புரட்டாதி 23, செவ்வாய்க்கிழமை (10 10 2023)
இன்று நாகப்பட்டினம் துறைமுகம் சென்றேன்.
சென்னையிலிருந்து வந்த தமிழ்நாடு கடல் சார் வாரியத்தின் மூத்த ஆட்சியர் கப்பித்தான் ம. அன்பரசன் தலைமையில் துறைமுகத்தார் என்னை வரவேற்றனர். பொன்னாடை போர்த்தினர்.
கப்பலின் உள்ளும் புறமும் காட்டினர். பயணிகளுக்கான வசதிகளை விளக்கினர். இதைவிட வசதியாக ஒருவர் பயணிக்க முடியுமா? சிவபெருமானின் கொடை அந்தக் கப்பல். எனவே நெஞ்சம் நெகிழ்ந்து அடியவனாக நிலத்தில் வீழ்ந்து வணங்கினேன்.
பயணிகளுக்கு இந்தியாவின் முகமான குடிவரவு, குடியகவல்வு, சுங்கம், பாதுகாப்பு, தொடர்பான ஏற்பாடுகள் கட்டமைப்புகள் ஒழுங்குகள் யாவையும் ஒவ்வொன்றாகத் காட்டினர்.
தொடக்க விழா நிகழ்ச்சிக்கான மேடை, பந்தல், தட்டிகள் பணிகள் நடைபெறுகின்றன.
பயணத் தொடக்க நாள், ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு காரணத்துக்காகவே தள்ளிப் போகிறது.
காரணங்கள் வலுவானவை. எனவே அவற்றை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இவ்வளவு செய்கிறார்களே எனச் சார்ந்த அனைவரையும் பாராட்ட வேண்டும். கடந்த 20 நாள்களாக இந்தப் பயணச் சேவையின் வெற்றிக்காகத் துறைமுகத்தார் கடுமையாக உழைத்திருக்கிறார்கள்.
தொடக்க விழாவில் இலங்கை அமைச்சர் மாண்புமிகு தேவானந்தா காணொளி மூலம் பேசுவார் என்றார்கள்.
விழாவில் நான் முன்வரிசையில் இருப்பேன். கப்பலை வழியனுப்பிய பின் சென்னை திரும்புவேன்.
தலைப் பிரசவம் போல, நாகப்பட்டினத்தில் இருந்து காங்கேயன்துறைக்குப் பயணிகள் கப்பல் புறப்படும் நிகழ்வு.
தாயும் சேயும் நலமாக வாழ வேண்டும் என்று வாழ்த்துவதே சைவத் தமிழரின் வரலாற்று மரபு. கப்பலும் பயணங்களும் நலமாக வளமாகத் தளராது இடையூறின்றிப் பாதுகாப்பாகத் தொடர வேண்டுமென நெஞ்சார வாழ்த்துவோம்.
குறைகளைத் தூக்கிப் பிடிக்காமல் நெஞ்சார வாழ்த்துவோம்.
No comments:
Post a Comment