பிராமணர்கள் என்றாலே அவர்கள் கருவறைக்கு சென்று பூஜை செய்பவர்கள்தான் என்ற புரிதல் இருக்கும்வரை இங்கு அனைத்து சாதிகளும் அர்ச்சகர் மட்டுமல்ல அனைத்து உயிரினங்களையும் அர்ச்சகர் ஆக்கினாலும் இவர்களுக்கு அர்ச்சகர்கள் பற்றியோ அர்ச்சனைகள் பற்றியோ புரிதல்கள் வரப்போவதில்லை. ஒரு கோவிலில் பூநூல் அணிந்து பூஜை செய்யும் எவரைப்பார்த்தாலும் அவர்கள் கைபர் கணவாய் வழியாக வந்த வைதீக பிராமணர்கள் என்று கருதி அவரவர் காழ்ப்புணர்ச்சிகளை கொட்டுகின்றனர்...!
பிராமணர்களில் அர்ச்சக குடிகள் வேறு. கோவில் குடிகள் வேறு மற்றும் பிற தொழில்கள் செய்பவர்கள் வேறு என்ற நிலையில்தான் இன்று பிராமண சமூகம் உள்ளது. அதாவது பிராமணர்கள் அனைவரும் கோவில் கற்பகிரகத்திற்குச் சென்று பூஜை செய்வதில்லை. செய்யவும் முடியாது. ஆனால் தமிழகத்தில் இருக்கும் திருமுருகாற்றுப்படை கூறும் தொல்குடி அந்தணர்களான சிவாச்சாரியார்கள் மற்றும் பட்டாச்சாரியார்கள் இம்மண்ணின் பூர்வ குடிகளே அன்றி கைபர் கணவாய் வழியாக வந்த ஆரிய வந்தேறிகள் அல்ல. இவர்களை சில இலக்கியங்களின் அடிப்படையில் இம்மண்ணின் பூர்வகுடிகள் தான் என்பதை நிறுவலாம்..!
"வந்தனன் அன்னைநீ வான்துய ரொழிகெனச் செந்நிறம் புரிந்தோன் செல்லல் நீக்கிப் பார்ப்பனி தன்னொடு பண்டைத் தாய்பாற் காப்பியத் தொல்குடிக் கவின்பெற வளர்ந்து தேவந் திகையைத் தீவலஞ் செய்து"
- சிலப்பதிகாரம்.
என்ற சிலப்பதிகார வரிகள் பார்ப்பனர்களை பண்டைத் தாய் பால் காப்பியத் தொல் குடியினர் என்று வரையறுக்கிறது. ஆனால் இங்கே இளங்கோவடிகள் பிராமணர்களை தமிழரில்லை என்றோ அந்நியர்கள் என்றோ ஆரியர்கள் என்றோ குறிப்பிடவில்லை என்பதை காண்க. இதை நக்கீரரின் கவிநயத்தில் பார்த்தோமேயானால், ஏரகத்தில் அந்தணர்கள் செய்யும் வழிபாடு பற்றி விளக்கும் நக்கீரர் இப்பாடலில் அரிய விஷயங்களைச் சொல்கிறார். அவையாவன,
"இரு மூன்று எய்திய இயல்பினின் வழாஅது இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி அறு நான்கு இரட்டி இளைமைநல் யாண்டு ஆறினில் கழிப்பிய அறன்நவில் கொள்கை
மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து இருபிறப்பாளர் பொழுது அறிந்து நுவல ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண் புலராக் காழகம் புலர் உடீஇ உச்சிக்கூப்பிய கையினர் தற்புகழ்ந்து ஆறுஎழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி நாஇயல் மருங்கில் நவிலப் பாடி
விரைஉறு நறுமலர் ஏந்திப் பெரிதுஉவந்து
ஏரகத்து உறைதலும் உரியன்"
-திருமுருகாற்றுப்படை.
அந்தணர்கள் என்பவர்கள் யார் என்பதையும் அவர்களின் தொழில் என்ன என்பதையும் நக்கீரர் இப்பாடலில் மிகத்தெளிவாக சொல்லியிருப்பார். அதை சற்று விரிவாக காண்போம்.
🔵இருமூன்று எய்திய இயல்பு - இருமூன்று என்றால் நான் மேற்கூறிய ஆறு தொழிலகளை உடைய 2*3 அதாவது ஓதல், ஓதுவித்தல், வேட்டல்,வேட்பித்தல், ஏற்றல், ஈதல்'. ஆகிய அறுவகைப் பணிகளை நிறைவேற்றும் பண்புடையவர்கள்.
🔵இருவர்ச்சுட்டிய தொல்குடி - தாயும், தந்தையும் ஆகிய இருவரின் பழமையான தொல் குலத்தின் அல்லது குடும்பத்தின் நற்பெயரைப் புகழ்ந்து கூறியவர்கள்.
🔵அறு-நான்கு இரட்டி இளமை நல் யாண்டு - 6x4 + 6x4 = 48 ஆண்டுகள் அடங்கிய இளமைக் காலத்தை உடையவர்கள்.
🔵முத்தீ - ஆகவனீயம், தக்கிணாக்கினியம், காருகபத்தியம்' என்னும் மூவகை வேள்வித் தீகளை வளர்ப்பவர்கள்.
🔵இருபிறப்பாளர் - இயற்கைப் பிறப்பு, அறிவு முதிர்ச்சியின் பின்னர் எய்தும் மறு பிறப்பு ஆகிய இரு பிறப்புகளுக்குரிய அந்தணர்கள். இதைத்தான் நிகண்டுகளும் சொல்கின்றன.
🔵பொழுது அறிந்து நுவல - நல்ல நேரத்தை கணித்துத் தெரிவிப்பவர்கள்.
🔵ஒன்பதுகொண்ட மூன்று புரி நுண்ஞாண் - அதாவது ஒவ்வொரு புரியிலும் மூன்று இழைகளைக்கொண்ட மூன்று புரிகளாலாகிய ஒன்பது இழைகளைக்கொண்ட பூணூலை தரித்தவர்கள்.
🔵புலராக் காழகம் புலர உடீஇ - உலராத ஆடையை உலரும்படி உடுத்தியவர்கள்.
🔵உச்சிக்கூப்பிய கையினர் - தலை உச்சி மீது இரு கைகளையும் குவித்து வணங்குபவர்கள்.
🔵ஆறு எழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி - "சரவணபவ" அல்லது "குமாராயநம" என்னும் ஆறு எழுத்துகள் அடங்கிய மந்திரத்தை ஓதுபவர்கள்.
🔵விரைவுறு நறுமலர் ஏந்தி - நறுமணம் உடைய மலர்களைத் தூவி வழிபடுபவர்கள்.
🔵பெரிது உவந்து - மிகவும் மகிழ்ச்சியாக இதை செய்பவர்கள்.
🔵ஏரகத்து உறைதலும் உரியன் - திரு ஏரகத்தில் அமர்ந்திருக்கும் உரிமையுடைய திருமுருகப்பெருமானை வணங்குபவர்கள்.
அதோடு கடந்த பதிவில் சேக்கிழார் பெருமான் வேதியர்களுக்கே கோவிலில் பூஜை செய்யும் உரிமை உள்ளதாக கூறியதைப் பார்த்தோம். இவற்றை முன்னிறுத்தி அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்பது
மேலோட்டமாக பார்த்தால் இதில் ஏதோ சமூக நீதி, சமதர்மம், சமத்துவம் இருப்பதுபோல் தோன்றும்.ஆனால் இந்த வெங்காயத்தை உரித்துபார்த்தால் ஒன்றுமே இருக்காது.வெற்று அரசியல் கூப்பாடு இது. இந்து சமயத்தை அழிப்பதற்கான, மரபுகளை சீர்குலைப்பதற்கான சதிதிட்ட கோரிக்கையே இது...!
குறிப்பாக தமிழகத்தில்,
1.சைவசமய கோயில்கள்.
2.வைணவகோயில்கள்,
3.கிராம தெய்வ கோயில்கள்,
4.காவல் தெய்வ கோயில்கள்,
5.குலதெய்வ கோயில்கள்,
6.தனியார் நிர்வாக கோயில்கள்
இப்படி பல வகையான கோவில்கள் உள்ளன. இவற்றில் சைவ வைணவ கோயில்களில் பூஜை செய்பவர்கள் சிவாச்சாரியார், பட்டாசாரியார் என்ற மரபினர். இங்கு வைதீக பிராமணர்கள் அர்ச்சகராக இல்லை. அதாவது இங்கு வைதீக பிராமணர்கள் அர்ச்சகராக முடியவும் முடியாது. இது மரபு வழியான ஆகம விதி...!
அடுத்து ,கிராம, காவல், குலதெய்வ கோயில்களில் பிராமணர்கள் அல்லாதவர்களே, ஈரோடு ராமசாமி நாயக்கர் காலத்திற்க்கு முன்பிருந்து இன்றுவரை பல்நெடுங்காலங்களாக அர்ச்சகர்களாக உள்ளனர். உதாரணமாக,
🔴கிராம மாரியம்மன் கோயில்களில் பண்டாரம், வன்னியரில் சிலர் அர்ச்சகராகவும்,
🔴கிராம அய்யனார், பிடாரி கோயில்களில் குயவர்கள் அர்ச்சகராகவும்,
🔴சில முருகர் கோயில்களில் செங்குந்தர் அர்ச்சகராகவும்,
🔴காமாட்சி கோயில்களில் விஸ்வகர்மா அர்ச்சகராகவும்,
🔴சௌடேஸ்வரி கோயில்களில் தேவாங்க செட்டியார்கள் அர்ச்சகராகவும்,
🔴மதுரை வீரன், மாடசாமி, பாப்பாத்தி அம்மாள் போன்ற கோயில்களில் பட்டியல்இனத்தவர் அர்ச்சகராகவும்,
🔴மேலும் ,புகழ்பெற்ற மேல்மலையனூர் கோயிலில் செம்படவர்களும்,
🔴திருச்சி வெக்காளியம்மன், சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில்களில் பூசாரிகளும்,
🔴மதுரை தல்லாக்குளம் கருப்பர் கோயில்களில் முதலியார்கள் அர்ச்சகராகவும் உள்ளார்கள்.
இதுவன்றி தமிழம் முழுவதும் பல இனத்தவர்கள் அவ்விடத்து பழக்க வழக்கத்தை பொறுத்து அர்ச்சகர்களாக இருக்கிறார்கள்.ஆக தமிழகத்தில் அனைத்து சாதியிலும் அர்ச்சகர் உள்ளனர்.
🔴அடுத்து #தனியார்கோயில்கள்.இங்கு அனைத்து சாதி அர்ச்சகர் சட்டம் செல்லாது.ஏனெனில் அவர்கள் பார்த்து பிராமணர் அல்லது பூசாரி என யாரை வேண்டுமானாலும் அர்ச்சகராக நியமித்துக்கொள்ளலாம். ஆக மேற்கண்ட வகை கோயில்களில் , தமிழகத்தை பொறுத்தவரை சைவ, வைணவ கோயில்களிலேயே சமூக போராளிகள் வைதீக பிரமாணர்கள் என்று கருதும் சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியாகள் அர்ச்சகராக உள்ளனர். இவர்கள் இம்மண்ணின் பூர்வ குடிகளே என்பதை மேலே பார்த்தோம்.
உண்மையாதெனில், நமது தமிழக சிவாயலயங்களில் வைதீக பிராமணர்கள் அன்றும் சரி இன்றும் சரி அர்ச்சகராக இல்லை. சைவாலயங்களில் அர்ச்சகராக இருப்பவர்கள் ஆதிசைவர்கள் என்ற #சிவாச்சாரியார்கள். இவர்கள் #குருக்கள் என்றும் #பட்டர் என்றும் அழைக்கப்படுவார்கள். இவர்களுக்குத்
தான் சிவாலயங்களில் அர்ச்சகர் உரிமையே தவிர வைதீக பிராமணர்களுக்கு கிடையாது. வைதீக பிராமணர்கள் இதற்கு விரும்புவதும் இல்லை...!
இந்த ஆதிசைவர்கள் என்ற சிவாச்சாரியார்கள் தமிழ் பூர்வகுடிகள் என்றும், #ஆகமங்களை பிரதானமாக கற்று பூஜை செய்பவர்கள் என்றும், இவர்கள் இனத்தால் தமிழர்கள் என்பதும் வரலாற்று ஆய்வாளர்கள் கூற்று. மேலும் இவர்களுக்கும், மற்ற வைதீக பிராமணர்களுக்கும் பல வேறுபாடுகள் உண்டு. உருவத்தில் ஒன்றுபோல் காணப்பட்டாலும் மரபுகளில் பூஜைகளில் வேறுபாடுகள் ஏராளம் உண்டு...!
ஆனால் தமிழகத்தில் உள்ள எந்த சமூக போராளாகளும் இந்த வேறுபாடு தெரியாமல் உளறிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆக தங்களுக்கென்று சொந்த வீடும் இல்லாமல், காணி நிலம் கூட இல்லாத கிராமத்தில் ஒரு குடி இரு குடி என்று வாழ்ந்து வரும் இன்று பிராமணர்களாக கருதப்படும் வைதீக பிராமணர்களில் இருந்து வேறுபட்ட, இனத்தால் தமிழர்களாகிய ஆதிசைவர்கள் என்ற சிவாச்சாரியார்களை, அந்த சைவசமய குரு மரபை அழிக்கவே, அவர்கள் பூஜை தொண்டினை தடுக்கவே இத்தகைய சதி வேலைகள் நிகழ்வதாகத் தோன்றுகிறது...!
இவர்கள் எழுப்பும் அனைத்து சாதி அர்ச்சகர் கோஷத்தால் ஒரு வைதீக பிராமணர் கூட பாதிக்கப்படப்போவது இல்லை. எனெனில் அவர்கள் யாரும் சைவக்கோயில்களில் அர்ச்சகராக இல்லை. ஆக, இவ்வளவு பெரிய கட்சிகளும், முற்போக்கு வாதிகளும் யாரை எதிர்க்கிறார்கள் என்றால் காணிநிலம் கூட சொந்தம் இல்லாத ஊருக்கு ஒரு குடியாக வாழும் , தமிழகம் முழுவதுமே கணக்கெடுத்தால் 20000 குடும்பங்களே இருக்கும் மிக மிக #இனசிறுபான்மையினராக வாழும் ஏழை குருக்கள் மரபையே என்பதை உணர்க...!
பதிவர் - தில்லை கார்த்திகேய சிவம்.
இன்றைய சூழலில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்ற வாதம் சரியாக படும் என்பதால் மேலே அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாகத்தான் உள்ளனர் என்பதை பார்த்தோம். அதே சமயம் தற்போது அரசால் வழிவகை செய்யப்பட்டு படித்த முடித்த இளைஞர்களை அர்ச்சகர் இன்றி காலியாக உள்ள கோவில்கள் மற்றும் புதிதாக கட்டப்படும் கோவில்கள், பாழடைந்த கோவில்களை சீரமைக்கும் போது ஏற்படும் காலியிடங்களில் அர்ச்சகர்களாக நியமித்து சமத்துவம் பேணுவோம்...!
🧘

.
No comments:
Post a Comment