1965 பெப்புருவரி 04.
சென்னையின் இலங்கைத் துணைத்தூதர் அலுவலகத்தில் விழா.
பேச்சாளர்களுள் ஒருவனாக என் பெயர்.
பச்சையப்பன் கல்லூரி விளம்பரப் பலகையில் அந்தத் துண்டு விளம்பரம்.
என் சக மாணவன் படித்துவிட்டு என்னிடம் வந்து பாராட்டிச் சொன்னான். எனக்கு வியப்பு! நானா? சென்னையின் இலங்கைத் துணைத்தூதர் அலுவலகத்தில் விழாவில் பேசுகிறேனா?
நான் போய் விளம்பரத்தைப் படித்தேன்.
என் நண்பனின் செய்தி தவறல்ல.
என்னைக் கேட்காமலே என் பெயரைச் சேர்த்தவர் துணைத்தூதர் சுசந்தா த அல்விஸ். அன்றைய இலங்கைப் பிரதமர் சிறீமாவோவின் உறவினர்.
அன்று மாலை அவரிடம் போனேன். என்னைக் கேட்காமலே என் பெயரைச் சேர்த்தமை தவறு என்றேன்.
தவறு என்பதை ஒப்புக் கொண்டார். அதற்கான காரணத்தைச் சொன்னார். தமிழக இலங்கை மாணவர் சங்கத்தின் தலைவர் வழமையாக விழாவில் உரையாற்றுவார். இந்த ஆண்டு நீங்கள் தலைவர். எனவே சேர்த்தோம் என்றார்.
தமிழக இலங்கை மாணவர் சங்கத்தில் ஏறத்தாழ 800 மாணவர் உறுப்பினர். அவர்களுள் ஒரு சிலர் சிங்களவர். ஒரு சிலர் ஈழத்து முசுலிம்கள். ஏனையோர் அனைவரும் ஈழத் தமிழர்.
1964-1965 ஆண்டுக்குத் தலைவராக என்னை 1964 ஆவணியில் தேர்ந்தனர். இலாயிட்சு சாலையில் உள்ள இந்திய அரசின் இந்தியக் கலாச்சார உறவுக் கழக மண்டபத்தில் நடந்த மாணவர் கூட்டத்தில் என்னைத் தேர்ந்தனர். தேனாம்பேட்டை எசையீற்றிக் கல்லூரி மாணவியான முசுலிம் பெண் துணைத் தலைவர்களுள் ஒருவர்.
அறிவியல் முதுவல் மாணவனாக, இந்திய அரசின் புலமைப் பரிசில் பெற்றுப் பச்சையப்பன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன்.
1965 பெப்புருவரி 04 சென்னையின் இலங்கைத் துணைத்தூதர் அலுவலகத்தில் விழாவில் பேச மாட்டேன், என் பெயரை நீக்குக, புதிய அறிவித்தலைச் சுற்ற விடுக, எனச் சுசந்தா அல்விசிடம் சொன்னேன்.
முதலில் எனக்கு அறிவுரைகள் சொன்னார். தேசத்தின் மதிப்புப் பற்றிச் சொன்னார். விழாவின் சிறப்புப் பற்றிச் சொன்னார். நான் தனி மனிதனல்ல, மாணவர் தலைவர் என்றார்.
விழாவில் பேச மாட்டேன் என் பெயரை நீக்கிய புதிய அறிவித்தலைச் சுற்ற விடுமாறு சுசந்தா அல்விசிடம் மீண்டும் சொன்னேன்.
இரண்டாவதாக என்னை மிரட்டினார். இந்திய அரசின் புலமைப் பரிசிலை நீக்கப் பரிந்துரை செய்வதாக மிரட்டினார்.
விழாவில் பேச மாட்டேன் என் பெயரை நீக்கிய புதிய அறிவித்தலைச் சுற்ற விடுமாறு சுசந்தா அல்விசிடம் மீண்டும் சொன்னேன்.
அலுவலக அறையில் இருந்த என்னை அதே நுங்கம்பாக்கம் காதர் நவாசுக்கான் தெருவில் இருந்த அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அவர் மனைவியிடம் எனக்குச் சிற்றூண்டி கொடுக்கச் சொன்னார். மது அருந்தலாமே எனக் கேட்டார். என் சைவ உணவுப் பழக்கம், மது அருந்தா நிலை இரண்டையும் சொன்னேன். ஒரு தரம் குடிக்கலாம் என்றார். அவர் மட்டும் சிற்றுண்டி சுவைத்து மது அருந்தினார். சுற்றறிக்கை அனுப்பிவிட்டேன், விழாவில் பேசவே வேண்டும் தயைகூர்ந்து, தயைகூர்ந்து என்றார்.
விழாவில் பேச மாட்டேன் என் பெயரை நீக்கிய புதிய அறிவித்தலைச் சுற்ற விடுமாறு சுசந்தா அல்விசிடம் மீண்டும் சொன்னேன்.
இதுதான் முடிவா என்றார். ஆம் என்று கூறி விடைபெற்றேன்.
சிலநாள்களின் பின்னர் பச்சையப்பன் கல்லூரி விளம்பரப் பலகையில் புதிய அறிவித்தல். என் பெயருக்குப் பதிலாக எசையீற்றிக் கல்லூரி மாணவியான முசுலிம் பெண் (தமிழக இலங்கை மாணவர் சங்க துணைத் தலைவர்) பேசுவதாக இருந்தது.முந்தைய அறிவித்தலும் பிந்தைய அறிவித்தலும் வழமைபோலத் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகளுக்கும் (அக்காலத்தில் 100க்கும் குறைவான எண்ணிக்கையில் கல்லூரிகள்) அனுப்பியிருந்தனர்.
11.75 ஆண்டுகள் (1963 அக்தோபர்-1964 பெப்புருவரி, 1967 சனவரி - 1977 சூலை) கொழும்பில் அரச ஊழியனாக இருந்திருக்கிறேன்.
எனக்கு 1948இல் எனக்கு 7 வயது. இப்பொழுது 73 வயது.
04.02. நடைபெறும் எந்த இலங்கை விழாவிலும் இதுவரை பங்குபற்றியதே இல்லை. 1619 சூன் 5ஆம் நாள் போர்த்துக்கேயரிடம் வீழ்ந்தபின் 04.02.1948உம் தமிழ் மக்கள் விடுதலை பெறாத நாள் எனக் கருதி வருவதால்.
இதே நாளுக்கான மற்றுமொரு முக்கிய நிகழ்வின் (1979) நினைவையும் பின்னர் பகிர்வேன்.
No comments:
Post a Comment