Wednesday, February 24, 2016

சம்பவம், சாம்பவம் நாட்டிய நிகழ்ச்சி.

14-12-2012 05:33 AM
வியாழக்கிழமை காலை, 0915 மணி,
தொலைப்பேசி அழைப்பு,
திருவெம்பாவை முதலாவது பாட்டு வரிகள் சொல்க, பொருள் சொல்க.
கேட்டவர் காந்தளகம் பொறுப்பாளர் சசிரேகா.
நாட்டிய வகுப்பில் இருந்து அழைக்கிறேன் என்றார்.

50 ஆண்டு கால மனப்பாட வரிகள். பொறுமையுடன் வரிகளைச் சொன்னேன்,
அந்த முனையில் இருந்து எழுதிக்கொண்டார். ஒவ்வொரு வரிக்குப் பொருளும் எனக்குப் புரிந்தவாறு சொன்னேன். குறித்துக் கொண்டார்.

இன்று, ஞாயிறு, மார்கழி முதலாவது நாள். சென்னை நாரத கான சபா.
மதியம் 1400 மணி.

சம்பவம், சாம்பவம்
என்ற தலைப்பில் நாட்டிய நிகழ்ச்சி.

நடனமாமணி
பிரியா முரளியின் பரத நாட்டியம்.
நட்டுவாங்கம் சசிரேகா.
குரலிசை நந்தினி ஆனந்தன்,
வயலின் விசயராகவன்,
மத்தளம் தனஞ்செயன்,
புல்லாங்குழல் சுருதிசாகர்.
யாவரும் வல்லுநர்கள்.

ஆதியும் அந்தமும் இல்லா எனத் தொடங்கி
நந்தினி ஆனந்தன் பௌளி இராகத்தில் பாட
தாளங்களுடன் ஆதி தாளத்தில் சசிரேகா நட்டுவராக,
இசைக்கருவியாளர் தாளத்துக்கு அமைய ஒத்திசைக்க, தில்லைக் கூத்தனையும்
துயிலெழுப்பும் பாவையரையும்
போதார் அமளியையும்
புரளும் தோழியையும்
பரதத்தின் அடவுகளால்,
காலடிகளின் அளந்தமைப்பால்,
கண்ணசைவின் காந்தத்தால்,
கழுத்தசைவின் சிறுமருவால்,
காத்திரம் பிசகா மாத்திரையில்
மாணிக்கவாசகரின் வரிகளை
நாட்டிய வண்ணமாக்கினார்
பிரியா முரளி.
தொடர்ந்து ராகமாலிகையில் சிவனாருக்குப் போற்றிசெய, பிரியா முரளி நயந்து நடனமாடினார்.

தஞ்சை நால்வரின் பாடலுக்குச்
சுதாராணி இரகுபதியின் வடிவமைப்பு
அனிருத்தரின் சொற்கட்டு,
சசிரேகா நட்டுவாங்கம்,
நந்தினி ஆனந்தன் குரலிசை,
கருவிகளின் ஒத்திசை,
கமாசு இராகம் ஆதி தாளம் எனத் தொடர,
பிரியா முரளி வர்ணமாக
அரை மணி நேர அபிநயமா முகபாவமா,
அடவுகளின் கடலா,
கைமுத்திரை வழி கண்ணசைவா,
பிண்டியாகிப் பிணையலாகிய விரலசைவுகளா,
காலடிகளின் கட்டமைப்பா,
பெண்மையின் நளினமா,
என அசத்தினார்.

சுருதி இராகத்தில் ஆதிதாளத்தில்
சிவனுக்கு நிந்தாஸ்துதி தொடர்ந்தது.
பத்து நிமிடங்களும் பறந்ததே தெரியவில்லை.
பிரியா முரளியும் நந்தினி ஆனந்தும் ஒத்திசைத்தோரும்
பார்வையாளரின் ஐந்து அறிவுகளையும் அரங்கமே ஆட்கொள்ளுமாறு ஈர்த்தனர்.

முகாரி இராகத்தில் ஆதி தாளத்துக்குக்குப்
பாபநாசம் சிவனின்
சிவகாமசுந்தரிப் போற்றியை
அரங்கத்தில் அனைவருமாய்க் கட்டிய
கலைக்கோயில், பரதக் கோயில்
பார்வையாளரின் நரம்பு நுனிகளைத் தைத்தன,
கைகள் தாமாகவே கூப்பின,
சத்தியை வியந்தன.

புல்லாங்குழலார்
தேஷ் இராகத்தை இசைக்கத் தொடங்கியதும்
கேட்டோர் கைதட்டி ஆர்ப்பரித்தனர்.
அதே இராகத்தில்
தில்லானாவுக்குப் பிரியா முரளி
மெல்லென மிதந்த பூங்காற்றாய்,
மெருகுடன் அடியெடுத்து
அரங்கத்தில் வளைந்து வளைந்து
விடைபெற்ற நிகழ்வாக்கினார்.
வள்ளாலாரின் பாடலுக்குரிய பாவங்களுடன்
நிகழ்ச்சி நிறைவெய்தியது.

சென்னையின் மார்கழி இசை விழாவுக்கு
அவ்வப்போ தேவையான பங்களிப்பை
நல்கி வந்த நான்,
இந்த ஆண்டு
இந்த நிகழ்ச்சியின் தோற்றுவாய்க்குத்
திருவெம்பாவைப் பாடல் வரிகளை எடுத்துக் கூறி
என் சிறிய பங்களிப்பைச் செய்ததால் மகிழ்ந்தேன்.

வழமைபோலச் சசிரேகா என்னை ஈடுபடுத்தினார். முன்பும் அவரே கேட்பார்,
சிலப்பதிகாரமாயினென்,
கம்பராமாயணமாயினென்,
பிள்ளையார் கதை ஆயினென்,
திருமந்திரம் ஆயினென்,
வேறு வரிகள் ஆயினெ,
எடுத்துக் கொடுத்த வரிகளை
அரங்கில் ஆடலாகக் காண்கையில்
அவ்வரிகளை எடுத்துக் கொடுத்தேன்
என்ற செய்தியை
ஆடலாரே பதிவாக்கையில்
மகிழ்ச்சியடைவது இயல்பல்லவா?

Yes. We sought the help of Dr. Raama Kausalya and Maravanpulava K Sachithananthan to translate and further research the epic. எனப் பேராசிரியர் பத்மசிறீ சுதாராணி இரகுபதி ஒரு பேட்டியில் சொன்னார்கள். (2003 மார்கழி இசை விழா) http://www.narthaki.com/info/intervw/intrvw57.html
Interview - Sudharani Raghupathy collaborates with Professor Skelton on The Silappadikaram
narthaki.com

No comments: