Monday, June 14, 2021

ஈழநாடு ஊர்க்குருவி முதலமைச்சர்

 இப்படியும் நடக்கிறது...!

திரும்பத் திரும்ப இந்த முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தை எழுதக்கூடாது என்று நினைத்தாலும், நண்பர்கள் விடுவதாக இல்லை. இலண்டனிலிருந்து ஒருவர் எப்படியோ இந்த ஊர்க்குருவியை அடையாளம் கண்டு, தொலைப்பேசி இலக்கத்தையும் தேடிப்பிடித்துத் தொடர்பு கொண்டார்.

"உங்கட ஈழநாடு குழுமத் தலைவருக்கு ஏன் ஐசே இந்த விசர் வேலை?” - தன்னை அடையாளப்படுத்தி விட்டு அவர் முதன் முதலில் கேட்டது இந்தக் கேள்வியைத்தான்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. "அவர் செய்யிறது எல்லாமே விசர் வேலைதானே, நீங்கள் எந்த விசர் வேலையைச் சொல்லுறியள்?” என்று நானும் பதிலுக்கு கேள்வியைக் கேட்டேன். (ஈழநாடு குழுமத் தலைவர் மன்னிப்பாராக)

'இந்த மறவன்புலவு சச்சிதானந்தத்தை முதலமைச்சர் வேட் பாளராக போட்டியிடச் சொல்லி கேட்டாராம்' என்றார் அவர்.

மறவன்புலவு சச்சிதானந்தம் ஊடகம் ஒன்றுக்கு அண்மையில் வழங்கிய பேட்டி ஒன்றில், தன்னை முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுமாறு பலரும் கேட்டுவருகின்றனர் எனத் தெரிவித் திருந்ததுடன், அவர்களில் இருவர் முக்கியமானவர்கள் என்றும், ஒருவர் ஈழநாடு குழுமத் தலைவர் குகநாதன் என்றும் தெரிவித்திருந்தார்.

அந்த விடயத்தைத்தான் இந்த இலண்டன் நண்பர் விசர் வேலை என்று விமர்சித்திருந்தார்.

அண்மையில் இலங்கையையே அல்லோலகல்லோலப்படுத்திய அந்தச் செய்தி பற்றி இந்தப் பத்தியில் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம்.

பாரதிய ஜனதா கட்சியின் அடுத்த இலக்கு நேபாளத்திலும், இலங்கையிலும் ஆட்சி அமைப்பதுதான் என்று இந்திய உள் துறை அமைச்சரும், பாரதிய ஜனதாக் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான அமித்ஷா தெரிவித்தாரென வெளிவந்த அந்தச் செய்தி தெரிவித்திருந்தது.

பாராதிய ஜனதா கட்சி ஆட்சி அமைப்பது என்பது, அதன் கொள்கையைக் கொண்டவர்கள் ஆட்சி அமைப்பதைத்தான் குறிக்கும் என்பது தெரிந்ததே.

இந்திய அரசியல் கட்சி ஒன்று நேரடியாக ஒரு வெளிநாட்டில் ஆட்சி அமைக்க முடியாது என்பது அமித்ஷா அறியாததல்ல. அவர் சொன்னது தமது கொள்கையைக் கொண்டவர்கள் ஆட்சி அமைப்பதைத்தான் என்று விளங்கிக்கொள்ள வேண்டும். இந்த செய்தி வெளிவந்த சில மாதங்களில் மறவன்புலவு சச்சிதானந்தம் முதலமைச்சராக போட்டியிட விருப்பம் தெரிவித்திருக்கும் செய்தி வெளிவந்திருக்கின்றது.

கனடாவிலிருந்து வெளிவரும் உலகத் தமிழர் என்ற பத்திரிகையும் இந்த இரண்டு செய்திகளையும் ஒன்றுசேரப் பார்த்து செய்தி விமர்சனம் ஒன்றை அண்மையில் வெளியிட்டுள்ளது.

இலண்டனிலிருந்த அந்த அன்பர் பேசுவதற்கு முன்னரே, இது தொடர்பாக ஊர்க்குருவி, ஈழநாடு குழுமத்தின் தலைவர் குகநாதனுடன் இந்தச் செய்தி தொடர்பாக பேசியிருந்தது. அப்போது அவர் சில விடயங்களை உறுதி செய்தார். -

ஏற்கனவே இரண்டாயிரத்துப் பதின்மூன்றில் வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெறவிருந்தபோது, கூட்டமைப்பு வேட்பாளராக விக்னேஸ்வரன் பெயர் பிரஸ்தாபிக்கப்பட்ட காலத்தில், விக்னேஸ்வரனை எதற்காகக் கொண்டு வரவேண்டும் என்று அவர் சார்பில் வலியுறுத்தியவர்கள் கூறினார்களோ, அதைவிடப் பல சிறப்புக்களை சச்சிதானந்தன் கொண்டிருந்தார் என்றும், அப்போது அவர் ஏன் போட்டியிடக்கூடாது என்பதை அவரிடமே கேட்டாகவும் குகநாதன் தெரிவித்தார்.

இதனால், அந்த இலண்டன் அன்பருடன் இது விடயமாக இன்னும் விபரமாக சண்டையிட முடிந்தது. சச்சிதானந்தம், தற்போது ஒரு சர்ச்சைக்குரியவராக பார்க்கப்படுவது, அவர் சைவத்தை பாதுகாக்கவேண்டும் என்று அண்மைக்காலமாக எடுத்துவரும் நடவடிக்கைகள்தான். அந்த விடயத்தைத் தவிர்த்துப் பார்த்தால், சச்சிதானந்தனின் பல்வேறு சிறப்புக்களை பட்டியலிடலாம்.

இந்தியத் தலைவர்களோடு - பாரதிய ஜனதா தலைவர்கள் மாத்திரமன்றி, ஏன் காங்கிரஸ் தலைவர்களோடும் அவருக்கு நெருக்கமான தொடர்பும் நட்பும் உண்டு. இன்று இந்தியாவின் உதவியின்றி தமிழர்கள் எத்தகையை தீர்வையும் பெறமுடியாது என்பது தெரிந்துவிட்ட பின்னரும், அந்த இந்தியாவுடன் நெருக்கமான தொடர்பைக் கொண்டிருக்கின்ற ஒருவர் நமது அரசியலுக்கு அவசியம். அதற்காக அவர் முதல்வராக வேண்டும் என்பதல்ல, அவரை நமது தலைவர்கள் குறைந்தபட்சம் பயன் படுத்தவாவது வேண்டும்.

இந்த விடயங்களை அந்த அன்பருடன் விவாதித்த பின்னர், அவர் சற்று தொனியை மாற்றிக்கொண்டு சொன்னார்,

'விக்னேஸ்வரன் அண்மையில் வேலன் சுவாமியை பொது வேட்பாளராக நிறுத்தவேண்டும் என்று சொல்லியிருந்தார். வேலன் சுவாமி போட்டியிடலாம் என்றால், இந்த சச்சிதானந்தன் போட்டியிட்டால்தான் என்ன?'

தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினரான சச்சிதானந்தன், தந்தை செல்வா காலத்திலிருந்து தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் இயங்கிக் கொண்டிருப்பவர்.

கிறிஸ்தவ மதக்குழு ஒன்றின் உபதலைவராகப் பணியாற்றிய ஒருவர், கூட்டமைப்பின் அனைத்து முடிவுகளையும் எடுக்கின்ற ஒருவராக இருக்க முடியுமென்றால், சைவ சமயத்தைப் பாதுகாக்க நினைக்கின்ற ஒருவர் ஏன் முதல்வராக முடியாது என்று கேட்காமல் இருக்கவும் முடியவில்லை!

- ஊர்க்குருவி

No comments: