Saturday, December 09, 2023

கப்பல் கனவுகளும் நனவாகும்

புரட்டாதி 19 வெள்ளிக்கிழமை (6 10 2023)


கனவுகளும் நனவாகும்


2009 முதலாக காங்கேயன்துறையில் இருந்து நாகப்பட்டினத்திற்கு கப்பல் சேவை வேண்டுமென முயன்று வந்தேன். 2010இல் யாழ்ப்பாணத்தில் நுணாவிலில் என்னைச் சந்திக்க வந்த மாண்புமிகு அமைச்சர் தேவானந்தாவுக்கு இத்திட்ட அறிக்கையைக் கொடுத்தேன். அன்றைய பாதுகாப்புச் சூழலை அவர் நோக்கினார்.


2017ஆம் ஆண்டில் இலங்கை அரசின் ஒப்புதலை மிக எளிமையாகப் பெற்றுத் தந்தவர் வட மாகாணத்தின் மேனாள் ஆளுநர் இரெஜினால்ட் கூரே அவர்கள். சந்தடி இல்லாமல் சலசலப்பு இல்லாமல் அரசு அலுவலர் மட்டத்திலேயே ஆணைகளையும் ஒப்புதலையும் பெற்றவர் கூரே அவர்கள். அவர்களுக்கு இந்த நாள் மிக மகிழ்ச்சியான நாள். ஆனாலும் அதைக் காண்பதற்கு அவர் எம்மோடு இல்லை.


இந்திய அரசின் ஒப்புதலுக்காகத் தில்லி சென்றேன். சென்னை சென்றேன். தில்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் மாண்புமிகு சுஷ்மா சுவராஜ், சென்னையில் தமிழகத் துணை முதல்வர் மாண்புமிகு ஓ. பன்னீர்செல்வம் இருவரும் தடங்கலின்றி அரசு ஒப்புதல்களைப் பெற்றுத் தந்தனர். 


இவர்களுக்கு விதந்துரைத்த இந்நாள் நாகலாந்து ஆளுநர் மேதகு இல. கணேசன் அவர்களுக்கு நன்றி. அந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் மைத்திரேயன் அவர்களுக்கு நன்றி. அக்காலத்தில் கப்பல் துறை அமைச்சரான மாண்புமிகு நித்தின் கட்காரி அவர்களைச் சந்தித்தேன். இணை அமைச்சரான மாண்புமிகு பொன் இராதாகிருஷ்ணன் அவர்களைச் சந்தித்தேன். பெரிதும் உதவினார்கள்.


இந்தியப் பிரதமர் அலுவலகத்தில் ஒப்புதலைப் பெற்று தந்தவர் திரு எஸ் குருமூர்த்தி அவர்கள். அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.


கப்பல் இல்லையே எனத் தேடினேன். தேடலில் உதவிய ஈழநாடு ஆசிரியர் திரு குகநாதன், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்தர், இந்துப் போராளிகள் குழுத் தலைவர் திரு அருண் உபாத்தியாயர், இலங்கைக் குடியரசுத் தலைவரின் மேனாள் செயலர் ஆஸ்டின் பெர்ணாந்தோ, தில்லி உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் இராம் சங்கர் இராஜா, தில்லி ஆட்சிப் பணியர் விஜய இராம்மோகன், கொல்கத்தா திரு தேவ்தத்தாமாஜி, சென்னை கலைமாமணி சசிரேகா பாலசுப்பிரமணியன், இவர்களை நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.


இந்திய அரசு கடல் மாலைத் (சாகர் மாலா) திட்டத்தை உருவாக்கிய பொழுது காரைக்கால் - காங்கேயன்துறைப் பயணக் கப்பல் இணைப்பையும் அதற்குள் ஒன்றாக்கியமையே இந்தத் திட்டத்தின் பாரிய முன்னேற்றம். என் கனவுக்கு நிலையான நனவாக அந்த அறிவித்தல் அமைந்தது. 


மார்கழித் திருவாதிரைக்கு சிதம்பரத்திற்கு இலங்கை வழிபடு பயணிகளுக்குக் கப்பல் தேவை எனவே நான் கேட்டிருந்தேன்.


அந்த ஒற்றைப் புள்ளி விரிந்து விரிந்து இன்று நிலையான காங்கேயன்துறை - நாகப்பட்டினம் பயணிகள் கப்பல் சேவையாக மலர்ந்து முகிழ்த்துப் பயன் தர உள்ளது.


சிவபெருமானின் திருவருளை நெஞ்சார வழுத்துகிறேன்.


நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு 10.10.2023 முதலாகப் பயணிகள் கப்பல்  போக்குவரத்து. 


வடகிழக்குப் பருவப் பெயர்ச்சிக்கான வாடைக்காற்றும் வலசை நீரோட்டமும் கொந்தளிக்கும் கடலும் இடையிடையே புயலுமாய்க் கால நிலை. எனவே கார்த்திகை மார்கழி மாதங்களில் இக்கப்பல் பயணிக்குமா? 


01.11.2023 இக்குப்பின் 31 12 2023 வரை அமையும் காலநிலைக்கேற்பக் கப்பல் பயணமும் அமையும். எனினும் மார்கழி 10 செவ்வாய்க்கிழமை (26 12 2023) மார்கழித் திருவாதிரை அல்லவா? இலங்கைச் சிவனடியார்கள் சிதம்பரத்துக்கு வழிவழியாகச் சென்ற பயணம் அல்லவா? எனவே 20 12 2023 தொடக்கம் கப்பல் சேவையை மீளத் தொடங்குமாறு வலியுறுத்த உள்ளேன்.


இலட்சத்தீவுக்கும் கொச்சினுக்கும் இடையே பயணிக்கும் இந்தியக் கப்பல் கழகத்தின் செரியபாணிக் கப்பல். காங்கேயன்துறை நாலு மீட்டர் ஆழத் துறை. இக்கப்பலோ 150 பயணிகளை ஏற்றிய பின்பும் ஒன்றை மீட்டர் தாழ்வே. எனவே காங்கேயன் துறையிலும் நாகப்பட்டினத்திலும் பயணிகள் நேரே கப்பலில் ஏறலாம் இறங்கலாம். (இக்காலத்தில் காங்கேயன்துறைக்கு வரும் சொகுசுச் சுற்றுலாப் பயணிகள் கப்பல் தொலைவில் நிற்கும், நங்கூரமிடும், படகுகளிலேயே பயணிகள் துறைக்கு வருவர்.)


150 பயணிகள். குளிரூட்டிய அறைக்குள். 50 கிலோ பொதி ஒவ்வொரு பயணிக்கும்.

 

காலை நாகப்பட்டினத்தில் புறப்பாடு. 60 கடல் மைல் (100 கிமீ.) பயணம்.  3 மணி நேரப் பயணம். நண்பகல் காங்கேயன்துறை.


பிற்பகல் காங்கேயன்துறையில் புறப்பாடு. மாலை நாகப்பட்டினம்.


நாகப்பட்டினத்தில் இருந்து பேருந்து மற்றும் தொடர்வண்டிப் பயணமாக இந்தியா முழுக்கப் பயணிக்கலாம்.


ஒரு வழிப் பயணச்சீட்டு ஒருவருக்கு இந்திய ரூபாய் 6500 (இலங்கை ரூபாய் 25,000). 


இக் கப்பல் நாளை சனிக்கிழமை (7 10 2023) நாகப்பட்டினத்தில்.  


வெள்ளோட்டம் (8.10.2023) ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் நாகப்பட்டினத்தில் இருந்து காங்கேயன்துறைக்கு. வெள்ளோட்டப் பயணத்தில் கப்பலில் பணியாற்றும் 14 ஊழியர்களே பயணிப்பர்.


10 10 2023 அன்று தொடங்கும்  கப்பலில் பயணிக்கச் சீட்டுகளுக்கு இந்தியாவில்: KPV Shaik Mohammed Rowther, 41 இலிங்கிச் செட்டித் தெரு, சென்னை +91 44 25244353. இலங்கையில்: ஆஷா கப்பல் Asha Agencies, 72C பௌத்தலோக மாவத்தை பம்பலப்பிட்டிச் சந்தி +94 11 2503313.


கனவு காணுங்கள், கனவு காணுங்கள், கனவுகள் நனவாகும் உங்கள் வாழ்நாளிலேயே என்பதற்கு, சிவபெருமான் சிவனடியார்களுக்குத் துணை நிற்கிறார் என்பதற்கு, வேறு என்ன சான்று?

No comments: