Sunday, July 12, 2020

நீதியரசர் சிவசுப்பிரமணியம்

நீதியரசர் சிவசுப்பிரமணியம் பதவி விலகினார்
மறவன்புலவு க. சச்சிதானந்தன்

திருக்கோயிலில் பூசை.
அடியவர் வழிபட வருகிறார்கள்.
வழிபடுகிறார்கள்.
நம்பிக்கை அவர்களுடைய சொத்து.
கடவுள் மீதுள்ள நம்பிக்கையை வளர்க்க வளர்க்க தன்னம்பிக்கையும் வளரும்.
என் உள்ளத்துள் சிவன் புகுந்தார்,
எனக்கு நல்லன நல்லதாகக் கிடைக்கின்றது.

என் உளமே புகுந்த அதனால் 
ஆசறு நல்ல நல்ல 
அவை நல்ல நல்ல 
அடியார் அவர்க்கு மிகவே 
என்றார் ஞானசம்பந்தர்.

வழிபடுவோர்க்குத் திருக்கோயில் எனவே
வழிபாடுவோரே ஆட்சி செய்ய வேண்டும்.

வழிபடுவோர் உறுப்பினராக வேண்டும்.
சபை அல்லது சங்கம் அல்லது அமைப்பு ஆக வேண்டும்.

தமக்குள் தலைவர் செயலாளர் அறங்காவலர் ஆகியோரைத் தெரியவேண்டும். வழிபடுவோர் திருக்கோயிலை ஆள வேண்டும்.

சைவக் கோயில்களுக்கு இந்தக் கொள்கையை இந்த நடைமுறையைக் கொண்டு வர அரசு விரும்பியது.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் தமிழர் பங்களிப்பின்றிச் சிங்கள புத்த மேலாதிக்க அரசியலமைப்பை 1972இல் நிறைவேற்றி ஆட்சி செய்தவர் சிறீமாவோமாவோ பண்டாரநாயக்கா.

அவரது அமைச்சரவையில் குமாரசூரியர் அஞ்சல் துறை அமைச்சர். இந்தக் கொள்கையைச் சட்ட வரைவு ஆக்கி சைவர்களிடையே கருத்துக் கேட்க விரும்பியது சிறிமாவோ அரசு.

இச் சட்ட வரைவின் நகல் ஒன்றை அகில இலங்கை இந்து மாமன்றத்துக்கு அரசு அனுப்பியது. அக்காலத்தில் அவ்வமைப்பின் தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் சிவசுப்பிரமணியம். பிற பொறுப்புகளில் இருந்தவர்கள் அரசுக் கொள்கை சார்ந்த கே சி தங்கராசா போன்றோர்.

உறுப்பினர்களிடம் கருத்துக் கேட்கலாம். அரசுக்குப் பதில் சொல்லலாம் என அகில இலங்கை இந்து மாமன்றத்தினர் கருதினர். உறுப்பினர்களின் கூட்டத்தைக் கூட்டினர்.

கூட்ட அறிவித்தலின் படி ஒன்றை எனக்குக் காட்டினார். சட்ட வரைவு ஒன்றின் படியையும் தந்தார். கொம்பனித்தெரு சைவ முன்னேற்றச் சங்கம் சார்பில் அகில இலங்கை இந்து மாமன்ற உறுப்பினராக இருந்த ஐ தி சம்பந்தன்.

அதிர்ச்சி, வியப்பு, சினம் என்னை மேவியது. சட்ட வரைவின் வரிகளை ஒவ்வொன்றாகப் படிக்கப் படிக்க உடலில் பதற்றம் பெருகியது. கொடுமை என்றேன் சம்பந்தனிடம்.

அவரும் அவ்வாறே கருதினார். விவேகானந்த சபையின் கந்தசாமி, திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபையின் நமசிவாயம், நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றப் பேரின்பநாயகம் எனச் சிலர் இச்சட்ட வரைவால் எழக் கூடிய தீமைகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பதாக என்னிடம் சம்பந்தன் கூறினார்.

அகில இலங்கை இந்து மாமன்றத்தில் பெரும்பான்மையோர் சட்ட வரைவை ஆதரித்து அரசுக்குக் கருத்துக்கூற இருப்பதாகவும் சம்பந்தன் கூறினார்.

வழிபாட்டு இடங்களில் உள்ள சில பூசகரால் சில அறங்காவலரால் முறைகேடுகள் நிகழ்வதை பல நூற்றாண்டுகளாகப் பார்த்து வருகிறோம். 

மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் ஒப்பவும் முடியாமல் எதிர்க்கவும் முடியாமல் சமூகம் திணறிக் கொண்டிருந்தது.

வழிபாட்டில் நம்பிக்கை உள்ளவர்கள் செல்லும் வழிபாட்டு இடங்களில் முறைகேடு. இவை மகாவீரர் புத்தர் இயேசு பிரான் முகமது நபி போன்றோரின் கவனத்தை ஈர்த்ததால் அவர்கள் கடுமையான செய்திகளைச் சொல்லிச் சென்றிருக்கிறார்கள். வழிபாட்டு இடங்களைத் தூயதாக்க முயன்று தோல்விகளையே சந்தித்தமை வரலாறு.

சிறீமாவோ அரசின் முயற்சி ஒரே கல்லில் இரு காய்களை வீழ்த்துவது. 

சைவ வழிபாட்டு இடங்களை மக்களிடம் ஒப்படைப்பது முதலாவது. 

சைவ வழிபாட்டு இடங்களில் சைவர்கள் அல்லாதோர் பெரும்பான்மையாக வழிபடும் திருக்கோயில்களில் சைவர்களை நீக்கிச் சைவர் அல்லாதவர்களைப் புகுத்திச் சைவத்துக்கு புறம்பான திருவுருவங்களையும் வழிபாட்டு நிகழ்ச்சிகளையும் புகுத்துவது இரண்டாவது. 

சிலாபத்தில் முன்னேச்சரம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான சைவத் திருக்கோயில்களில் வழிபட வருவோர் சைவ சமயத்தவர் அல்லாதவரே.

அகில இலங்கை இந்து மாமன்றம் அரசுக்குத் துணை போகும் என்ற செய்தியைச் சம்பந்தன் என்னிடம் சொன்னார். ஏன் என்னிடம் சொன்னார் என எனக்குப் புரியவில்லை. ஏனெனில் நான் இந்து மாமன்றத்தின் உறுப்பினர் அல்லன். இதைச் சம்பந்தனிடம் சொன்னேன். சச்சி ஏதாவது செய்வோம். அகில இலங்கை இந்து மாமன்றம் சட்ட வரைவுக்கு ஆதரவு கொடுக்க கூடாது என்றார் என்னிடம் அவர்.

தோராயமாக எழுபத்தைந்து இந்து இளைஞர் மன்றங்களை உறுப்பினராகக் கொண்ட இலங்கை இந்து இளைஞர் பேரவைத் தலைமைச் செயலாளராக இருந்தேன். மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றத் தலைவர் சிவநேசராசா பேரவைக்கும் தலைவர்.

கட்டுபெத்தை பொறியியல் கல்லூரி மாணவர் கரவெட்டியைச் சேர்ந்த ஞானானந்தன். ஓய்வு நேரங்களில் எனக்கு உதவிக்கு வருவார். அவரிடம் சட்டவரைவு பற்றிக் கூறினேன்.

அகில இலங்கை இந்து மாமன்றக் கூட்டம் நடக்கும் நாளில் நேரத்தில் இடத்தில் போராட்டம் ஒன்றை நடத்துவோமா? எனக் கேட்டேன்.

20 மாணவர்கள் கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி வளாகத்தில் கூடினோம். ஒவ்வொருவர் கையில் ஓர் அட்டை. எல்லோரும் வேட்டியும் சட்டையும் அணிந்து இருந்தோம். சட்ட வரைவின் படியைக் கையில் எடுத்தோம்.

ஒருவர் பின் ஒருவராக அட்டையைக் கையில் பிடித்தவாறு பம்பலப்பிட்டி சரசுவதி மண்டபத்தை நோக்கி வரிசையாக ஒழுங்காக நடந்து சென்றோம்.

அகில இலங்கை இந்து மாமன்றத்தின் கூட்டம் அங்கு நடந்து கொண்டிருந்தது. தோராயமாக நாற்பது அல்லது ஐம்பது பேர் அங்கு இருந்தனர். நீதியரசர் சிவசுப்பிரமணியம் தலைமையில் கூட்டம்.

 கே சி தங்கராசா அங்கு இருந்தார். எனக்குத் தெரிந்தவர் பலர் இருந்தனர். சம்பந்தன் இருந்தார். கந்தசாமி இருந்தார். நமசிவாயம் இருந்தார். சண்முகராசா இருந்தார். இன்னும் பலர் இருந்தனர்.

20 மாணவர்களும் பல்கலைக்கழக மட்டத்தில் பயில்வோர். பொறியியல் கல்லூரி, சட்டக் கல்லூரி, கொழும்புப் பல்கலைக்கழகம், மருத்துவக்கல்லூரி சார்ந்த மாணவர்கள் அந்த வரிசையில் இருந்தனர்.

அனைவரும் ஞானனந்தனின் நண்பர்கள். அக்காலத்தில் சட்டக் கல்லூரியில் பயின்ற கரவெட்டியைச் சேர்ந்த கந்தையா நீலகண்டன் அந்த வரிசையில் வந்தார். வரிசை முதல்வனான என்னிடம் ஒரு கையில் அட்டை இருந்தது. மறுகையில் சட்ட வரைவின் படி இருந்தது. சட்டைப் பையில் தீப்பெட்டி ஒன்றும் இருந்தது.

கூட்டத்தைச் சுற்றி மூன்று முறை வலம் வந்தோம். குரல் எழுப்பி முழங்கினோம். வலம்வந்து முடிந்ததும் தலைவரின் இருக்கைக்குப் பின்னே நான் நின்றேன். சட்ட வரைவின் படியைக் கையில் எடுத்தேன். தீப்பெட்டியை எடுத்து அந்தச் சட்ட வரைவைத் தீயிட்டுக் கொளுத்தினேன்.

இதுவே போதும். நீங்கள் இவ்விடத்தை விட்டுப் போங்கள். மீதியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் எனச் சம்பந்தனும் கந்தசாமியும் என்னிடம் கூறினர்.

மாணவர்களை அழைத்துச் சென்றேன். தேனீர்க் கடையில் தேனீர் அருந்தினோம் . அனைவருக்கும் நன்றி கூறினேன் அவர்கள் கலைந்து சென்றனர்.

ஞானானந்தன் இப்பொழுது ஆத்திரேலியாவில் இருக்கிறார். சம்பந்தன் பிரித்தானியாவில் இருக்கிறார் கந்தசாமியும் பேரின்பநாயகமும் ஏழாலையில் இருக்கிறனர். சண்முகராசா, நமசிவாயம் , நீலகண்டன் காலமாயினர்.

மறுநாள் சம்பந்தன் என்னை அழைத்தார். சச்சி உங்களுக்கு நன்றி என்றார். சட்ட வரைவை ஏற்பதில்லை என அகில இலங்கை இந்து மாமன்றம் தீர்மானித்தது. ஏற்க வேண்டும் என வலியுறுத்திய தலைவர் நீதியரசர் சிவசுப்பிரமணியம் தன் தலைமைப் பதவியிலிருந்து நேற்று இரவே விட்டு விலகினார்.

பெரும்பான்மையினர் ஆதரவுடன் சட்ட வரைவை ஏற்றுக் கொள்ளலாம் எனக் கருதி வந்த சிவசுப்பிரமணியம் தங்கராசா போன்றோர் ஏமாற்றம் அடைந்ததனர். சச்சி  நீங்களே காரணம். மாணவர்களே காரணம். உங்கள் போராட்டத்தை நாங்கள் எடுத்துக் காட்டினோம்.

மனம் உடைந்த தலைவர் நேற்று இரவே பதவியை விட்டு விலகினார் என்றார் சம்பந்தன்.

அன்று அந்தக் கூட்டத்தில் எரிந்த சட்டவரைவு மீண்டும் இன்றுவரை உயிர் பெறவே இல்லை. தமிழ்த்தேசிய சைவ மக்கள் இருக்கும் வரை இத்தகைய சட்ட வரைவுகள் ஒருபொழுதும் ஏற்றுக்கொள்ளப்படா.

No comments: