Monday, October 24, 2022

அருணகிரி 1

மறவன்புலவு க. சச்சிதானந்தன் பேசுகிறேன்….

இலங்கை, வடக்கு மாகாணம். யாழ்ப்பாண மாவட்டம் தென்மராட்சியில் மறவன்புலவு என் ஊர். யாழ்ப்பாண நகரத்திற்குக் கிழக்கே, 16 கிமீ. தொலைவில் மறவன்புலவு. 

தந்தையார் கணபதிப்பிள்ள, மறவன்புலவு. தாயார் தங்கம்மா, யாழ்ப்பாணம் நகரில் வண்ணார்பண்ணை.

என் தாயார் வீட்டில் பிறந்தேன். வியாழக்கிழமை நள்ளிரவு. என் தாயாருக்கு மகப் பேற்று வலி. 

வடக்கே 5 கிமீ. தொலைவில், மருதனார்மடத்து மகப்பேறு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல, அப்பா வண்டி தேடினார். குதிரை வண்டியோ மாட்டு வண்டியோ தேடினார். பின்னிரவல்லவா? எந்த வண்டியும் கிடைக்கவில்லை.

மகப்பேற்று மருத்துவச்சி ஒருவருடன் மீண்டார். மருத்துவச்சி உதவியுடன் வெள்ளிக்கிழமை புலர் காலை நான்கு மணியளவில் நான் பிறந்தேன். 

குளிர் தொடங்கிய கார் காலம். கார்த்திகை மாதம், புதன்கிழமை, கார்த்திகைக் கார்த்திகை. தீபம் என்ற விளக்கீட்டு நாள். 

அடுத்த நாள் வியாழக்கிழமை ரோகிணி. சரியாக முப்பத்தொரு ஆண்டுகளுக்கு முன் என் தந்தையார் பிறந்த நாள் (15.12.1910). 

அடுத்த நாள் வெள்ளிக்கிழமை மிருகசீரிடத்தில் (05.12.1941) நான் பிறந்தேன். 

எனக்கு ஓர் அக்கா, சரோசினிதேவி. நான் பிறந்து இரண்டு ஆண்டுகள் கழித்து, ஒரு தங்கை, சாந்தா தேவி. எங்களை வளர்ப்பதே அம்மாவுக்குத் தலையாய பணி.

என் அக்காவும், தங்கையும், வண்ணார்பண்ணையில் இருந்து வடக்கில் 5 கிமீ. தொலைவில் உள்ள மருதனார்மடம் மகப்பேறு மருத்துவமனையில் பிறந்தனர்.

மருத நிலம். அங்கே மடம். எனவே, மருதனார் மடம்.

எனக்கு இரண்டரை வயது. மருதனார் மடம் மருத்துவமனையில் என் தங்கை பிறந்தார். அதற்காக, அந்த மருத்துவமனையிலேயே பல நாள்கள் தங்கி இருந்தோம்.

தந்தையார் பணி முடிந்து ஈருருளியில் அங்கு வருவார். என்னையும் அக்காவையும் கையைப் பிடித்து அழைத்துச் செல்வார். மாலை நேரம் போகின்ற தொடர் வண்டியைக் காட்டுவார். ஒவ்வொரு நாளும் அழைத்துச் செல்வார். திரும்பி வரும்பொழுது ஓமப் பொடி வாங்கித் தருவார்.

அங்கிருந்த நாள்களில், ஒவ்வொரு நாளும் உறவுக்காரர்கள் உணவு கொண்டு வருவார்கள். அல்லது நாங்களே சமைப்போம்.

சிற்றுண்டியாகப் பிட்டு அல்லது இடியப்பம். தோசை, இட்லியைச் சிறுவயதில் பார்த்த நினைவில்லை. வழக்கமாகச் சிவப்பரிசிமாவில் (ஊரரிசிமா) அவித்த இடியப்பம் அல்லது பிட்டு. 

ஒருநாள் யாரோ கோதுமை மாவில் (கூப்பன் மா) அவித்த வெள்ளை இடியப்பம் கொண்டு வந்தனர். எனக்கு மிகவும் பிடித்தது. அதன்பிறகு ஒவ்வொரு நாளும், வெள்ளை இடியப்பமே கேட்டு நான் அழுது அடம் பிடிப்பேன். 

குடி நெருங்கிய யாழ்ப்பாணம் நகரத்தில் என் தாயார் வீடு. 

வயல்வெளிகளின் நெடும் பரப்பு. கோடையில் மணல் வெளி. மாரியில் பசுமைப் போர்வை. பொட்டல் பொட்டலாகத் திடல்கள். அங்கங்கே மண் குடில்கள். தந்தையாரின் ஊரான மறவன்புலவு அதுவே.

யாழ்ப்பாணத்தில் பிறந்தேன். மழலையாக, சிறுவனாக மாணவனாக மறவன்புலவில் வளர்ந்தேன்.

வக்கியுள்ள குதிரை வண்டியிலோ கூடாரமுள்ள மாட்டு வண்டியிலோ யாழ்ப்பாணம் போய் வருவோம். மறவன்புலவில் மகிழுந்துகளே இல்லை. யாழ்ப்பாணத்தில் மகிழுந்துனர் வாடகைக்கு வருவர். மறவன்புலவில் நான் வாழ்ந்த காலத்தில் மகிழுந்தில் பயணித்த நினைவு இல்லை.

என் மழலைக் காலச் சிறுவர் கால வாழ்க்கை மிக இனிமையானது. மண் வீடு. தென்னோலைக் கிடுகுக் கூரை. ஈரறைகள். சமையல் குடில் தனியாக. குடிலுக்கும் வீட்டுக்கும் இடையே கூரையுள்ள ஓடை. அறைக்கு வெளியே திண்ணை. சாரல் வராத தட்டி. கோடையில் தட்டியைத் தூக்கிக் கம்பு வைத்தால் திண்ணையில் புழுக்கம் போக்கும் காற்று. 

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், மண் தரையைச் சாணி கரைத்து மெழுகுவர். ஆண்டுதோறும் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு, கூரையைப் பிரித்து, மீண்டும் புதிதாகக் கிடுகு வேய்வர்.

வீட்டுக்கு ஓர் அறை மட்டுமே. பிற்காலத்தில் முன் அறையை அப்பா அமைத்தார்.

இரண்டு வயதிருக்கலாம். காலை நீட்டிய அம்மாவில் கால் பக்கமாக என் தலை. மடிப் பக்கமாகக் கால்கள். பக்கத்தில் சட்டியில் மருத்தெண்ணெய். உச்சந் தலையில் இருந்து உள்ளங்கால் வரை எனக்கு மருத்தெண்ணெய் தேய்ப்பார் அம்மா. 

கண்கள் எரியும். மூக்கில் மருத்தெண்ணெய் மணக்கும். தேய்த்தபின் இள வெயிலில் ஓலைத் தடுப்பில் என்னை வளர்த்துவர். அரை மணி நேரம் இள வெயிலில். பின் ஒரு மணி நேரம் ஓடையில் தொங்கும் ஏணைக்குள். நாள் தோறுமா? இடையியைடயா? நினைவில் இல்லை. ஓலைத் தடுப்பின் சொரசொரப்பும் மருத்தெண்ணெய் மணக்கும் ஏணையின் சொகுசும் அந்த மருத்தெண்ணை மணமும் இன்றும் நினைவில் பசுமையாக, கண்களுள் எரிவாக, நாசிக்குள் மணமாக!

அதேபோல, அக்காவுக்கும், தங்கைக்கும் தனித்தனித் தடுக்குகள் ஏணைகள். 

வீட்டைச் சுற்றிலும் 2 கிமீ. தொலைவிற்கு வயல்வெளிகள். வானமும் நிலமும் சந்திக்கும் மெல்லிய இடையில் தொலைவில் கூடலாக மரங்கள்.

என் தந்தையாரின் தாயார் எனக்கு ஆச்சி, பெயர் குழந்தைநாச்சன். 

நாள்தோறும் காலை 4 மணிக்கே ஆச்சி எழுந்து விடுவார். வீடு, வளவுக்குள் கழிப்பு அறை ஏது? எனவே விடியமுன் பெண்கள் வயல் வரப்பு மறைவு தேடுவர். விடிந்த பின் எங்காவது புதர்கள் மரங்களில் மறைவு தேட வேண்டும்.

கருக்கல் பொழுதில் கையைப் பிடித்துக் கவனம் கவனம் எனச் சொல்லி அழைத்துச்செல்வார் ஆச்சி. வயலுக்குப் போவார், வெளிக்குப் போவார், நானும் போவேன். வானத்து மீன்களை எண்ணியவாறே. சோழகக் காற்றுடன் நீல வானில் மிதந்தோடும் வெண் மேகங்களைப் பார்த்தவாறே.

எம்மிடம் 45 - 50 மாடுகள் இருந்தன. எருதுகள், நாம்பன்கள், பசுக்கள், நாகுகள், கன்றுக்குட்டிகள். வயலுள் கட்டை இறுக்குவோம். எருதுகள் நாம்பன்களைக் கட்டைகளில் கட்டுவோம். பசுக்கள் நாகுகளை கற்களில் கட்டுவோம்.

நாம் போகும் ஒலி கேட்கையில் படுத்திருந்த மாடுகள் எழுந்திருக்கும். முன்னங்கால் ஒன்றில் உருவு தடம். கட்டையிலோ கல்லிலோ மாறு தடம். இடையில் ஒன்றரை முழ நீளக் கயிறு. 

தாடையில் தடவுவேன். காதில் தடவுவேன். கொம்பைப் பிடிப்பேன். முதுகில் தட்டுவேன். பின்முதுகோடு எக்கிய வயிறுக்கருகே தடவுவேன். கயிறை அவிழ்க்கும்போதும், மாடுகளின் முகத்தில் மகிழ்ச்சி பொங்கும். 

ஒரு சில மாடுகள் மூர்க்கமானவை. அருகே போகாதே என்று ஆச்சி தடுப்பார். இருந்தாலும் நான் மெல்ல அருகில் செல்வேன். தடவிக் கொடுப்பேன். பழக்கி விடுவேன். ஒவ்வொன்றாக உறவாடுவேன். காலில் உருவு தடத்தை அவிழ்த்ததும் மாடு காலை உதறும்.

ஒவ்வொரு வயற் பாத்தியிலும் இரண்டு நாள்கள் மாடுகளைக் கட்டுவோம். பின் அடுத்த பாத்தியில் கட்டுவோம். மாற்றுகின்ற அன்றைக்கு மாடுகளை அவிழ்த்துவிட்ட பிறகு, கற்கள் அகற்றிக் கட்டைகளைப் பிடுங்கி, அடுத்த பாத்தியில் ஊன்றுவோம்.

கருக்கல் போய் நிலம் வெளிக்கும் நேரம். மாடுகள் மேய்ச்சலுக்குப் போகும். ஆச்சியோ சாணங்களை அள்ளிச் சிறு சிறு குவியல்களாக்குவார். குவியலின் அளவும் இடைவெளியும் மாறாது. வயலுக்குள் குவியல்களின் கோலமே ஆச்சியின் கைவண்ணம். அவை பச்சைச் சாணக் குவியல்.

நான்கு நாளைக்கு முந்தைய குவியல் காய்ந்திருக்கும். காய்ந்தவற்றைக் கையால் உடைத்து நொருக்கித் துகளாக்கும் பணி என்னது. பச்சைச் சாணக் குவியல் முடிந்ததும் காய்ந்த சாணத்தைத் தூளாக்க ஆச்சியும் என்னோடு சேர்ந்து கொள்வார்.

கருக்கல், நிலம் வெளித்தல், விண் மீன் மறைதல், வானம் கிழக்கே சிவத்தல், தீப்பிழம்பாகக் கீழ் வானத்தில் எழும் வரி வட்டம், வளர்ந்து அரை வட்டமாகையில் ஆச்சி கையைப் பிடித்துக் கொள்வார். குளத்தை நோக்கி வயல் வரப்புகளில் நடப்போம். கீழ் வானத்தைப் பார்த்தவாறே, வண்ணங்களின் வித்தைகளைப் பார்த்தவாறே நடந்து செல்வேன்.

வள்ளைக்குளத்தில் வெளிக் கழுவும் கரை, வாய்க்காலை ஒட்டி வடகிழக்கே. குளிக்கும் கரை, தெருப்பக்கமாக வட மேற்கே. 

வள்ளைக்குளத்தில் குளிப்போம். தண்ணீருக்குள் இறங்கினால் ஆச்சி என் கையை விடார். இறுக்கிப் பிடித்தவாறு குளிப்பாட்டுவார், குளிப்பார். 

முதல் நாள் தோய்த்த துணி காய்ந்து தொங்கும். அன்றைய துணியைத் தோய்த்துக் காயவிட்டு, தோய்த்துலர்ந்த துணியுடன் பிள்ளையார் கோவிலுக்குச் செல்வோம். 

திருநீறு அணிவோம். சந்தனக் கட்டையால் அரைத்துப் பொட்டிடுவோம். ஆச்சி தேவாரம் சொல்லித் தருவார். ஓதி வீடு திரும்புவோம். 

அம்மா சமைத்திருப்பார். சாப்பிட்டதும் காற் சட்டை மேற் சட்டை அணிவிப்பார், பொத்தான்களைப் பொருத்துவார். சுருக்குகள் நீங்க இழுத்துவிடுவார். எழுதுபலகை (சிலேற்று) தருவார். புத்தகம் உறை பார்த்துத் தருவார். எழுதி (சிலேற் பென்சில்) என் பைக்குள் வைப்பார். கவனம், தொலைக்காதேங்கோ தம்பி என்பார். தலை வாரித் திருநீறிட்டு நெற்றியில் கறுப்புப் பொட்டிடுவார். 

அக்காவுக்கும் அவ்வாறே அணிவிப்பார்.

8 மணிக்கு, நானும் அக்காவும், புறப்படுவோம். ஒன்றரைக் கிமீ. தொலைவு நடப்போம், கோடையில் வயல்களூடாக நாம் நடந்தே அமைத்த ஒற்றையடிப் பாதையில், மாரியில் வயல் வரப்புகளில் நடந்து பள்ளி செல்வோம்.

எனக்கு 3 வயதில் வள்ளைக்குளப் பிள்ளையார் கோயில் மண்டபத்தில் ஏடு தொடங்கினார்கள். அ, ஆ எழுதச் சொல்லிக் கொடுத்தார்கள். மறவன்புலவு சகலகலாவல்லி வித்தியாசாலையில்தான் படித்தேன். 

நான், சகலகலா வல்லி வித்தியாசாலைக்குப் போகும்பொழுது தொப்பி, சப்பாத்து (செருப்பு) அணிந்ததே இல்லை. கொளுத்துகின்ற வெயிலிலும் வெறுங்கால்களுடன்தான் நடந்து சென்றோம். 

மழை பெய்தால் காவோலையைத் தலைக்கு மேலே பிடித்துக் கொண்டு வருவோம். காய்ந்து போன பனை ஓலையே காவோலை.

மாரியில் வயல்கள் முழுமையும் நீர் நிறையும். வரப்பின் மீது கவனமாகக் கால் பதித்து நடந்து வருவோம். வயல் வரப்புகளில் கத்தரிச் செடிகள், சுண்டஞ் செடிகள் தாமாக வளரும். நாங்கள் கத்தரிக் காய்களையும் சுண்டங் காய்களையும் பிடுங்கி வருவோம்.

வள்ளைக்குளத்தில் தாமரைக் கொடிகள், வட்ட வட்ட இலைகள், மின்னும் மணிகளாக அவை மேல் நீர்த் துளிகள். தாமரை மொட்டுகள், மலர்கள், பிஞ்சுகள், காய்கள், கரையெங்கும் விதைகள்.

தாமரைப் பிஞ்சுகளை உண்போம். மலர்களின் நடு மஞ்சளை உண்போம். விதைகளின் பருப்புகளை உண்போம். விதைகளைப் பற்களால் உடைப்போம். தாமரைப் பருப்பை விரும்பி உண்பேன். விதைகளுக்கும் ஆட்டுப் புழுக்கைகளைக்கும் வேறுபாடு பெரிதாக இல்லை. புழுக்கையை விதை என மயங்கிக் கடித்து இருக்கிறேன். 

ஈச்ச மரங்கள் கடற்கரை ஓரமாக வளரும். ஈச்சம் பழங்களைச் சில மாணவர் பள்ளிக்குக் கொணர்வர். அதைப் பறிக்க நேரே போகும் ஆர்வம் வரும்.

ஈச்சையில் பறக்கும் பாம்புகள், கொண்டல் மரத் திடலில் பிசாசு, அச்சுறுத்துவார் ஆச்சி. 

வைரவர் கோயில், அம்மன் கோயில், பெரியதம்பிரான் கோயில், பூதராயர் கோயில், நாகதம்பிரான் கோயில், அண்ணமார் கோயில் என எங்கு போவதென்றாலும் தனியே போக விடார்.

பள்ளிக்குப் போனால் நேரே வீட்டுக்குத் திரும்பேவேண்டும். ஆச்சியின் கட்டளை. அம்மாவின் ஆணை. அப்பாவின் வழிநடத்தல்.

இத்தகயை கட்டுப்பாடுகள் தம் மக்களை நெறிப்படுத்தி வளர்க்கவே. இல்லை என்றால் நாங்கள் அலார்ப்பட்டுப் போய்விடுவோமே? கேள்வி கேட்பார் இல்லை என்றாகி விடும்.

பள்ளி முடிந்து வீடு திரும்பும்பொழுதும் கோயிலுக்குச் சென்று பிள்ளையாரை வணங்கியே வீட்டுக்கு வருவோம். 

பொழுது பட முன், மாடுகள் தாமாகக் கட்டைக்கு வரும். மேய்ச்சலின் பின் ஒன்றன் பின் ஒன்றாக வரும். 

பகல் முழுமையும் அலைந்து திரிந்த மாடுகள், மாலையானதும் கட்டைக்கு அருகில் வந்து நிற்கும். எனக்கு மிகவும் வியப்பாக இருக்கும்.

ஆச்சியின் பெயர் குழந்தைநாச்சன். எனவே, எங்கள் வீட்டு மாடுகளுக்குக் கு என்ற எழுத்தைக் குறி சுடுவோம். கு குறியில்லாத மாடுகள் வந்திருந்தால் கலைத்து விடுவோம். அத்தனை மாடுகளுக்கும் ஆச்சி தனித்தனியாகப் பெயர் சொல்லிக் கூப்பிடுவார். கொம்பி வா, சிகப்பி வா என்று அழைப்பார்.

அருணகிரி

அப்படி என்னென்ன பெயர்கள்? முடிந்த அளவு சொல்லுங்கள்.

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

கொம்பி, சிகப்பி, குண்டுமணி எனப் பல. நினைவுகூர்ந்து சொல்கின்றேன். ஒவ்வொரு மாட்டுடனும் பேசுவேன். உருவு தடத்தை வைத்தால், மாடுகள் தாமாகவே முன்னங் கால்களை வைக்கும். எனக்கு வியப்பாக இருக்கும். 

மாடுகள் கன்று ஈன்றால், வீட்டில் கொண்டு வந்து கட்டுவார்கள். பால் கறந்து குடிப்போம்.

சில மாடுகள் திரும்பி வரா. வேறு பட்டிக்குப் போய் விடும். வீட்டில் உதவியாளரிடம் சொன்னால், அவர் போய்த் தேடிக் கண்டுபிடித்துக் கொண்டு வந்து கட்டுவார். மாடுகள் சினைப்படும் (ஏறுகின்ற) காலத்தில் மாறிப் போய்வதுண்டு.

ஆவணியில் வயல்களில் விதைப்புக் காலம். விதைக்கத் தொடங்கி அறுவடை வரை, மாடுகளை எங்கு வைத்திருப்பது? 

மறவன்புலவில் 600-700 மாடுகள் வரையிலும் அக்காலத்தில் இருந்தன. ஆவணிச் சதுர்த்திக்கு மறுநாள் பிள்ளையார் கோயிலில் நாள் குறிப்பர். அன்றைக்கு ஆலடிக்கு மாடுகளை கொண்டு வருவர்.

அங்கிருந்து தெற்கே கேரதீவுக்கு மாடுகளைச் சாய்ப்பர். கேரதீவுக்கருகே தரவைக் கடல். மாடுகள் ஆழமற்ற கடலை நடந்தே கடப்பன. சங்குப்பிட்டி, பூநகரி, முழங்காவில், பாலியாறு வழியாக வெள்ளாங்குளம் மூன்றாம்பிட்டி செல்வன. 

வழி எங்கும் புல் தரைகள். யானைகள் சிறுத்தைகள் முள்ளம்பன்றிகள் மான்கள் உலவும் காட்டுப் பாதை. மூன்று நாள் பயணம். வழியில் கோயில்களில் பொங்கல் பொங்கிச் சாப்பிடுவர்.

மூன்றாம் பிட்டியில் மேய்ச்சலுக்கு விடுவர். மாடுகளைச் சாய்ப்போரில் சிலர் குடும்பத்தோடு சென்று அங்கேயே தங்கி இருந்து மாடுகளைப் பராமரிப்பர்.

மகா சிவராத்திரிக்குப்பின் மூன்றாம்பிட்டியில் இருந்து மாடுகளை ஓட்டிக் கொண்டு மறவன்புலவு வருவர். மாட்டின் குறி பார்த்து அவரவர் பட்டிக்கு அனுப்புவர்.

அருணகிரி

அப்படி எத்தனை நாள்கள்?

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, என அரை ஆண்டுக் காலம் வன்னிக்கு மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்புவர்.

வீட்டிலும் மாடுகளை வைத்துக் கொள்வோரும் உளர். உழவு, வண்டி எருதுகள் வீட்டிலேயே நிற்கும். பாலுக்காகவும் வீட்டில் மாடுகள்.

மழைக்காலத்தில் நிலம் சதுப்பு ஆகும். மாடுகள் படுத்து உறங்க முடியாதே?

மேய்ச்சலுக்குப் புல் தரைக்குக் கொண்டு செல்வதாயில் பனை ஓலை வாய்மூடி கட்டிச் சாய்க்கலாம்.

நெற் கதிர் ஒன்றை மாடு கடித்தாலும் பாவச்செயல் எனக் கருதுவர். மற்றவருக்குக் கேடே. ஐயோ இந்தப் பாவம் எனக்கா? என வருந்துவர். 

வீட்டில் திண்ணையில் உட்கார்ந்து படிப்போம். அங்கேயே பாயில் படுத்து உறங்குவோம்.

எங்கள் வீட்டு முற்றம் அழகே அழகு. அப்பா அம்மா திருமணத்திற்காக நட்டு வளர்த்த இரண்டு முள்முருங்கை மரங்கள் இருந்தன. முற்றம் முழுமையும் பால் போன்ற வெண்ணிற மணல்தான்.

சனிக்கிழமைகளில் உடம்பு முழுவதும் எண்ணெய் தேய்ப்பார்கள். உடம்பில் ஊறவேண்டும் என்பதால் இரண்டு மணிநேரம் ஓடி விளையாடாது, வியர்க்காது காத்து இருப்போம். பின்னர் சீயக்காய், இலுப்பைப் புண்ணாக்கான அரப்பு அவித்து உடலெலாம் தேய்த்துத் தோய்விப்பார் அம்மா. குளத்துக்குச் செல்வதில்லை. வயலுக்குள் கிணறொன்றில் தோய வார்ப்பார்கள்.

சமையல் கொட்டில் வாயிலில் உட்கார்ந்த அம்மா, சாப்பிடக் கூப்பிடுவார். மாட்டேன் என ஓடுவேன். வாழைக்காய்ப் பொரியல் சேர்த்து ஒரு பிடி சோறு ஊட்டுவார். அப்படி ஒவ்வொரு பிடிக்கும் நானும், அக்காவும், தங்கையும் வீட்டு முற்றத்தின் எல்லைக்கு ஓடிச்சென்று திரும்பி வருவோம்.

மறவன்புலவு எங்கும் பாம்புகள். புல்லுக்குள் ஊர்வன. அவற்றை அடித்துக் கொல்லார். பாம்பு வந்தால், கற்பூரம் கொளுத்தித் தீபம் காட்டுவர். பாம்பும் சற்று நேரத்தில் போய்விடும்.

எனவே, முற்றத்தில் புல் முளைக்க விடார். புற்களை வெட்டி எடுத்து விடுவோம். காலைதோறும் ஆச்சியும் நாங்களும் முற்றத்தை விளக்குமாற்றினால் நன்றாக அரித்துக் கூட்டுவோம். சிறு கற்கள், கிழிஞ்சல்கள், சருகுகள் எதையும் விடோம். 

மறவன்புலவில் எங்கு பார்த்தாலும் பூவரச மரங்களே. முன் முற்றத்தில் ஒரு வேப்ப மரம். வேப்பங்குச்சியாலேயே பல் துலக்குவோம்.

ஆச்சிக்கும் அப்புவுக்கும் பிறந்த குழந்தைகள் இறந்து கொண்டிருந்தன. எனவே, என் அப்பா பிறந்ததும் அவரைக் காப்பாற்றும் நம்பிக்கையில் அவரைக் கோயிலுக்கு விற்றனர். 

பிள்ளையார் அப்பா, இனி இஃது உன் குழந்தை. நீயே பார்த்துக் கொள் என்றனர். கோவில் குருக்கள் குழந்தையை வாங்கிக் கொண்டார். என் அப்பா, கோயிலின் குழந்தையானார். பிள்ளையாரின் குழந்தையானார்.

ஓரே ஆண்பிள்ளை. தந்தையும் இல்லை. எனவே பள்ளிக்கே ஆச்சி போக விடவில்லை. எனக்கு ஒரே ஆண் பிள்ளை நீயே. உன்னை வெளியே விடேன் என்று சொல்லிவிட்டார். திருக்கோவில் பணி, போதுமான நிலபுலங்கள், உறவுகள், எனவே, படிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்று ஆச்சி கருதினார். அவரது முன்னோர்கள் திண்ணைக் கல்வி பெற்றவர், திருக்கோயில் புராண படனக் கல்வி பெற்றவர். பள்ளிக்குச் செல்லும் வழமை புதிது.

என் தந்தைக்கு ஒன்பது வயது. அவர் தந்தையார் முருகேசர் இறந்து போனார்.

அப்பாவுக்குப் பத்து வயதில் ஓர் ஆசிரியர் வந்தார். ஆச்சியைத் திட்டினார். அப்பாவின் எதிர்காலத்தைப் பாழாக்காதே என்றார். பள்ளியில் சேர்த்து விட்டார். இவற்றை அப்பா என்னிடம் சொல்லி இருக்கின்றார். அவர் தன் வாழ்க்கைக் குறிப்புகளை எழுதியும் வைத்து இருக்கின்றார்.

மறவன்புலவில் இருந்து வடக்கே மூன்று கல் தொலைவில் உள்ள நுணாவிலில் ஒரு பள்ளியில், ஆசிரியர் கொண்டு போய்ச் சேர்த்தார். 

அப்பா பத்தாம் வகுப்பு வரை படித்தார். அதன்பிறகு ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்தார். 

முதலில் திருநெல்வேலியில் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி. அரசாங்க உரிமம் அற்ற பள்ளி. எனவே, அடுத்து பண்டத்தரிப்பில் ஒரு பயிற்சிப் பள்ளி. பின்னர் கோப்பாய் பயிற்சிப் பள்ளி. அங்கே ஆசிரியர் பயிற்சி பட்டயச் சான்று இதழ் பெற்றார்.

முதலில் நாவற்குழிப் பள்ளியில் ஆசிரியப் பணி. அடுத்து கொக்குவில் பள்ளியில் பணி. பின்னர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் தொடக்கப்பள்ளிப் பணி. யாவும் தனியார் பள்ளிகள். 

என் அப்பா ஆசிரியராகப் பணியாற்றிய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரித் தொடக்கப்பள்ளி ஆட்சிச் சபையில் சிவகுருநாதன். யாழ்ப்பாணம் நகர மன்றத் தலைவராகவும் (Urban Council) சிவகுருநாதன். 

சிவகுருநாதனுக்கு மறவன்புலவில் வயல்கள். அந்த வயல்களை அப்பாவின் மேற்பார்வையில். எனவே, சிவகுருநாதனுக்கு அப்பா நெருக்கமானார். ஒரு வகையில் சிவகுருநாதன் என் தாயாருக்கு உறவினர்.

ஐயனார்கோயிலடி அண்ணாமலையார் வழியாகச் சிவகுருநாதர் அம்மாவைப் பெண் பார்த்துத் திருமணம் செய்து வைத்ததாக அப்பா சொல்லுவார்.

சிவகுருநாதனின் மனைவி விசாலாட்சி. யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி தொடங்கத் தன் நிலத்தை நன்கொடையாக்கினார். விசாலாட்சி அம்மையாரின் சிலை இந்து மகளிர் கல்லூரி வாயிலில் உளதே.

யாழ்ப்பாணத்தில் ஓர் ஒழுங்கைக்குச் சிவகுருநாதன் பெயர். நான் சிறுவனாக அவருடைய வீட்டுக்குச் செல்வேன். அம்மா என்னை அழைத்துப் போவார்.

வள்ளைக்குளப் பிள்ளையார் கோயிலில் மாலையில் புராண படனம். ஏதேனும் ஒரு புராணம் படிப்பார்கள். பண்டிதர் ஒருவர் பாடலை வாசிப்பார். பிரித்துக் கூறுவார். கொண்டுகூட்டிச் சொல்வார். எதிரே மற்றப் பண்டிதர் பயன் (பொருள்) சொல்வார். இசையோடு பாடுவார், இசையோடே பொருள் சொல்வார். அடியார்கள் உட்கார்ந்து கேட்பார்கள். 

புராண படனங்களோடு வளர்ந்தேன். தமிழோடும் சைவத்தோடும் வளர்ந்தேன்.

கந்த புராணம் படிப்பார்கள், திருவிளையாடல் புராணம் படிப்பார்கள். மார்கழி மாதம் திருவெம்பாவை காலத்தில், திருவாதவூரடிகள் புராணம் படிப்பார்கள். சிவராத்திரியின் பொழுது, சிவராத்திரி புராணம் படிப்பார்கள். சித்திரைச் சித்திரையில் சித்திர புத்திர நாயனார் புராணம் படிப்பார்கள்.

அருணகிரி

நானும் எங்கள் தெரு பிள்ளையார் கோவிலில் சித்திரபுத்திர நாயனார் புராணம் படித்து இருக்கின்றேன்.

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

அப்படியா? மகிழ்ச்சி.

ஐந்தாம் வகுப்பு வரையிலும், தமிழை மட்டுமே கேட்டு வளர்ந்தேன். அதன்பிறகுதான் எனக்கு ஆங்கிலம் அறிமுகம் ஆயிற்று.

அருணகிரி

1 முதல் 5 வரை எங்கே படித்தீர்கள்?

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

சகலகலாவல்லியில் 4ஆம் வகுப்பின் அரை ஆண்டிலேயே, இடம் மாறி, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி தொடக்கப் பாடசாலையில் சேர்ந்தேன். அந்தப் பள்ளியிலே அப்பாவுக்கும் ஆசிரியப் பணி.

நாள்தோறும் மறவன்புலவில் இருந்துதான் யாழ்ப்பாணம் சென்று வந்தோம். மாட்டு வண்டியில் காலை ஏழு மணிக்குத் தச்சன்தோப்பு தொடரி நிலையத்தில். அப்பா, அக்கா, நான் மூவரும். 

தொடர்வண்டியில் யாழ்ப்பாணம் நிலையம். அங்கிருந்து 2 கிமீ. நடந்து யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி தொடக்கப் பாடசாலை. எட்டரை மணிக்குப் பள்ளிக்குப் போய்ச் சேர்வோம். 

மாலை மூன்று மணிக்கு நடந்து யாழ்ப்பாணம் தொடர் வண்டி நிலையம். அங்கிருந்து தொடர்வண்டியில் தச்சன்தோப்பு. மாண்டு வண்டியில் மறவன்புலவு. இவ்வாறு ஆறு மாதங்கள் கடந்தன.

1949ஆம் ஆண்டு நாங்கள் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில் என் தாயார் வீட்டுக்கே குடிபெயர்ந்தோம்.

அங்கே என் தாயாருக்கு ஒரு காணி இருந்தது. அது அவருக்கு திருமணத்தின்போது சீதனமாகக் கொடுத்தது. ஒவ்வொரு பெண்ணுக்கும் திருமணத்தின்போது, ஒரு காணியாவது கொடுக்கின்ற வழக்கம் யாழ்ப்பாண வழக்கம்.

அம்மாவுக்குக் கிடைத்த காணியில், 1950 இல் அப்பா ஒரு கல் வீடு கட்டத் தொடங்கினார். தொடர்ச்சியாகக் கட்டவில்லை. விட்டுவிட்டுக் கட்டினார். காங்கிரீட் சிமெண்ட் மேற்கூரை போட்டார்.

அருணகிரி

அப்பாவும் அம்மாவும் என்ன படித்தார்கள்?

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

1952ஆம் ஆண்டு கல்வீட்டில் குடியேறினோம். ஆனாலும் மின்சாரம் நீண்ட நாட்களுக்குப் பிறகுதான் வந்தது. ஒவ்வொரு நாளும் சிம்னி விளக்கைக் கழுவி விளக்கு ஏற்றுவது என்னுடைய கடமையாக இருந்தது.

அருணகிரி

நீங்கள் எப்போது மின்சாரத்தைப் பார்த்தீர்கள்?

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

எங்கள் வீட்டுக்கு மின்சார இணைப்பு கிடைத்தபொழுது எனக்கு 14 வயது. ஆனால், அதற்கு முன்பே யாழ்ப்பாணத்தில் சில இடங்களில் மின்சார விளக்குகள் எரிவதைப் பார்த்து இருக்கின்றேன். எங்கேனும் ஒரு வீட்டில் வானொலியில் பாடல்கள் ஒலிக்கக் கேட்டு இருக்கின்றேன். 

கல்கி, ஆனந்த விகடன் போன்ற ஏடுகள் தமிழ்நாட்டில் இருந்து யாராவது ஒரு வீட்டுக்கு வரும். அப்பா ஈருருளியில் வீரகேசரி, சுதந்திரன் இதழ்களைச் சொருகி வருவார். வீட்டுப் படியில் உட்கார்ந்து படித்து விட்டுத்தான் சாப்பிடுவேன். 

அது 1952.

அவருடைய அந்தக் கண்ணோட்டம்தான், எனக்கும் ஏடுகளைப் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டிற்று, ஒரு எழுத்தாளனாக என்னை மாற்றியது.

ராமநாதன் என்று தமிழ்நாட்டில் எழுதுகின்றார்கள். ஆனால், ஈழத்தில் இ சேர்த்துத்தான் எழுதுவோம். சொல்லுக்கு முதல் எழுத்து எப்படி வரும் எனத் தமிழ் இலக்கணம் வரையறுத்து இருக்கின்றபடிதான் எழுதுகின்றோம். அப்படித்தான் பெயர்கள் சூட்டுவோம். நீங்கள் லண்டன் என்று எழுதுகின்றீர்கள். நாங்கள் இலண்டன் என்றுதான் எழுதுகின்றோம்.

அம்மா 90 வயதில் சென்னைக்கு வந்து இந்த வீட்டில் தங்கி இருந்தார். அப்போது வீட்டுக்கு விருந்தாளிகள் வந்து சாப்பாடு பரிமாறும்பொழுதும் கூட, இரசம் கொண்டு வரட்டுமா? என்றுதான் கேட்பார். இ என்பதை அழுத்தமாகச் சொல்லுவார். விருந்தாளிகள் சிரிப்பார்கள். அவர் மட்டும் அல்ல, எங்கள் ஊரில் எல்லோருமே அப்படித்தான் பேசுவார்கள். அதுபோல வில்லியம் என்ற பெயரை, உவில்லியம் என்றுதான் எழுதுகின்றோம்.

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வில்லியம் அகராதியை வெளியிட்டு இருக்கின்றார்கள். அவர்களும் உவில்லியம் என்றுதான் எழுதி இருக்கின்றார்கள்.

என் இளமைக்காலம் என்பது அமைதியான வாழ்க்கை. குறைவு இல்லாத வாழ்க்கை. என் பெற்றோர் என்னை அடித்தது மிகமிகக் குறைவு. காரணம், என் அப்பா அவரது பெற்றோருக்கு ஒரேயொரு ஆண் பிள்ளை. அவருக்கு நான் ஒரேயொரு ஆண்பிள்ளை. எனவே, நான் செல்லப்பிள்ளை. ஆண்பிள்ளை மீது கை வைக்க மாட்டார்கள்.

வீட்டுக்கு யார் வந்தாலும், அவர்கள் என்னைத் தொடக்கூடாது என்று ஆச்சி சொல்லுவார். அவன்கிட்ட போகாதீங்கோ என்று சொல்லுவார். இங்கே வா என்று என்னை இழுத்துத் தன் மடியில் அமர்த்திக் கொள்ளுவார்.

ஆனால், அந்தக் கண்ணோட்டம், நாங்கள் யாழ்ப்பாணத்தில் குடியேறியபிறகு, மாறியது. 

மறவன்புலவில் என் வயதை ஒத்தவர்கள் பெரியவர்கள் எல்லோரும் சேர்ந்து உரையாடி, குதூகலமாக இருந்தோம்.

நானும் வயலில் இறங்கி உழுது இருக்கின்றேன். அப்போதும் ஆச்சி, நீ சும்மா இரு என்று சொல்லுவார். 


No comments: