Saturday, December 09, 2023

குஷ்பு விடுதலைப்புலிகள்

 19.11.2023

திருமதி குஷ்புவும் விடுதலைப் புலிகளும்


சட்டைப் பையில் மருந்துத் துண்டை வைத்திருந்தாலே கைது செய்கின்ற கொடுமையான அரசு என்றார் திரு. பழ. கருப்பையா அவர்கள்.


மருந்துப் பட்டியலை வைத்திருந்தோம். 

விடுதலைப் புலிகளுக்காக அனுப்ப முயன்றோம்.

என்ற குற்றச்சாட்டில் சிறையில் என்னை இட்டபொழுது திரு பழ கருப்பையா அந்த அறிக்கையை வெளியிட்டார். 


அப்பொழுது கலைஞர் கருணாநிதி முதலமைச்சர்.  என்னோடு மிக அன்பாகப் பழகியவர். எனினும் என்னைச் சிறையிட்டார்.


இந்த நிகழ்ச்சி தமிழ்நாட்டில் பலரை மனத்தளவில் பாதித்தது. 


மனம் குமுறிய திரைப்பட இயக்குனர் புகழேந்தி இந்த நிகழ்ச்சியைத் தளமாகக் கொண்டு காற்றுக்கென்ன வேலி திரைப்படத்தை இயக்கித் தயாரித்தார்.


அந்தப் படத்தைத் தணிக்கைக் குழு தடுத்தது. திருத்தம் செய்து மீண்டும் வெளியிட அரசுத் தடை. 


தெருவில் பல போராட்டங்கள். நடுவர் மன்றத்தில் பல வழக்குகள். விடுதலைப் புலிகள் சார்பானது என்பதால் இயக்குனர் புகழேந்தி இத்தகைய இன்னல்களைத் தொடர்ந்து சந்தித்தார்.


ஒருவாறு படத்தை வெளியிட்டார். ஆனாலும் அவருக்குப் பொருட் பேரிழப்பு.


அப் படத்தில் குஷ்புவே கதாநாயகி.

விடுதலைப்புலிகள் சார்பான படம் எனத் தெரிந்திருந்தும் அதில் நடித்தார். 


இயக்குனர் புகழேந்தியைப் பேட்டிகண்ட திரு ஐங்கரநேசன்  (பின்னர் வடமாகாண அமைச்சர்) இதை முழுப் பக்கக் கட்டுரையாக அன்றைய இலங்கை நாளிதழ் ஒன்றில் வெளியிட்டிருந்தார். 


"சச்சிதானந்தனின் கைது மனத்தளவில் என்னைப் பாதித்தது. அதற்கேற்ற திரைக்கதையை எழுதினேன் குஷ்புவை அணுகினேன் அவரிடம் திரைக்கதையைச் சொன்னேன் எவ்வித தயக்கம் இன்றி உடனே ஒப்புக் கொண்டார்" இயக்குனர் புகழேந்தி சொன்னதாக இந்தச் செய்தியை ஐங்கரநேசன் இலங்கை நாழிதளில் எழுதி இருந்தார்.


அதன்பின்னர் காற்றுக்கென்ன வேலி திரைப்படத்தைக் கிளிநொச்சியார் காட்டாத இடமேயில்லை. இயக்குனர் புகழேந்தியையும் கிளிநொச்சிக்கு வரவழைத்துப் பாராட்டினார்கள்


இதற்காகக் குஷ்புவைப் பாராட்ட வேண்டாமா? நன்றிக் கடன் இல்லாதவர்களா?

No comments: