Sunday, November 27, 2016

சைவக் கொள்கை இதுவா?

கார்த்திகை 13, 2047 (28.11.2016) திங்கள்கிழமை
மின்தமிழ் உரையாடலில் இடையிடை கலந்துகொள்வேன். 26.11இலும் 28.11இலும் நான் பங்ளித்த வரிகளை முகநூலாருடனும் பகிர்கிறேன். என் தெளிவுக் குறைவைப் பொருட்டற்க.
26.11இன் குறிப்பு
........இறைவன் ஈசன் என
நின்ற சைவ வாதி நேர் படுதலும்
பரசும் நின் தெய்வம் எப்படித்து என
இரு சுடரோடு இயமானன் ஐம்பூதம் என்று
எட்டு வகையும் உயிரும் யாக்கையுமாய்க்
கட்டிநிற்போனும் கலையுருவினோனும்
படைத்து விளையாடும் பண்பினோனும்
துடைத்துத் துயர் தீர் தோற்றத்தானும்
தன்னில் வேறு தான் ஒன்றிலோனும்
அன்னோன் இறைவன் ஆகும்
மணிமேகலை காதை 27, வரிகள் 86-95
ஆகிய வரிகளே சைவ சித்தாந்தக் கொள்கையைத் தமிழில் தந்த தொடக்க வரிகளாக இன்று வரை அறியப்பட்டுள.
இதற்கு முன்பும் சைவ சித்தாந்தக் கொள்கை விளக்கும் நூல்கள் இருந்திருக்கவேண்டும். தேடவேண்டும்.
பின்னர் காரைக்காலம்மையார் கூறியன நமக்குக் கிடைக்கின்றன.
மணிமேகலை காலத்திலும் காரைக்காலம்மையார் காலத்திலும் சைவ சித்தாந்தக் கருத்துகள் கூர்மையின் உச்சத்தில் இருந்தன.
இறை என்றால் முழுமை.
உயிர் என்றால் முழுமையற்றது.
உயிரைக் குறைகளுடையதாக்குவன மூன்று மலங்கள்.
இறை, உயிர், மலம் மூன்றும் தொடக்கமற்றன, முடிவுமற்றன.
முழுமை இலக்கு.
முழுமையை நோக்கிய, இலக்கை நோக்கிய உயிரின் பயணம்
பிறவிப் பேறு அதற்கே.
கால வரிசையில்
மணிமேகலைக் காப்பியம் கூறும் கொள்கை,
காரைக்காலம்மையார் கூறிய கொள்கை
பின் வந்த நாயன்மார் கூறிய கொள்கை
மெய்கண்ட சாத்திரம் கூறும் கொள்கை.
அது
சைவ சித்தாந்தக் கொள்கை.
பகுத்தறிவும் அறிவியலும் சார்ந்த கொள்கை.
28.11இன் குறிப்பு
சலனங்கள் இயற்கை.
உயிர்கள் முழுமையை நோக்கிப் பயணிக்கக் குறைகள் படிப்படியாக அகல வேண்டும்.
இந்தப் பயணத்தில் உச்சிக்கு வரக்கூடியன குறைகளை நன்றாகக் குறைத்துத் தெளிவன.
தெளிந்த நிலை ஞானம்.
ஞானம் அல்லது தெளிந்த நிலை தலைகீழான பட்டைக்கூம்பு (பிரமிடு).
சில உயிர்களுக்குப் புள்ளி அளவு
சில உயிர்களுக்கு நிறை அளவு.
புள்ளி அளவிலிருந்து நிறை அளவிற்கு ஞானத்தை வளர்க்க, குறைகளைக் குறைத்துவர, தெளிவூட்டல் தேவை.
காலத்துக்குக் காலம் இத்தெளிவூட்டலுக்குரிய தளங்கள் வேறுவேறாகும்.
அத்தளங்களுக்கேற்ப அவ்வக்காலங்களில் எழுவன இலக்கியங்கள்.
அக்காலத்துக்கு ஏற்றதாக எழுந்தாலும் அவற்றைப் பேணியதால் அக்காலத்துக்குப் பின்னும் அத்தகையோருக்கு அவை பயன்படுவன.
காப்பியங்கள், கதைகள், புராணங்கள், சாத்திரங்கள், நீதிநூல்கள் யாவும் காலத்துக்கேற்ப அமைந்து காலத்தைக் கடந்தும் பயன்படுவன.
பட்டைக் கூம்பின் உயரத்திற்குச் செல்வோர் தாம் பயனுற்றவை பட்டைக் கூம்பின் கீழுள்ளவருக்கும் பயன்பட விட்டுச் செல்வர்.
எனவே சலனங்கள் இயற்கை.
சலனங்களுக்கு அப்பால் தெளிவும் தேர்தலும் இயற்கை.
இவை தொடர்ச்சியானவை.
முழுமையைப் போல (இறை)
உயிர்களைப் போல (உயிர்)
குறைக்கான கராணிகளைப் போல (மலம்)
அவற்றைச் சார்ந்ததால்
தொடக்கமும் முடிவும் அற்றவை.

No comments: