மறவன்புலவு அருள்மிகு வள்ளைக்குளம் வீரகத்திப் பிள்ளையார் திருக்கோயில்
மறவன்புலவு சச்சிதானந்தன்
மாளாப்பிறப்பு எத்தனையோ எடுத்தேன்.
மதி மயங்கினேன்.
நாள்தோறும் நலிந்தேன்.
மாய வலையில் அகப்பட்டேன்.
அன்பிலனாய் உழன்றேன்.
நரகிடை விழுந்து விடுவேனோ?
மீண்டு பிறப்பெடுக்க வரமாட்டேனோ?
அருள்மிகு வள்ளைக்குளப் பிள்ளையாரே.
அருள்மிகு வீரகத்திப் பிள்ளையாரே
நரகிடை வீழாது என்னைக் காத்தருள்வாய்.
விதிர்விதிர்த்து உடல்.
வெதும்பியது உள்ளம்.
தலைவைத்தன கைகள்.
ததும்பியது கண்ணீர்.
அருள் வேண்டிப் போற்றினார்.
நெஞ்சம் நினைத்ததால் பாடல் பிறக்கவில்லை.
நெஞ்சம் கனத்ததால் கவிதை பிறந்தது.
இசையோடு பாடல் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து பிறந்தது.
திரு சு. பொ.ப குழந்தைவடிவேலு அவர்களுக்குப் பிறந்தது.
மறவன்புலவைச் சேர்ந்தவர். கோயிலாக்கண்டியில் வாழ்ந்தவர்.
மறவன்புலவு அருள்மிகு வள்ளைக்குளம் வீரகத்திப் பிள்ளையார் அருள் வேண்டி அந்தாதித் தொடையில் 101 பாடல்களை யாத்துள்ளார்.
ஆளாய் இம்மாய வலையில் அகப்பட்டு உழலன்பினாலய்
மாளாப் பிறப்பு எத்தனையோ எடுத்து மதிமயங்கி
நாளாக நலிந்தனன் வள்ளைக் குளப்பதி நாயகனே
மீளா நரகிடை வீழாது காத்திட வேண்டினனே.
என்றார் அவர் யாத்த அந்தாதியின் நான்காவது பாடலில்.
எவரும் எள்ளி நகையாட முடியாத வீர மறவர் வாழும் புலம் மறவன்புலவு.
போரில் படை வரிசையில் முன்னே நிற்கின்ற மறவர் வாழும் மறவன்புலவு
அங்கே வள்ளைக் கொடிகள் பூத்துக் குலுங்கும் குளம் வள்ளைக்குளம்.
செந்நெல் இனிது விளைவிக்கின்ற நாயகன் அருள்மிகு வீரகத்திப் பிள்ளையார் என்கிறார் அந்தாதியின் ஆசிரியர்.
அருள்மிகு வள்ளளைக்குளம் வீரகத்திப் பிள்ளையார் கோயிலின் வரலாறு பல்லாயிரம் ஆண்டுகள் நீண்டது.
இலங்கையை ஆண்ட அரசன் சிவ நந்தி. அவன் காலத்தில் தமிழகத்தில் வாழ்ந்தவர் திருநாவுக்கரசு நாயனார். அதே காலத்தில் மறவன்புலவில் வாழ்ந்தவர் ஞானியார் சுவாமிகள்.
தன் முன்னோர் விட்டுச் சென்ற திருக்கோயில் பொறுப்புகளை மிகச் சிறப்பாகத் தொடர்ந்தார் ஞானியார் சுவாமிகள்.
பெரும் பரப்பு அளவிலான நிலங்கள் புலங்கள் அவருக்குச் சொந்தமாக இருந்தன. அக்காலச் சமூகக் கட்டமைப்பில் அவருக்கென அவருடைய நிலங்களில் பணிபுரிவதற்கு என்றே உதவியாளர் இருந்தனர்.
திருக்கோயிலில் பூசைக்குச் சிவாச்சாரியார்கள், மாலை கட்டுவோர், ஓதுவார், மேளம் கொட்டுவோர், விழாக்காலப் பந்தலிட்டு வெள்ளை கட்டுவோர் எனப் பன்முகக் குடிகள் அவரோடிருந்தனர்.
ஆண்டுதோறும் அவர்களுக்கு நெல் மூடைகளைப் படி அளப்பார். அக்குடிகள் மறவன்புலவிலேயே தங்களுடைய எதிர்காலத்தை அமைத்துக் கொண்டார்கள்.
ஞானியார் சுவாமிகள் வழிவந்தவர்களுள் என் நினைவுக்கு வருபவர் தந்தையாரின் பூட்டனார் இராமநாதர்.
பின்னர் அவரின் மகன் தந்தையாரின் பாட்டனார் வேலுப்பிள்ளை - அவர் துணைவியார் சிவகாமிப் பிள்ளை.
வேலுப்பிள்ளை இணையரின் மக்கள் இராமநாதர், சுப்பையா, சின்னப்பிள்ளை, குழந்தைநாச்சன், கண்ணாத்தைப்பிள்ளை, குஞ்சுப் பிள்ளை, மயில்வாகனம்.
மூத்த மகள் சின்னப் பிள்ளையின் அருமைக் கணவரே அந்தாதி பாடிய சு. பொ. குழந்தை வடிவேலு அவர்கள்.
குழந்தைநாச்சன் புத்தூரில் முருகேசுவைத் திருமணம் செய்தார். இருவருக்கும் பிறந்தவர் என் தந்தையார் கணபதிப்பிள்ளை.
பல்லாயிரம் ஆண்டுகள் மறவன்புலவில் தொடர்ச்சியாக வாழ்ந்த குடும்பத்தில் நானும் பிறந்தேன். அருள்மிகு வள்ளைக்குளம் வீரகத்திப் பிள்ளையார் கோயிலின் பரம்பரை அறங்காவலராக உள்ளேன்.
திருக்கோயிலுக்கு சிவாச்சாரியார் தொடர்ச்சியாக இல்லையே என்ற குறையைப் போக்க என் பூட்டி சிவகாமிப் பிள்ளை தனது நிலத்தைச் சிவாச்சாரியார் குடும்பத்துக்குக் கொடுத்து அங்கேயே தங்குமாறு பணித்த காலங்கள் 95 ஆண்டுகளுக்கு முன்பு.
என் பாட்டனார் சுப்பையா திருமணம் செய்யவில்லை. திருக்கோவிலை அவரே பார்த்துக் கொண்டு வருவாராம். ஆண்டுதோறும் அவர் கதிர்காமம் தொடக்கம் இமயமலை வரை வழிபாட்டுப் பயணம் மேற்கொள்வாராம்.
திரு சுப்பையா அவர்கள் அறங்காவலராக இருந்த காலத்தில் திரு சங்கரப்பிள்ளை அவர்கள் விழாக்காலங்களில் புராணபடனம் செய்வார்கள். சிவராத்திரிக்குச் சிவராத்திரி புராணம், கந்த சஷ்டிக்கு திருச்செந்தூர்ப் புராணம் திருவம்பாவைக்குத் திருவாதவூரடிகள் புராணம் என்பன படனமாகும்.
பாடல்களை ஒருவர் படித்து பின்னர் பதம் பிரித்துக் கொடுக்க, கொண்டு கூட்டிக் கொடுக்க, எதிரே மற்றொருவர் பயன் சொல்வார். அடியார்கள் புராணங்களைக் கேட்டுச் சிவ கதைகளைத் தெரிந்து கொள்வார்கள்.
ஆடி அமாவாசைக்கு வள்ளைக்குளக் கரையில் பிதிர்க்கடன் செய்வதற்காகத் திருமறைக் காட்டிலிருந்து சைவக் குருக்கள் வருவார். அவர் பின்னர் அடியவர்களுக்கு சிவ தீட்சை கொடுப்பார்.
திருக்கோயிலின் திருக்குளம் என்பதால் துடக்கு உள்ளவர்கள் நோயாளிகள் குளத்திற்குக் குளிக்கவோ வேறு தேவைக்கோ வரமாட்டார்கள். ஞானியார் சுவாமிகள் காலத்திற்கு முன்பிருந்தே இந்த நடைமுறை தொடர்கிறது.
வேலம்பராய் அருள்மிகு கண்ணகை அம்மன் திருக்கோயிலுக்கும் அருள்மிகு வள்ளைக்குப் பிள்ளையார் திருக்கோயிலுக்கும் இடையே மடை அமைத்தல் படையல் விழாத் தொடர்புகள் இருந்ததால் அருள்மிகு அம்மன் எழுந்தருளி மறவன்புலவு வரும் வழமையும் இருந்தது.
என் தந்தையார் காலத்திலேயே போர்ச்சூழல் தொடங்கியதால் திருக்கோயிலின் விழாக்கள் நிகழ்ச்சிகள் குன்றின.
அடியவர்கள் புலம்பெயர்ந்தனர். கோயில் இடிபாடடைந்தது. கவனிப்பாரற்று இருந்தது.
என் தந்தையாரும் தாயாரும் போர்க்காலத்தில் சிவபதம் அடைந்தார். திருக்கோயில் பொறுப்புகளைச் சுமக்குமாறு அருள்மிகு பிள்ளையார் எனக்கு ஆணையிட்டார்.
ஞானியார் சுவாமிகளும் முன்னோரும் விட்டுச்சென்ற நிலைக்கு திருக்கோயிலின் சிறப்புகளைக் கொண்டுவர என்னாலான திருப்பணி முயற்சிகளைச் செய்து வருகிறேன்.
அருள்மிகு வள்ளைக்குளப் பிள்ளையார் திருவருள் எனக்கு உண்டு.
No comments:
Post a Comment