வைகாசி 17 2051 (30 5 2020)
மறவன்புலவு சாவகச்சேரி இலங்கை
அன்புக்குரிய அனிருத்தர் அவர்களுக்கு
வணக்கம்.
நெஞ்சம் கனத்துக் கண்கள் பனித்து எழுதுகிறேன்.
10 சிறந்த மனிதர்கள் நடுவே பதினோராவது மனிதர் அல்ல நீங்கள். பல நூறு கலைஞர்கள் நடுவே அவர்கள் அனைவருக்கும் வழிகாட்டியாக முன்னோடியாக இருக்கின்ற கலைஞர் நீங்கள்.
மேடைகளில் உங்கள் வாசிப்புகள் என்னை மயக்கும் பொழுதெல்லாம் உங்களை ஈந்த பெற்றோரை நான் மதிப்புடன் நினைப்பதுண்டு.
மேடைகளில் அவைகளில் அரங்குகளில் முந்தி இருக்கின்ற பெருமையை உங்களுக்குத் தந்தோர் உங்கள் பெற்றோர்.
தந்தையின் கடமை தன் மகனை வளர்ப்பது மட்டுமா?
அவையிலே முந்தி இருக்க செய்கின்ற மாபெரும் பணியைத் தந்தையார் செய்கிறார் என வள்ளுவர் கூறி, அவ்வாறான தந்தையரே இலக்கணமாக வாழ்கின்றார்கள் என்கிறார்.
தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல். (குறள் 67).
மு.வரதராசன் விளக்கம்:
தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும்.
ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் தன் மகனுக்கு ஊட்டி வளர்க்கின்ற தந்தையரை, சான்றோன் ஆக்கும் தந்தையரை, சங்கப்புலவர் பொன்முடியார் கூறுவார்.
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே (புறநானூறு பாடல் 312)
தந்தைக்கு இலக்கணமாக வாழ்ந்த உங்கள் அருமைத் தந்தையாரை நான் பலமுறை சந்தித்திருக்கிறேன்.
மென்மையானவர் மேன்மையானவர் இனிமையானவர் பண்பட்ட நெஞ்சினர்.
நல்ல மகனாக சிறந்த பண்பாளராக கலைகளின் பெட்டகமாக கூர்ந்த வழக்குரைஞராக சிறந்த இல்லத் தலைவனாக உங்களை உருவாக்கிய உங்கள் தந்தையாரை நினைக்கும் தொறும் வியந்து மகிழ்வேன்.
அவர் உங்களை விட்டுப் பிரிந்தார் என அறிந்தேன். நெஞ்சம் கனத்தது. கண்கள் பனித்தன. ஆறுதல் சொல்ல உடன் இல்லையே என வருந்தினேன்.
இள வயதிலேயே கலைமாமணி விருது பெற்ற நீங்கள் விரைவில் கலையுலகில் ஒளிர்ந்து பத்ம விருதுகளைத் தில்லியில் பெறுகின்ற நாளே உங்கள் தந்தையாருக்கு நீங்கள் ஆற்றும் நன்றிக் கடன் நாள் ஆகும்.
பரதநாட்டியக் கலை உலகு பெற்ற ஒளிர்மணியாகி, தலைசிறந்த மாணவர்களை உருவாக்கிய உங்கள் தாயார், நாட்டிய நன்னூல் யாத்த புலவரை அடுத்து, கரணங்களைச் செதுக்கிய சிற்பிகளை அடுத்து, தஞ்சை நால்வர் காலங்களை அடுத்து, இன்றைய தலைமுறையில் நாங்களெல்லாம் மதிக்கவும் அவர் காலத்தில் வாழ்ந்தோம் அவரோடு பணிபுரிந்தோம் என்ற பெருமை அடையவும் வரலாற்றில் வாழ்பவர்.
காரியம் யாவிலும் கைகொடுத்த தன் அருமைக் கணவரை இழந்து நிற்கும் இவ்வேளையில் என் நெஞ்சார்ந்த இரங்கலை அவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மனத்தைத் தேற்றிக்கொண்டு ஆறுதலாக இருங்கள்.
நம்மையெல்லாம் ஆட்டிப்படைக்கும் இறைவன் அருள் உங்கள் தந்தையாருக்கும் உங்கள் இல்லத்தில் அனைவருக்கும் கிடைக்கும்.
நன்றி
வணக்கம்
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
காந்தளகம் யாழ்ப்பாணம்-சென்னை
No comments:
Post a Comment