Sunday, July 12, 2020

சைவத்துக்கு முன்னுரிமை

முல்லைத்தீவில் மருத்துவராக இருக்கிறார்.
மருத்துவ நிலையம் ஒன்றை அமைத்துச் செவ்வனே நடத்தி வருகிறார்.

முல்லைத்தீவில் மருத்துவர் சிவமோகன் ஆற்றும் பணிகளைப் பாராட்டாமல் இருக்க முடியாது. மருத்துவப் பணிகளுக்கு அப்பால் தான் சார்ந்த சமூகத்திற்கு, தன் நேரத்தையும் அறிவையும் திறமையையும் பயன்படுத்த, மக்களின் சார்பாக இலங்கை நாடாளுமன்றத்திலும் உறுப்புரிமை பெற்றுப் பணிபுரிந்திருக்கிறார் மருத்துவர் சிவமோகன்.

அவர் பெயரிலேயே புதைந்திருக்கும் சைவத்தின் மாட்சி சிவபெருமானின் ஆட்சி.

எனவே வன்னித் தேர்தல் மாவட்டத்தில் சைவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பேன் என அவர் கூறியிருக்க வேண்டும் அவ்வாறு அவர் கூறவில்லை.

கத்தோலிக்கருடைய நன்மையைப் பேணுவேன். இயேசு இறைத்தூதர் எனத் தன்னைத் தானே அழைத்துக் கொண்டாலும் அல்ல அல்ல இயேசு கடவுள் சிவபெருமான் அவருக்கு ஒப்பான கடவுள் என இயேசுவையும் அவமதிப்பேன். சிவபெருமானையும் அவமதிப்பேன் நாடாளுமன்றத்தில் இவ்வாறு பேசுவேன் என்றவர் செல்வம் அடைக்கலநாதன்.

செல்வம் அடைக்கலநாதன் சாள்ஸ் நிர்மலநாதன் வடமாகாணசபை உறுப்பினர் தினேசுவரன் போன்றோர் கத்தோலிக்கர் நலம்பெற முனைப்புடன் செயலாற்றுகின்றனர்.

முகமதியர்களின் நலனைப் பேணுவோம். இருப்பைப் பாதுகாப்போம். பெருக்கத்தை உறுதி செய்வோம். புதிய குடியேற்றங்களை அமைப்போம் என்று முனைப்புடன் பணியாற்றுவோர் வன்னித் தேர்தல் மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த காதர் மசுத்தான் இரிசாத்தர் பதியுதீன் ஆகியோர்.

வன்னித் தேர்தல் மாவட்டத்தில் சைவ மக்களுக்காக குரல் கொடுப்பேன் என மருத்துவர் சிவமோகன் ஒருமுறையேனும் சொன்னதில்லை. 

திருக்கேதீச்சர வளைவு உடைப்பை நேரில் பார்த்துச் செப்பனிட அக்கால இந்து சமய விவகார அமைச்சர் மாண்புமிகு மனோ கணேசன் அவர்கள் மன்னார் மாவட்டம் வரவேண்டும் என்கிறார். மன்னார் ஆயர் அவரைச் சந்திக்கத் தவிர்க்கிறார். செல்வம் அடைக்கலநாதன் சாள்ஸ் நிர்மலநாதன் இருவரும் அமைச்சரை மன்னாருக்கு வர விடாமல் தடுக்கிறார்கள்.

வன்னித் தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் சைவர்களுக்காகத் தலையிடவில்லை. 

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஏறத்தாழ 5,000 வாக்குகளை மன்னார் மாவட்டத்தில் பெற்று வெற்றி பெற்ற மருத்துவர் சிவமோகன் சைவர் நலம் பேண மாண்புமிகு மனோ கணேசனை அழைத்து வரவே இல்லை.

சைவத்தின் மாட்சியாகச் சிவபெருமானின் ஆட்சியாகத் தனது பெயரைச் சிவமோகன் என வைத்திருப்பவரைப் பாராட்ட வேண்டும். ஆனால் சைவர்களுக்காகக் குரல் கொடுக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டும். 

திருக்கேதீச்சர வளைவு உடைந்த பின்பு எத்தனை முறை அவர் திருக்கேதீச்சரம் வந்தார்? நிலையை பார்வையிட்டார்? வளைவை மீண்டும் கட்டுவதற்குரிய வழிகளைக் கையாண்டார்? என யாராவது எனக்குச் சொல்ல முடியுமா?

மன்னார் மாவட்டத்தில் உள்ள சைவத் திருக்கோயில்களுக்கு மருத்துவர் சிவமோகன் நிதி ஒதுக்கினார் என்ற கருத்தை முன்வைக்கிறார்கள். நாடாளுமன்ற உறுப்பினருக்கு மக்கள் வரிப்பணத்தில் ஒதுக்கும் நிதியை அனைத்துச் சமயக் கோயில்களுக்கும்  பங்கிடுகிறார்கள். சைவர்களுக்கும் ஒதுக்குகிறார்கள். இதை எந்த நாடாளுமன்ற உறுப்பினரும் செய்வார். மருத்துவர் சிவமோகனின் நாடாளுமன்ற நிதி ஒதுக்கீட்டில் கத்தோலிக்க கிருத்தவ திருக்கோயில்களும் நன்மை பெறவில்லையா?

மருத்துவர் சிவமோகன் சைவ வாக்குகளைத் தேடி வவுனியாச் சைவ அமைப்புகளின் தலைவர்களிடம் சென்றிருக்கிறார். மன்னார்ச் சைவ அமைப்புகளின் தலைவர்களிடம் கோரியிருக்கிறார்.

வேம்பையும் பாம்பையும் வழிபடும் உங்களுக்கு விவேகானந்தர் சிலை ஏன்? என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், செட்டிகுளம் சைவரிடம் கேட்டபோது மருத்துவர் சிவமோகன் தலையிட்டாரா? விவேகானந்தர் சிலை அமையவேண்டும் என்று வாதிட்டாரா?

வீட்டுக்கு வாக்களித்தோம் சைவர்களின் கேட்டுக்கு வாக்களித்தோம் எனச் செட்டிகுளம் சைவர்கள் அழுதுகொண்டு அரற்றுகின்றனர்.

திருக்கேதீச்சர வளைவு உடைப்பில் தளையிட்டோரைப் பிணையில் எடுத்தவர்களின் பெயர்களைப் பார்த்தபின்பு,  வீட்டுக்கு வாக்களித்தோமா? சைவர்களின் கேட்டுக்கு வாக்களித்தோமா? திருக்கேதீச்சர வளைவிக்கும் தள்ளாடிப் பிள்ளையார் கோவிலுக்கும்  மூன்றாம் பிட்டி அம்மன் கோயிலுக்கும்  வெள்ளாங்குளம் பிள்ளையார் கோவிலுக்கும்  நானாட்டான்  அரிப்பு  சிலாவத்துறை  சைவ வழிபாட்டு இடங்களுக்கும் வேட்டுவைக்க வாக்களித்தோமா? என மன்னார் மாவட்டச் சைவர்கள் ஆற்றாது அழுத கண்ணீர் விட்டு அழுதார்கள்.

வவுனியா நகரத்தில் செட்டிகுளத்தில் மாந்தை மேற்கில் மன்னார் நகரத்தில் நானாட்டானில் முசலியில் மடுவில் வாழ்கின்ற சைவப் பெருமக்கள், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வீட்டுக்கு வாக்களித்தோமே சைவர்களின் கேட்டுக்கு வாக்களித்தோமே சைவ வழிபாட்டு இடங்களை வேட்டுவைக்க வாக்களித்தோமே எனத் தங்கள் தவறை உணர்ந்து கொண்டார்கள். தலையில் அடித்துக் கொண்டார்கள்.

திருக்கேதீச்சரப் பெருமானை வழிபட்டனர். மன்னார் மாவட்டச் சைவ குருமார் ஒன்றியத்திடம் சென்றார்கள். எங்களைக் கைவிடாதீர்கள் எனக்கேட்டனர்.

சைவர்களுக்குத் தனியான நாடாளுமன்ற உறுப்பினர் தேவை எனக் கேட்டார்கள். வீட்டுக் கட்சியிடம் கேட்டோம். மறுத்தார்கள். எனவே தனியாகப் போட்டியிடுகிறோம் எனத் தமிழ்த்தேசிய சைவ மக்கள் கட்சியை அமைத்தனர்.

சைவ மக்கள் வேண்டுகோளுக்கமைய வன்னித் தேர்தல் மாவட்டத்தில் சைவர்களுக்கான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை தேர்ந்தெடுக்க ஆவன செய்தனர்.

வன்னித் தேர்தல் மாவட்டச் சைவர்களே
மன்னார் மாவட்டச் சைவர்களே

எங்களுக்குள் ஆயிரம் பிணக்குகள் இருக்கும் 
ஆயிரம் குறைகள் இருக்கும்
ஆயிரம் சில்லெடுப்புகள் இருக்கும்

எங்களுக்குள் ஒருவரை ஒருவர் குறை கூறிக் கொண்டு குற்றம் கண்டு கொண்டு இருப்பதற்குரிய நேரம் தேர்தல் நேரம் அல்ல.

சைவ சமயத்தை அழிக்க நினைக்கும் எதிரிகள் 
நிதி வளத்தால் 
ஆளணி வளத்தால் 
அமைப்பு வளத்தால் 
ஒற்றுமை வளத்தால்
உரம் ஏறி உருக்கொண்டு
வன்னித் தேர்தல் மாவட்டத்தில் 
சைவர்களை 
வேரோடும் வேர் மண்ணோடும்
அழித்து ஒழித்துப் புதைக்கக் 
கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

பிணக்குகளை மறந்து இணக்கமாகவும்
குறைகளை மறந்து நிறைவாகவும்
சில்லெடுப்புகளை மறந்து சிலிர்த்து எழுந்து
சைவர்களாக ஒன்றிணைய வேண்டியதே 
காலத்தின் கட்டாயம்.

தமிழ்த்தேசிய சைவ மக்கள் கட்சியினர் இலங்கை வரலாற்றில் முதல் முதலாகச் சைவ சமயத்தை முன்வைத்துத் தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.

கிருத்தவ தேவாலயங்களிலும் முகமதிய மசூதிகளிலும் தீர்மானிக்கிறார்கள். தெற்கே புத்தபிக்குகள் வீடுவீடாகச் செல்கிறார்கள். புத்த சமயத்தைக் காக்க வாக்களிக்குமாறு கேட்கிறார்கள்.

புத்த பிக்குகளின் வழிகாட்டல்களைப் புத்த சமய மக்கள் ஏற்கிறார்கள் .

பாதிரியாரின் வழிகாட்டல்களைக் கிறித்தவ மக்கள் ஏற்கிறார்கள் 

இமாம்களின் வழிகாட்டல்களை முகமதியர்கள் ஏற்கிறார்கள்

சைவக் குருமார் எங்களை வழிகாட்ட முன்வந்திருக்கிறார். வியப்பிலும் வியப்பு. ஏனெனில் திருக்கோயிலுக்கு வெளியே எந்த விவகாரத்திலும் எப்பொழுதும் தலையிடாதவர்கள்.

சைவத்துக்கு தமிழுக்கு தமிழ் தேசியத்திற்கு ஆபத்து என்றதும் புத்த பிக்குகளைப் போல் பாதிரியார்களைப் போல் இமாம்களைப் போலச் சைவக் குருமார்களும் முன்வந்திருக்கிறார்கள்.

பிணக்குகளை மறப்போம் 
குற்றம் கடிதலைக் கைவிடுவோம் 
சைவத்துக்கு முன்னுரிமை அளிப்போம் 
சிவபெருமானை நம்புவோம் 
திருநீற்றைப் பெருமையாகக் கொள்வோம்.

சைவ சமயத்தைச் சார்ந்த சைவப் பேராளராக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை இந்தத் தேர்தலில் வெற்றி பெறச் செய்வோம்.

வீட்டுக்கு வாக்களிப்பது சைவத்தின் கேட்டுக்கு வாக்களிப்பதை ஒக்கும். வீட்டுக்கு வாக்களிப்பது சைவ வழிபாட்டு இடங்களை வேட்டு வைப்பதை ஒக்கும்.

கோடரிச் சின்னத்திற்கு வாக்களிப்போம்
சைவத்தின் மாட்சியை மீட்டெடுப்போம் 

வெல்வோம் வெல்வோம் 

நாளை நமதே 
வெற்றி நமதே 

மறவன்புலவு க சச்சிதானந்தன் 
சிவ சேனை

No comments: