Wednesday, February 24, 2016

வாழி வாழி

பிரான்சு பிரான்சிசு 23.2.2013
தங்கமாய்த் தகதகப்பார் தாம்செயும் செயல்களிலே தடைகள் தாண்டி
எங்கெங்கு சென்றாலும் எப்பணியை எடுத்தாலும் ஏறுமுகமே என்தமிழன்
அங்கதனும் அவ்வாறே ஆற்றலேறாய் அவைதனில் முன்னின்றார் எனக்கேட்டு
பொங்குமகிழ் வெய்தினேன் பூரித்தேன் பிரான்சிசே துணையாரே வாழ்கவாழ்க.

அண்டவெளி ஆராய்ச்சி அதற்கான புதுமைநிலை அங்கதனின் பங்களிப்புக்
கொண்டதெனப் பிரஞ்சுநாடு பாராட்டக் கைதட்டி ஆர்ப்பரித்தேன் அகமகிழ்வைத்
தண்டமிழின் மகனொருவன் தந்தனனே அம்மகனை வாழ்த்திட இக்கவிப்பூச்
செண்டொன்று தந்தனனே என்னருமை பிரான்சிசே கொடுப்பீரே மகிழ்வேனே.



04.09.2018 கயல்விழி மைனா
தங்கத்தில் இழைத்த தாமரையோ
தமிழால் இழைத்த பூச்சரமோ
சிங்கத்தில் ஒளிரும் சிலிர்ப்போ
சீர்மையின் மலர்ச்சி முகமோ
வங்கத்தில் கடலாம் அழகோ
வாரிசு எனக்கு இவளோ
மங்காது மணக்கும் புகழோ
மைனா என்னும் நிலவோ 1

கொஞ்சம் சிரித்தால் குறைவோ
கோபம் கொழித்தல் முறையோ
நெஞ்சம் நிறைக்கும் நினைவோ
நெகிழ்ந்து நிறைக்கும் மகிழ்வோ
பஞ்சாய்ப் பறக்கும் புதிரோ
பார்வை நிறைக்கும் பொலிவோ
நஞ்சும் அமுதாம் நனவோ
நயந்து மயக்கும் மைனாவே 2

சோலையில் கூவும் குயிலோ
சொரியும் பூக்களின் மணமோ
காலையில் பள்ளிக்குச் செலவோ
கல்வியில் சிறக்கும் நினைவோ
பாலையின் பனிமலர்ப் பூக்களோ
பளிங்குப் பிம்பமோ மைனாவோ
மூலையுள் முடங்கா முகிலோ
மூங்கில் குழலின் குரலோ 3

அன்றிலின் இணைவு அறிவோ
ஆம்பல் இதழின் செறிவோ
குன்றினில் விரியும் ஒளியோ
கூத்தனின் அடிகளில் மலரோ
நன்றென நவில்வாய் நாவால்
நானிலம் நயக்கும் மைனாவே
தென்றலின் மெலிதாம் இதமோ
தெய்வமே தந்த பெயர்த்தியோ 4

வண்டலின் மணத்தை அறியாய்
வாடையின் குளிரைத் தெரியாய்
பண்டங்கள் பெட்டியில் அறியாய்
பணியாரச் சுவையைத் தெரியாய்
கொண்டலின் இதத்தை அறியாய்
கோலங்கள் வண்ணம் தெரியாய்
கொண்டனை உலோரலைக் குடியாய்
கொடுத்து வைத்தனை மைனாவே 5

கண்ணுக்குள் புதைந்த கனவா
கனவுக்குள் புதைந்த நனவா
மண்ணுக்குள் புதைந்த மரமா
மரத்துக்குள் புதைந்த விதையா
பண்ணுக்குள் புதைந்த பாடலா
பாடலுள் புதைந்த சந்தமா
எண்ணுக்குள் புதைந்த கணக்கா
கணக்கு விடுகின்ற மைனாவா 6

ஊற்றினில் குதிக்கும் புனலா
உள்ளத்துள் உதிக்கும் உறவா
காற்றினில் கலக்கும் இசையா
கருத்தினுள் இனிக்கும் இயலா
நாற்றினில் விரியும் நெல்லா
நயனத்தில் நவையறு காட்சியா
மாற்றுஇல் பொன்னே மைனா

மயக்கமே பயக்கும் மழலையா 7
ஈசுவரன் தாயார் சிதம்பரத்தம்மாள் 03.05.2018
நிழலாடும் நினைவுகள் நீங்காத நெஞ்சம் அன்று
தழலோடு சென்றநாள் தவிப்பாக நெஞ்சில் சிவனார்
கழலோடு சேர்ந்தநாள் கண்கள் குளமாகத் தாயேநீ
உளமோடு வாழ்த்த நான் வாழ்ந்து வளமுற்றேன்.


ஆளுநர் ரெசினால்டு கூரேக்கு வாழ்த்து 04.04.2018
Spring gale of North
To
Governor of Northern Province

From
Maravanpulavu K. Sachithananthan
(spontaneous translation of my Tamil Greetings by Dr. S. A. Sankaranarayanan, Professor of English, Sashtra University, Kumbakonam)
How concerned have you been to hear the hungry famished kids crying?
While you but take a meagre eat in a drone of flight in interims!
Amid vain worded demagogues that prate useless to no purpose,
You but have acted fruitfully to achieve amazing growth;
From off your tender heart of Mercy moist with compassion
You bent on wiping tears, beam radiant as Sun hailed by the learned greats;
O, Reginald Corey who else than you can be the Spring gale of North!
Can North be blest hale ever with a generous Governor like as yourself!
பசியினால் தவிக்கும் பச்சிளம்
பாலர் காண்பாய்
பறக்குமாம் கூரைக் கொட்டிலில்
உணவு உண்பாய்
விசிறியே சொற்கள் வீணே
வெட்டியாயப் பேசுவார்முன்
வினையினாய் விளைச்சலாய் வியத்தகு
வளர்ச்சி காண்பாய்
கசிவதுன் நெஞ்சில் கருணையால்
கண்ணீர் நீக்கும்
கருத்தினாய் கற்றோர் போற்றும்
கல்விக் கதிரவா
றெசினிலால்டு கூரே யாரே
வடக்கினின் வசந்தனாரே
கிடைக்குமோ ஆட்சி வள்ளல்
வடக்குக்கு உன்னைப்போலே.
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
04.04.2018

மதுரை கிருட்டிணனார் பெயரத்தி நடனம் 17.02.2018
கண்களுள் களிப்பா
கார்மேக அலையா
விரலிடைத் தவழ்தலா
காதுகளுள் தேனா
கதைகளின் வானா
சொற்களின் தேர்வா
மெல்லிதழ் பூவுள்
ஊறிடும் தேனா
அறுசுவைத் திரளா
திகட்டுமே நாவில்
மல்லிகை முல்லை
மலரவிழ் கொன்றை
மணமெலாம் மூக்கா
உடலெலாம் பஞ்சா
உளத்துடன மிதப்பா
சுவையின் நிறைவா
ஒளிப் பாய்ச்சலா
ஊறும் தோய்ச்சலா
ஓசை நயந்ததா
நாற்றம் புகுந்ததா
ஐம்பொறி தயங்கா
ஐம்புலன் மயங்கா
வானம் இறங்கி
நிலம் கலங்கி
மிச்சம் இல்லா
உச்சம் தொட்டதா
தடம்மாறிய கால்களா
குரல்மாறிய பண்களா
தடுமாறிய தாளங்களா
தலைகீழான அரங்கமா
அலையலை தட்டலா

படங்களைப் பார்த்தேன்
நேற்றைய நிகழ்ச்சி
மனமெங்கும் நெகிழ்ச்சி
மேலுள வரிகள்போல்
வேறில்லைப் புகழ்ச்சி
நாள்தொறும் பார்க்க
மனத்தினில் அழற்சி
நாளையும் உண்டா?


நர்த்தகி நடராசருக்குப் பாராட்டு 25.10.2017
சிலையாள் இவளோ? செம்மேனி இவளதோ?
அலையாள் கடலருகே ஆடல் அரசியாய்
தலையான கோலளாய்த் தத்திமி தத்திக்க

மலையாளம் கண்டதே மாண்பார் நரத்தகியை

சிட்னி முருகன் கோயில் சைவ மன்றம் 17.06.2012
வற்றிய குளமும் வறண்ட நிலமும் 
வானமும் பொய்த்துச்
சுற்றிய இடங்களில் சுருண்ட பயிர்களும் 
சூரியக் குளியலும்
முற்றிய பரசமயச் சூழலில் மாரியின் 
மழையெனப் பொழிவார்
நெற்றியில் நீறுடன் சிட்னிப் பெருநகர்ச் 
சேக்கிழார் விழாவார்.
அயலவர் அடிக்க ஆற்றார் ஆழ்கடல்
கடந்தார் ஆத்திரேலில்
மயலிலாச் சைவக் கொள்கை மடிக்குள்ளே 
வைத்துக் காத்தார்
செயலிலே சைவப் பேரவை செழித்தெழும் 
சேயோன் கோயில்
முயலினைக் கடந்த ஆமையாக முயற்சியால் 
சேக்கிழார் விழாவார்.
தடங்களைப் பதித்ததான படங்களைத் 
தந்தீர் கண்டேன்
விடங்கனை வியந்தோர் வரிசைப் படங்களை
விழாவில் போற்றி
முடங்குமோ சைவமென முழங்கிய மாணவர் 
படங்கள் பார்த்தேனையா
இடங்களே மாறினாலும் இளந்தளிர் அரும்பின்
இயல்புகள் மாறாதையா.
இனித்தது இதயம் இன்பம் குவித்ததால் 
உங்கள் செய்தி
பனித்தன கண்கள் புல்லரித்துப் படர்ந்தன 
மேனி எங்கும்
அனைத்துமே மேன்மையாக அமைத்தவர் 
வாழி வாழி
தினையினை விதைத்தீர் அஃதே பனையென 

வளர்க வாழி.

கோப்பாய் சிவத்தாருக்கு 25.05.2012
நல்லன நல்லன நாடும் 
வல்லவர் நாடுபுகழ் நாவலர்
சொல்வலர் சோர்விலர் சிவானந்தர் 
என்ற கோப்பாய் சிவத்தார்
இல்லாள் விசயலட்சுமி இளவல்கள் 
கீதப்பிரியன் கீதசிறீ இணுவிலில்
இல்லம் அமைத்துத் திருநகராக்கி
இறையருள் பெருக்குவர் வாழிவாழி.


அண்ணா கண்ணனாருக்கு 14.05.2017
எண்ணவே இனிக்கும் என்மனம் நிறையும்
உண்ணவே சுவைக்கும் உவப்பிலா அமுதமாம்
கண்ணனே அண்ணா கவிஞராய்த் தந்தபொற்

சுண்ணமே செம்மையே சௌந்தரமே வல்லியாரே

ஈசுவரன் நூல் வெளியீடு 16.03.2017
கட்டினாய் கோயில் அங்கே காகுத்தன் 
துதனுக்கு, கண்கள் மகிழ
முட்டினாய் வானம் அங்கே முயற்சியின் 
சிகரமானாய் மனக் கதவைத்
தட்டினாய் மாந்தர் அங்கே மகிழ்ந்தனர்

மலையகமே பொலிய மவுலித்தேரர்
கட்டினார் புத்தர் அங்கே உன்வழியில்
கொற்றமே தமிழே வாழிநீவாழி

நவரத்தினவேல் நிகழ்வு 24.02.2017
பழையன என்றும் புதியனவாய், 
கனவுகள் மீட்கும் நனவுகளாய், 
இதழ் விரிக்கும் நினைவுகளாய், 
மணம் பரப்பும் மலர்களாய்,
சிதறிய கண்ணாடிப் பொருத்தாக
இணைந்தனர் இவர்கள் வாழிவாழி

நவவித பத்தி நிகழ்வு 24.02.2017
உடலத்தின் மொழிகளே உயிரதன் துடிப்பேயாகிப் புராண
படலத்தின் பாக்களாகிப் பாக்களின் யாப்புமாகி பரதமாம்
நடனத்தின் திலகமாமோ நவவித பத்திகாண மயிலைத்
திடலத்தில் கூடுவீரே தொன்மத்தை நாடுவோரே

தினக்குரல் தனபாலசிங்கத்தாருக்கு 24.02.2017
உலகம் எங்கள் பின்னே என்ற நம்பிக்கை சிதறுமோ?
விலகும் நாடுகள் பட்டியல் தொடக்கமோ? தமிழர் தளர்வரோ
கலகம் ஊட்டிய காலங்கள் மீளுமோ, காற்று மாறுமோ?
நிலமும் நீரும் வானும் காற்றும் தமிழரைத் தாங்குமே

பச்சை அரங்க நக்கீரனாருக்கு 24.02.2017
அச்சமே கொள்ளீர் ஐயா,
அருந்தமிழ் காப்பீர் ஐயா
நச்சினீர் கணிணித் தமிழை
நயமுற வளர்த்தீர் ஐயா
தச்சராய்ச் செதுக்கித் தந்தீர்
தமிழரின் உலகக் கல்வி
பச்சரே நிறைந்து வாழ்வீர்

நோய்களோ நணுகா நும்மை.

இரவி தமிழ்வாணனுக்கு வாழ்த்து 29.01.2017
முந்தையர் முன்னோர் முதுசமாய்த் தந்தனர் செழிப்பின்
சிந்தையர் சிந்தினர் செல்வமாய்ச் செந்தமிழ்ப் பனுவல்கள்
விந்தையோ வியப்போ எனுமாறு இரவியாய்த் தந்தவர்
தந்தையார் தமிழ்வாணர் எழுத்தார் பந்தியில் முந்துமாறே.

மெல்போண் செயராம சர்மாவுக்குப் பதில் 01.01.2017
இரண்டாயிரத்துப் பதினேழே
இன்முகத்துடனே அழைத்துநின்று
திரண்டாயிரமாய்த் திசைமாறிக்
கிறித்தவராய் மாறுகிறார்
வரண்டாரவர் வன்னியெங்கும்
வாழ்வாதாரமின்றி அவருக்கா
இரண்டாயிரத்துப் பதினேழை
இன்முகத்துடன் அழைத்தீர்கள்?

காலாதிகாலமாய் கணித்தவை
கவின்மேலான கணக்கெல்லாம்
ஏலாதிவாங்க வந்துடைத்தார்

வந்தேறியாண்டு கிறித்தவ
மூலாதியாண்டு தந்தார்
முறித்தார் வழமையெலாம்
நாலாதிஅறிந்தவரே நல்லறிவே
நம்மாண்டு தமிழாண்டன்றோ 

ஆறுதிருமுருகன் தாயாருக்கு வாழ்த்து 13.12.2016
கண்ணூறு காயாமல் கண்ணுதலான் அருளாலே
பன்னூறு பல்லாண்டு பல்லாண்டு வாழ்கவென
தொண்ணூறு கண்டாரின் தாளிணைகள் தொழுவேன்
மண்ணூறிப் பயனுறுத்தும் மக்களின் தாயல்லவோ

நரசிம்மன் மைதிலி வாழ்த்து 12.12.2016
அன்றிலாய் இணைந்த நரசிம்மன் மைதிலி காதலில்
ஒன்றினார் உவந்து ஈந்தார் சீமாவை உமாவை
குன்றிலே விளக்கு ஏற்றுநாள்  பரணியின் மைதிலி
என்றுமே இன்றாக மகிழ்ச்சியில் திளைக்க வாழிவாழி

சிவசேனை கசக்குமா? 02.12.2016
விற்பது உப்பானால் விழுவது மழையாமோ?
விற்பது உமியானால் வீசுவது புயலாமோ?
கற்பது தேவாரமானால் உடைவது சிவன்கோயிலோ?
கற்பனைச் சிறகானார் கனவுகளில் சிவசேனையோ?

பேரா. இரா. செல்வகுமாருக்கு வாழ்த்து 29.10.2016
அச்ச மின்றிக் கருத்து உரைக்கும் அறிவியல் ஆசான்
மிச்ச மின்றி ஆய்ந்து மிகாது உரைக்கும் வலவன்
சொச்ச மேதும் விட்டு வைக்கார் சோர்விலர் என்பதால்
உச்ச நிலை எழுத்துக்கு விருதாளர் ஆனார் வாழிவாழி

சந்தோசம் அண்ணாச்சிக்கு வாழ்த்து 25.10.2016
தக்காருக்குத் தக்க விருது தந்தனர் 
தமிழ்ப் பல்கலைக் கழகத்தார்
மிக்காரெவர் உளரிவ் விருதுக்கு 
அண்ணாச்சி சந்தோசம் போன்று
எக்காலமும் தமிழை எடுத்துச் 
செல்லும் ஏந்தலே நின்பெற்றி
முக்காலமும் போற்றி முன்னிற்க 

வாழ்த்துதும் பல்லாண்டு பல்லாண்டு. 

சிவசேனை ஏன்? 16.10.2016
கிறித்தவர்களும் முசுலீம்களும் புத்தர்களும் இந்துக்களை
மறித்தவராய் மதமாற்றம் செய்யராயின் - தெறித்துவிடும்
சிவசேனை சிதறிவிடும் சிறீலங்காவில் அதுவரையே
தவசேனை அதுவன்றோ காண்.

திருமதி குப்புசாமி சுந்தரேசனார்க்கு வாழ்த்து 17.08.2016
அசையாத சொத்தெல்லாம் அயலவர் அபகரிக்க
திசையெங்கும் சென்றவற்றை மீட்கும் = விசையனைப்
பெற்றீர்கள் பேறென்ன வேறெமக்குத் தந்தீர்கள்
கற்றவரைக் கைக்கொண்ட தாய்.

திருநங்கை நர்த்தகியாருக்கு வாழ்த்து 16.10.2016
ஆன்றவிந் தடங்கிய கொள்கைக் கொடுமுடிச்
சான்றோர் வழங்கினர் சால்புக்காய் - சான்றிதழ்
பெற்றதால் பேறுற்றது மணியம்மை பல்கலையே
கற்றவரின் கொற்றவை நர்த்தகீ.

அனைவர் உள்ளமும் தஞ்சையில் மணியம்மை
நினைவுப் பல்கலைக் கழகநிகழ்வில் மதிப்புமுது
முனைவர் பட்டமகள் திருநங்கை திருநடனப்

புனைவுகள் பொலிவில் நர்த்தகியார் வாழிவாழி.


சாவகச்சேரி அருந்தவபாலனுக்கு வாழ்த்து 17.08.2016
பெருந்தவம் செய்தார் எனினும்
பேற்றினை அடைவாரில்லை
பருந்துகள் பறப்பதாலே குஞ்சுக்
கோழிகள் அழிவதில்லை
இருந்தவர் இறப்பதாலே இனங்களும்
அழிந்தே போமோ?
இனப்படு கொலைகள் தாண்டி
இன்றுநாம் இருக்க
அருந்தவம் செய்தோம் அழிவிலும்
ஆக்கம் காண்போம்
அருந்தவப் பாலனாரின் அருந்தவம்
அதற்கே அன்றோ
மருந்தென வந்தார் தென்மராய்ச்
செறிந்த மக்களுள்
மாமனிதர் மனிதநேயர் பல்லாண்டு
பல்லாண்டு வாழிவாழி.

மெல்போர்ண் செயராம சர்மா கவிதைக்கு வாழ்த்து 11.08.2016
சொந்தம் பந்தம் அனைத்தும்
வந்தோம் நல்லூரா முருகா
கந்தையா கந்தனே நீதந்ததிரு 
அருளாலே பறந்து வந்தோமே
தந்தாய் அருட்காட்சி முந்தைநாள் 
முதலாய் எந்தையுநீ என்தாய்நீ
மந்தனம் மகிழ்ச்சி மாக்கருணை
யென்றாரே செயராமர் சிந்தையிலே.

சாவகச்சேரி, கீதாஞ்சலி மகேந்திரனுக்கு வாழ்த்து (04.08.2016)
கொஞ்சலை மழலையில் முகர்ந்து மகிழந்தவர் தமிழில்
கெஞ்சலைப் பேதையில் கேட்டுக் குளிந்தவர் அமிழ்தம்
நெஞ்சினில் வார்க்கும் பெதும்பையாய்க் கண்டனர் தம்கீதையின்
அஞ்சலை தமிழ்த்தின வெற்றியால் மகேந்திரன் இணையர்.

மெல்போண் செயராம சர்மா கவிதைக்கு வாழ்த்து 30.07.2016
எங்கெங்கெல்லாம் நடலாம் என்பதைக் காட்டி
எதையெதையெல்லாம் நடலாம் என்பதைக் கூட்டித்
தங்குதடையற்ற தமிழ்ச்சொரிவை நடுவத்தில் சூட்டித்
தந்ததிலெல்லாம் காலத்தைக் கடக்குமறிவை ஊட்டி.

பசுந்தமிழால் பாமலைகொண்டு வாழ்த்திய 
பாங்கினுக்கு பணிவான நன்றிகள் !

ஐயன் வள்ளுவரை அரவணைத்து
அமைதி நிலையினை உருவாக்கும்
உள்ளமுயர்ந்த உங்கள் பணி
ஓங்கி வளர வாழ்த்துகின்றேன் !
நல்ல பண்பினை உருவாக்க
நாளும் வள்ளுவம் உதவுவதால்
நாட வைப்பதை வாழ்த்துகின்றேன் !

உங்கள் திருப்பணிகள் சிறக்கட்டும் ! 
திக்கெல்லாம்  தமிழ் முழக்கம் ஒலிக்கட்டும் !

      அன்புடன்
  ஜெயராமசர்மா.

இந்தியன் எக்ஸ்பிரஸ் பாலச்சந்தினாருக்கு வாழ்த்து 26.7.2016
அன்றில் பறவையின் அன்புச் சொரியலாய்
தென்றல் தருகின்ற தெம்மாங்குப் பாட்டாய்
இன்றும் கண்டனன் இனிமை முகத்துடன்
என்றும் காண்கிறேன் பாலச் சந்திரனாரை.
http://www.newindianexpress.com/world/V.G.Santhosam-gifts-16-thiruvalluvar-statues-to-Sri-Lanka/2016/07/25/article3546745.ece

கோபிக்கு வாழ்த்து 26.7.2016
இளமையின் ஊஞ்சல் இனிமையின் ஏந்தல் மறவை
வளமையின் வாளிப்பு வாஞ்சையின் பூரிப்பு குன்றாச்
செழுமையின் சேரிடம் செல்லமான வளர்ப்புத் தந்த
குளிர்மையின் கோபியாரே கண்ணனோ நீவீர் இன்று?


சிவகாமிக்கு வாழ்த்து 20.07.2016
Appa,
a good news for you....
I passed my corporate governance exam with distinction
The results came today (20th July 2016)

அஞ்சல் கல்வித் தேர்வில்
மிஞ்சும் புள்ளிகள் பெற்றதைக் 
கேட்டதும் சிவகாமி வாழ்கென
நெஞ்சம் மகிழ்வில் குளிர்ந்து 
கண்ணீர் இமைக்குள் கலுழ்ந்து
கொஞ்சம் பறக்க முயன்று 
சிட்னி நகரை அடையக்

கெஞ்சும் நெஞ்சன் ஆனேன் 

முல்லை அமுதனுக்கு வாழ்த்து 04.07.2016

ஆற்றும் பணிகளுள் அரும் பணி அறிவுப் பணி
ஏற்றம் தரும் பணி எங்கள் முல்லை அமுதனாரின்
காற்று வெளிப் பணி கடல் கடந்து சென்றும்
ஊற்றில் தமிழ் அமிழ்து முல்லை அமுதன் வாழ்க. 

அண்ணா கண்ணன் மகள் நித்திலா 28.06.2016
காக்கும் அன்னையின் கைவிரல் தடவிக் 
கன்னம் வருடிக் கருமயிர் கோதி
வாக்கில் வனப்பாய்ப் பள்ளி எழுச்சி 
பாடியே எழுப்ப வார்ப்புக் கவிஞரோ
தூக்கம் என்னைத் தூங்கச் சொல்கிறதே 
எனவே ஐக்கூ பாடினார் கவிதை
ஆக்கும் காலை அழகின் கவின்மலர் 
அன்புறை ஏமாஈந்த கண்ணனின் நித்திலா.

கந்தவனம் வாழ்க 28.06.2016
எந்த வனம் சென்றாலும் 
சொந்த வனமாகிச் சொக்கும் 

கவி வனமாகும் எங்கள்
நந்த வனமே கந்தவனம்

நொந்த தமிழர் கண்டு
சிந்தை உடைந்த மனம்

பந்தம் எழுகவெனப் பாடும்
இந்த மனம் வாழ்கஎனத்

தந்த பாராட்டுத் தகுதியர்
கந்த வனம் வாழ்கவாழ்க.

இயற்கை இயல்புப் பாவினேன்  26.12.2014 

மறவன்புலவில் 
தவளைகள் தாவி வருவன.
எலிகள் வளையில் ஓடுவன.
விட்டில்கள் விளக்கை மொய்ப்பன.
பல்லிகள் விட்டிலை விழுங்குவன.
புடையன்கள் புற்களுள் மறைவன.
நுளம்புகள் தோலெங்கும் தைப்பன.
சில்வண்டின் ஊதல் துளைப்பன.
வாடையின் கூதல் குளிர்வன.
மழையின் தூறல் நனைப்பன.
தூறலில் வானவில் தெறிப்பன.
நனைந்த விறகுகள் புகைவன.
கூரையில் மேகமாய்க் குவிவன..
பயிர்கள் கம்பளம் விரிப்பன.
கதிர்கள் முற்றவே சாய்வன.
பசுமை நிலத்தை மறைப்பன.
வெள்ளம் வரப்பை உடைப்பன.
வரப்பில் கால்கள் புதைவன.
குளத்தில் தாமரை விரிவன.
நீர்க்காகத் தலைகள் பாம்பாவன.
கொக்குகள் சிறகு விரிப்பன.
காகங்கள் கரைந்து மொய்ப்பன.
சேவல்கள் கூவி அழைப்பன.
மறவன் புலவன் ஓதினேன்.
இயற்கை இயல்புப் பாவினேன்.

மச்சிக்கு வாழ்த்து 05.03.2016
காவடியை அவளெடுத்துக் காதலித்த காலங்களில்
நாவடித்தும் நச்சரித்தாள் நான்நயந்தேன்  நல்லிதயப் 
பூவடிகள் தொழுதேனே புகலிடமாய் அவள்வீட்டு
மாவடியில் மாலையிட்ட மச்சியெனும் மாமருந்தாள்.

மங்களம் வாழி வாழி 09.11.2015
புலர் காலை. 
வாடைக் காற்றின் தண்மை. 
மழைத் தூறலின் மென்மை. 
வயலின் பசுமை
உழவு சால்களில் வெள்ளம்.
இவை மனத்தை மென்மையாக்கின.
குளிர் நீரானாலும் குளித்துவிடவேண்டும்.
பூப் பறித்துக் கோயிலுக்குப் புறப்படவேண்டும்.

மின்னஞ்சல் பக்கத்தை மூடமுயல்கிறேன்.
மெல்லிய கூச்சலுடன் புதிய மின்னஞ்சல்.
பார்த்துவிட்டுப் போகலாம் எனப் படித்தேன்.
மங்களத்தின் மின்னஞ்சல்.

நெஞ்சம் வாடைக் குளிரை உள்வாங்கியது.
கண்கள் மகிழ்நீரை மழைத் தூறலாகச் சிந்தின.
நினைவுகள் பசுமையாகப் படர்ந்தன.
மங்களத்தின் வரிகள் சால்களாயின.
உற்சாகம் தோட்டத்தின் பூக்களாகியது.
செய்தியோ இறைவனின் சந்நிதானமாயது.

ஒருபக்கம் இலட்சுமண ஐயர்.
மறுபக்கம் பாலம் அம்மையார்.
இவர்கள் இருவரின் ஊடாக விரியும் மரபுத் தொடர்கள்.
ஒருபக்கம் மாவிட்டபுரத்தில் வடக்கு ஐயர் வீடு.
மற்றப் பக்கம் வேலூரில் புலமைப் பராம்பரீயம்.

மங்களத்தின் மின்னஞ்சல் ஊடாக இவை கண்டேன்.
இந்திய தத்துவ ஞானம் கண்டவர் தந்தை.
சைவ சித்தாந்தப் பேராசிரியர் மாமன்.
சித்தாந்த வேதாந்த தத்துவப் பின்னலாகத் தாயார்.

அமரிக்கையாக உப்பேரி நகரம் சென்றார். 
உலக நன்னெறியாளர் சங்கமம்.
10,000 அருளாளருக்குச் சொன்னார்.
மூலர் மொழியாதனவா?
திருவள்ளுவர் தராதனவா?
கம்பனின் கொடுப்பனவுகளா?

வேறு யார் சொல்லமுடியும்?
சுவையாகச் சுருக்கமாகச் சொல்லமுடியும்?
மங்களம் சொன்னார்.
மரபணுக்கள் சொல்லின,
மங்களமாகிச் சொல்லின.
மனிதமே கேட்டது.

வாழ்த்துகிறேன், வணங்குகிறேன்.
மங்களத்தை முதலில்,
மரபணுக்களைத் திரட்டித் தொகுத்த முன்னோரைப் பின்னர்.


சசிரேகா வாழி  20.01.2016
பொதிகை தருவது தென்றல் 
புகழ் தருவது உவகை
இமயத்தின் உச்சியில் பனி
இதயத்தின் உள்ளே உணர்வு
காவிரி அடைவது கல்லணை
கானம் தருவது மயக்கம்
புசிக்கப் பசிப்பது உணவு
சசிரேகா தருவது தமிழே

பாரிசு நகரில் பொங்கல் 14.01.2013
தங்குமே தமிழர் அடையாளம் தறிவிட்டு ஓடினாலும்
எங்குமே எவருமே எக்காலம் ஆயினுமே அடக்கொணாச்
சிங்கமே உறைபனி மூடுநாளில் உழைவின்றி உவந்துநீ
பொங்கவே பரவசம் கொண்டேன் புதினப் பலகையேவாழி.

ஓவ்யர் சல்வடோர் தாலி 14.01.2013
காரிகைக் காளையர்க் கனவுகள் கனவல்ல காளையரே கன்னியரே
பேரிகை முழங்கப் புகழாரக் கனவுகள் கனவுகளாம் சொல்கிறார்
தூரிகைச் சின்னராசர் தொங்கும் வானவில்லே சேலையாகுக ஓவியர்
தூரிகைத் தாலியாரின் துல்லிய அறிவுரை கேட்பீராயின் கிளர்வீரே.

கூகுள் கூட்டல்+ 14.01.2013
பூவுள் புகுந்தேன் புதுத்தேன் உறிஞ்சி என்,
நாவுள் நனைக்க நறுஞ்சுவை நனிநிறைப் பூங்,
காவுள் கலந்தேனாய்க் காலக் கண்ணாடி இக்,
கூகுள் கூட்டலுள் கூடுவேன் குலவுவேன் நான்.


நீர்வேலி ஐயர் மீது... 22-03-2013
தேரோடும் தெருவெல்லாம் தெம்மாங்கு பாட
தெள்ளுதமிழ் எழுத்தெல்லாம் தியாகராசர் ஆகப்
பேரோடும் புகழோடும் வாழ்கின்ற மயூர
பெற்றெடுத்த பெருமையோ பேறாய்நுமைக் கூட
நீர்வேலி நிமிர்கின்ற இணையரே நும்மை
நீடுழிவாழ்க எனவாழ்த்தி வாழ்த்துவனே என்றும்
சீர்மேவு செம்பீமரத விழாக்காண வரவோ
செம்மையுறை சிரிப்புறையும செம்பவள நெஞ்சீர்.

மறவன்புலவு துசியந்தன் மீது... 22-03-2013
எந்தையர் முந்தையர் வாழ்ந்த மண்ணின்
ஏற்றமிகு மைந்தன் துசியந்தன்
சிந்தையில் செயலில் செம்மாந்த செல்வன்
சண்டிப்பாய்ப் பள்ளியிலே நல்லாசிரியன்
தந்ததொரு செய்தியால் தகுதிபெறு பட்டம்
பெற்றதால் படங்கள் பார்த்ததால்
மந்தனம் கொண்டேன் மகிழ்ந்தேன் மறவன்புலவுக்கு
வந்தபுகழ் இதுவன்றோ இதுவன்றோ.

சிட்னி முருகன் விழா 13-07-2013
சொல்லெடுத்துச் சுவைபெருக்கும் பூமழையாய்ச் சொரிகின்ரார் கருத்துமழை
பல்லடுக்காய்ப் பளபளக்கும் மாளிகைசூழ்ப் பெருநகராம் சிட்னியில்
கல்லுடுத்திக் கந்தனுக்கு வைகாசிக் குன்றம்மீதில் கோயிலாக்கி
இல்லெடுத்த அடியவர்கள் திருமுன்னே பெருமகனார் ஆறுதிருமுருகன்.

எப்பிறப்பில் ஏழிசையார் எழிற்காட்சி எம்பெருமான் காட்டுவாரோ
இப்பிறப்பில் இன்னருளால் இதைக்காட்டி இசைபெருக்கி இருந்தவாறோ
சப்பறத்தில் திருக்காட்சி சிவனடியார் திருக்கூட்டம் பெருகுமாதோ
குப்புறவே படுத்திருப்பீர் எழுந்துபாரீர் கனவுக்காட்சி இதுவன்றோ.

பத்மா இராகவன் வாழி 11-01-2014
பெற்றதோ வெற்றிப் பட்டம், பேறிது பத்மாவுக்கு
கற்றதோ கடலாய் வடமாழி தமிழ்சார் கலைகள்
விற்றதோ நாவல் இரண்டு வேங்கையாம் மகனும்
உற்றதாய் உண்டு கலைநிலை உலகின் வாழ்த்துகளே.

ஈழத்துச் சிவானந்தன் வாழி  11-01-2014
கொட்டும் பனிக்குள் முட்டும் கவிதை வரிகள்
பொட்டும் பூவுமாய் வாயிலில் வந்தனவே மங்கலம்
சொட்டும் சுவையேற உறையும் பனியைக் கவிதையால்
தொட்டும் தொடாமல் அணைக்கும் சிவானந்தக் கவிஞரே

சீமா சீமா செனீவா போய்வா 01.04.2004

உண்பாய் உடுப்பாய் உறங்குவாய் அழைத்தால்
அன்பாய் அமுதமாய் வருவாய், அருமைமகளே
செனீவா போய்வா, தந்தைதாய் நெஞ்சம்
நினைவாய் இருப்பின், வருவாய் திரும்பி!

புனைவாய் கதைகள் புகழ்வாய் என்னை
சிலையாயச் சிவந்த சீமாப் பெண்ணே
செனீவா போய்வா உமாவென் சமையல்
நினைவாய் இருப்பின், வருவாய் திரும்பி!

தருவாய் முத்தம் தாத்தா உடல்நோய்
பரிவாய்ப் பார்த்தே, பழகும் பெயர்த்தீ!
செனீவா போய்வா, பாட்டியென் பரிவு
நினைவாய் இருப்பின், வருவாய் திரும்பி!

பயில்வாய் பயின்றதை இசைப்பாய் எனக்குத்
தருவாய் நற்பெயர் தங்கச் சிலையே
செனீவா போய்வா, அத்தையென் இசையும்
நினைவாய் இருப்பின், வருவாய் திரும்பி!

ஆடினாய் பாடினாய் தேடினாய் புகழை
கூடினாய் பரதத்தை, கூத்தனின் அருளால்
செனீவா போய்வா, நாட்டியப் பள்ளியும்
நினைவாய் இருப்பின், வருவாய் திரும்பி!

பணிவாய்ப் பழகிக் குழைவாய், தேனின்
கனிவாய்க் கழலும் காந்தள் பெண்ணே
செனீவா போய்வா, மின்னஞ்சல் பணிகள்
நினைவாய் இருப்பின், வருவாய் திரும்பி! 

சிட்னி சேக்கிழார் விழா 28-04-2014
முந்தையர் முனிவர் முற்றும் துறந்தவர் சிட்டினிச் சைவரின்
சிந்தையர் ஆயினர் சிலைகளும் ஆயினர் செந்தமி ழாகரரும்
தந்தையர் அப்பரும் சுந்தரரும் வாசகரரும் தெய்வச் சேக்கிழாரும்
பந்தணை விரலியின் பாங்கனின் பழவடியார் போற்றி போற்றி.

சிட்னி சேக்கிழார் விழா  27-05-2014
பூக்களால் பொலியத்தூவித் தமிழோடு இசையும்பாடும்
நாக்கினால் நவிலுந்தோறும் நயந்தெம்மை அருளில்தோய
வாக்கினால் வாய்த்தஇவ் ஊனுடலால் வழிபட்டேத்தச்
சேக்கிழார் தந்ததம்மா செழுமையே சேர்த்தபிறவி.

சாத்திரம் எதுவுவேண்டா வடமொழிப் பூசைவேண்டா
தோத்திர  வாழ்வேபோதும் என்றமை நிலைபேறான
ஆத்திரே லியாவாழ் சைவர்களால் சேக்கிழார்தந்த
தோத்திரம் போற்றும் குருபூசைவிழா வாழ்கவாழ்க

பவள சங்கரி வாழி 29-06-2014
தவளும் தமிழ் நடையில் மகிழ்வர் கற்பனை
திகழும் கதை படிப்போர் ஈரோடு உவந்தீந்த
பவள சங்கரியார் படைப்பைப் பழநியப்பர் பதித்தாரே
புகழே பெறுக புன்னகையே வாழ்வாக வாழ்க.

மியன்மார் தமிழர் வாழி 29-06-2014
சிந்துவார் கலைக்களை சிரித்தமுகம் சிந்தியே பரதம் தந்தார்
வந்துபார் மியன்மாவை வளர்கின்றார் தமிழர் மாண்பாய் பரதம்தந்த
இந்துமதி இரத்தினசேகர் இத்துணை வல்லுனரா? தமிழ்த் தொண்டரா?
சொந்தமே வாழ்க ஐராவதிக் கரையோரம் தந்தனை தமிழையம்மா.

தொண்டர்கள் தொடர்ந்து இயங்கத் தொய்வின்றி நிகழ்வுகள் பொலிந்தார்ப்ப
வண்டாரும் மலர்சூடும் வனிதையரால் வளமிக்க மியன்மாரில் உறவுப்பாலம்
கண்டார்கள் தமிழ்க்கல்வி வளர்ச்சி மையத்தார் மலேசியாவும் சிங்கப்பூரும்
கொண்டார்கள் கொடுத்தார்கள் அன்புப்பாலம் அமைத்தார்கள் சோலையார் வாழ்கவாழ்க.

தீபிகா தீபிகா வாழி 29-06-2014
கற்பனைக் குதிரை கட்டவிழ்த்து ஓட
கவிதையில் கருத்துப் பொலிவார்ந்து ஓட
கொஞ்சு தமிழோ குலைகுலையாக் குவிய
நெஞ்சம் குழைந்து நெகிழ்ந்து கனிய
சந்தமோ சரளமாய்ச் செம்மாந்து பாய
தந்தாரே பதினொரு வரிகள் (க)விதையாய்
வாழ்க கவிஞராய்த் தீபிகாதீபா வளர்க

மீரா காமேசுவரன் வாழி  வாழி 29-06-2014
கண்ணாவின் அண்ணர் காமேசுவரனார் கனிந்தீந்த
பெண்ணாகிப் பேறுற்ற பெருமகளே மீராவே
வண்ணமாய் வகையாய் உணவெல்லாம் மேசையிலே
எண்ணமோ பெற்றார் மாமியார்போல் மனிதஉறவுகளில்

சிட்னி கருணாகரன் பெயர்த்தி வாழி 29-06-2014
கொட்டுக பேரிகை கொம்புகள் ஊதுக தட்டுக தவில்மேளம்
சிட்டுகள் சிறகுகள் விரிக்க சிட்னி எங்கும் மங்களமாகுக
மட்டுவில் மகனார் கருணா கரனார் இல்லத்தில் திருமகளின்
பெட்டகப் பெயர்த்தியாய் பிறந்த கலைமகள் வீரமகள் வாழியவே

பேரா அரங்க இராமலிங்கம் வாழி 02-07-2014
இன்மை எனும்சொல் இல்லை உங்கள் அகராதியில்
இளமை என்றும் மிஞ்சும் உங்கள் அரும்பணிகளில்
நன்மை விழைவீர் நலமே விழைவீர் நூற்றாண்டுத்
தொன்மை மிகுபல் கலைக்கு அணியானீர் வாழிவாழி.

இரிசி தொண்டுநாதன் வாழி 10-07-2014 
புயலும் தோற்கும் வேகத்தினாய்
புண்ணியம் செய்யும் நோக்கத்தினாய்
அயலும் இணங்கும் அன்புடையாய்
அனைவர் வளமும் அரவணைப்பாய்
உயரும் உள்ளங்களை ஊக்குவிப்பாய்
உலகம் உவக்கும் உள்ளத்தினாய்
அயர்வே இல்லா ஆர்வத்தினாய்
ஒருபொல் லாப்புமும் இல்லையையா.

ஈசுவரனுக்கு வாழ்த்து 19-07-2014
நாவன்மை நலிந்தோரை நவில்விக்கும் நல்லிதயம்
தேவனிவன் எனவியக்கும் தெளிந்தோர் வாழ்த்து
யாவரையும் அரவணைத்து அன்புகாட்டித் துயர்போக்க
ஈவதையே வாழ்வாக்கும் ஈசுவரனார் வாழ்கவாழ்க

அன்றலர்ந்த தாமரைபோல அழகுமுகம் கோடைநிழல்த்
தென்றலெனத் தேனாகித் தெம்மாங்காய்த் தெவிட்டுமான்
கன்றனைய கட்டவிழ்த்த கவிதையுள்ளம் கற்றோரெல்லாம்
என்றுகாண்ப எனவேங்கும் என்னிளவ எழிலீசுவரனே.

ஊரெல்லாம் உனைவாழ்த்தும் காலங்களில் உறங்கினேனுன்
சீரறியேன் சிறப்பறியேன் சிற்றறிவேன் தெளிந்தேனின்று
பாரறியப் பாராட்டு மழைபொழிவேன் தண்ணிலவின்
பேரெழிலே பெற்றியனேன் பிழைபொறுக்க ஈசுவரனே.

சொல்லெலாம் சுவையனாகி சோர்விலா உழைப்பனாகி
வெல்வதே வாழ்வதாக்கி வெளிநாட்டு வணிகனாகி
இல்லையே என்னாதுன்றன் இயல்பதை ஏத்துவேனோ
பல்வகை ஆற்றலானே பல்கலையே ஈசுவரனே.

ஆணவமற்ற ஆண்மையன் அழகனென்று அந்தநாளில்
மாணவப்பருவத் தோழர்சொல்ல மகிழ்ந்தனை மாணவியர்
வேணவாக்கொள்ள விரைந்தனைநீ மணக்கோலத் திலகாவைப்
பேணவந்தனை பீடுநால்வர் பெற்றனை ஈசுவரனே.

கணேசனாரும் கனகலல்லியும் குணச்சுப்புவும் கோலப்பிரியாவும்
கருணையுடன் திலகவதியார் பெற்றுவந்தார் பேறுற்றாய்
அருள்நிதியம் அன்புள்ளம் அவர்பண்பால் செம்மைபெறப்
பொருள்பொதிந்த வாழ்வினராய்ப் பொலிவித்தாய் ஈசுவரனே.

இன்பவாழ்வே இதயக்கனிவே இனிமைக்குழைவே ஈசுவரனே
அன்புப்பெருக்கு அருளுமுருவே அறிவுத்தேடல் ஆனவனே
முன்பின்னறியா இனமாயினென் முகமாயினென் அவரவர்
துன்பம்நீங்கித் துயரைப்போக்கத் துணியும்துணிவே ஈசுவரனே

புகழ்வேண்டா பெயர்வேண்டா பரிசும்வேண்டாத் தொண்டனே
சுகம்வேண்டா சொத்துவேண்டா பிறர்நலமே வேண்டுவனே
நகம்காக்கும் விரல்நுனிபோல் நீகாப்பாய் நலிந்தோரை
மகம்புக்க சனியானோர் மயல்போக்கும் ஈசுவரனே

மிதிக்குமன மிக்குடையோர் தனைக்கண்டு உள்ளம்
கொதிப்பாய் மிதிகாலைத் தொட்டிறைஞ்சி மிதியாதீரென
விதிப்பாயே வன்முறையும் வஞ்சகமும் போக்கவந்து
உதித்தாயே உறைபனியைக் கரைத்துருக்கும் ஈசுவரனே

அடக்குமுறை ஆணவங்கள் அவிழ்த்துவிடும் அவலங்கள்
கடக்கும்வழி அறிவாயே அன்பூற்றாய்ச் செறிந்தபுத்தர்
நடக்கும்வழி நடப்பாயே நெடுஞ்சிலையை அமைப்பாயே
நடக்கும்வழி நல்வழியே நடப்பாயே ஈசுவரனே

செம்மைமனங் கொண்டாய் சிவன்தாளிணை கொண்டாய்
இம்மைதருஞ் செல்வமெலாம் இறைவனே தந்தானென்பாய்
அம்மையுமாய் அப்பனுமாய் அருள்பெருக்கும் எம்பெருமான்
நம்மையுமாட் கொண்டானென நல்நம்புகிறாய் ஈசுவரனே

கயல்விழியின் வகுப்புத் தோழியின் மகன் தனுசன் வாழ்க 28-07-2014 
வேகமே விரைவே வியத்தகு ஆற்றலே தமிழின்
தாகமே தணியா ஆர்வமே தனுசனே கருணை
மேகமே மகிழ்வின் மோகமே மனத்துள் தவழும்
சோகமேன் சோர்வேன் சொல்லுக சுறுசுறுப்பின் வடிவே.

தூக்கத்தின் சாயல் அங்கே தொடர்கதை ஆகுமந்த
ஏக்கத்தின் தோற்றம் அங்கே துன்பத்தைச் சுமந்த
தாக்கமாம் முகத்தைக் கண்டேன் தனுசனே தளரா
ஊக்கத்தைக் கொள்க உற்சாகம் பெருக வாழ்க.

இராசு அண்ணன் வாழி 20.08.2014
பயலே தம்பி ஆனந்தம், படிப்பு ஏறாததேன் உமக்கு
வயலை நம்பி வாழலாமோ வாரும் படியும் வளரஎன
மயில் வாகனத்தார் மறவன் புலவின் இராசு அண்ணர்
உயர வழிகாட்ட உயர்ந்தேன் வாழ்க அவர் வாழ்க.

பத்மா இராகவன் வாழி 20.08.2014
களைக்காது காலமெல்லாம் கட்டை தட்டி
உழைத்தார் உவந்து அனன்யா அபிநயத்தால்
பிழைத்தார் பேரவையில் பெருமக்கள் பாராட்டத்
தளைத்தார் தாமரையாய் இராகவனின் பத்மா.

பிரியா முரளி வாழி 20.08.2014
வண்ணக் கலவையாய் வார்ப்புச் சிலைகளாய்
கண்ணன் பாலனைக் களிகலந்து இதயத்துள்
எண்ணி மகிழும் எழில்நடன வெண்ணெய்க்
கிண்ணம் நிறையக் கொடுப்பர் முரளிப்பிரியரே....

நாகராசனார் மகள் வாழி 21.08.2014
பஞ்சனைய மேனி பருத்தி இழை உடம்பு
கொஞ்சுதமிழ்க் குழவி கோர்த்த தமிழ் மாலை
நெஞ்சினிக்க வந்து கணிணியார் மடியில் துஞ்சி
அஞ்சல்தவிர அயர்ந்தாள் கொடுத்து வைத்தவள் வாழ்க

சீசெல்சு கோயில் வாழி 21.08.2014
ஈசனவன் பிள்ளையார் இருங்கடல் தாண்டிக் குடியிருக்கத்
தாசன்நான் விதைவிதைதேன் தண்டினேன் தண்ணீர் வார்த்தேன்
பாசமுடன் தமிழர் தந்தார் பாங்கான திருக்கோயில்
சீசெல்சில் தமிழர் வாழ்வு சிறந்ததே வாழ்கவாழ்க.

சிவகாமி வாழி 22-08-2014
மாடியில் பிறந்து மாடியில் வளர்ந்து மண்வீடு தெரியாத மகளார்
கோடியில் வாழும் ஏழையின் குடிலை மறவார் மரங்களின் அடியைத்
தேடியே போவார் ஏழ்மையின் சோகம் அறிவார் நெகிழ்ந்து உள்ளம்
வாடினார்  வண்ணமோ சிவப்பு ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்கிரார்.

சிவநங்கை வாழி 23-08-2014
கங்கையெனப் பொங்கிவரும் அன்புவெள்ளம்
மங்கையிவள் கொண்டவளாம் அன்பேசிவ
நங்கையெனும் பெயரினள் சுரேனெனும்
சிங்கக்கணவர் சீர்தருமகளுடன் வாழிவாழி.
வாழ்த்துகிறேன்

சுப்பு சோமசிறீ வாழி 25.8.2014
கயல்மீனோ துள்ளியாடும் களனிக்கரை
அயலான கொழும்புமா நகர்வணிகப்
புயலான சுப்பீசுவரனார் சோமசிறீயும்
மயலான மழலையுமே வாழ்கவாழ்க.

நானா சாம் வாழி 25-08-2014
சென்னையைப் படத்தால் சுடுக
செழிப்பெலாம் கட்டங்களுள் காட்டுக
தொன்னைக்குள் வெண்ணெய் தருக
தொழிலரே படப்பிடிப் பாளரேஎனச்
சொன்னவர் கண்டார் நானாசாம்
படங்களை இமைக்க மறுத்தார்
அன்னவர் இவரேபரிசுக்கு என்றார்
அழைத்துப் பரிசளித்தார் வாழ்கவாழ்க

சுவிசு கணேசுவரன் மணிவிழா வாழ்த்து 30.8.2014
அறவாளர் அருளாளர் அன்புச்செல்வர் அ
னைவரையும் பாராட்டும் கனிந்த நெஞ்சர்
நிறைவான பெருவாழ்வின் செம்மையாக
நேர்மையோ குறையாது நெகிழ்வோ தணியாது
உறவார்கள் உளம்போற்ற உலகெங்கும்
பாராட்டச் சுவிற்சர்லாந்தில் உறைகின்ற கணேசுவரனார்
மறவாரின் புலத்திற்கு மாண்பு
சேர்க்கும் மாணிக்கப் பரலன்றோ வாழிவாழி.

பரமநாதர் மனோன்மனி ஈந்தசெல்வர்
மகேசுவரன் உமாதேவி இரத்தினகாந்தி குமரேசுவரன்
பெருமகளார் செயமளாதேவி கருணாதேவி
இப்பெருமகனார் உடன்பிறப்பே திருமணமோ சிறுப்பிட்டிப்
பெருமகளாம் நல்லாசிரியை புவனேசு
வரியாரை இவரிருவர் ஈன்றெடுத்த அருமக்கள்
மெருகூட்டி மின்னுமீரா நிறைநிலானி
திகழ்திலக்சன் மூவருமாம் அன்னவரே வாழிவாழி

அணிதிகழும் அவையெங்கும் கணேசுவரன்
அணிசெய்வார் சுவிற்சர்லாந்தின் திருக்கோயில் அருள்பெருக்கப்
பணிநிகழ்த்தும் பண்பாளர் ஐயப்பன்
அடியவராய்ச் சபரிமலை சென்றுவரும் பத்தர்இவர்
கணிணியிலும் வல்லவர் செங்காளனில்
கண்டநாள் முதலாய் அவருக்கு அடியவன்நான்
மணிவிழாக் காணுகின்றார் அறுபதாண்டு
வாழ்ந்ததுபோல் பல்லாண்டு பல்லாண்டு வாழிவாழி.

அக்கா, சாந்தா, நான் வழிபாடு 29-08-2014
கருவுற்ற நாள்முதலாய் கதிநீயெனக் கருதிவாழ்ந்து
அருளுற்ற அன்புஅறம் பெருக்க முனையும்மூவர்
திருவுற்ற வள்ளக்குளப் பிள்ளையாரின் திருநாளில்
மருவுற்ற சிந்தையராய் மனமுருகி வழிபட்டோரே.

பவள சங்கரி வாழ்க 04-09-2014 
தேரோடும் தெருக்கள் தேன்சிந்தும் மலர்கள்
தெம்மாங்குக் குயில்கள் தோய்ந்தபுகழ்
ஈரோடை ஈந்தவளாம் பவளத்தாள் ஐம்பதுக்குள்
நுழைகின்ற இனியநாளோ பிறந்தநாளோ
சீரோடும் சிறப்போடும் செல்வச் செழிப்போடும்
சிரிக்கும் மகிழ்வோடும் வாழ்கவாழ்க
நீரோடும் நிலனோடும் தீயோடும் காற்றோடும்
வானத்தோடும் பல்லாண்டு வாழ்கவாழ்க

ஐதி சம்பந்தன் வாழி 10-10-2014
தளர்ந்திலேன், தயங்கேன், தடைபல உடைத்துக் கடப்பேன்,
வளர்ந்திடாத் தமிழர்வாழ்வு வளம்பெற உழைப்பேன் ஒருசிலர்
அயர்ந்தனர் அயலெலாம் உயர்ந்தும் உயர்ந்திடார் எனினுநான்
தளர்ந்திலேன் திருஞான சம்பந்த மூர்த்திஎன் நீங்காநினைவுகளே.

திவாகருக்குக் கவலை 16-10-2014
கரைந்துவிடும் கவலைகள், காலனைப்போல்
இரைந்துவந்த ஊட்டூட்டாள் அழித்ததெல்லாம்
விரைந்துமீட்க விசாகத்தின் பட்டினப்பொலிவு
நிறைந்திடுமே நிறைந்திடுமே நீடுநீடுவாழ்க.

ஊரினுள் இருளே புகுந்தது ஊட்டூட்டுப் புயலாள் மிகுந்ததால்,
காரிருள் மேகக் கவிழ்ப்புமே கன்னக்கோல் கள்வர் உவப்புமே
சேரிருள் சோர்ந்து அகலவே செயலராய் மின்சார வாரியத்தார்
பேரோளி தந்தனர் வாழ்கஅவர் திவாகரின் விசாகப் பட்டினத்திலே

சுவிசுக் குருக்கள் வாழி 19-10-2014
போர்த்திய மூன்றடுக்கு நாரிழைச்
சட்டைக் குள்ளே தோலின் அடியில்
சார்த்திய விலங்குக் கொழுப்புப்
படையும் சேர்ந்து உறைபனிக் குளிரை
நேர்த்தியாயத் தாங்கவே வெள்ளையர்
நிற்க ஒற்றைத் துண்டினை உடலில்
சார்த்திய சிவத்தொண்டர் சைவஉணவர்
முனிவராய் திறந்த மேனியராய் ஆகாஅருளேயருள்.

On the top of European mountain
Scaring away the snowing fountain
While whites clad in three layered jerkins
Underneath their derma a layer of lipid parking
You Sivathondar stand body bared
Sage you are that the snow is scared
For you are a vegetarian by birth and choice
A practicing egalitarian without making noise
Like Siva and Parvathi in Kayilai top
You are in the midst of snow-philic mob
Praise thee, pray for thee bravo
Siva and Parvathi are with you bravo

சரவாக்கில் சைவம் வாழி 19-10-2014
விரிகின்ற கடல்தாண்டிக் குச்சிங்கு தாண்டிக் கிழக்கே
மிரிநகரில் வாழ்கின்ற சைவர்காள் மிகுந்து நீங்கள்
தருகின்ற அருள்பெருக்கும் தொண்டு வாழ்க சரவாக்கின்
சரிகின்ற சைவப் பண்பை நிமிர்தும் பணிவாழ்க வாழ்கவே.

மறவன்புலவிலிருந்து வாழ்த்து 22.10.2014
பச்சைப் பசேலெனப் பார்க்கும் இடமெங்கும்
நீக்கமற நிறைதிருக்கும் பயிர்த் தலைகள்,
நச்சரித்த கமக்காரன் நாவினிக்க வாழ்த்துமாறு
மழையின் பொழிவால் உழவுச்சால் வெள்ளம்
அச்சச்சோ எனஅயராது காதுக்குள் இரவெல்லாம்
ஊதிக் குடையும் தவளைகளின் கத்தல்கள்
மெச்சுவார் மேன்மையர் வாழ்கவென மறவன்புலவின்
தீபாவளித் திருநாள் அனைவருக்கும் வாழ்த்துகள்

கும்பேசர் வாழி 06.11.2014
குமரேசர் கும்பேசர் கேசவனார் குவலயத்தின்
குலவிளக்காய்த் திகழவெனப் பெற்றார்
தமரான சந்திரசே கரனாரும் இராசேசுவரியாரும்
மருத்துவராய்ப் பொறியாளராய்க் கணக்காளராய்
நிமிர்வாழ்வும் நேர்நெறியும் கொண்டமூவருள் கும்பேசர்
ஐம்பதானார் பொன்விழாக் கண்டார்
இவரேநம் தலைவரெனக் கொண்டார் நல்நளாயினி
தேன்சிந்துரா மயில்மயூரா வாழ்கவாழ்க.

மோடி யாழ்ப்பாணத்தில் 17-11-2014
ஆடிப் பாடி மகிழுங்கள், அனைவருமே மகிழுங்கள்
தேடித் தேடி வருகிறார் தென்றலாகச் சுவைக்கிறார்
கூடிக் கூடிப் பாருங்கள் குவலயத்தின் நாயகன்
மோடி ஓடி வருகிறார் மேன்மையான மகனாக.

செந்தி செல்லையா வாழி 27-11-2014
முந்தியவர் முன்னெடுத்த தமிழர் முகம்காட்டி, உழைப்பதனைச்
சிந்தியவர் பெற்றெடுத்த தமிழன் வழிகாட்டி, தென்மராட்சிச்
செந்தியவர் செயலாற்றல் செம்மையரே, செல்லையர்வழி
வந்தவவர் வேறேன்ன செய்வார், ஐம்பதிலே வாழிவாழி

அண்ணா கோப்பி நடராசா மறைவு 27.11.2014
ஐயகோ ஐயகோ
உள்ளதைச் சொல்லும் உரத்த குரல் ஓய்ந்ததோ?
கள்ளமற்ற வெள்ளை மனம் கரைந்து மறைந்ததோ
வெள்ளமான தெள்ளு தமிழ்நடை நோய்க்கு வீழ்ந்ததோ
அள்ளக்குறையா என்அன்புக் கடலில் அலையும் ஓய்ந்ததோ.

பிரியா முரளி வாழி, பரசா அமைப்பும் வாழி 27-11-2014
தென்றலிலே தெம்மாங்கு பாடும் கூட்டம், சென்னை அரங்குகளில்
நன்றெனவே நயப்போரின் நடனக் கூட்டம், நாடெலாம் பரதத்தை
முன்றிலுக்கு முன்னெடுக்கும் முனைவர் கூட்டம், பரசாவோ பரதாலாயமோ
என்றெவரும் எங்கெங்கும் ஏற்றும் கூட்டம், என்றென்றும் வாழிவாழி.

அண்ணா கண்ணன் வாழி 27.11.2015
மண்ணார் மைந்தனே மகிழ்நிறை மங்கையே மென்தமிழ் மழலையே
கண்ணார் காளையே காதலின் களஞ்சியமே கருவிலே திருவான
பெண்ணாம் நித்திலாவே பேறுற்ற பெருவாழ்வுப் புகழ்தரும் பேரருளுளாய்
அண்ணா கண்ணனார் இரண்டாம் மணநாள் இன்பத் திருநாளாகுக.

அன்பைப் பெருக்கும் ஆர்வலரின் அமுதப் பொழிவாம் வாழ்த்துரைகள்
என்பை உருக்கின என்னிதயம் நெகிழ்ந்தது எழுபத்தி மூன்றாண்டில்
இன்பமாய் இனித்தன அறுமீன்திங்கள் ஐந்திறநாளில் பிறந்தேன் எனினும்
வன்மையாய்த் திசம்பர் ஐந்தேயென் பிறந்தநாள் திணிப்பு முகநூலதே

பற்றிமாகரன் வாழி 01.11.2015
வெற்றியாளர் வந்தபாலத்தர் (Came Bridge) உலகெலாம் மாணவரைக்
கற்றறிவார் தமிழையென காட்சிப்பட (power point) நெறியாள்கை
முற்றிலுமே பார்த்தேன் முயற்சியை வாழ்த்துகிறேன்
பற்றிமாகரன் இணையரின் பைந்தமிழ்ப் பணிதொடர்க

சிவகாமி வாழி 08-11-2015
இல்லின் விளக்கானாள் இருளை விரட்டியென்றும் இனிக்கின்ற
சொல்லின் சுவையானாள் சோர்வற்றுச் சுழல்வாளே சிவகாமி
கல்லாய் இறுகுநெஞ்சைக் கனிவால் கரைத்திடவே வளர்க்கும்
புல்லின் தரைகண்டேன் பூக்கும் மரம்கண்டேன் பொலிவேவாழ்க

சசிரேகா வாழி 09.10.2015
பொலிவின் பெட்டகம் புகழின் களஞ்சியம் போற்றிப்பேணும்
கொலுவின் அடுக்குக் கண்டேன் கோலவிளக்குக் கண்டேன்
பலவினப் பாவைகள் கண்டேன் காணக்கண் மலரநெஞ்சு
பொலிந்து போற்றும் பெருமகள் கலைமகள் வாழ்கவாழ்க

?????? வாழி 9-11-2015
கூர்மை குவியும் கண்கள் குஞ்சிநீளாக் கருமுடி பணிசெயும்
ஓர்மை உடைத்தென உழைக்கும் தோள்கள் மனிதச்
சீர்மை செழிக்கும் செம்மைக்கு அடர்ந்து வளர்மீசை
நீர்மை நிறைந்து நோக்கிய நிலாநெற்றியார் வாழ்கவாழ்க

சுவிசுக் குருக்கள் வாழி 18-11-2015
பொருத்தமான பொழிவு தருவார் ஐரோப்பிய நாடாளு மன்றத்தில்
திருத்தமான மொழியில் தீந்தமிழச் சுவையுடன் அரசியல் தத்துவக்
கருத்தாளம் சொல்பவர் காட்சியில் பொலிந்தவர் மக்கள்நலக் கொள்கைகூறப்
பொருத்தமான சரவணபவரைப் போற்றுவோம் புகழ்வோம் பொழிந்து பொலிகவே

சிவகாமி வாழி 20-11-2015
சிந்தையில் செம்மையான செம்மகள் சிவகாமியார்
முந்தையர் அறிவுசேர முயன்றனள் உயர்வுக்காகச்
சந்தையின் முகாமைத் தேர்வில் வெற்றியால்
தந்தைதாய் பெருமைக்கான இந்தநாள் என்னுமாறே!!

 நிலா காசி ஆனந்தன் வாழி 03-12-2015
ஆசி தருவார் அன்பு பெருக்குவார்
அன்பு மகள் கிண்டலைச் சுவைப்பார்,
தூசியும் விழாமல் போர்வை ஆவார்
துயரம் நெருங்காது மகளைக் காப்பார்
பாசியின் பசுமை உள்ளம் பந்தணை
விரலாள் பாசத்தாள் சரோவின் அன்பராம்
காசி ஆனந்தனின் கவிதையாம் நிலாவே
கொல்லர் தெருவில் ஊசிகள் விற்கிறேனே!!!

பிறந்த நாள் திணிப்பு 
அன்பைப் பெருக்கும் ஆர்வலரின் அமுதப் பொழிவாம் வாழ்த்துரைகள்
என்பை உருக்கின என்னிதயம் நெகிழ்ந்தது எழுபத்தி நான்காமாண்டில்
இன்பமாய் இனித்தன அறுமீன்திங்கள் ஐந்திறநாளில் பிறந்தேன் எனினும்
வன்மையாய்த் திசம்பர் ஐந்தேயென் பிறந்தநாள் திணிப்பு முகநூலதே.

கோலாலம்பூர் கணேசலிங்கனார் வாழி 02.01.2016
சொல்லாண்ட வழக்கறிஞர் சொரியுமன்பால் அளப்பரிய நட்புடையார்
வில்லாண்ட இராமனனை விழுமத்தார் விறல்வேங்கைத் துணிவாளர்
தொல்லாண்ட தமிழரசர் சென்றதிக்கில் வாழ்பவரே கணேசலிங்கர்
பல்லாண்டு பல்லாண்டு புகழ்பெருக்கி அருள்பெருக்கி வாழுகவே

சிவநங்கை மகன் வாழி 
திக்கெலாம் செல்வேன் சிக்கல்கள் வெல்வேன்
மிக்குவார் உளீரோ வரிசையாய் வருவீர்
தக்கதாம் வலியினாலே தனித்தனி வெல்வேன்
அக்சனன் இங்குளேன் அன்னை சிவநங்கையாமே

மெல்போர்ண் செயராமர் கவிதை நயம் 24.05.2016
நெஞ்சை உருக்கும் உணர்வுப் பிழிவு.
வஞ்சக மக்களின் உள்ளேமோ கழிவு
கஞ்சரைப் பெற்றதால் நாளும் இழவு
துஞ்சார் செயராமர் துடைப்பர் இழிவு.

வானொலியில் 65 ஆண்டு காலம் பங்காற்றிய அப்துல் யப்பாருக்கு வாழ்த்துப்பா 4.6.2016

தேனொலிக் குரலர், தேன்தமிழ்த் தென்றல், தெவிட்டாத தொகுப்பர்
காணொலி வந்ததாலே காணாமல் போகாதார் கடந்தவர் வைரவிழா
வீணொலி வீசாதாரை விரும்புவார் சுவைஞர் "வெற்றி" விருதாளர்
வானொலி  வாழ்த்தும் நும்மை வாழ்த்துச் சொல்லுவம் நாமுமே 

No comments: