மானுடம் பயனுற வாழும் வள்ளல்
மறவன்புலவு க. சச்சிதானந்தன், இலங்கை
ஆண்டுக்கு 12.5 பிறைகள்.
இதுவரை 1062 பிறைகள். 85 ஆண்டுகளில்.
அண்ணாச்சிக்கு 85 வயது.
பிரஞ்சு நாட்டின் செவாலியர் விருதாளர்,
பல்கலைக் கழகத்தின் மதிப்புறு முனைவர்,
தமிழக அரசின் கலைமாமணி விருதாளர்,
தமிழக அரசின் திருவள்ளுவர் விருதாளர்,
தமிழ் அறிஞர் உலகத்தின் கவிச்சக்கரவர்த்தி விருதாளர்.
விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத் தலைவர்.
உலகெங்கும் தமிழையும் திருவள்ளுவரையும் திருக்குறளையும் எடுத்துச் சென்றவர்.
குடிசையின் கோடியிலே ஒதுங்கி வாழ்க்கையைத் தொடங்கியவர்.
கந்தலராயிருந்த தமிழர் செல்வந்தச் செந்தமிழராகி (from rags to riches) வரலாறு படைத்தவர்.
கோடானுகோடிகளைக் குவித்து மாடமாளிகையில் வாழும் செந்தமிழர் வி. ஜி. பி. சந்தோசம் அண்ணாச்சி.
வணிக அலுவலகத்தில் இன்னமும் அதே மிதி வண்டி. வரலாற்றை உருட்டிய மிதிவண்டி. “நீ சேர்த்த அனைத்தையும் இழந்தாலும் என் மீது ஓடு, புதிய வரலாற்றைப் படை” எனக் கூறும் மிதி வண்டி.
தன்னம்பிக்கைச் சின்னமாக, நன்றிப் பெருக்கின் சின்னமாக, சந்தனம்மாளின் மன வலிமைக்குச் சான்றாக, பன்னீர்தாஸ் அண்ணாச்சியின் பக்க வலிமைக்குச் சான்றாக, படாடோபமான பளிங்கு அறைக்குள், பணக்காரச் சீமான்களை வரவேற்கும் அறைக்குள், பார்வையாக மிதிவண்டியை, 70 ஆண்டுகளுக்கும் கூடுதலாகச் சந்தோசம் அண்ணாச்சி பக்குவமாகப் பேணுகிறார்.
சைதாப்பேட்டையில் 1960களின் தொடக்க ஆண்டுகளில் வணிகம் தொடங்கிய இவர்கள், மர்பி வானொலிப் பெட்டியைத் தவணைக் கடனுக்குக் கொடுத்த காலங்களில், இவர்களின் முன்னோடி முயற்சியைப் பார்த்திருக்கிறேன். அக்காலங்களில் சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவன் நான்.
சைதாப்பேட்டை (அன்று மார்மலோங்கர் பாலம், இன்று மறைமலை அடிகள் பாலம்) பாலத்தின் நீள் சுவரில் மர்பி விளம்பரமும் இவர்கள் வணிகப் பெயரும் விளம்பரமாக வட்ட வட்ட பெரிய எழுத்துகளில் நீண்டதைக் கண்டிருக்கிறன்.
கிழக்கே ஆத்திரேலியா சிட்னி தொடக்கம் மேற்கே அமெரிக்கா வரை பல நாடுகளில் திருவள்ளுவர் சிலைகளை அமைத்துத் திருக்குறள் பரப்பி வரும் திருத்தொண்டர் வி. ஜி. பி. சந்தோசம் அண்ணாச்சி.
2015இல் சென்னை வந்த தாய்லாந்து அரச குருவுக்கு, நானும் இணைந்து ஏற்பாடு செய்த வரவேற்பில் இவர் கொடுத்தது, வெள்ளிக் கவசத்திலானான 50 செமீ. உயரமான திருவள்ளுவர் சிலை.
தாய்லாந்து அரச குருவுக்கான வரவேற்புக் குழுவின் முன்னோடிக் கூட்டமொன்றில், இடையில் பேச்சுவாக்கில், “இலங்கைக்கும் திருவள்ளுவர் சிலை தருவீர்களா?” எனக் கேட்டேன்.
யாழ்ப்பாணம் வந்தேன். தொலைப்பேசி அழைப்பு. சந்தோசம் அண்ணாச்சியின் அழைப்பு, “இலங்கைக்கு எத்தனை சிலை வேண்டும்?” அன்பைக் குழைத்த அமிர்தமாக என் காதுகளில் புகுந்தன.
இலங்கையின் 16 மாவட்டங்களில் 16 சிலைகள். ஒவ்வொன்றும் மூன்று மீ. உயரமானவை. சானகிராமன், சீனிவாசன் எனச் சிற்பிகள் இருவர் வடித்த சிலைகள். இலங்கையில் திருவள்ளுவரே கோலோச்சுகிறார் என அமைந்த சிலைகள்.
2017இல் அண்ணாச்சி தலைமையில் வந்தனர் தமிழகத்தின் 45 தமிழ் அறிஞர்கள். மாவட்டந்தோறும் சென்றனர். சிலைகளின் திறப்பு விழாக்களைச் சிறப்பாக நடத்தினர். இலங்கை அரசும் அண்ணாச்சிக்கு அரணாகக் காத்தது.
1062 பிறைகள் கட்ட அண்ணாச்சி, 85 வயதாகும் அண்ணாச்சி, பல்லாண்டு வாழ்ந்து, பயனுற வாழ்ந்து சிறக்க, வல்லமை தாராயோ, என இறைவனை வேண்டுகிறேன்.
Maravanpulavu K. Sachithananthan
No comments:
Post a Comment