Tuesday, December 30, 2025

திருமாவளவனை அன்புடன் வரவேற்கிறோம்

 சைவத் தமிழ்த் தேசியம் நட்புக் கரங்களை நீட்ட வேண்டும்.


மறவன்புலவு க. சச்சிதானந்தன்


தவத்திரு ஆறுமுக நாவலர் சாதனையாளர். 

பணியைப் பிணியாகக் கொண்டவர்.

59 வயது. ஆனாலும் அறுநூறு ஆண்டுகள் வாழ்ந்தது போலச் சாதனைகள்.


அவரை யாழ்ப்பாணம் போற்றியது, பாராட்டியது, அவர் வழிகாட்டலை ஏற்றது. கிறித்தவ மதமாற்ற மேலாதிக்கத் தடுப்பு முயற்சி ஒரு புறம். சைவத்தமிழ் மீள் எழுச்சி மறுபுறம். இத்தகைய பெரியார். 


சென்னையில் சைவ சித்தாந்தப் பெருமன்றத்தில் கா பொ இரத்தினம் அறக்கட்டளை. ஆண்டுதோறும் ஆறுமுக நாவலர் குருபூசை நிகழ்ச்சியை நினைவாக்க அறக்கட்டளை. ஒவ்வொரு ஆண்டும் நான் நினைவூட்டுவேன். அவர்கள் நினைவு கொள்ள மறுக்கிறார்கள். நிகழ்ச்சியை நடத்த விரும்புவதில்லை.


தமிழகம் சென்ற ஆறுமுகம் நாவலரானார். பாராட்டினர். போற்றினர். அவர் முயற்சிகளுக்குப் பலர் உறுதுணையாயினர். 


தமிழகம் வேறு, ஈழம் வேறு என்ற நிலையில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். ஒத்த பண்பாட்டினராகக் கைகோர்த்து வளர விரும்புகிறோம். கலந்து உறவாட விரும்புகிறோம்.


எனினும் தமிழகம் வேறு, ஈழம் வேறு, உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அவ்வாறே வாழ்கிறார்கள். எல்லா நாடுகளிலும் எண்ணையாகவும் நீராகவும் இருசாராரும்.

ஒரே இனமாகக் காட்டிக் கொள்வதில்லை.


ஆறுமுக நாவலருக்குத் தமிழ்நாட்டில் வரவேற்புக் குறைவு.  சென்னை தம்புச் செட்டித் தெரு அருள்மிகு காளிகாம்பாள் கோயில் கேணியில் ஆறுமுகநாவலர் உயிரோடு இருக்கும்பொழுது அவருக்குக் கருமாதி செய்த வரலாறை நீங்கள் மறந்துவிடக்கூடாது.


ஆறுமுக நாவலருடைய மாணவர் தென்புலோலியூர் நா. கதிரவேற்பிள்ளை அவர்களைச் சிந்தாதிரிப்பேட்டையில் கொல்ல முயன்றனர்.


தமிழகத்துக்கு சென்றோம். தமிழகத்தில் உள்விவகாரங்களில் தலையிட்டோம். தமிழகத்தின் தவப்புதல்வர்கள் எனக் கருதுவோரை நாங்கள் சாடினோம். அவர்களுக்கு எதிராக வழக்குகள் தொடுத்தோம். தமிழகம் ஆறுமுக நாவலரை முழுமையாக ஏற்கவில்லை.


கடந்த 30 ஆண்டுகாலப் போர்காலத்தில் நாங்கள் விட்ட தவறுகள் தமிழ்நாட்டுக் கட்சிகளிடையே ஆளுமைகளிடையே உள்ள பூசல்களை நாங்களும் சேர்ந்து கொண்டதே. நாங்களும் கட்சி கட்டியதே.


தேசம் தேசியம் தன் எல்லைகளுக்கு வெளியே யாரையும் பகைக்காது. பகைவரையும் நண்பராக்கும். 


சைவத்தமிழ் தேசியம் ஈழத்தின் உயிர்நாடியாக இருக்க வேண்டும் எனில் தமிழகத்தின் சைவத்தமிழ் பரப்பில் அனைத்துத் தரப்பினரையும் நாங்கள் அன்பர்களாக ஆதரவாளர்களாக நண்பர்களாகக் கொள்ள வேண்டும்.


தோல்விகள் பாடமாக அமைய வேண்டும். தோல்விகளை மறந்து தொடர்ச்சியாக அதே தவறுகளால் மீண்டும் மீண்டும் தோல்விகளைத் தழுவக்கூடாது.


எதையும் எதிர்க்க வேண்டும் என்ற மனோபாவம் தவறானது. சைவத் தமிழ்த் தேசியத்திற்கு முரணானது.


திருமாவளவன் தன் இளமைக் காலங்களில் இருந்து நாம் ஈழத்தில் நடத்திய சிங்கள மேலாதிக்கத்துக்கு எதிரான போராட்டங்களுக்கு முழுமையாக ஆதரவு தந்தவர். இன்றும் தருகின்றவர்.


தமிழ்நாட்டில் அவர் என்ன செய்கிறார் என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொள்வார்கள். சைவத் தமிழ்த் தேசியத்தின் விருந்தினராக அவரை அழைத்து இருக்கிறோம். 30 ஆண்டு காலமாக அவர் வழங்கிய ஆதரவைப் பெற்றிருக்கிறோம்.


தமிழ்நாட்டில் தன்னுடைய மக்களுடைய மேம்பாட்டுக்காக, பறையர் இன மக்கள் அடிமைத்தனத்திலிருந்து வெளியேறி ஆட்சிப் பீடத்தில் அமைய வேண்டும் என்ற நோக்கத்திற்காக அவருடைய அரசியல் உத்திகள் கொள்கைகள் அமைந்து வருகின்றன.


ஈழத்தில் நாங்கள் நடத்தும் போராட்டம் நேர்மையானது நியாயமானது என எங்கள் தவறுகளை எங்கள் பிழைகளை எங்களுடைய குறைகளை எல்லாம் பொருட்படுத்தாமல் முழுமையாக ஆதரவு தந்தவர் தருபவர், திருமாவளவன். ஈழத்தின் உள்கட்சி நிலைகளில் அவர் என்றும் தலையிட்டதில்லை. எல்லோருக்கும் அவர் நண்பர். 


தமிழ்த் தேசியத்தின் பரப்பு விரிவதற்கு ஆறு இயல்புகள், வள்ளுவர் சொன்ன இயல்புகள், படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் ஆகிய ஆறு இயல்புகளே தளங்கள். நட்பு அஃதில் ஒரு தளம்.


சிங்கள மேலாதிக்கம் எங்களுக்கு எதிரி. தமிழகத்தில் எங்களுக்கு யாரும் எதிரிகள் இல்லை. எங்களுடைய போராட்டம் சிங்கள மேலாதிக்கத்திற்கு எதிரானது. நாங்கள் நட்பு வட்டத்தை பெருக்கினாலே எங்களுடைய சைவத் தமிழ்த் தேசியம் வலிமையாகும். 


இரஜினியை எதிர்க்கிறோம் 

குஷ்புவை எதிர்க்கிறோம் 

திருமாவளவனை எதிர்க்கிறோம் 

மீனவர்களை எதிர்க்கிறோம்

கலைஞர் மீது அவதூறுகளை வீசுகிறோம் 

இந்துத்துவாவை எதிர்க்கிறோம். 

பெரியாரின் நாத்திகத்தை எதிர்க்கிறோம் 

வள்ளலாரை எதிர்க்கிறோம்.


சைவத் தமிழ் ஈழத்தின் எதிர்ப்புணர்வுக்கு எல்லையே இல்லை. தற்காப்பு உணர்வு வேறு. எதிர்ப்புணர்வு வேறு. சைவத்தமிழ்த் தேசியம் இத்தகைய எதிர்ப்புணர்வால் மங்கி மடிந்து மாய்ந்து தோல்விகளைச் சந்தித்து வருகிறது.


ஈழத்தின் அறிவுப் பராம்பரியத்தை தமிழகத்தில் மிகவும் மதிக்கிறார்கள். அன்றைய ஈழத்துப் பூதன்தேவனார் தொடக்கம் இன்றைய ஜெயபாலன், வசீகரன் என அறிவுக்கு ஆற்றலுக்கும் திறமைக்கும் புலமைக்கும் தமிழகம் என்றும் மதிப்பு கொடுத்து வாழ்த்திப் பாராட்டி போற்றுகிறது.


தமிழகம் இல்லாமல் ஈழம் இல்லை. ஈழம் இல்லாமல் தமிழகம் இல்லை. ஒருவரின் தேவையை மற்றவர் நன்குணர்கிறோம். ஒருவரை மற்றவர் போற்றுகிறோம், பாராட்டுகிறோம். அவரவர் தனித்தன்மையை அவரவர் இழக்காமல் பார்த்துக் கொள்கிறோம்.


கொடுமையான சிங்கள மேலாதிக்கத்திற்கு 13 அரசுகள் நண்பர்கள். நாங்கள் 13 அரசுகளைப் பகைத்தோம். பகைத்ததால் தோல்வியைச் சந்தித்தோம். 


தோல்விக்கான காரணங்களைப் பாடங்களாக எடுத்துக் கொள்ளாமல் எதிர்ப்பையே வாழ்வாகக் கொண்டோமானால் சிங்கள மேலாதிக்கத்தின் கோரப் பிடிக்குள் சிக்கிச் சீரழிந்து நாசமாகிப் போவோம்.

No comments: