Monday, June 14, 2021

சங்கிலியன் இப்படியும் நடக்கிறது

இப்படியும் நடக்கிறது.
மணிப்புறா
செய்தி ஆசிரியர்: ஏம்பா? நாளைக்கு பிறந்த நாள். யார் யார் வந்தவை? எவர் எவர் மாலை போட்டவை? விவரம் எழுதிவா. 
செய்தி சேகரிப்பாளர்: ஆற்றை பிறந்த நாள்?
செய்தி ஆசிரியர்: என்னடாப்பா! காந்தின்ரை பிறந்த நாள். அக்தோபர் 2 அடா! அந்தாள் இந்தியாவின்ரை விடுதலையை வேண்டித் தந்தவர் எடாப்பா. குசராத்திலை பிறந்து, இலண்டனிலை படிச்சு, தென் ஆபிரிக்காவிலை போராடி, கடைசியிலை இந்தியாவிலையே வாழ்ந்தவர்.
செய்தி சேகரிப்பாளர்: யாழ்ப்பாணத்திலை ஏன் விழா?  
செய்தி ஆசிரியர்:அந்தாளுக்குச் சிலையும் வைச்சு ஆண்டுக்கு ஆண்டு விழா எடுக்கினம். ஒவ்வோர் ஆண்டும் விழாப் படமும் போட்டுச் செய்தியும் போடுறனாங்கள். அண்டைக்குக் கட்டுரைகள், நேர்காணல்கள் எல்லாமாய்க் கலக்குறனாங்கள், தெரியாத மாதிரிப் பேசுறீர்!
செய்தி சேகரிப்பாளர்: சரி சரி, ஆசுபத்திரிக்கு முன்னாலை தானே விழா.
செய்தி ஆசிரியர்: நேரத்துக்குப் போம்.
********************************
செய்தி ஆசிரியர்: ஏம்பா? நாளைக்கு பிறந்த நாள். யார் யார் வந்தவை? எவர் எவர் மாலை போட்டவை? விவரம் எழுதிவா. 
செய்தி சேகரிப்பாளர்: ஆற்றை பிறந்த நாள்?
செய்தி ஆசிரியர்: என்னடாப்பா? மறந்து போனியே? யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் பாரதியார் சிலைக்கு மாலை போடுகினம், பின்னேரம் நல்லூரிலை கூட்டமாம், அழைப்பிதழ் பாரக்கல்லையே?  
செய்தி சேகரிப்பாளர்: யாழ்ப்பாணத்திலை ஏன் விழா?  
செய்தி ஆசிரியர்:அந்தாளுக்குச் சிலையும் வைச்சு ஆண்டுக்கு ஆண்டு விழா எடுக்கினம். ஒவ்வோர் ஆண்டும் விழாப் படமும் போட்டுச் செய்தியும் போடுறனாங்கள். அண்டைக்குக் கட்டுரைகள், நேர்காணல்கள் எல்லாமாய்க் கலக்குறனாங்கள், தெரியாத மாதிரிப் பேசுறீர்!
செய்தி சேகரிப்பாளர்: சரி சரி, அரசடிச் சந்தியிலையே விழா?.
செய்தி ஆசிரியர்: நேரத்துக்குப் போம்.
********************************
காந்திக்கு விழா, விவேகானந்தருக்கு விழா, பாரதியாருக்கு விழா. இந்தியாவில் பிறந்து இந்தியாவில் புகழ் பெற்றவர்களுக்கு விழாக்கள், கூட்டங்கள், அச்சு ஊடகங்களில் மலர்கள், எணிணி ஊடகங்களில் நேர்காணல், பட்டி மன்றம்.
வாசகர்களையும் சுவைஞர்களையும் இந்திய மாண்பைக் கண்டு மலைக்குமாறு ஊடகங்கள் பங்களிக்கின்றன.
******************************** 
400 ஆண்டுகள். சங்கிலியன் மறைந்த நாள் தெரியவில்லை. வரலாற்றுப் பேராசிரியர் போர்த்துக்கேய ஆவணங்களின் தளத்தில் சங்கிலியன் மறைந்த நாளைக் கணிக்கிறார். ட்ரயல் அற் பார் நீதிமன்றத்தில் மு. திருச்செல்வம் பத்மநாதனின் கணிப்பைக் கூறுகிறார். 
போர்த்துக்கேயரிடம் ஈழத் தமிழர் இறைமை கைமாறிய நாள் என்கிறார் திருச்செல்வம். ஒப்பாரும் மிக்காரும் இல்லாத மன்னன் சங்கிலியன். ஈழத் தமிழர் இறைமை காக்கும் அரசன் சங்கிலியன். 
வைகாசி தேய்பிறை எட்டாம் நாள் அன்று பெரும் போர்.வீரமாகாளி அம்மன் கோயிலருகே போர்.  போர்த்துக்கோயப் படைகளை ஓட ஓட விரட்டுகிறன சங்கிலியன் கூட்டணிப் படைகள். 
சங்கிலியனின் கூட்டணியில் (1) பழவேற்காட்டில் இருந்த வந்த ஒல்லாந்த வீரர் படை, (2) தஞ்சாவூர் நாயக்க மன்னர் அனுப்பிய வருணகுலத்தானின் வீரர் படை, (3) கள்ளிக்கோட்டை சமோரின் அரசு அனுப்பிய குஞ்சலி வீரரின் கடற்படை. (4) தெற்கிலிருந்து வந்த கோட்டை அரசின் படை வீரர். (5) வடக்கிலும் கிழக்கிலும் இருந்த வன்னிச் சிற்றரசர் குவித்த படை. 
வெற்றி நமக்கே என சங்கிலியன் மார் தட்டிய அன்றைய மாலை நேரத்தில் அவனைக் காணவந்தவன் நண்பனாகக் காட்டிய நயவஞ்சகன் காக்கைவன்னியன். கட்டித் தழுவிய காக்கைவன்னியனின் உதவிக்கு வந்த போர்த்துக்கேய வீரர் சிறைபிடித்தனர் சங்கிலியனை. 
அன்று கைமாறிய ஈழத்தமிழர் இறைமை. சைவத் தமிழரின் ஆட்சி போர்த்துக்கேயக் கத்தோலிக்க ஆட்சியானது.
சங்கிலியன் நாடகங்கள், சங்கிலியன் வரலாறுகள், சங்கிலியன் சிலைகள் என அவன் நினைவு போற்றினாலும் சங்கிலியன் நினைவு நாள் நீத்தார் கடன் நாள் 400ஆவது ஆண்டிலேயே தொடங்கிற்று.
நல்லூரில் மாலையிடல், கீரிமலையில் நீத்தார் கடன். இலங்கையின் 15 நீர்நிலைகளில் நீத்தார் கடன்.
இந்த ஆண்டு 402ஆவது நீத்தார் கடன் நாள்.
இலங்கையில் 38 நீர் நிலைகளில் நீத்தார் கடன் ஆற்றுவதாக ஒழுங்கு..
இந்தியாவில் இரமேச்சரம் கும்பகோணம், மயிலாப்பூர், பேரூர், வாராணாசி ஆகிய இடங்களில் சங்கிலியன் நீத்தார் கடன் ஆற்றினர்.
இலண்டன் ஈலிங்கு கனக துர்க்கை அம்மன் திருக்கோயிலில் நீத்தார் கடன் அற்றினர்.சுவிசில் இலவுசோன் ஏரியில் நீத்தார் கடன் ஆற்றினர்.

இவ்வாறாக இல்ங்கை மன்னர் ஒருவருக்கு நீத்தார் கடனை இலங்கையில் பல இடங்களில், இந்தியாவில் பல இடங்களில் இலண்டனில் ஆற்றுவது இதுவே முதல்முறை.
********************************  
செய்தி சேகரிப்பாளர்: ஐயா.. நாளைக்கு நினைவு நாள். யார் யார் வந்தவை? எவர் எவர் மாலை போட்டவை? விவரம் எழுதி வரவா?. 
செய்தி ஆசிரியர்: ஆற்றை நினைவு நாள்?
செய்தி சேகரிப்பாளர்: சங்கிலியன் 402ஆவது நினைவு நாள் ஐயா!
செய்தி ஆசிரியர்:  உமக்கெப்படித் தெரியும்? 
செய்தி சேகரிப்பாளர்:  வாட்சப்பில பார்த்தனான்...
செய்தி ஆசிரியர்:  காந்தி பிறந்த நாள் தெயாது! பாரதியார் பிறந்த நாள் தெரியாது! உவன் சங்கிலியன்றை நினைவு நாள் மட்டும் தெரியுதோ?
செய்தி சேகரிப்பாளர்: எனக்குச் சங்கிலியன் நினைவு நாள் தெரியும் ஐயா... பிரபாகரன் பிறந்த நாள், நினைவு நாள் தெரியும் ஐயா...
செய்தி ஆசிரியர்:  பிரச்சனைக்குரிய நாள்களைத் தெரிந்து வைப்பதில் நீர் எம்டன் காணும்.
செய்தி சேகரிப்பாளர்:  எங்கடை ஊரிலை பிறந்தவையை உலகம் நினைவு கூர்வது செய்திதானே ஐயா? இலங்கையிலை 38 இடங்களிலையாம்... இந்தியாவிலை அஞ்சாறு இடங்களிலையாம்.. இலண்டனிலையாம்.. சுவிசைலையாம்...
செய்தி ஆசிரியர்: சங்கிலியன் ஒரு மதவாதி. கத்தோலிக்கருக்கு எதிரானவன். பேசாலையிலை அவனை வில்லனாகச் சித்தரிப்பினம். மன்னார் முழுக்க அவனுக்கு எதிர்ப்பு. நேற்றைக்கும் பாதிரியார் வந்தவர். கதைக்கே கதையாய் சங்கிலியனை மதவாதி எண்டவர்.
செய்தி சேகரிப்பாளர்: அந்த ஆள் படிச்ச மனுசன். வரலாற்றாசிரியராம் பத்மநாதன் அறிந்து சொன்னதை, திருச்செல்வம் வழக்கிலை சொன்னதை, சிவ சேனை சச்சிதானந்தம் நிகழ்ச்சியாக்கி நட்த்துகிறார். செய்தி விவரம் எழுதிப் படங்களோடு கொண்டு வரவா?
செய்தி ஆசிரியர்: அப்ப பாதிரியார் சொன்னது சரி. ஒரு மதவாதியை மற்ற மதவாதி தூக்கிப் பிடிக்கிறான். நீரும் மதவாதியோ?  
செய்தி சேகரிப்பாளர்:  (தனக்குள்ளே) உவர் இந்தியாக்காரற்றை பிறந்த நாள் எண்டால் ஓடு ஓடு என விரட்டுவார், இலங்கைத் தமிழனை உலகம் போற்றினாலும் செய்தி போடார். அண்டைக்கு ஒரு கூட்டத்திலை ஊடக தருமம் எனப் பேசினவர். சரி நான் என்ரை வேலையைப் பார்ப்பம், மாதம் முடியச் சம்பளம் வரும்.
  ********************************
சங்கிலியனின் 402ஆவது நினைவு நாள் செய்திகள் எந்த ஒரு அச்சு ஊடகத்திலும் வெளிவரவரவில்லை. அஃது ஊடக தருமம்.
இப்படியும் நடக்கிறது. மணிப்புறா 
--
மறவன்புலவு க. சச்சிதானந்தன்

Maravanpulavu K. Sachithananthan 

No comments: