சிறந்த பணியாளர். ஆர்வமும் ஈடுபாடும் கொண்ட பணியாளர். பணியில் ஈடுபாடு. பணி செய்வதில் மன நிறைவு. முகாமையாளருக்கும் வேண்டும். பணியாளருக்கும் வேண்டும். இந்த மனநிறைவு வளர்ச்சிக்கும் உயர்ச்சிக்கும் பெருக்கத்துக்கும் விதை. 


பணியில் மன நிறைவு கொள்கின்ற பணியாளரும் முகாமையாளரும் நிறுவனத்துக்குச் சொத்து.


1 பணியைச் செய்யக்கூடிய வரை நாடுக.

2 அவருடைய பணிகள் உரியவாறு நடக்கின்றனவா எனவும் நாடுக.

3 உரிய காலத்தில் உரிய பணிகள் நடைபெறுகின்றனவா? பார்க்க 

4 அந்தப் பணியில் உங்களுக்கு ஈடுபாடு. 

பணி செய்பவருக்கு ஈடுபாடு.

உணர்ந்து ஈடுபாட்டுடன் பணியாளருக்கு மனநிறைவு. 

இவை வரும் நிலை நாடுக.


நான் சொல்லவில்லை 

இந்த வரிகளைச் சொன்னவர் திருவள்ளுவர்.


செய்வானை நாடிவினை நாடிக் காலத்தோடு 

எய்த உணர்ந்து செயல்.


516ஆவது திருக்குறளில் திருவள்ளுவர் 

கூறுகிறார். 


2000 ஆண்டுகளுக்கு முன்பு தெரிந்து வினையாடல் என்ற தலைப்பில் பத்துத் திருக்குறள்களே திருவள்ளுவரின் முகாமையாளர் வழிகாட்டி.

No comments: