Friday, December 02, 2016

அப்துல் கலாமும் யாழ்ப்பாணமும்

அப்துல் கலாம் 2012 தைப் பொங்கலுக்குப் பின்னர் யாழ்ப்பாணம் வந்தார் என்றறிந்தேன். 

அவர் யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகத்திலும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் ஆற்றிய உரைகளில் என்னையும் குறிப்பிட்டு உரையாற்றினார். நான் அக்காலத்தில் ஆத்திரேலியாவில் இருந்தேன். என் நண்பர்கள் அவரின் உரைக் காணொலியைப் பகிர்ந்தனர். அவரின் உரையில் என்னைக் குறித்த பகுதி பார்க்க.
https://www.youtube.com/watch?v=xoKOZ2hTONs
அப்துல் கலாமுடைய கணித ஆசிரியர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கனகசுந்தரம். இதை அவரே தன் நூல் ஒன்றில் குறிப்பிடுகிறார்.
தில்லித் தமிழ்ச் சங்க விழாவில் என்னிடம் பேசுகையில் மிக்க மகிழச்சியுடன் தன் கணித ஆசிரியர் கனகசுந்தரனாரை நினைவு கூர்ந்தார்.



1959 தொடக்கம், பல முறை இராமேச்சரம் போயிருக்கிறேன். அண்மையில் 2009இல் ஒருமுறை இராமேச்சரம் சென்றபொழுது, அப்துல் கலாம் பிறந்த, வாழ்ந்த இல்லம் சென்றேன். அவரது அண்ணரைச் சந்தித்தேன். அப்துல் கலாமைப் போலவே அவரது அண்ணரும் பேசுவது குறைவு.
அப்துல் கலாமின் கணித ஆசிரியர் கனகசுந்தரம் பற்றிக் கேட்டேன். அவரோ அவரது குடும்பத்தினரோ இராமேச்சரத்தில் வாழ்கிறார்களா என உசாவினேன்.
அப்துல் கலாமுடன் கூடப் படித்த சிவாசாரியார் ஒருவரிடம் கேட்குமாறு என்னை அனுப்பினார். முதியவரான அச் சிவாசாரியாருக்குப் பழைய நினைவுகளை மீட்க முடியவில்லை.
அப்துல் கலாம் படித்த பள்ளிக்குச் சென்றேன். தலைமை ஆசிரியர் ஒரு பெண். இராமநாதபுரம் மாவட்டத்தின் வேறொரு ஊரைச் சேர்ந்தவர். மாற்றலாகி இந்தப் பள்ளிக்கு வந்திருந்தார். அவருக்கோ ஆசிரியர்களுக்கோ பழைய பதிவுகள் எதுவும் கிடைக்கவில்லை எனக் கூறினர். 
தலைமை ஆசிரியருக்கு என்னைத் தெரிந்திருக்கிறது. சேதுக் கால்வாயத் திட்டத்தை ஆதரித்துப் பரப்புரை செய்து வந்த என்னைத் தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறார். மேல் வகுப்பு மாணவருக்குச் சேதுக் கால்வாய்த் திட்டத்தை விளக்குமாறும் மறுநாள் காலை வருமாறும் கேட்டார். அடுத்த நாள் காலை அப்பள்ளிக்கு மீண்டும் சென்றேன். சேதுக் கால்வாய்த் திட்டத்தின் நன்மைகளை மேல்வகுப்பு மாணவர்களிடையே எடுத்துக் கூறினேன்.
அந்தப் பள்ளி அப்துல் கலாம் படித்த பள்ளி என்பதால் புகழ் பெற்றிருந்தது. பல அமைப்புகள் அப்பள்ளிக்குக் கல்வித் துணைக் கருவிகளை, ஆய்வகக் கருவிகளை வழங்கியிருந்தன. அவற்றைப் பயன்படுத்த முறையான ஆசிரியர்களைப் பள்ளிக் கல்வித் துறை அனுப்பாததால், அவை ஓர் அறையில் பாதுகாப்பாக இருந்தைதத் தலைமை ஆசிரியர் எனக்குக் காட்டி வருந்தினார்.
இணுவிலைச் சேர்ந்தவர் தவமணிதேவி. சிவாசாரியார் பரம்பரை. கலை ஆர்வத்தால் சென்னை வந்து திரைப்படங்களில் நடித்தவர். வனமோகினி என்ற திரைப்படத்தில் தவமணிதேவி கவர்ச்சி நடிகையாக அக்காலத்தில் புகழ் பெற்றவர். 
தன் இறுதிக் காலத்தில் இராமேச்சரம் வந்தார். யாழ்ப்பாணத்தாரின் திருமடத்தைப் பரிபாலித்த சிவாசாரியார் ஒருவரின் இரண்டாம் தாரமானார். இறுதிவரை இரமேச்சரத்திலேயே வாழ்ந்து இறந்துவிட்டார். கணவரும் இறந்துவிட்டார். இருவருக்கும் மக்கட்பேறில்லை.
அச்சிவாசாரியாரின் முதல் மனைவியின் மகன் இப்பொழுதும் அந்த வீட்டில் இருக்கிறார். அவரிடம் சென்று, இராமேச்சரத்தில் வாழ்ந்த, வாழ்கின்ற யாழ்ப்பாணத்தார் பற்றிய செய்தியைக் கேட்டேன்.  
கிழக்குக் கோபுர வாயிலுக்குத் வடக்கே உள்ள வீடுகளில் யாழ்ப்பாணத்துப் பரம்பரையினர் வாழ்வைதக் கூறி அடையாளமும் தந்தார்.
அதுமட்டுமன்று, தன் தந்தையார் பராமரித்த யாழ்ப்பாணத்தார் திருமடத்தை, அரசு கையகப்படுத்திய செய்தியையும் சொன்னார். அரசின் முடிவுக்கு எதிராகத் தன் தந்தையார் வழக்குத் தொடுத்தும் தோல்விகண்டதால், அந்தத் திருமடத்தில் கோயில் அலுவலர்கள் தங்குவதாகவும் கூறினார். பொன்னம்பலம் இராமநாதன் அந்தத் திருமடத்தைத் திருத்தி, தன் தந்தையாரின் மேற்பார்வையில் விட்டதாகவும், அடாத்தாக அரசு கையகப்படுத்தியதாகவும் தெரிவித்தார்.
வடக்கு வீதியில் மாடி கொண்ட உறுதியான, ஆனால் பராமரிப்பற்ற கட்டடமாக இன்றும் யாழ்ப்பாணத்தார் திருமடம் என்ற பெயரில் உள்ள அந்தக் கட்டடம், கோயில் அலுவலரின் குடியிருப்பாக உள்ளது.
கோயிலின் கிழக்கு வாயிலை ஒட்டி வடக்கே செல்லும் சந்து ஒன்றில் கனகசுந்தரம் குடும்பமோ, யாழ்ப்பாணத்தாரோ இருக்கலாம் என்ற என் தேடல் வீண்போகவில்லை. இராமேச்சரத்தில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் சில யாழ்ப்பாணத்தார் குடும்பங்களை அங்கு சந்தித்தேன். அவர்கள் எவருக்கும் கனகசுந்தரம் பற்றித் தெரியவில்லை. ஏனெனில் அவர்கள் யாவரும் இளைய தலைமுறையினர். கனகசுந்தரம் திருமணமாகாதவராக இருக்கலாம் என்ற செய்தியை அங்கிருந்த ஒரு முதியவர் கூறினார்.
இராமேச்சரம் கோயில் ஆட்சியரிடம் சென்றேன். இராமேச்சரத்தில் யாழ்ப்பாணத் திருமடம், கோயிலுக்கு யாழ்ப்பாணத்தார் அமைத்த பூசை அறநிலைகள் பற்றி விசாரித்தேன்.
எந்தத் தகவலும் அவர்களால் தரமுடியவில்லை. ஆனாலும் யாழ்ப்பாணத்தில் இராமேச்சரம் கோயிலுக்கு உள்ள சொத்துகளின் பட்டியலையும் அவற்றில் இருந்து வருவாய் எதையும் பெறுவதில்லை என்ற தகவலையும் ஏடுகளில் பார்த்துத் தந்தார்.
யாழ் நகரில், சிவன்கோயிலுக்கும் கதிரேசன் கோயிலுக்கும் காங்கேயன்துறை வீதி, எண் 250 தொடக்கம் 254 வரை 8 கட்டங்கள் இராமேச்சரம் கோயிலுக்குரியன.
கந்தர்மடத்தில் 40 பரப்பு, கோப்பாயில் 29 பரப்பு 11 குழி, இருபாலையில் 20 பரப்பு, அராலி தெற்கில் 8 காணிகள் மொத்தம் 90 பரப்பு, புதுவயலில் 30 பரப்பு, நயினாதீவில் 28 பரப்பு என இராமேச்சரம் கோயிலின் சொத்துகள் யாழ்ப்பாணத்தில் உள. 
தமிழ்க்குடிமகன் இந்து அறநிலையத்துறை அமைச்சராக இருந்த காலத்தில், யாழ்ப்பாணத்தில் உள்ள இராமேச்சரக் கோயில் சொத்துகளை விற்றுவிடவேண்டுமென இராமேச்சரம் கோயிலார் தீர்மானித்த செய்தியை இதழ்களில் படித்தேன். நேரே அமைச்சரிடம் சென்றேன். அவரும் நானும் பச்சையப்பன் கல்லூரியில் 1965இல் ஒருசாலை மாணாக்கர். யாழ்ப்பாண - இராமேச்சரத் தொடர்புகளை அறுத்துவிடாதீர்கள். யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபையினரைக் கேட்டால் அச்சொத்துகளின் வருவாயைப் பெற்றுத் தருவர் எனக் கூறியதுடன், அமைச்சருக்குக் கொடுத்த விண்ணப்பத்தின் படிகளை அகில இலங்கை இந்து மாமன்றத்துக்கும் யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபைக்கும் அனுப்பிவைத்தேன். என் வேண்டுகோளை ஏற்ற அமைச்சர், அந்த விற்பனை முயற்சியைத் தடுத்துவிட்டார்.
நெடுந் தீவில் இராமேச்சரம் கோயிலுக்காகப் பசுக் கோட்டம் உள்ளைதயும் கோயில் முழுக்குக்குப் பால் அங்கிருந்து வந்த வரலாற்றுக் காலங்களையும் நினைவூட்டினேன். அவர்கள் அலுவலர்கள். வரலாற்றாசிரியர்கள் அல்லர் என்பைதத் தெரிந்தேன். வேறு இடங்களில் இருந்து பணிக்காக இரமேச்சரத்துக்கு மாற்றலாகி வந்தவர்கள். எதையும் தெரிந்து வைத்திருக்கவில்லை.
யாழ்ப்பாணத்துக்கு வரும் அப்துல் கலாமிடம் கனகசுந்தரத்தாரின் நினைவுகளைக் கேட்டுத் தெரிந்து கொள்வது அங்குள்ளோரின் கடன். 
அப்துல் கலாமின் உறவுகள் மன்னாரிலும் அநுராதபுரத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கும் செய்திகளையும் இராமேச்சரத்தில் அப்துல் கலாமின் அண்ணர் என்னிடம் தெரிவித்தார்.
இராமேச்சர - யாழ்ப்பாணத்தின் வரலாற்றுத் தொடர்புகளைப் புதுப்பிக்க அப்துல் கலாமின் யாழ்ப்பாண வருகை பயன்படுமாயின் மகிழ்வேன்.   

No comments: