Monday, June 14, 2021

சங்குப்பிட்டிப் பிள்ளையார்

கேரதீவு பாதையில் சங்குப்பிட்டியில் புராண காலத்திலிருந்து தொடர்ந்து வந்த அருள்மிகு பிள்ளையாரை உடைக்கவேண்டாம்.

பூநகரிக்கு அப்பால் கௌதாரி முனைக் கடலில் பல்லாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து சங்கு குளிக்கும் சுழியோடிகள் சங்கைக் குவிக்கும் பிட்டி சங்குப்பிட்டி.

இச்சங்குக் குவியலை ஏற்றிய கப்பல்கள் வடக்கே கங்கையை நோக்கி சோழகக் காற்றுப் பாய்மரத்துடன் இடசை நீரோட்டத்துடன் வங்காளத்திற்குச் சென்று அங்கு சங்குகளை விற்பனை செய்வார்கள். எங்கிருந்தாலும் சங்குப்பிட்டிப் பிள்ளையாரே அவர்களுக்கு வழித்துணை.

மூச்சடக்கும் சுழியோடிக்குக் கயிறுபிடிப்பவர் நம்பிக்கைக்குரிய முறை மச்சான். உயிரோடு திரும்புவாய் - அஞ்சாமல் சுழியோடு என நம்பிக்கை ஊட்டுபவர் சங்குப்பிட்டிப் பிள்ளையார்.

சங்கு குளிக்கும் தொழிலை ஊக்குவித்து, சங்குகள் பற்றாக்குறையில் தவிக்கும் வங்காளத்துக்கு ஏற்றி, வெளிநாட்டுச் செலவாணியைப் பெருக்குமாறு கூறுபவர் சங்குப்பிட்டிப் பிள்ளையார்.

சைவர்கள் ஆகிய நாங்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க சங்குப்பிட்டி அருள்மிகு பிள்ளையார் கோயில் திருப்பணியில் ஈடுபடுவோமாக.

அங்கு சாரிசாரியாகச் சென்று வழிபட்டு உய்வோமாக. வரலாற்றுப் புகழும் அருளும் பெருக்கும் அருள்மிகு பிள்ளையார் சிலையை அகற்றக் கோருவோரே அக்கோரிக்கையைக் கைவிடுக. உங்களை வேண்டி உண்ணா நோன்பிருக்கிறேன்.

முள்முடித் தீநுண்மி பரவல் தடைக்கான அரசுக் கட்டுப்பாடுகளைக் கைக்கொள்க. மக்கள் அங்கு வந்து கூடாதீர். ஊடகத்தார் செய்தி - படங்கள் வழியாக மக்களுக்குச் சொல்வீராக.


No comments: