Sunday, July 12, 2020

மருத்துவர் கதிர்காமநாதன்

அடிமரத்தில் மாம்பழம்.
பறித்துச் சுவைத்தான் சிறுவன். 
இனிப்பாக இருந்தது. 
மற்றொரு பழம் மெல்லிய கிளையில் மேலே நுனியில் தொங்கிக் கொண்டிருந்தது!
எட்டி எட்டிப் பறிக்க முயன்றான்.
எட்டவில்லை. தொங்கித் தொங்கி முயன்றான்.
பறிக்க முடியவில்லை.
அந்தப் பழம் புளிக்கும் என விட்டு அகன்றான்.
எட்டாப் பழம் புளிக்குமா?
தன் இயலாமையை தன் ஆற்றாமையை தன் திறமையின்மையை, 
இனிப்பையே புளிப்பாக்கித் தன்மனத்தைத் தேற்றிக் கொண்டான்.

மல்லிகைப் பூவின் நறுமணம்.
மயக்கும் உணர்வைத் திருமணத்தில்.
என் வீட்டுத் தோட்டத்தில் எல்லாமே மல்லிகை.
நாள்தோறும் நீர் பாய்ச்சி வளர்க்கிறேன்.
எனக்கு அயலவர் எல்லை மதிலுக்கு அப்பால் மல்லிகை வளர்க்கிறார். அவரோடு எனக்குச் சில முரண்பாடுகள். அவர் நல்லவர் வல்லவர். ஆயினும் எனக்கும் அவருக்கும் கருத்து முரண்பாடுகள்.
மாற்றுக் கருத்து உள்ளவர் வீட்டு மல்லிகை சாக்கடையாக நாறுமா? நறுமணமாகப் பூக்குமா?
மாற்றான் தோட்டத்து மல்லிகையின் நறுமணமும் அதே அளவே.

சிவபெருமான் திருக்கழுத்தில் பாம்பு. பாம்பைக் கவ்வும் நோக்கம் கருடனுக்கு. சிவபெருமான் திருக்கழுத்தில் பாம்புக்குப் பாதுகாப்பு.

தன்னைக் கவ்வ முயலும் கருடனைப் பாம்பு கேட்டது, "கருடா சௌக்கியமா?"

"இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே. கருடன் சொன்னது, அதில் அர்த்தம் உள்ளது."

கவிஞர் கண்ணதாசனின் திரைப்பாடல் வரிகளிலிருந்து எடுத்தேன்.

தமிழ்த் தேசிய சைவ மக்கள் கட்சி எனக்கு இனிக்கும் மாம்பழம்.
தமிழ்த்தேசிய சைவ மக்கள் கட்சி நீர் வார்த்து, உரமிட்டு நான் வளர்க்க முயலும் மல்லிகை.
தமிழ்த்தேசிய சைவ மக்கள் கட்சி சிவனின் திருக்கழுத்தில் பாதுகாப்பாக இருக்கும் பாம்பு.

எனக்கு எட்டாத மாம்பழம் புளிக்குமா? 
மாற்றான் தோட்டத்து மல்லிகை நறுமணம் தர மறுக்குமா?
இருக்குமிடத்தில் இருந்துகொண்டால் அனைவரும் நலமாக இருப்போமா? இல்லையா?

என் அருமைத் தம்பி இராசகுமாரன் 
பரந்த அறிவுள்ளவர்.
தனம் குறைந்தவர்.
தளர்வறியா மனத்தர்.
நிறைந்த நெஞ்சினர்.
சைவத்தின் எதிர்காலத்தில் நம்பிக்கையாளர்.
மன்னாரின் சைவ முன்னேற்றத்திற்கு உழைப்பவர். மதிநுட்பத்தால் சொல்கிறார், 
மருத்துவர் கதிர்காமநாதன் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே என.
அந்தக் கருத்தை நான் வரவேற்பேன்.

சைவ மக்களின் வாக்குகளைச் சிதறவிடாமல் 
சிவன் கழுத்தில் பாம்பாகத் தமிழ்த்தேசிய சைவ மக்கள் கட்சி இருப்பதால் 
சைவத் தமிழரின் எதிர்காலம் வன்னித் தேர்தல் மாவட்டம் முழுவதும் கிடைக்கும் சைவத் தமிழரின் வாக்குகளால் ஒளிமயமாகும்.

வீடு வீடாகச் செல்வோம்.
கோடரிச் சின்னத்துக்கு வாக்குகளைச் சேகரிப்போம்.
தமிழ்தேசிய சைவ மக்கள் கட்சியின் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வோம் 

வெல்வோம் வெல்வோம் 

நாளை நமதே 
வெற்றி நமதே 

மறவன்புலவு க சச்சிதானந்தன் 
சிவ சேனை

No comments: