Tuesday, December 30, 2025

சிவராமலிங்கம் என் தமிழ் ஆசிரியர்

 என் தமிழ் ஆசான் க. சிவராமலிங்கம் பிள்ளை நூற்றாண்டு 


மறவன்புலவு க. சச்சிதானந்தன் அனுப்பிய அறிக்கையை அப்படியே தருகிறேன். ஒரே ஒரு காரணம். அதில் வடமொழி இல்லை. ஆங்கிலமில்லை. தமிழே சரளமாக ஓடுகிறது. இவ்வாறு முன்னுரை எழுதி முதல் பக்கச் செய்தியாக வெளியிட்டவர், யாழ்ப்பாணத்தின் முன்னணி இதழ்களுள் ஒன்றான காலைக் கதிர் நாளிதழ் ஆசிரியர் வித்தியாதரன்.


வடமொழி உள்ளிட்ட அயல் மொழிச் சொற்களைக் கலக்காமல் தமிழை எழுதலாம் என எனக்குக் கற்பித்தவர் க. சிவராமலிங்கம் பிள்ளை. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நான் ஐந்தாம் வகுப்பில் சேர்ந்தேன். அதற்கு அடுத்த ஆண்டு சிவராமலிங்கம் பிள்ளை ஆசிரியராக அங்கு சேர்ந்தார். என் நெஞ்சை நெகிழ்த்த உடல் நடை அவருக்கு. சிரித்த முகத்துடன் நெஞ்சுறுதி கலையாத நேர்மைத் திறனுடன் என்னைக் கவர்ந்தார்.


எனக்குத் தமிழ் கற்பித்தவர்களுள் விடுதி முதல்வர் கே எஸ் எஸ் என்ற சுப்ரமணியமனார் என்னை ஈர்த்தவர். அவரது வகுப்பில் கண்ணன் குழலூதுவான். அர்ச்சுனன் அம்பு விடுவான். கடோற்கசன் மலைகளைத் தூக்குவான். பீமன் மல்யுத்தம் செய்வான். மகா பாரதக் கதைகளை அவர் திரைப்படமாக வகுப்பில் காட்டுவார். அந்த ஆர்வத்தால் அக்காலத்தில் வெளிவந்த இராஜாஜியின் வியாசர் விருந்து நூலை வாங்கி ஒரே வாரத்தில் முழுமையாகப் படித்து முடித்தேன்.


பண்டிதர் செல்லத்துரையிடம் தமிழ் படித்தேன். என்னை 'அதாவது' என்று அழைப்பார். என் கட்டுரைகளில் அதாவது என்ற சொல் மிகையாக இருக்கும் எனக் கூறுவார். 


வித்துவான் கார்த்திகேயனிடம் தமிழ் படித்தேன். மிக எளிமையாக ஆகுபெயரையும் அன்மொழித்தொகையையும் சார்ந்த பல இலக்கண நுணுக்கங்களையும் விளக்கியவர் அவரே.


சிவராமலிங்கனாரிடம் பாரதியாரைப் படித்தேன். பாரதிதாசனைப் படித்தேன். மாலைகளில் அவரிடம் வகுப்பறையில் நானும் அவருடைய தம்பியாரும் என் நண்பர்களும் அவர் உரைகளைக் கேட்போம். மறைமலை அடிகளின் தமிழை அவரிடம் படித்தேன். 


கிருபானந்த வாரியாரின் தமிழை எனக்குக் காட்டியவர் சிவராமலிங்கனார். மூன்று சொற்களில் வரிகள். இரண்டு அல்லது மூன்று வரிகள் கொண்ட பந்திகள். சின்னச் சின்னக் கதைகள். சிறிய அளவான நூல்கள். 


பேச்சுப் போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டுமென எனத் தந்தையார் விரும்புவார். சிவராமலிங்கனார் எனக்குப் பயிற்சி அளித்தார். பேச்சுக்கலை எனக்குரியது அன்று என அப்பொழுதே அறிந்து கொண்டேன். 


தமிழைச் செம்மையாக எழுதக் கற்றுத்தந்த தொடக்க ஆசிரியர் சிவராமலிங்கனார். வழிகாட்டியவை கிருபானந்த வாரியார் நூல்கள். தமிழ் எழுத்துகளை தொடர்ச்சியாக வாசிக்கும் வாய்ப்பை தந்தவர் என் தந்தையார். அவர் தமிழ் நூல்களைப் பதிப்பித்தார். மெய்ப்புப் பார்க்குமாறு என்னிடமும் சொல்வார்.


அக்காலத்தில் என் தந்தையாரிடம் தமிழ்ப் புலவர்கள் எழுத்தாளர் பலர் வருவார்கள். புலவர் ந சிவபாதசுந்தரனார், வித்வான் க ஆறுமுகம், வித்துவான் க ந வேலன், வித்வான் பொன் முத்துக்குமாரன், வித்துவான் கார்த்திகேயன், வித்துவான் நடராசா, நீர்வை பொன்னையன், புதுமைலோலன், டொமினிக் ஜீவா, வரதர், ஆங்கில ஆசிரியர் வீரசிங்கம், இவர்களைச் சந்திப்பது, இவர்கள் தங்களுக்குள்ளேயும் என் தந்தையாருடனும் உரையாடிக் கொண்டிருப்பதைக் கேட்பது, இவர்கள் ஒரு சிலரின் நூல்களைப் பதிப்பித்த காலத்தில் மெய்ப்புப் பார்ப்பதும் எனக்கு கிடைத்து வாய்ப்புகள்.


சிவராமலிங்கனாரின் தமிழ் வகுப்புகளே, வழிகாட்டல்களே என் இன்றைய தமிழுக்கு அடித்தளம். அதற்குப் பின், படிக்கட்டும் பைந்தமிழ் பாடும் பச்சையப்பன் கல்லூரியே தமிழுக்கும் எனக்கும் உள்ள உறவைப் பெருக்கியது. பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன் வழியாகத் தமிழகத்தின் புலவர் பெருமக்கள் பலருடன் பழகும் வாய்ப்பையும் அன்பு பெருக்கும் வாய்ப்பையும் பெற்றேன். பச்சையப்பன் கல்லூரியில் எனக்கு வகுப்பு எடுத்தவர்களுள் பேராசிரியர்கள் மு வரதராசன், அ மு பரமசிவானந்தம், அன்பு கணபதி, சீனிவாசன், சி பாலசுப்பிரமணியன், க பரமசிவன், முருகேசன். அங்கு கற்ற ஆறு ஆண்டுகளில் மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாகத் தமிழ் வகுப்புகளில் படித்தேன். 


சிவராமலிங்கனாரின் தமிழுக்கான அறிமுகமே என் எழுத்துகளில் செம்மையைத் தந்தது. சைவத்தை எழுதினேன். இலங்கைத் தமிழ் அரசியலை எழுதினேன். சமூக மாற்றத்தை நோக்கி எழுதினேன். அறிவியலை எழுதினேன். இலங்கையில் தமிழ்நாட்டில் மலேசியாவில் மொரிசியசில் சிங்கப்பூரில் ஆத்திரேலியாவில் ஐரோப்பாவில் என் எழுத்துக்களை விரும்பி ஊடகங்கள் வெளியிட்டன. நூல்களாகவும் வெளிவந்தன.


பறவைகள் தொடர்பாக அறிவியல் தமிழில் 15 க்கும் கூடுதலான கட்டுரைகள் நான் எழுதி வீரகேசரியில் தொடர்ச்சியாக வெளியாயின. அக்கட்டுரைகள் நூலாயின. அக்கட்டுரைகளில் ஒன்றை இலங்கை அரசின் பாடநூல் தயாரிப்பாளர்கள் எடுத்தனர். 9ஆவது தமிழ்ப் பாட நூலில் 30 ஆண்டுகளுக்கு முன்பு சேர்த்தனர். இக்காலத்தில் அக்கட்டுரை 8 ஆவது தமிழ்ப் பாடநூலில் உள்ளது. 


அயல் மொழிகள் கலக்காமல் அறிவியலைத் தமிழில் அழகாக எளிதாக இனிமையாகப் புரியுமாறு எழுதலாம் என்பதற்கு அக்கட்டுரை சான்று என என்னிடம் கூறியவர் அக்கட்டுரைக்கான ஆசிரியர் வழிகாட்டி தயாரித்தவர்.


கடந்த 30 ஆண்டுகளாக பல இலட்சம் இலங்கைத் தமிழ் மாணவர்களுக்கு அக்கட்டுரை வழிகாட்டியாக இருக்கிறது எனில், அஃதே என் ஆசான் சிவராமலிங்கனாருக்கு என் காணிக்கை.


அவர் பிறந்து நூறு ஆண்டுகள் நிறைந்தன என முகநூலில் நான் படித்து முடிக்கவில்லை, எனக்குச் செய்தி அனுப்புகிறார் பேராசிரியர் சர்வேசுவரன். சிவராமலிங்கனாரின் மகனின் மருமகன்.


செவ்வாய்க்கிழமை மாலை கந்தர்மடம் குமாரசாமி வீதி அறிவகம் சென்றேன். நூறாண்டு நிறைவுற்று நினைவில் வாழும் என் ஆசான் சிவராமலிங்கனாரின் நினைவுகளை மீட்டேன். யாழ்ப்பாணத்தின் மிகச் சிறந்த புலமையாளர் திறமையாளர் ஆற்றலர் கவிஞர் எனப் பல்துறைகளிலும் சிறந்து வாழும் சைவத் தமிழ்ப் பெருமக்கள் நடுவே நானும் இருந்தேன்.

No comments: