ஐப்பசி 16 வியாழக்கிழமை (02 11 2023)
அனுப்புநர்:
இலங்கையில் வாழ்கின்ற 35 இலட்சம் சைவத் தமிழ்ச் சார்பாளர் சிவ சேனை
பெறுநர்:
மாண்புமிகு நிர்மலா சீதாராமன் அவர்கள்
இந்திய நிதி அமைச்சர்.
அன்புடையீர்
வணக்கம்
காவிரிக் கரையில் பிறந்து, யமுனைக் கரையில் கோலோச்சும் தமிழ்த்தாயின் தவ மகளே, தில்லிக்கு அரசி ஆனாலும் எனக்கு மகளே எனத் ஈழத் தமிழ்ச் சைவரின் தாயுமான தமிழ்த் தாய் இறும்பூது எய்துகிறாள்.
சைவத் தமிழ்த் தாயகமான திருகோணமலைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் வருகை தருகிற உங்களை நெஞ்சார வரவேற்கிறோம்.
1. 1964, 1974, 1976, 1987 ஆகிய நான்கு இலங்கை இந்திய உடன்பாடுகள்.
இவற்றுள் முதல் மூன்றும் முழுமையாக நிறைவேறிய உடன்பாடுகள். இலங்கைப் பெரும்பான்மைப் புத்த சிங்கள மக்களுக்கு நன்மை என்பதால் இவை மூன்றையும் நிறைவேற்ற இலங்கை முழுமையாக ஒத்துழைத்தது.
இலங்கைப் பெரும்பான்மைச் சிங்கள புத்த மக்களுக்குத் தீமை என்றும் இலங்கைச் சைவத் தமிழ் மக்களுக்கு நன்மை என்றும் தவறாகக் கருதிய இலங்கை அரசாங்கம் 1987 உடன்பாட்டை நிறைவேற்றவில்லை.
இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு இதுவும் ஒரு காரணம்.
இலங்கைச் சைவத் தமிழ் மக்களின் மரபு வழித் தாயத்தைத் தனி மாகாணம் ஆக்கி, உடன்பாட்டில் உள்ளவற்றை நிறைவேற்றினால் இலங்கையானது பொருளாதார நெருக்கடியில் இருந்து படிப்படியாக விலகும். இலங்கைப் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க நீங்கள் பொருளாதார உதவி, கடன், நன்கொடை, வழங்குவதை விட்டு, இலங்கை இந்திய 1987 உடன்பாட்டை முழுமையாக நிறைவேற்றுமாறு அழுத்தம் கொடுத்தால், பொருளாதார வீழ்ச்சியில் இருந்து இலங்கையை மீட்டெடுக்கலாம்.
2. இந்தியாவில் இருந்து மத மாற்றிகள் இலங்கைக்குப் படையெடுக்கிறார்கள். சிவசேனையினராகிய நாங்கள் அவர்களை வழிமறித்துத் திருப்பி அனுப்புவதற்கு இலங்கை அரசின் உதவிகளைப் பெற்றுள்ளோம். இந்திய மத மாற்றிகளை இலங்கைக்கு அனுப்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
அவ்வாறே இந்தியாவில் மதமாற்றும் முயற்சிகளுக்கு இலங்கையைத் தலைமையிடமாக கொண்டு செயல்படும் திருமதி சாவித்திரி சுமந்திரன் இந்தியாவில் 30,000 மதமாற்றும் தொண்டர்களுக்கு நிதி, பயிற்சி ஆதரவு அளித்து வருகிறார். அண்மையில் (Last week of August 2023) மெதடித்த திருச்சபையைச் சேர்ந்த
Mr. Anketell Arulanada என்ற மதமாற்றி இலங்கையில் இருந்து தில்லிக்கு வந்த பொழுது இந்திய அரசு அவரைத் திருப்பி அனுப்பியது.
மதமாற்றிகளை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பாதீர்கள். இந்தியாவிற்கு வருகின்ற இலங்கை மதமாற்றிகளைத் திருப்பி அனுப்புங்கள்.
3. யாழ்ப்பாணம் மாவட்டம் காங்கேயன்துறையில் இருந்து சென்னைக்கு வானூர்தியும் நாகப்பட்டினத்துக்குக் கப்பலும் இந்திய அரசின் பெரு முயற்சியால் தமிழ்ச் சைவ மக்களுக்குக் கிடைத்த பெரிய பேறு. இந்திய அரசுக்கு நாங்கள் நன்றி சொல்கிறோம். இலங்கையில் இருந்து வருகின்ற சைவத்தமிழ் வழிபாட்டுப் பயணிகள், இலங்கை ரூபாயை இந்திய ரூபாயாக மாற்றுவதற்கு (அமெரிக்க டாலருக்குப் போகாமல்) இறங்கு துறைகளில் வங்கி வசதிகள் செய்து தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
4. யாழ்ப்பாணத்தில் இந்திய அரசின் கலாச்சார மண்டபம் பெரிய பேறு. இந்திய அரசுக்குச் சைவத் தமிழ் மக்களின் நெஞ்சார்ந்த நன்றி. அந்த மண்டபம் முறையாகப் பயனற்று இருக்கின்றதே. இந்தியாவின் பாரதீய வித்தியா பவன் அமைப்பு அந்த மண்டபத்தைப் பொறுப்பேற்று கலாச்சாரப் பண்பாட்டுப் பயிற்சி வகுப்புகளை (இலண்டனில் நடத்துவது போல்) யாழ்ப்பாணத்திலும் நடத்த ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தங்களது சைவத்தமிழ்த் தாயக வரவு மகிழ்ச்சியானதாக இனிமையானதாக அமைய வாழ்த்தி அமைகிறோம்.
நன்றி
அன்புடன்
இலங்கைச் சைவத் தமிழர்கள் சார்பில்
சிவ சேனை
No comments:
Post a Comment