சுமித்திரா இரகுபதே
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
“பள்ளி மாணவியாக உங்கள் நாவல்களை வாசித்து வருபவள். உங்களின் சுவைஞராகத் தொடர்கிறேன். உங்கள் நாவல்களின் கதை மாந்தர்களாக நான் மாறிவிடுவேன், உங்கள் கதைப் பின்னலில் மூழ்கிவிடுவேன். நெகிழ்ச்சி ஓட்டத்தில் என்னை மறப்பேன்” என ஒரு சிங்களப் பெண்மணி உணர்ச்சி வயப்பட்டுச் சொல்லிக் கொண்டிருந்தார். சிரித்த முகத்துடன், செந்தழிப்பான பார்வையுடன் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தவர்
சுமித்திரா இரகுபதே.
கொழும்பு பண்டாரநாயக்க அனைத்துலக மண்டப வளாகத்தில் அனைத்துலகப் புத்தகக் காட்சி அரங்கு ஒன்றில் சுமித்திரா இரகுபதேயையும் அவரின் எழுத்துகள் ஈர்த்த சுவைஞர் ஒருவரையும் 23.09.2015ஆம் நாள் அருகில் நின்று பார்த்துக் கேட்டு வியந்தேன்.
அரங்கின் ஒரு சுவரில் தொலைக்காட்சிப் பெட்டியில் யப்பானிய + சிங்களத் திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. ‘நிகாத்தா’ என்ற அத்திரைப்படத்தின் கதைக் கரு, சுமித்திரா இரகுபதேயின் நாவல்களுள் ஒன்றான ‘கந்தக சீமா’. யப்பானியர் ஒருவரைத் திருமணம் செய்து யப்பான் நாட்டில் தன் வாழ்வைக் கழித்த சிங்களப் பெண்ணின் கதை. 2010இல் ‘கந்தக சீமா’ என்ற அவரின் இந்தச் சிங்கள நாவலுக்கு ஐந்து வெவ்வேறு விருதுகளை அள்ளிக் கொடுத்துப் பாராட்டின இலங்கை அரசும் சிங்கள இலக்கிய அமைப்புகளும்.
சின்னத் திரைத் தயாரிப்பாளர் தேடித் தேர்வுசெய்யும் பல கதைக் கருக்கள் சுமித்திராவின் நாவல்களில் உள்ளவையே.
1978இல் எழுதத் தொடங்கியவர். இடைவிடாது தொடர்கிறார். முதலாவது நாவல் பூமுதுவுனு (கம்பளம்). சின்னத் திரைத் தொடர்களைத் தொடக்கியதும் இவரது முதலாவது நாவலையே ரூபவாகினி முதலாவது தொடராக்கியது.
இதுவரை 13 நாவல்கள் எழுதியுள்ளார். சிறுகதைத் தொகுப்புகள் பல வெளிவந்துள.
இவரது மொழிபெயர்ப்பு நூல்கள் பல. சுசீலா நய்யாரின் ‘கஸ்தூரிபா’ இவரது மொழிபெயர்ப்புகளுள் ஒன்று. உருசியத் தலைவர் ஸ்டாலின் மகள் சுவேதலனா அல்லிலுயே எழுதிய ‘ஒரே ஓர் ஆண்டு’ என்ற நூலையும் மொழிபெயர்த்துள்ளார்.
சுற்றுச் சூழல் பேணும் ஆர்வலரான இவர் அத்துறையிலும் நூல்கள் எழுதியுள்ளார்.
1978இல் இருந்து 2015 வரை 37 ஆண்டு கால இடைவெளியில் 50 நூல்களைச் சிங்கள வாசகருக்கு அள்ளித் தந்துள்ளார் சுமித்திரா.
இத்தனைக்கும் எழுத்து இவரின் முழுநேரப் பணியன்று. பொறுப்புள்ள இலங்கை அரசுப் பதவிகளை வகித்துள்ளார். இலங்கை ஆட்சிச் சேவையில் முழுநேரப் பணிபுரிந்த ஆட்சியராக இருந்துகொண்டே, இல்லத்தரசியாக இருந்துகொண்டே, 50 நூல்களைச் சிங்கள மக்களுக்குத் தந்த அப் பெருமாட்டியைக் கொழும்பில் அனைத்துலகப் புத்தகக் காட்சியில் சந்தித்தைப் பேறாகக் கருதுகிறேன்.
No comments:
Post a Comment