Saturday, December 09, 2023

குச்சவெளி புத்தம்

 ஊடகத்தாருக்கு


ஆவணி 18 திங்கள் (04.09.2023)


தவறான தகவல் தந்தார்? அமைச்சர் விதுரர்.


குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவு. அங்கு 10 நிலதாரிப் பிரிவில் 238 சிங்களவர். 10 சிங்களவருக்கு ஒரு புத்த விகாரை. மொத்தம் 23 புத்த விகாரைகள். கட்டுவதற்கு அரசு ஒப்புதல்.


மாண்புமிகு அமைச்சர் விதுரர் விக்கிரமநாயக்கர் ஊடகத்தாருக்குக் கொடுத்த கணக்கு. சாட்சியாக 03.09.23 செய்தி வெட்டு இணைப்பில்.


குச்சவெளிப் பிரதேச செயலகப் பிரிவுக்கான 2019ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணிப்பு விவரங்களைத் தருகிறேன்.


குச்சவெளியில் 24 நிலதாரிப் பிரிவுகள்.


இவற்றுள், 

கோபாலபுரம் 

கும்புறுப்பிட்டி வடக்கு 

வீரஞ்சோலை 

காசீம் நகர் 

கல்லம்பற்றை 

புல்மோட்டை 03 

ஆகிய ஆறு நிலதாரிப் பிரிவுகளில் புத்தரோ சிங்களவரோ இல்லை.


வேலூர் 

நிலாவெளி 

இறக்கண்டி 

குச்சவெளி 

கட்டுக்குளம்

இரணைக்கேணி

கும்புறுப்பிட்டி தெற்கு 

பெரியகுளம்

தென்னமரவடி

ஆகிய 9 நிலதாரிப் பிரிவுகளிலும் 18 புத்தர், 17 புத்தர் அல்லாதோர், ஆக 35 சிங்களவர்.


வாழையூற்று 

இக்பால்நகர் 

புல்மோட்டை 02

திரியாய் 

செந்தூர் 

புல்மோட்டை 01 

செயாநகர் 

கும்புறுப்பிட்டி கிழக்கு

புல்மோட்டை 04

ஆகிய 9 நிலதாரிப் பிரிவுகளிலும் 926 சிங்களவருள் 437 புத்தர்.


961 சிங்களவருள் 455 புத்தர் குச்சவெளிப் பிரதேச செயலகப் பிரிவில்.


மொத்த மக்கள் தொகையில் 

1% புத்தர்.  

2.3% சிங்களவர்.


குச்சவெளியில் 

41,821 மக்களுள்

27,553 முகமதியர் 66%

11,743 சைவர் 28%

2,070 கிறித்தவர் 5%

455 புத்தர் 1%


விதுரர் விக்கிரமநாயக்கர் கணக்கைத் திருத்துவாரா?


66% முகமதியருக்கு 

38 மசூதிகள் 

27 மதராசாக்கள் 

2 அகதியாக்கள் 

1 அரசு சார்பற்ற நிறுவனம்


28% சைவர்களுக்கு 

42 சைவக் கோயில்கள் 

12 அறநெறிப் பாடசாலைகள்


5% கிறித்தவர்களுக்கு 

18 கிறித்தவ தேவாலயங்கள்


1% புத்தர்களுக்கு 

18 பதிவான விகாரைகள்

1 பதிவற்ற விகாரை


19 விகாரைகள் 

5 புல்மோட்டை 01 

3 புல்மோட்டை 04

3 கும்புறுப்பிட்டி கிழக்கு

2 குச்சவெளி

1 கசீம் நகர்

1 கட்டுக்குளம்

1 புல்மோட்டை 02

1 தென்னமரவாடி

1 செயாநகர்

1 திரியாய்


புத்தர்களே இல்லாத பிரதேசத்தில் புத்த விகாரைகளை யாருக்காகப் புதிதாக கட்டுகிறது அரசு? 23 புத்த விகாரைகள் கட்டுவதற்கு 230 கோடி ரூபாய் தோராய மதிப்பீடு. 455 புத்த வழிபாட்டாளர்களுக்கு 230 கோடி ரூபாய் செலவு. 


குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவில் வாழும் ஒவ்வொரு புத்தருக்கும் 50 லட்சம் ரூபாய் செலவு. வழிபாட்டு உரிமைக்கான செலவு. போரில் வெற்றி பெற்ற புளங்காகிதத்தில் வீராப்பில் புத்த சமயத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் இலங்கை அரசின் செலவு.


அடுத்து வரும் மாதங்கள் உணவுத் தட்டுப்பாடு. கட்டாய தேவைப் பொருள்களின் விலையேற்றம். ஏலவே அதல பாதாளத்தில் பொருளாதாரம். 


அற வழி தவறிய புத்தர். மனநோயாளி மத வெறியர். பொருளாதார முன்னேற்றமா, சிங்கள புத்த மேலாதிக்கமா என்ற வினாவுக்கு, சிங்கள புத்த மேலாதிக்கமே என அடித்துக் கூறும் அறிவை அடகு வைத்த அரசியல்வாதிகள்.


விதுரர் விக்கிரமநாயக்கருக்குச் சொல்கிறேன். தம்பதெனியா கம்பளை கோட்டை முச்சிங்கள அரசுகள் மகா சாமிகளை நியமித்தன. வழிகாட்டலைப் பெற்றன. "கட்டிக்காவத" எழுதின. 


அறத்தை மீறிய தருமத்தை மீறிய வினையை மீறிய அபிதருமத்தை மீறிய புத்த பிக்குகளை அடக்கின. அங்குலிமாலாவைப் படித்த பின்பும் தலையைக் கொய்வேன் என்கின்ற புத்தரைத் தண்டித்தன. தம்ம பதத்தை வாழ்வியல் ஆக்கின.


மூன்றாம் விசயபாகு தொடக்கம் ஏழாம் புவநேகபாகு வரை ஒவ்வொரு அரசரும் அறத்தை மீறும் புத்த பிக்குகளுக்காகக் "கட்டிக்காவத" எழுதினர். அரசாணை ஆக்கினர். 


காசியப்பர் வழியில் அசாதசத்துரு வழியில் அசோகர் - முல்கிரிப்புத்தர் வழியில் வட்டகாமினி வழியில் விதுரர் விக்கிரமநாயக்கரே ஏழாவது புத்த சங்கத்தை கூட்டுக. அறத்தை மீறும் வினையை மீறும் அபிதருமத்தை மீறும் புத்தர்கள் அனைவரையும் புத்த சமயத்துக்குள் மீட்டு வருக.


புத்த விகாரைகள் மன ஒடுக்கத்தின் திருக்கோயில்கள். மன இருள் போக்கும் அருட் கோயில்கள். புத்த விகாரைகளைக் கட்ட முன்பு புத்தர்களை மீள உருவாக்குங்கள். 


யாம் இரப்பவை நின்பால் அன்பும் அருளும் அறனும். (சங்கத் தமிழ்ப் பாடல் வரி). பொய்யும் புரட்டும் ஏமாற்றும் களவும் வெறுப்பும் விதைக்கின்ற நிலையை மாற்றுக. அன்பையும் அறத்தையும் அருளையும் பெருக்குக, விதுரர் விக்கிரமநாயக்கர் அவர்களே. புத்த தேசத்தின் புனிதத் தந்தையாக உங்களை வரலாறு போற்றும்.

No comments: